குமரிக்கண்டம் குழப்பல்களும் குழம்பல்களும்

கனி விமலநாதன் B.Sc   


கடல்கோள்களினால் இந்தியாவின் தென்பகுதியில் இருந்த நிலப்பரப்பு ஒன்று காலத்திற்குக் காலம் கடலால் கொள்ளப்பட்டதற்கான, அறிவியல் அடிப்படையிலான ஆதாரங்கள், கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிய சலசலப்புகள் ஏதுமின்றி, ஏதோ இரகசியங்கள் போன்று வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அதனால் தானோ என்னவோ எம்மவரிடையே குமரிக்கண்டம் பற்றிய குழம்பல்களும் குழப்பல்களும் ஏராளமாகவே இன்னமும் உள்ளன.

இவற்றில் ஸ்கிலேட்டரின் லெமூரியாக் கொள்கையையும் ஹெக்டேலின் லெமூரிய வெளியேற்றக் கொள்கையும் குமரிதேசத்துடன் இணைத்துப் பார்க்கப்பட்டது முக்கியமானது. குமரிக்கண்டம் என்பதைத் தென்னிந்தியாவின் தெற்காக நீண்டிருந்து இன்று கடலுள் மூழ்கிவிட்ட சிறிய தரைப்பகுதியாகக் கருதுவோர் உண்டு. ஒருவேளை கன்னியாகுமரிக்குத் தெற்காக இருந்த பல தீவுகளை ஒட்டு மொத்தமாகக் குமரிக்கண்டமெனக் கூறியிருக்கலாம் என்போரும் உண்டு. இவற்றுடன் அறிவியற்பரப்பின் ஒருசில கூறுகளின் அடிப்படையிற் சிலர் கூறும் ஐயப்பாடுகளை நேரடியாகவே கருத்திற் கொண்டு குமரியிற்கான அறிவியற் சான்றுகள் கேட்பவர்களும் உண்டு.

'நெற்றிக் கண் திறப்பினும்......!'
அண்மையில் மிகவும் துடிப்புள்ள, தமிழ்ப் பற்றுள்ள இளைஞன் ஒருவர் குமரிக்கண்டம் இருந்ததற்கான எந்தவொரு அறிவியற் சான்றுகளும் இல்லை என்பதால் அதனைத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறினார். 'மிகையான கற்பனை வளத்துடனும் அளவற்ற விபரிப்புகளுடனும் புனையப்பட்ட கவிதைகளை ஆதாரங்காட்டிக் குமரிக்கண்டம் இருந்தது என்று கூறுவதை எவ்விதம் ஏற்றுக் கொள்வது' என மெதுமையான பகுத்தறிவுத் தனமாகத் தனது நிலைப்பாட்டினைக் கூறினார். இந்நாட்களில் நிலவும் 'அறிவியற் தேடல்களின் அடிப்படையில் அமைந்த உண்மைகளை மாத்திரமே எங்களால் ஏற்றுக் கொள்ள முடியும்' எனத் தர்க்கிப்பவர்களின் போக்கில் இருந்தன அவரது கருத்துகள். கடல்கோளைகளைச் சுனாமிகளாகக் கருதிக் கொண்டே தனது கருத்துக்களைக் கூறினார். புவியின் பனிக்காலங்கள், கடல்கோள், சுனாமி என்பவை பற்றிய தெளிவுகளைக் கூறியவேளை ஆச்சரியத்துடன் ஏற்றுக் கொண்டார். அவரது கருத்துக்கள் விரித்து விட்ட சிந்தனையின் வெளிப்புகளை இந்நேரத்தில் பகிர்ந்து கொள்கின்றேன், அவசியமாக.

எங்களது சங்ககாலக் கவிதைகள், அவற்றின் வளத்திற்காக, கவிதை இலக்கணங்களுக்கு அமைவாக, 'உவமை', 'உருவகம்', 'உள்ளுறை உவமம்', 'இறைச்சிப் பொருள்' என்பவை கொண்டு அழகு படுத்தப்பட்டவைதான். ஆனால் அவற்றின் மையக்கருத்துகளில், எதனையும் உண்மைக்குப் புறம்பாகக் கூட்டிப் பாடப்பட்டவை அல்ல. அப்படியான பாடல்கள் ஏதாவது வந்தால் அன்றிருந்த தமிழ்ச்சங்கம் அதனை ஏற்றிடாது, எள்ளி நகைத்துத் தள்ளி வைத்து விட்டுவிடும். நக்கீரன், தருமியையும் சிவனையும் பிழையான பாடலுக்காகப் படுத்தியபாட்டை நாங்கள் அறிவோம், இல்லையா. அதன் பின்னணியில் உள்ள 'நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே!' என்ற தத்துவம் கூறும் 'தமிழ்க் கவிதைகளில் உண்மைப் பொருள் மாத்திரமே இருக்க வேண்டும்' என்ற கடுமையான கட்டுப்பாட்டுத் தன்மையை இப்படியாகக் குழப்புவர்களிற் பலர் பெரிதாகக் கருத்திற் கொள்வதில்லை.

பொதுவாகத் தர்க்க வளர்ச்சியிற்காகக் கிரேக்கர் கூறியதாகக் கருதப்படும் எதனையும் 'பகுத்து அறி!' என்ற கருத்தை உள்வாங்கிக் கொண்டு, தம்மைப் பகுத்தறிவுவாதிகள் எனக் கருதிக் கொள்பவர்களாக எம்மவர் பலர் இணைந்து கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. பகுத்தறிவுவாதம் பன்முகத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். எமது சங்க இலக்கியங்களின் காலம், அக்காலத்து உலகியற் தன்மை என்பவற்றையும் கவனத்திற் கொண்டே எங்களின் பார்வை இருக்க வேண்டும். புராணத்தனங்களை ஏற்றுக் கொள்ளும் எம்மவர்களிற் பலர் அழகு படுத்தப்பட்ட எங்களின் சங்கக் கவிதைகளின் உள்ளேயுள்ள உண்மைகளைப் பகுத்தறிவது இல்லை. முகமே தெரியாத நக்கீரர், கபிலர், ஒளவை, வள்ளுவர், இளங்கோ, தொல்காப்பியர், கணியன் பூங்குன்றனார் என்று பல சான்றோர் இருந்தார்களென ஏற்றுக் கொள்ளும் சிலர், இப்பெருமக்கள் எழுதி வைத்த பாடல்களில் உள்ளவற்றில் சிலவற்றை மாத்திரம் பகுத்து, எடுத்துக் கொள்வது ஆச்சரியப்பட வைக்கிறது.

மத்திய தரைக்கடல்

முற்றிலுமே புராணத்தனமான, கி.மு. 8ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட ஹோமரின் (Homer) வீரகாவியங்களின் அடிப்படையில் உண்மைகள் உள்ளன எனக் காட்டுவதற்காக, கிரேக்கத்தின் தத்துவஞானியான பிளாட்டோவின் காலத்தில் இருந்தே 'அட்லாண்ரா நகர்' என்பதைத் தேடி மேலைநாட்டு ஆய்வாளர்கள் அலைந்து திரிகிறார்கள். ஒருவேளை அவர்கள் தேடியலையும் நீருள் மூழ்கிய அட்லாண்ரா கூட அன்று ஹோமருக்குக் குமரியின் கருத்தில் இருந்துதான் கிடைத்திருக்கும் என எண்ணிட இடமுண்டு. ஏனெனில், ஹோமரின் காலத்திலேயே கிரேக்கரிடம் புராணத்தன நீரூழி பற்றிய கதைகள் இருந்திருக்கின்றன. ஆனால் சிலப்பதிகாரத்தில் உள்ள 'பஃறுளியாற்றொடு பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள.....' என்பது போன்ற தொடர்களில் உண்மைத் தன்மைகள் இல்லை, நம்பமுடியாது என்கிறனர், நம்மவர்கள் சிலரும் அவர்களுடன் சேர்ந்து.


அந்நாட்களில் கிரேக்க, உரோமர்கள் அறிந்திருந்த கடலான மத்திய தரைக்கடல் என்னும் மத்தித்தரைக்கடல் என்பது 5.33 மில்லியன் வருடங்களின் முன்னர் அத்திலாந்திக் மாகடலில் இருந்து கடல்நீர், ஆபிரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் இருந்த மலையை ஊடறுத்து, இரண்டு வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து பாய்ந்து வந்து உண்டாக்கியதுதான் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிவியற் கொள்கை. அதற்கு முன்னராக நடந்த புவியின் வெப்பக்காலத்தில் அப்பகுதி முற்றாகவே வரண்டிருந்தது என்கின்றனர் வல்லுனர். இன்று அத்திலாந்திக் மாகடலையும் மத்தித்தரைக்கடலையும் ஜிப்றால்ரர் நீரிணை (Strait of Gibralter) என்பது இணைக்கிறது.

மத்தித்தரைக்கடலின் கதை இப்படியாக இருக்கையில் கிரேக்கர்களோ அல்லது மத்தித்தரைக்கடலை அண்டிய பகுதியில் வாழ்ந்த, வாழ்கின்ற மக்களோ நீரூழி ஒன்றின் அனுபவத்தினை நேரடியாகப் பெற்றிருக்க முடியாது என்றே கூறவேண்டும். ஏனெனில் ஒரு பெரிய உப்புக் கடலேரி போன்ற மத்தித்தரைக்கடலில் நீருழி என்கிற கடல்கோள்கள் உண்டாவதற்கு வாய்ப்பில்லை. ஆதலால் மத்தித்தரைக்கடலில் உள்ள தீவுகளிற் கூட பாரதூரமான நீரூழி ஒன்று ஏற்பட்டிருக்க முடியாது. ஒருவேளை அத்திலாந்திக் மாகடலின் கொந்தழிப்புக் காலங்களில் இங்கு நீர்ப்பெருக்குகள், பெரும்பெரும் சூறாவளிகள், புயல்கள் எற்பட்டிருக்கலாம். எனவே அப்பகுதி மக்கள் கருத்திற் பதிந்த நீரூழி, வேறு எங்கோ நடந்து, கதைகளாக, புராணங்களாக அவ்விடங்களுக்கு வந்திருக்க வேண்டுமென்றே முடிவு கொள்ள வேண்டும்.

பைபிளின் நோவா

இந்நேரத்தில் அண்மையில் தமிழரான பல்மொழி அறிஞர் ம.சோ. விக்டர் அவர்கள் விவிலியத்தில் உள்ள 'நோவா' என்ற பெயரின் விபரத்தைப் பற்றி ஆச்சரியமான விடயத்தை 'யூரியூப்'ற் கூறியிருந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன். அவர் 'எபிரேய மதநூலில், நீரூழியில் நின்றும் 'எல்' என்ற கடவுளின் அறிவுறுத்தலின்படி, கப்பலில் தப்பியவர் 'நாகன்' என்றே எழுதப்பட்டுள்ளது' எனக் கூறுகின்றார். எபிரேயரது மதநூலில் எபிரேய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த அப்பெயரையும் தனது விழியத்திற் சுட்டிக் காட்டியிருந்தார். மேலும் எப்படி பைபிளில் நோவா என்ற பெயர் வந்தது என்பதையும் தெளிவுபடுத்தி இருந்தார்.

விவிலியத்தை (பைபிள்) கிரேக்கத்தின் பழமைவாதக் (Orthodox)  கிறிஸ்தவர்கள்தான் முதன்முதலில் எழுதியிருந்தனர். கிரேக்கர் பைபிளைக் கிரேக்கத்தில் எழுதுகையில் பழையேற்பாடு என்ற பகுதியை எபிரேயரின் மதநூலில் இருந்தே மொழிபெயர்த்து எழுதினார்கள். அப்படி எழுதுகையில் நீரூழிக் கதையை மொழிபெயர்க்கையில் அவர்களுக்குப் பழக்கமில்லாத நாகன் என்ற பெயரைச் சரியாகக் கிரேக்கரால் உச்சரிக்க முடியவில்லை. அதனால் எபிரேயரின் நீரூழிக்கதையில் வருகிற நாகன் என்ற பெயரை 'நோவா' என எழுதிவிடுகிறார்கள். பின்னர் அந்த நோவா என்ற பெயரே உரோமரின் இலத்தீன் மொழியிற்கு வந்து, அதிலிருந்து ஐரோப்பிய மற்றும் உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட கிறிஸ்தவர்களின் பைபிள்களில் நிலைத்து விட்டது. இந்நாட்களில் யூதர்களும் நோவா என்ற பெயரையே பாவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலுமவர் அரேபியர்களின் நீரூழிக் குறிப்புகளில், நீரூழியின் போது தனது குடும்பத்துடன் கப்பலிற் தப்பி வந்தவரை 'நாவாய்க்காரன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறுகின்றார். நாவாய் என்பது கப்பலையும் நாவாய்க்காரன் என்பவன் கப்பலோட்டி என்பதையும் நாங்கள் அறிவோம். பின்னராக இந்த நாவாய்க்காரன்தான் நோவா என்ற பெயர் கொண்டான் எனக் கூறும் விக்டர் மேலையின் வல்லுனர்களுக்குத் தமிழினதும் தமிழரதும் ஆழங்கள் தெரியாதபடியினால் இவற்றினைப் பற்றிப் பெரிதாகக் கருதிக் கொள்ளாது விட்டுவிட்டார்கள்.

இவர் நோவாவின் கப்பல், பலாமரப் பலகைகளினால் கட்டப்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுவதையும் ஆதாரப்படுத்துகின்றார். இலுப்பை, பலா போன்ற மரங்களின் பலகைகள் இலகுவில் நீரில் உக்கிப் போகாதவை என்பதை நாங்கள் அறிவோம். 1970களில் யாழ்ப்பாணத்தில் வள்ளம் கட்டுகையில் இலுப்பைப் பலகைகளையே வள்ளத்தின் அடிப்பாகம் உக்காமல் அதிக காலத்திற்கு இருப்பதற்காக வள்ளத்தின் அடிப்பலகையாகப் பாவித்ததை நான் அறிவேன். இதனாலேயே இன்று யாழ்ப்பாணப்பகுதியில் இலுப்பை மரங்கள் அருகிவிட்டன எனச் சிலர் கூறுகின்றனர்.

அவுத்திரேலியப் பழங்குடியினர்

இனி மேலைநாட்டு ஆய்வாளர்களின் மனிதப் பரம்பல் பற்றிய கருத்துக்களைக் கவனிப்போம். கோமோ சேப்பியன்கள் ஆகிய நவீன மனிதர்களிற் சிலர் 100,000 ஆண்டு முன்னராக ஆபிரிக்காவில் இருந்து வெளியேறி கிரேக்கத்திற்கு வந்திருக்கிறார்கள். அங்குதான் மனிதர் முதன்முதலில் தமக்கான பயிர்ச்செய்கையை ஆரம்பிக்கின்றனர். பின்னர் அந்த நவீன மனிதர்கள் கிரேக்கத்தில் இருந்து ஐரோப்பா, இந்தியா, சீனா, அவுத்திரேலியா போன்ற உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்தார்கள். அப்படியாக 37,000 ஆண்டு முன்னராக இடம்பெயர்ந்து வந்தவர்கள்தான் இன்றுள்ள அவுத்திரேலியப் பழங்குடியினர் என்கின்றனர், அவர்கள்.
இந்த அவுத்திரேலியப் பழங்குடியினர் மனிதவினத்தின் வரலாற்றை வெளிப்படுத்தும் முக்கிய தடயமாக உள்ளனர். ஆரம்பத்தில் கிரேக்கப் பகுதியில் இருந்து 37000 வருடங்களின் முன்னர் இடம்பெயர்ந்தவர்கள்தான் அவுத்திரேலியாப் பழங்குடிகள் என்றனர் ஆய்வாளர். ஆனால் இப்பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்கள் தொடர்பாடல் முறைகள் போன்றவற்றில் தென்னிந்திய, இலங்கை மக்களின், குறிப்பாகத் தமிழர்களின் சாயல்கள் அதிகம் இருக்க, கதையை மாற்றிக் கொண்டார்கள். ஐரோப்பியப் பகுதிகளில் இருந்து கிழக்காக இடம்பெயர்ந்த ஆதிமனிதர், பாரசீகம், ஆப்பானித்தான், பாக்கித்தான், வட இந்தியா வந்து அங்கிருந்து தென்னிந்தியா, இலங்கைப் பகுதிகளை அடைந்து பின்னர் அவுத்திரேலியாவுக்கு வந்து சேர்ந்தார்கள் எனக் கூறுகின்றார்கள். ஆச்சரியம் என்னவெனில், அவுத்திரேலியப் பழங்குடியினரின் வருவழிப் பாதையில் இலங்கை, தென்னிந்தியப் பகுதிகள் தவிர்ந்த எந்தவிடங்களிலும் அவர்களின் தடங்கள் பெரிதாக இல்லை. ஆனாலும் மேலையர்கள் இப்படிக் கூறிவிட்டதினால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்கிறார்கள்.

அவுத்திரேலியாவிற் பல பழங்குடி மக்கள் குழுக்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் அவுத்திரேலியாவினுள் வராது காலத்திற்குக் காலம் குழுக்கள் குழுக்களாக வௌ;வேறு காரணங்களினால் படகுகளில் வந்தவர்கள் என்கிறனர். ஆனால் அவர்களிற் சிலர் பெரியதோர் கடற்பெருக்கினாலேயே தாங்கள் இவ்விடத்திற் தனிமைப்படுத்தப்பட்டோம் என்று தமது மூதாதையர்கள் கூறினார்கள் என இன்றும் கூறிக் கொள்கிறார்கள். இது 37000 ஆண்டு முன்னர் கடல்கோள் ஒன்று நடந்திருக்கின்றது என்பதைக் கூறி நிற்கின்றது அல்லவா. இச்செய்தியை ஆய்வாளர்கள் மறந்து விட்டார்களா அல்லது மறைக்கிறார்களா தெரியவில்லை. ஆனால் இதுதான் குமரிக்கண்டம் இருந்ததற்கும் முக்கடல்கோள்கள் நடந்திருந்தன என்பவற்றிக்குமான வலிமையான சான்றுகளில் ஒன்றாக இருக்கின்றது.

37000 ஆண்டு முன்னர் அவுத்திரேலியாவில் ஒதுங்கிய அல்லது அவுத்திரேலியாவுக்கு வந்து சேர்ந்தவர்கள் தமிழ்ப் பழங்குடியினர்தான் என்பதைக் காட்டக் கூடிய பல சான்றுகள் உள்ளன. அவர்கள் தமிழர்களின் சாயல், பழக்க வழக்கங்கள் என்பவற்றைப் பெருமளவிற் கொண்டுள்ளனர் என்பது ஒத்துப் பார்த்தலிற் தெரிகின்றது. அவர்களைப் பார்த்தால் 1950களில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த மக்களின் சாயல் தெரியுமென இலங்கையின் சில தமிழ்ப் பத்திரிகைகள் 1970களில் எழுதியிருந்தன. உறவு முறைகளைப் பேணுதலில் தமிழர்களின் முறைகளைக் கொண்டுள்ளனர் என்பதும் தெரிய வருகிறது.

எனது நண்பர் மெல்போனில் 30 வருடங்களாக வசித்து வருகிறார். ஒருசமயம் அவருடன் தொலைபேசியிற் கதைக்கும் போது அவுத்திரேலியப் பழங்குடியினரைப் பற்றிப் பல விடயங்களைக் கூறியிருந்தார். அவுத்திரேலிய அரசின் திட்டமிட்ட மெத்தனப் போக்கினால் அப்பழங்குடியினரின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து கொண்டு வருகின்றது என்று மனவருத்துடன் கூறினார். இருப்பினும் சிலர் இந்த விடயத்தில் காட்டுகின்ற கரிசனையால் இப்போது அது ஓரளவுக்குக் குறைந்துள்ளது எனவும் கூறினார். தனித்தனிக் குழுக்களாக, குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டும் வசிக்க வைக்கப்பட்டிருக்கும் அவர்களைச் சந்திப்பதில் பல இடையூறுகள் இருப்பதையும் கூறியிருந்தார். எங்களின் உரையாடலிடையே தனக்கு அவர்களைச் சந்திக்கக் கூடியதான வாய்ப்புக் கிடைத்ததைக் கூறி அவர்களைச் சந்திக்கையில் தான் அவதானித்த சில விடயங்களையும் கூறியிருந்தார். அவர் கூறிய சுவாரசியமான தகவல்களைத் தருகின்றேன்.

அவர் சந்தித்த பழங்குடியினரின் தொடர்பாடல் மொழிகளிலும் அவற்றை அவர்கள் கையாளும் விதங்களிலும் தமிழ்த்தன்மை அதிகம் இருந்தது. அவற்றில் ஒருசில தமிழ்ச் சொற்கள் இன்னமும் திரிபுபடாமல் இருப்பதும் தெரிகின்றது. தமது மதக் கொண்டாட்டங்களின் போது நெற்றியிலும் உடலிலும் மூன்று வெண்ணீற்றுப் பட்டைகளை இட்டுக் கொள்ளும் வழக்கத்தை இன்றும் இப்பழங்குடியினர்; கைக்கொண்டு வருகின்றனர். வேட்டையாடலுக்கும் தற்பாதுகாப்பிற்கும் தமிழர் பாவித்த, பாவிக்கின்ற வளரி (பூமரங்) என்ற மரத்தாற் செய்த ஆயுதத்தைப் பாவிக்கின்றார்கள். தங்களது வேட்டைக்கு உதவியாக தமிழரைப் போலவே நாய்களைத் துணை கொள்கிறார்கள். அந்த நாய்கள் கூட யாழ்ப்பாணத்தில் உள்ள எங்களின் நாய்களைப் போன்றே இருக்கின்றன. இவற்றின் ஆழமான பார்வையையும் தெளிவினையும் கூறத் தேவையில்லைத்தானே.

இனி, குமரிக்கண்டம் இருந்திருக்கின்றதுதான் எனக் கூறிக் கொள்ளக் கூடியதான இன்னொரு சுவையான ஆதாரத்தையும் பார்ப்போம். இதன் மூலக் கருத்து எனது பார்வைக்கு முற்றிலும் முரணானதாக இருந்தாலும் ஒப்பீட்டடிப்படையில் இது மிகவும் அவசியமாகவும் இருக்கின்றது.

சுமேரியக் கண்ணோட்டம்

முனைவர் கே.உலோகநாதன் (Dr.K.Loganathan.PhD)  மலேசியத் தமிழறிஞர், மொழி ஆய்வாளர். இன்றிவர் நம்முடன் இல்லாதுவிடினும் இவருடைய ஆய்வுகளின் வெளிப்படுத்தல்களை 'யூரியுப்'பிற் காணலாம். ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் மெசப்பத்தேமியப் பகுதிகளில் வாழ்ந்த சுமேரியர்களின் வழித் தோன்றல்கள்தான் இன்றுள்ள தமிழர் என்கின்றார், இவர். தனது கூற்றிற்காக அவர் கூறியுள்ள விடயங்களையும் சுருக்கமாகப் பார்ப்போம்.

முனைவர் கே.உலோகநாதன் தனது பட்ட மேற்படிப்பிற்காக இலண்டன் பல்கலைக் கழகத்திற்குச் சென்றிருந்த வேளையில் ஒருநாள் அங்கிருந்த நூலகத்தில் சுமேரியர்கள் பற்றிய நூலொன்றினைக் கண்டு அதனை எடுத்து வாசித்தார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, சுமேரியமொழி நூலான அதனை வாசித்தவர் ஆச்சரியத்தில் உறைந்து போனார். சுமேரியமொழிச் சொற்களை அப்படியே ஓசை மாறாது ஆங்கிலத்தில் எழுதியிருந்த அந்நூலை வாசித்தவருக்கு சுமேரியச் சொற்களெல்லாம் தமிழ் போன்று இருந்ததினால் ஏற்பட்டதுதான் அந்த ஆச்சரிய உறைவு.
ஆர்வமேம்பாட்டினால் அந்நூலகத்தில் இருந்த சுமேரியமொழி தொடர்பான எல்லா நூல்களையும் எடுத்து வாசிக்கத் தொடங்கினார். அவரின் ஆச்சரியம் எல்லை மீறியது. தமிழறிஞராக இருந்த முனைவர் கே. உலோகநாதனிற்கு சுமேரிய நூல்களை வாசிக்க வாசிக்க, ஏதோ தமிழ் நூல்களை வாசிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவ்வேளையில் அவருக்குத் தமிழும் சுமேரியமும் ஒன்றுதான் என்று மனதிற்பட்டது. தொடர்ந்து ஆய்வுகள் செய்து பல ஆய்வுக்கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். பல மொழி ஆய்வாளர்கள் இவரது ஆய்வுக் கட்டுரைகளை, இவரது முடிவுகளை, அவற்றிற்கான தெளிவு விளக்கங்களை ஏற்றுக் கொண்டாலும் 'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்ற கதைதான் உண்மையாகியது.

சுமேரியமொழி பற்றிய இவரது கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், மொழிகள், இனங்கள் பற்றி இன்று கருதப்படும் உலக வரலாறே மாற்றி எழுதப்பட வேண்டி வந்திருக்கும். ஆனால் பெரும்பாலான தமிழர்கள் உட்படக் கிட்டத்தட்ட எல்லா மொழியியல் ஆய்வாளர்களுமே இவரது ஆய்வுகளின் முடிவினைக் கருதாது புறந்தள்ளி விட்டார்கள். காரணம் 'உலகின் அனைத்து மொழிகளுமே சுமேரியத்தில் இருந்துதான் கிளைத்தன' என்று முடிவு கூறியிருந்தார், முனைவர் கே. உலோகநாதன். இதனால் வல்லமையுள்ளவர்களினால் இவரது ஆய்வு முடிவுகள் மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு விட்டன என்கிறார், இவர்.

தமிழ் சுமேரியத்தின் கிளையல்ல எனக் கூறுமிவர் 'சுமேரியத்தின் நேரடியான வளர்ச்சியின் வெளிப்பாடே இன்றுள்ள தமிழ்' என்கிறார். அதாவது வளர்ச்சியடைந்த சுமேரியம்தான் இன்றுள்ள தமிழ் என்பது இவரது அசைக்க முடியாத கருத்து. அதாவது, தமிழ்தான் சுமேரியம், சுமேரியம்தான் தமிழ், இரண்டும் வேறுவேறு அல்ல எனக் கூறுகின்றார். மேலும் சுமேரியர்தான் தமிழர் எனக் கூறும் இவர், தமிழர் கூறும் முச்சங்கங்களில் முதற்சங்கம் இருந்த இடந்தான் சுமேரியா எனக் கூறுகின்றார். அங்கிருந்துதான் தமிழர் தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களுக்கு நகர்ந்து வந்தார்கள் என்கிறார். இவரது கருத்துடன் ஒத்துப் போகும் சில யாழ்ப்பாணத்து மொழி வல்லுனர்களும் இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

இனி, தமிழ்தான் சுமேரியம், சுமேரியம்தான் தமிழ் என இவர் உறுதியாகக் கூறுவதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்வோம். 'சுமேரிய நூல்களை வாசிக்கையில் அவை தமிழாகவே எனக்குப் பட்டது. அவ்வளவுக்கு அந்நூல்களில் இருந்த சொற்கள் எல்லாம் தமிழாக இருந்தததை என்னால் உணர முடிந்தது.' எனக் கூறிய அவர், 'நான் தமிழை நன்கு தெரிந்த தமிழனாக இருந்ததால்தான் இந்த ஒற்றுமையை இலகுவாக அறியக் கூடியதாக இருந்தது' என்றும் 'வேற்று மொழி ஆய்வாளர்களால் இந்த ஒற்றுமையைக் கண்டுபிடிக்கவே முடியாது' என்றும் கூறியிருந்தார். எடுத்துக் காட்டுகளாக சுமேரிய இலக்கியங்களில் இருந்து அவர் கூறும் சில 'கிளவி'களைப் பாருங்கள். உண்மையாகவே நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

சுமேரியர்களின் 'சுருபாக் நெறி' என்ற நூலில் உள்ள ஒரு கிளவி: - சேய்கல் ஐயா நனம்: நின்கல் அம்மா நனம் - இதனை வாசிக்கும் எந்தத் தமிழரும் இது தமிழ் என்றே கூறுவர். இதில் 'சேய்கல்' என்பது பெரிய பையன் என்றும் 'நின்கல்' என்பது மூத்த மகள் என்றும் உள்ளது என்கிறார். 'ஐயா', 'அம்மா' என்பவை பற்றி நான் கூறத் தேவையே இல்லை. 'நனம்' என்பது இன்று 'நலம்' என மருவிவிட்டதை நான் உங்களுக்குக் கூறத் தேவையில்லை.

முனைவர் கே.உலோகநாதன் தரும் இன்னொரு எடுத்துக்காட்டைப் பாருங்கள். இது சுமேரியரின் 'சுருப்பாக்கு நெறி' என்ற நூலில் உள்ள கிளவி எனக் குறிப்பிடுகிறார்.

நிகழ்னம் கல் கல்லின் - மிகவே
நிகழ்வே மெய் கல்கல்.
'அன்றாடம் நிகழ்வனவற்றில் இருந்து கற்கும் அறிவே உண்மையில் கற்கும் கல்வி (அறிவு)' எனப் பொருள்படும் இத்தொடர் தனக்கு 'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு' என்ற குறளை நினைவு படுத்தியது என்ற முனைவர் கே. உலோகநாதன். வள்ளுவரின் இக்குறள்கள் கூட இச்சொற்கட்டு அமைப்பிலேயே இருப்பதையும் சுட்டிக்காட்டி, சுமேரியத் தமிழ்த் தொடர்களின், காலத்தின் ஊடான தொடர்ச்சியாகத்தான் திருக்குறளின் ஈரடி வடிவம் வந்திருக்கும் என்றும் கூறியிருந்தார்.

இப்படியான தொடர்புகளை மாத்திரமவர் எடுத்துக் காட்டவில்லை. சுமேரியர்களின் இலக்கணங்களிலும் தமிழ் இலக்கண அமைப்புக்கள் இருப்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார். குறிப்பாக, சுமேரிய இலக்கியங்களின் வசன அமைப்புகள், தமிழில் உள்ள வசன அமைப்புகள் போன்றே எச்சங்கள், வேற்றுமை உருபுகள் போன்றவற்றைக் கொண்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றார். காட்டாக, ஊரிற்கே, ஊருக்கு போன்ற பல சொற்களைச் சுமேரியர் பாவித்திருந்ததை எடுத்துக் காட்டுகின்றார்.
இன்னமும் சுமேரியர் தங்களைக் குமரியர் என்றேதான் கூறிக் கொண்டார்கள் என்று முனைவர் கூறுகின்றார். எந்தவிடத்திலாவது அவர்கள் தங்களைச் சுமேரியர் எனக் குறிப்பிட்டதாகத் தான் காணவில்லை என்கிறார். இவர்களைச் சுற்றியிருந்த மக்கள்தான் இவர்களைச் சுமேரியர் என அழைத்திருந்தார்கள் எனக் கூறும் இவர் சுமேரியர் சங்கம் என்ற சொல்லையும் தங்களது நூல்களிற் பாவித்து இருப்பதையும் குறிப்பிடுகிறார். இவர்கள் கிழக்கில் இருந்து மெசப்பத்தேமியப் பகுதிக்கு வந்தவர்கள் எனக் குறிப்பிடப்படுவதால், ஒருவேளை இவர்கள் பாரசீக வளைகுடாவில் இருந்த பெரிய தீவு ஒன்றில் வாழ்ந்து வந்து, ஏதோ காரணத்தால் அத்தீவு நீரில் மூழ்கிய வேளையில், மெசப்பத்தேமியப் பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என்பது இவரின் இன்னொரு கணிப்பு.

தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இந்த ஆய்வுகளுக்காகவே செலவிட்ட முனைவர் கே. உலோகநாதன் அவர்களின் இந்த விடயம் பற்றிய விபரத்தை ஆங்கிலத்திலும் தமிழிலுமாக 'யூரியுப்'இல் ளுரஅநசயைஅ ளை வயஅடை என்ற தலைப்பில் 4 விழியங்களில் காணலாம். இவ்விடயத்தில் ஆர்வமுள்ளவர்கள் இவ்விணைப்புகளுக்குச் சென்று தேவையான மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

முனைவர் கே.உலோகநாதனின் இவ்வாய்வு மிகவும் உயர்வானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இவரது ஆய்வுகள் தமிழுக்கும் உலக வரலாற்றின், நாகரிகத்தின் ஆரம்பமென இன்று கருதப்படும் சுமேரியத்திற்கும் உள்ள ஆச்சரியமான தொடர்பினைத் தெளிவாகக் காட்டிய வேளை மெய்சிலிர்க்கத்தான் செய்தது. ஆனால் சுமேரியத்தில் இருந்துதான் தமிழ் என்பதற்கு இன்னமும் தெளிவான வரைவுகள் தேவை. முக்கடல்கோள்கள், முச்சங்கங்கள், கபாடபுரம், தமிழ் எழுத்துகளின் வளர்ச்சிப் படிமுறை போன்றவற்றிக்கான தெளிவுகள் இல்லை. பஃறுளியாறு, குமரிமலைத் தொடர் என்பவை பற்றிய விளக்கம் எதனையும் இவர் கொடுத்ததாகத் தெரியவில்லை. இவற்றின் அடிப்படையில் குமரி பற்றிய இவரது ஊகம் பொருந்துவதாக எனக்குப் புலப்படவில்லை. ஆனால்,.... இவரது ஆய்வுகளின் வெளிப்புகள் மறுபுறமாகத் திரும்பிப் பார்த்தால் தமிழில் இருந்து சுமேரியம் என்பதற்கு நல்லதொரு விளக்கமாக இருக்கும்.

இவ்வாய்வுகளின் வழியில் இன்று உலகினர் கொண்டுள்ள வளர்ச்சியான நாகரிகங்கள், அவற்றிக்கு அடிப்படையான மொழிவளங்கள் என்பவற்றிக்கெல்லாம் தமிழ்தான் மூலம் என்பதனையும் தெளிந்து கொள்ளக் கூடியதாகவும் உள்ளது. தொடர்ந்து வரும் சுமேரியம் பற்றிய அறிதற் பார்வைகளின் வெளிப்புகளில் அதனைத் தெரிந்து கொள்வீர்கள்.



கனி விமலநாதன் B.Sc   

leptons@hotmail.ca
                        

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்