கடல்கோள்களும் சுனாமிகளும்

கனி விமலநாதன் B.Sc


உலக அரங்கிலே ஒரு முக்கிய விடயத்தை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்நாளில் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்ற பண்டை நாகரீகங்கள் எல்லாமுமே ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைக் கூறுகின்றன. அதுதான் தமிழர்கள் நெஞ்சங்களில் ஆழப் பதிந்து விட்ட ஷகடல்கோள்' என்கிற நீரூழி. இதனை ஷஜலப்பிரளம்' என்றும் கூறுவர். இன்று புவியினரால் கூறப்படுகின்ற பண்டை நாகரீகங்கள் எல்லாமே புவியில் நிகழ்ந்த அந்த நீரூழியின் பின்னராகத்தான் வளர்ச்சி கண்டன என்று அவற்றின் குறிப்புகள் கூறுகின்றன.

நீரூழி என்றதுமே 'மனுவின் ஜலப்பிரளம்' என்பது நம்மவர் சிலரின் மனங்களில் எழுந்தாலும் உலக மக்களிடம் அதனைக் கொண்டு சென்றது நோவாவின் ஜலப்பிரளயம் என்பதுதான். இந்த ஜலப்பிரளயத்தின்போது நோவாவின் பேழையில் (கப்பல் அல்லது மரக்கலத்தில்) இருந்த நோவாவின் குடும்பத்தினர், நோவாவினால் காப்பாற்றப்பட்ட பறவைகள் மிருகங்கள் போன்ற உயிரினங்கள் என்பவற்றில் இருந்துதான் இன்றுள்ள மக்களும் உயிரினங்களும் புவி முழுவதும் பல்கிப் பெருகினார்கள் என்று கிறிஸ்தவர்களின் பைபிள், அதன் பழையேற்பாட்டின் ஆதியாகமத்தில் கூறுகின்றது. இதுதான் நீரூழி பற்றிய செய்தியை உலகம் முழுவதும் பரப்பியது எனலாம். பைபிளில் உள்ள இவ்விடயம் ஏபிரேயரின் (யூதரின்) குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

அருகில் இருப்பது ஜலப்பிரளயத்தின் போது நோவாவின் பேழை நீரில் மிதந்து கொண்டு போவைக் காட்டும் மாதிரிப்படம்.

இஸ்லாமியரும் நீரூழி, நோவா என்பவை பற்றிக் குறிப்பிடுகின்றனர். யூதரும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இந்த நீரூழி பற்றிய விபரங்களை சுமேரியர்களிடம் இருந்து கடன் வாங்கினார்கள் என்று இன்று சில வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.

இன்றுள்ள உலக வரலாற்றின்படி, சுமேரியர்தான் முதலில் இந்த நீரூழியைப் பற்றிக் கூறுயிருக்கிறார்கள் என்று நம்ப வேண்டியுள்ளது. கி.மு.
5000 ஆண்டு முன்னரே நீரூழி பற்றி இவர்களது கழிமண் தகட்டுப் புத்தகங்கள் கூறுகின்றன. இவர்களைப் பின்பற்றி, மெசப்பத்தேமியாவின் நாகரீகங்கள் ஏற்படுத்திக் கொண்ட அக்காடியர், பாபிலோனியர், அசீரியர், எபிரேயர் போன்றோரும் நீரூழி பற்றிய கதைகளைக் கூறியிருந்தார்கள். இன்னமும் அவர்களின் பின்னால் வந்த பெர்சியர்களும் கிகே;கர்களும் கூட நீரூழி பற்றிக் கூறுகின்றார்கள். ஆபிரிக்காவின் பழங்குடிகள் சிலரும் நீரூழியில் இருந்து தப்பி வந்தவர்கள்தான் நாங்கள் என்கிறார்கள். தென்னமரிக்க மாயன்களிடமும் அமெரிக்கப் பழங்குடியினரிடமு; கூட நீரூழி பற்றிய கதைகள் உண்டு என்கின்றனர். இப்படியாக தமிழர்கள் உட்பட, 300க்கும் மேலான இனமக்கள் நீரூழி பற்றி இன்றும் கூறுகின்றனர். அதில் இருந்து தப்பி வந்தவர்கள்தான் தாங்கள் என்றும் கூறிகின்றனர்.

இங்கு ஒரு விடயத்தை அவதானிக்க வேண்டும். எல்லா மதங்களும் இனங்களும் நீரூழி என்பதைப் புராணத்தனமாகக் கூற, தமிழர்கள் மட்டும் மனித நாகரீக வளர்ச்சிப் பாதையில் ஏற்பட்ட, புராணத்தனமில்லாத இயற்கையின் நடைமுறை இடைஞ்சலாகப் பார்க்கின்றனர். நீரூழி என்பதை கடல்கோள் ஏன்று கூறி, மனிதர்களையும் அவர்களின் நிலமான குமரிக்கண்டத்தையும் நாகரீக வளர்ச்சியின் பெரும் பகுதியையும் அன்று இயற்கை காவு கொண்டது என்று கூறுகின்றனர்.

அது மாத்திரமல்ல, எல்லோரும் உலகின் கடைசியாக வந்த நீரூழியை மட்டுமே தெரிந்திருக்கையில், தொடர்ச்சியான மூன்று நீரூழிகள் (கடல்கோள்கள்) பற்றித் தமிழர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர், இயற்கையுடன் மல்லுக் கட்டி நின்ற தமிழரை பிந்நாட்களில் மற்ற இனங்கள் மேவி, அவர்களை பல்வகைகளிலும் அடிமைப்படுத்தி இல்லாதொழிக்க நினைத்தார்கள். மூன்று கடல்கோள்களும் தமிழரை அடிமைப்படுத்தியோரும் தமிழர்களின் வரலாறுகளை அழித்திருப்பார்கள், மறைத்திருப்பார்கள்; என்று எண்ணிட இடமுண்டு. எடுத்துக் காட்டாக இராசராசசோழன் இல்லாதுவிடின் இன்று தமிழில் இருக்கும் தேவாரப் பதிகங்கள் எல்லாமே தில்லைவாழ் அந்தணர்களால் மறைக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கும் அல்லது வேறு வடிவங்கள் எடுத்திருக்கும். இது தமிழர்கள் யாவரும் இன்றறிந்த அறியாத விடயமாகும்.

தமிழர்களின் அடையாளங்கள் உலகினரால் இனங்காணப்படாதற்கான காரணங்கள் பல உள்ளன. அவற்றில், வரலாற்றுக் குறிப்புகள் இல்லை என்பதே முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது. இங்குதான தமிழர்கள் தங்கள் வரலாறுகளை எழுதிவைக்கவில்லையா? என்ற ஆதங்கமான கேள்வி எழுகின்றது. அதற்குப் பதிலும் உண்டு. தமிழர்கள் தங்களது வரலாறுகளை எழுதி வைத்திருந்திருப்பார்கள். ஆனால் இயற்கையினாலும், எம்மை மேவியவர்களினாலும் ஏற்பட்ட பேரிடர்களினால் அவை அழிந்தும், அழிக்கப்பட்டும் விட்டன என்று நமது அறிஞர்கள் நியாயப்படக் கூறுகின்றார்கள்.

இவ்வழிப்புகளும் மறைப்புகளும் இன்றும் தொடர்வதை அவதானிக்க முடிகின்றது. ஆதிச்ச நல்லூர், கீழடி விவகாரங்களை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். கீழடி ஏதோ ஒருவிதத்தில் தொடர்வது போல இருந்தாலும் அதன் உண்மைப் பரிமாணத்தை மறைப்பதற்கான அல்லது வேறுவிதமாக ஆக்குவதற்கான முனைப்புகள் மெதுவாக ஆனால் வலிமையாக ஆரம்பமாகி விட்டன என்பது வடவர்களின் கீழடி பற்றிய வித்தியாசமான வியாக்கியானங்கள், அணுகுமுறைகள் என்பவை வெளிப்படுத்துகின்றன. இந்த விதத்தில் அமைந்ததுதானோ கச்சியப்பரின் ஸ்கந்தபுராணத்தின்
15ம் நூற்றாண்டின் பதிப்பின் குமரிக்கண்டம் என்ற வெளிப்பும் என்று ஐயுற வேண்டியுள்ளது.
இவை இவ்வண்ணமாக இருக்க, கடல்கோள்கள் புவியிற் காலத்திற்குக் காலம் நிகழ்ந்துள்ளன என இக்காரலத்தில் அறிஞர்கள் காரணங்களுடன் கூறுகின்றனர்.

உலகின் பனிக்காலங்கள்

ஒருகாலத்தில் கடல்கோள்கள் என்பது கட்டுககதையாகவோ அல்லது புராணக்கதைகளின் ஒருபகுதியாகவோதான் இருக்கலாம் எனக் கருதப்பட்டது. விவிலியம் உட்பட, அத்தனை குறிப்புகளுமே அந்த எண்ணத்தைத்தான் கொடுக்த்தன. ஆனால் இந்நாட்களில் மனிதர்கள் தங்களின் அறிவியல் வளர்ச்சியால் காலத்திற்குக்காலம் பெரும் நீர்ப்பெருக்குகள் புவியில் ஏற்பட்டதைக் கண்டறிந்தனர். அது பற்றிய விபரங்களைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

ஏங்களது கதிரவன், பால்வழி என்ற கலக்சியின் மையத்தை, அந்த மையத்தில் இருந்து 26,000 ஒளியாண்டு தூரத்தில் சுற்றி வருகிறது. இப்படி ஒரு தடவை முழுமையாகச் சுற்றி வருவதற்கு எடுக்கும் காலம்
250 மெய்யிரம் (மில்லியன்) வருடங்கள் ஆகும். கதிரவனுடன் சேர்ந்து எங்களது புவியும் அப்பயணத்தில் இணைந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் கதிரவனைச் சுற்றிய புவியின் நீள்வட்டப் பாதையில் சிலகாலங்களின் புவி பெருமளவில் குளிருள் வந்து விடுகின்றது. அதனால் புவியின் உயர்ந்த மலைகள் போன்ற இடங்கள் உட்படப் பெருமளவு இடங்கள் அக்காலத்தில் பனியால் மூடப்பட்டுவிடும். அத்துடன் இப்பனிக் காலங்களில் புவியின் துருவவப் பகுதிகளில் பனி பெருமளவிற் படைபடையாகச் சேர்ந்து பெரும் பனிப் படலங்களைக் கொண்ட பனிமலைகளையே தோற்றுவித்து விடுகின்றது. அத்துடன் அப்பனிப் படலப் பனிமலைகளைச் சுற்றிய பனி, பனிக்கட்டிச் சுவர்கள் போலக் காணப்படும். புவியின் துருவங்களிற் சேர்ந்த பனி சில மெய்யிரம் (மில்லியன்) வருடங்களுக்கு முழுமையாக உருகாது காணப்படும். இப்படிப் புவியின் துருவப் பகுதிகளில் பனி தேங்கியிருக்கும் காலங்களைப் புவியின் பனிக்காலங்கள் என்கிறார்கள்.

பனிக்காலத்தில் பனியால் மூடப்பட்ட புவி எப்படி இருக்கும் என்பதை அருகில் உள்ள படத்தின் மூலம் விளக்குகின்றார்கள், வல்லுனர்கள்.

எங்களது புவி தனது வாழ்நாளில், இரண்டு பில்லியன் அதாவது இரண்டாயிரம் மில்லியன் ஆண்டு முன்னர் ஏற்பட்ட முதலாவது பனிக்காலத்தில் இருந்து இன்று வரையில் நான்கு நீண்ட பெரும் பனிக்காலங்களைக் கடந்து இப்போது ஐந்தாவது பனிக்காலத்துள் இருக்கின்றது. அதாவது இப்போதும் நாங்கள் இருப்பது கடைசிப் பனிக்காலத்தினுள்தான். இந்த ஐந்தாவது பனிக்காலம் கிட்டத்தட்ட
3 மெய்யிரம் (மில்லியன்) ஆண்டு முன்னர் ஆரம்பமாகியிருந்தது. அதாவது கோமோ இரெச்சஸ் என்ற ஆதிமனிதர்கள் தோன்றுவதற்கு முன்னரே புவி கடைசிப் பனிக்காலத்துள் வந்து விட்டது.

ஒவ்வொரு பனிக்காலத்திலும் இடைக்கிடை, பல்வேறு காரணங்களினால் சூழலின் வெப்ப அதிகரிக்கும். அவ்வேளைகளில் துருவப்பகுதியின் பனியுருகி, கடலிற் கலந்து கடல் மட்டத்தை சடுதியில் உயர்த்துவது வழக்கம். இது எவ்விதமாக நடக்கிறது என்பதையும் பார்ப்போம். துருவப்பகுதியில் பனி உருகுகையில் அதன் பனிப்படலங்கள் ஒவ்வொன்றாக உருகி நீராக மாறும். இந்த நீர் துருவப் பகுதியிலேயே தேங்கிக் கொண்டிருக்கும். தொடர்ச்சியான பனிப் படலங்களின் உருகலினால் துருவப் பகுதியல் பெருமளவு நீர் சேர்ந்துவிடும். தேங்கிய நீரின் அழுத்தத்தால், ஒருநிலையில் சுவர்போன்று நீரைத் துருவப் பகுதியிலே தடுத்து வைத்திருந்த பனிக்கட்டிகள் ஏற்கனவே சிறிது உருகியும் இருந்ததால், உடைந்து போக உள்ளே இருக்கும் நீர் அவ்வுடைவின் ஊடாகப் பாய்ந்து கொண்டு வெளியே வந்து கடலில் கலக்கும். இதனால் சடுதியில் துருவப்பகுதிகளை அடுத்து இருக்கும் கடல் நீர் மட்டம் உயர்ந்து விடுகின்றது. இதனால் துருவப்பகுதியில் இருந்து கடல்நீர் புவியின் மத்திய பகுதி நோக்கி வேகமாக பெருத்த சத்தத்துடன் பேரலைகளுடன் ஓடி வரத் தொடங்கும்.

இப்படியாக
15-12 ஆயிரம் வருடங்களின் முன்னர் கடைசியாகத் துருவப்பகுதியின் பனியுருகியதால் கடல் மட்டம் உயர்ந்தது என்கின்றனர் வல்லுனர்கள். அவ்வாறு உருகிய பனியால் 500அடிக்கும் மேலாகக் கடல்நீர்மட்டம் உயர்ந்திருக்கலாம் என்பதும் அவர்களின் கணிப்பு. அவ்வேளையில் உலகின் பல தாழ்ந்த பகுதிகள் கடலினால் கொள்ளப்பட்டன என்பதையும் இன்று அவர்கள் கூறுகின்றனர். இந்நாட்களில் இப்படியாகப் பனி உருகிக் கடல்மட்டம் உயர்ந்து தரையின் பகுதிகளைக் கடல் கொண்டால் தார்ப்பரியம் எங்களுக்குத் தெரியும் அல்லது விஞ்ஞானிகள் உலகினருக்குத் தெரிவித்திருப்பார்கள். அதனால் அந்த நீரூழி புராணத்தனமாகப் பார்க்கப் பட்டிருக்காது. இந்த நிகழ்வினைப் புராணத்தனமாகப் பார்த்து புராணக் கதைகளைப் புனையவும் மாட்டார்கள். ஆனால் உருகிய பனியதல் தரைப்பகுதியில் ஏற்பட்ட நீரூழியை, விபரமறியாத பண்டைய மக்கள் குழுக்கள் தட்டுத்தடுமாறி அந்நாளின் அறிவியல் நிலைக்கு ஒப்ப புராணத்தனமாகப் பதிந்து வைத்திருக்கிறார்கள்.
இங்குதான் தமிழர்கள் வித்தியாசப்படுகின்றார்கள். தமிழர்கள் அடுத்தடுத்து வந்த மூன்று கடல்கோள்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதிலும் சிறப்பென்னவென்றால், புராணத்தனம் ஏதுமில்லாது, மனித அறிவியல் வியாக்கியனங்களின் அடிப்படையிலேயே இக்கடல்கோள்கள் பற்றிக் கூறப்பட்டன. அவர்களை எந்தவொரு கடவுளும் வந்து எச்சரித்து, இப்படிச் செய், அப்படிச் செய் என்று கூறவுமில்லை, தப்புவதற்கு வழிகாட்டியதுமில்லை. ஒவ்வொரு தடவையும் பல அழிவுகளைச் சந்தித்த போதிலும் மீண்டெழும் துடிப்புடன் மீண்டும் திரண்டு, சங்கங்கள் அமைத்துத் தங்களை வளர்த்துக் கொள்ளத் தலைப்பட்டார்கள் என்பதை நாங்கள் அறிவோம். இது அந்நாளில் தமிழர் கொண்டிருந்த அறிவியல் நிலையின் உயர்விற்கு நல்லதோர் சான்று என என்னாற் பார்க்க முடிகின்றது.

இந்த விபரங்கள் அறியாமல் பிந்நாட்களில் நலிந்து கிடந்த எங்களிடையே வந்து கலந்தது, தங்களை மேன்மைப்படுத்திக் காட்ட முனைந்தவர்கள் இந்தக் கடல்கோல் விடயங்களை இல்லையெனக் கூறி மறுத்தார்கள். மேலும் அவை ஆதாரமற்ற வெறும் கற்பனைக் கதைகள் எனக் கூறித் தற்கால தமிழர்களின் மனங்களையும் மாற்ற முயற்சிற்கிறார்கள். அவர்களின் மருட்டல்களில் மயங்கிய சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். நீரூழிக்கான புராணங்களைக் கொண்டவர்களோ கடல்கோள்களுக்கான ஆதாரங்கள் எங்கே எனவும் எங்களைக் கேட்கச் செய்கிறார்கள். ஆனால் காலம் சிறிது சிறிதாக மாறிக் கொண்டே வருவதால், அவர்களின் கேள்விகளுக்கான வெளிப்புகளும் மெதுமெதுவாக வந்து கொண்டேதான் இருக்கின்றன. அதிலொன்றுதான் நான் முன்னர் குறிப்பிட்ட கடைசிப் பனிக்காலப் பனி உருகல் என்ற அறிவியல் வெளிப்பு.

சுனாமி (Tsunami)

புவியின் பனிக்காலங்கள், கடல்கோள்கள் என்பவை ஒருபுறமிருக்க, இன்னொரு விடயத்தையும் கூற வேண்டியுள்ளது.
2004 டிசெம்பர் 26ல் நிகழ்ந்த சுனாமிப் பேரழிவுக்குப் பின்னராகக் கடல்கோள் என்பதற்குச் சுனாமி என்ற யப்பானியப் பெயரைப் புதிதாக நம்மவர்கள் சிலர் கொடுக்கிறார்கள். யப்பானிய மொழியில் துறைமுக அலைகள் எனப் பொருள் கொள்ளப்படும் சுனாமி என்பதனைக் கடல்கோள் எனக் கூறுவது மிகவும் தவறாது. புதுமை என்ற நினைப்போ என்னவோ தெரியவில்லை. நம்மவர்களிடைளே இது கணிசமான அளவில் பரவியும் விட்டது.
 
அருகில் உள்ள படம்
2004, டிசெம்பர் 26ல் ஏற்பட்ட சுனாமிப் பேரலையைக் காட்டுகிறது. இதை ஒருவர் தனது கமராவில் படம் பிடித்தார் எனக் கூறப்படுகிறது. இச்சுனாமி 227898 பேரின் உயிர்களைப் பலி கொண்டது எனக் கணக்குக் காட்டுகிறார்கள்.

மீண்டும் கூறுகிறேன், சுனாமி என்கிற இந்தத் துறைமுக அலைகளைக் கடல்கோள் எனக் கூறமுடியாது. ஏனெனில் யப்பானில் அடிக்கடி ஏற்படுகிற சுனாமிகள் யப்பானின் தரைப்பகுதிகள் எதனையும் குறிப்பிட்டுக் கூறுமளவிற்கு பெரியதாகக் கபளீகரம் செய்ததாக இன்றளவும் பதிவுகள் இல்லை. இன்னமும் உலகின் பலபகுதிகளிலும் ஏற்பட்ட சுனாமிகள் நாமறிய எந்தவொரு நிலப்பகுதியையும் கடலுடன் சேர்க்கவில்லை. நம்மவர்கள் குறிப்பிட்ட கடல்கோள்கள் அப்படியல்ல. கடல்கோள் என்பது கடல்நீர் தரைப்பகுதியினுள் வந்து தரைப்பகுதியைத் தன்னுள் கொள்வதாகும். அப்படியாகக் கடல் தான் கொண்ட பகுதியை தன்னுடயே வைத்துக் கொள்ளும். சுனாமி வந்த பின்னரான கடற்கரைகள் உடைந்து சின்னா பின்னமாகிக் கிடந்தனவே தவிரக் கடலுள் போனதாக இல்லை. ஆக, கடல்கோள் என்பதற்கும் சுனாமி என்பதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது.

இனி, சுனாமிகள் எவ்விதம் உண்டாகின்றன என்பதைச் சுருக்கமாகக் கூறுகின்றேன். இது கடல்கோள்களுக்கும் சுனாமிகளுக்குமான வேறுபாட்டைத் தெளிவுபடுத்தும்.

எங்களது புவி மிகவும் அற்புதமான, உயிர்புள்ள கோள். ஆதன் அமைப்பு மிகவும் ஆச்சரியமானது. திண்மமான புவிப்பந்தின் நடுப்பகுதி மிகவும் வெப்பமாக இருக்கும். அதனால் அது சூடான கொதிக்கின்ற குளம்பு போல உள்ளது. இச்சூடான கூழ்க் குழம்பினை மூடிப் புவியின் மேற்பரப்பு உள்ளது. இக்கோள மேற்பரப்பு தொடர்ச்சியான தனியொரு மேற்பரப்பாக இல்லை. பல துண்டுகள் இணைந்து சேர்ந்த போர்வை போல இருக்கின்றது. இந்தத் துண்டுகள் எல்லாம் புவியின் உள்ளே இருக்கிற சூடான மக்மா என்ற குழம்பின் மேல் மிதந்து கொண்டு இருக்கின்றன.

தட்டுகளாலான இம்மேற்பரப்பில்தான் கண்டங்களும் கடல்களும் உள்ளன. புவியின் சுழற்சி, மக்மாவின் கொந்தழிப்பு, கதிரவன் நிலவு என்பவற்றின் ஈர்ப்புகள் காரணமாக இத்தட்டுகள் நகர்ந்து கொணடும் இருக்கின்றன. இந்த நகர்வின் காரணமாகச் சில தட்டுகள் ஒன்றை ஒன்று நெருக்க, அவ்விடத்தில் பெருமளவு சக்தி பவியில் இருந்து வெளியேறும். சில சமயங்களில் தட்டுகளின் உரசல்களின் காரணமாகவும் அவ்விடத்தில் பெருமளவு சக்தி வெளிவிடப்படும். சிலவேளைகளில் ஒருதட்டின்மேல் இன்னொரு தட்டு தற்காலிதமான ஏறிப் பின்னர் தன்னிலைக்குத் திரும்பும். ஒவ்வொரு சந்தர்பத்திலும் பெருமளவு சக்தி வெளிவிடப்படும். இப்படியாகப் பிறப்பிக்கப்பட்டடு வெளிவிடப்படும் சக்தியானது அத்தட்டுகளின் மேலாக உள்ள தரையின் ஊடாகப் புவியின் வெளிப்பகுதியை நோக்கி வேகமாப் பயணப்படும். தரையை விட்டு அச்சகத்p வெளியேறுகையில் பெரும் சேதங்களை ஏற்படுத்துகிறது. இதனைத்தான் நாங்கள் புவிநடுக்கம், புவியதிர்ச்சி என்கிறோம்.

இதனைவிட, சில இடங்களில் புவியின் தட்டுகள் தடிப்புக் குறைந்து, வலிமையற்றுக் காணப்படும். இப்படி வலிமையற்ற பகுதிகளின் ஊடாகப் புவியின் மத்தியில் உள்ள மக்மா என்கிற சூடான குழம்பு புவித்தட்டை மேல் நோக்கித் தள்ளிப் பீறிட்டுக் கொண்டு புவியின் வெளியே பாய்ந்து வரும். அவ்வேளையிலும் பெருமளவு சக்தி புவியின் மையத்தில் இருந்து புவியிற்கு வெளியே வீசப்படும். இந்த நிகழ்வுதான் எரிமகை கொந்தழிப்பு எனப்படும். மேற்தள்ளப்பட்ட புவியின் தரைப்பகுதி உயர்ந்து மலை போன்று காட்சியளிக்கும். அதனை எரிமலை என்போம். காலத்திக்குக் காலம் இந்த எரிமலைகள், லாவா எனப்படும் நெருப்புக் குழம்புகளையும் சூடான தூசுக்களையும் வெளித் தள்ளிக் கொண்டு இருக்கும்.

சிலசமயங்களில் நிலநடுக்கமோ அல்லது எரிமலைக் கொந்தழிப்பபோ ஆழ்கடலின் அடியில் ஏற்பட்டுவிடும். அச்சமயத்தில் நிலநடுக்கம் அல்லது எரிமலை கொந்தளிப்பினால் வெளிவிடப்படும் பெருமளவு சக்தி கடலின் அடியில், கடல் நீருள் தள்ளப்படும். அதனால் அவ்விடத்தில் கடல்நீர் அதிகளவு சக்தியைப் பெற்றுவிடும். அச்சக்தியின் காரணமாக அவ்விடத்தில் புதிதாக நீரலைகள் பிறப்பிக்கப்படுகின்றன.

இந்த நீரலைகள் தாம் பெற்ற சக்தியின் காரணமாக ஆழ்கடலில் இருந்து கரைகளை நோக்கி மிக வேகமாகப் பயணப்படுகின்றன. அலைகள் பெற்ற சக்தியின் அளவிற்கு ஏற்ப அக்கடலையின் வீச்சு, அதாவது உயரம் இருக்கும். சக்தி கூடிய அலைகளின் வீச்சு உயர்வாக இருக்கும். இது அலைகளின் சிறப்பான இயல்பு.

கடற்கரையை அண்மித்த பகுதிகளில் கடலின் ஆழம் குறைவாக இருக்கும். இதனால் நிலநடுக்கம் அல்லது எரிமலைக் கொந்தழிப்பால் சக்தியைப் பெற்றுக் கரைக்கு வந்து கொண்டிருக்கும் கடல் அலைகளின் வீச்சிற்கும் குறைவாகக் கடல் நீரின் உயரம் வந்து விடும். அதனால் தனது உயரத்திற்குத் தேவையான நீரைக் கரைப்பகுதியில் இருந்து இழுத்துக் கொண்டு கரையை நோக்கி மிக வேகமாக அவ்வலை வரும். இதனால் கடற்கரையின் நீர் உள்நோக்கிச் சடுதியில் போகும். தரைக்கு அண்மையில் இருந்த நீரை தன்னுள் இழுத்து மிக உயரமாகிவிட்ட அவ்வலை கரையில் வந்து மோதித் தான் கொண்டு வந்த சக்தியை அலை அடிப்புடன் வெளியே வீச, அக்கடற்கரை சின்னா பின்னமாகிவிடும். பின்னர் கரையை முன்னர் போலவே விட்டு விட்டுக் கடலினுள் கடல் நீர் வேகமாகச் சென்று தன்பழைய நிலையில் தங்கிவிடும். இப்படியான அலைகள்தான் துறைமுக அலைகள் எனப்படும் சுனாமி ஆகும். சுனாமி அலைகள் ஒருபோதும் தரைப்பகுதியைக் கவ்விக் கடலுடன் இணைத்துக் கொள்வதில்லை.

இதிலிருந்து கடல்கோள்களும் சுனாமிகளும் முற்றிலும் வேறுவேறானவை என்பது தெரிகின்றதல்லவா. எனவே, கடல்கோள் என்பதனைச் சுனாமி எனக் கூறிக் கொள்வது எங்களது குமரிக்கண்டம் என்ற கருத்திற்குப் பெரும் பாதிப்பை கொடுத்துவிடும். சுனாமியினால் அப்படியொரு பெரிய நிலப்பரப்பு கடலுள் போகவே போகாது. கடல்கோளினைச் சுனாமி எனக் கூறிக் கொள்வோமாயின், சுனாமி குமரிக்கண்டதைக் கடலுள் இழுத்துக் கொண்டது எனக் கூற வேண்டி வரும். இப்படி நடக்க முடியாது என்ற நடைமுறையினால், குமரிக்கண்டம், முச்சங்கங்கள் என்றெல்லாம் பெருமையாகக் கூறிக் கொள்பவை வெறும் கட்டுக்கதை என்ற கட்டுக்குள் வந்து, உண்மையானது மறைந்து போய்விடும். எனவே எங்களது சொல்லாடல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதுமையாக ஏதோ செய்கிறோம் என்று உண்மைக்கும் எங்களுக்கும் தமிழின் செழிப்புக்கும் ஊறு செய்து விடக் கூடாது, அல்லவா!

சுனாமியிற்கும் கடல்கோள்களுக்குமான வேறுபாட்டைத் தெரிந்து கொண்டோம். அடுத்துவரும் மாதங்களில் குமரிக்கண்டம் பற்றி இன்னமும் பல விடயங்களைப் பார்ப்போம். இப்போது இதனை நிறைவு செய்வோம்.

அன்புடன்,
கனி.




கனி விமலநாதன் B.Sc

                               


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்