இலக்கியவாதிகள் பாத்திரங்களாகக் கொண்ட ஈழத்துச் தமிழ்ச் சிறுகதைகள்

தேவமுகுந்தன்


1.0 அறிமுகம்


தமிழ்ச் சிறுகதைகளில் ஈழத்துச் தமிழ்ச் சிறுகதைகளுக்கு தனித்துவமான இடமுண்டு. ஈழத்துச் தமிழ்ச் சிறுகதைகள் சொல்லப்படும் முறை, கையாளும் கருப்பொருட்கள் என்பவற்றால் தமிழகச் சிறுகதைகளிலிருந்து வேறுபட்டு நிற்கின்றன.
ஆரம்பத்தில் வர்க்கம், சாதீயம், சீதனம் என்பவற்றைக் கருப்பொருட்களாகக் கொண்டு வெளியான பெரும்பாலான ஈழத்துச் தமிழ்ச் சிறுகதைகள் தேசிய இனப்பிரச்சினை வலுவடைந்த எழுபதுகளின் பிற்கூறின் பின்னர் போரின் அவலங்களை கருப்பொருட்களாகக் கொள்ளத் தொடங்கின. போர் நிறைவுற்ற பின்னர் எழுதப்படுகின்ற கதைகள் முடிந்த போரின் இழப்புக்களையும் மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்களையும் கருப்பொருளாகக் கொள்ளத் தொடங்கியுள்ளன. இவ்வாறாக ஆரம்பம் முதல் இன்றுவரை பெரும்பாலான சிறுகதைகளின் கருப்பொருட்கள் மாற்றமடைந்து வருகின்ற போதிலும் இதற்குச் சமாந்தரமாக சக இலக்கியவாதிகளை கதாபாத்திரங்களாக்கி அவர்களின் செயற்பாடுகளை கருப்பொருளாகக் கொண்டு சிறுகதை படைக்கும்போக்கு ஈழத்தில் இருந்து வருவது அவதானிக்கப்படுகின்றது.

இவ்வாறு. இலக்கியவாதிகளை பிரதான பாத்திரமாகக் கொண்டு படைக்கப்பட்ட சிறுகதைகளில் காணப்படும் புனைவு, வக்கிரம் என்பவற்றை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இலக்கியவாதிகளிடம் காணப்படும் சில குறைபாடுகளை நேரடியாகச் சுட்டிக் காட்ட முடியாதநிலை, போலிகளை அம்பலப்படுத்தல், தனிப்பட்ட பிரச்சினைக்காக சகபடைப்பாளியை அவமானப்படுத்தல், சட்டப் பிரச்சினைகளில் இருந்து தப்புதல், சில படைப்பாளிகளின் செய்கைகைளைக் காணும்போது ஏற்படும் படைப்புந்தல் போன்றன இவ்வாறான கதைகள் தோன்றக் காணரமெனலாம். உலகெங்கும் பரந்துள்ள உயிரினங்கள் படைப்பிலக்கியங்களில் கருப்பொருட்களாக அமையும்போது எழுத்தாளனை படைப்புக்களின் நாயகனாக்குவதில் தவறொன்றுமில்லை. ஆனால் உண்மையான படைப்பாளியை அவனது சொந்தப்பெயருடன் பாத்திரமாக்குவது நாகரீகமானதல்ல. இது சட்டப்பிரச்சினைக்கும் வழிசமைக்கலாம். உண்மையான படைப்பாளியை வேறுபெயரில் பாத்திரமாக்கி ஆக்க இலக்கியம் படைக்கும்போது அந்தப் படைப்பாளியை இனங்காட்டத்தக்க சில கோடிகாட்டல்கள் (பெயர், உடல் அமைப்பு, தொழில், ஊர்) படைப்புக்களில் இடம்பெறுகின்றன. இவ்வாறு கோடிகாட்டல்களுடன் படைப்பாளியைப் பற்றி சிறுகதைகள் ஆக்கும்போது அப்பாத்திரத்தின் மீதான உண்மைத்தன்மையைப் பேணுதல் அவசியமாகும். அவ்வாறில்லாதவிடத்து உண்மையான இலக்கியவாதியைப் பற்றிய தவறான புரிதல்கள் வாசகனுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.


சக இலக்கியவாதிகளை பாத்திரங்களாக்கும் பண்புகள் தமிழ் நாட்டு எழுத்தளர்களிடமும் காணப்படுவதை அவதானிக்கலாம். சுந்தர ராமசாமியின் ஜே, ஜே.: சில குறிப்புக்கள், நீல பத்மநாதனின் தேரோடும் வீதி பேன்றவற்றை இதற்கு உதாரணமாகக் காட்ட முடியும். ஈழத்துத் சிறுகதைகளைப் பொறுத்த வரையில் மூத்த முற்போக்கு எழுத்தாளர் என்.கே. ரகுநாதனினால் எழுதப்பட்ட 'நிலவிலே பேசுவோம்' சிறுகதையானது உயர்சாதிக்காரரான பெரிய மனிதர் ஒருவர் நாசூக்காக சாதியில் குறைந்தவர்கள் எனக் கருதப்படுபவர்களை வீட்டுக்குள் விடாமல் 'வெளியே நல்ல நிலவு! அத்துடன் பால் போன்ற மணல். அங்கே போய்ப் பேசிக்கொள்ளலாம்.!'

ஏன்று கூறி வெளியே அழைத்துப் போகின்றது. இக்கதையில்வரும் பெரிய மனிதர் மறைந்த பேராசிரியர் க. கைலாசபதி அவர்களென மீளமீள தமிழக மார்க்ஸிச விரோத இலக்கியவாதிகளான வெங்கட் சாமிநாதன் போன்றவர்களால் சுட்டிக் காட்டப்பட்டு வந்தது. நீண்ட இடைவெளியின் பின்னர் என்இ கே. ரகுநாதன் அக்கதை பேராசிரியர் கைலாசபதியைப் பற்றியது அல்ல என பேட்டியொன்றில் தெரிவித்து இச்சச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

இந்தப் பின்னணியில் சிறுகதையொன்று எழுதப்படும் நோக்கம் அது புனைவா அல்லது வக்கிரமா என்பதைத் தீர்மானிக்கின்றது. இலக்கியவாதி ஒருவரில் காணப்படும் முரணை அல்லது நூதனத்தன்மையை கலைத்துவத்துடன் சிறுகதையாக்கும்போது அது புனைவாகின்றது. மாறாக இலக்கியவாதியொரவரை வேண்டுமென்று அவமானப்படுத்தவதற்காக பொய்களும் குரோதமும் வக்கிர சந்தோச நாட்டத்தையும் அடிப்படை நோக்கமாகக் கொண்டு ஆக்கப்படும் படைப்புக்கள் வக்கிரம் நிறைந்தவையெனலாம். சிறுகதையினை வாசிக்கும் போது குறித்தபாத்திரம் இலக்கியவாதியென நினைவுக்கு வந்தாலும் நேரடியாக அப்பாத்திரத்தினை இலக்கியவாதியெனக் கதையில் குறிப்பிடப்படாதவிடத்து அக்கதை ஆய்வுக்கு சேர்த்துக் கொள்ளப்படவில்லை. உதாரணம்: எஸ். பொ.வின் வீ தொகுதியில் இடம்பெறும் அணி என்ற சிறுகதை.


இலக்கியவாதிகளை பிரதான பாத்திரமாகக் கொள்ளாது துணைப்பாத்திரங்களாகக் கொண்ட கதைகளும் இவ் ஆய்வில் எடுத்தக் கொள்ளப்படவில்லை. உதாரணம் கலைமுகம் 52 ஆவது இதழில் (2011) வெளியான தேவமுகுந்தனின் இவன் என்ற சிறுகதையில் இடம்பெறும் கவிஞர் இணுவை இன்பன், க. முரளீதரனின் பாவ மன்னிப்பு (மல்லிகை, ஏப்ரல் 2012) சிறுகதையில் வரும் சுவஸ்திகன் ஆகியோர் துணைப பாத்திரங்களாகவே கதைகளில் உலாவுலதால்; இக்கதைகள் இங்கு தவிர்க்கப்படுகின்றன.
இலக்கியவாதிகளை பிரதான பாத்திரங்களாகக் கொண்ட பல தமிழ்ச் சிறுகதைகள் ஈழத்தில் எழுதப்பட்டள்ளன. அவற்றின் எண்ணிக்கை சுமார் ஐம்பதாக இருக்கலாம் எனக் கருதப்;படுகின்றது. இவ்ஐம்பது கதைகளையும் இங்கு ஆராய்வது சாத்தியமற்றது. எனவே மாதிரிக்காக பத்துக் கதைகள் (20 சதவீதம்) மட்டுமே எழுமாறாக (சயனெழஅ) எடுக்கப்பட்டுள்ளன

. 2.0 பகுப்பாய்வும் விளக்கமும்

ஆய்வின் வசதிகருதி இலக்கியவாதிகளை பாத்திரமாக்கி எழுதப்பட்டள்ள சிறுகதைகளை பின்வருமாறு வகைப்படத்தலாம்: 1. தனியொரு இலக்கியவாதி மட்டும் பாத்திரமாக்கப்பட்டுள்ள சிறுகதைகள் 2. ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கியவாதிகளை பாத்திரங்களாக்கப்பட்டுள்ள சிறுகதைகள்.

2.1 தனியொரு இலக்கியவாதி மட்டும் பாத்திரமாக்கப்பட்டுள்ள சிறுகதைகள்

இந்தப் பிரிவினுள்ளே குந்தவையின் யோகம் இருக்கின்றது, உமா வரதராஜனின் வெருட்டி, அஷ்ரப் சிஹாப்தீனின் இரண்டாம் யாசீர் அரபாத், க.பரணீதரனின் விட்டு விடுதலையாகி நிற்பாய், செ. யோகநாதனின் மூன்றாவது பக்கம்ஆகிய கதைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

அ. குந்தவையினால் எழுதப்பட்ட யோகம் இருக்கின்றது என்ற சிறுகதை அவரது சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையாக இடம்பெற்றுள்ளது. ஊழல் புரியும் முற்போக்கு எழுத்தாளரொருவர் இக்கதையின் நாயகன். உதவி அரசங்க அதிபரான எழுத்தாளன் இலஞ்சம் வாங்கிப் பிடிபட்டு பணியில் இருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்ட காலகட்டத்தில் வீதியால் திரிய வெட்கப்படுகிறான். கண்ணில் தட்டப்படும் மனிதர்கள் யாவரும் தன்னைக் கிண்டல் செய்வாக எண்ணி மனம் புளுங்குகின்றான். இறுதியில் வழியில் சந்திக்கும் எழுத்தாளனது அரசியல் செல்வாக்கு மிக்க நண்பனொருவன் அமைச்சரைப் பிடித்தது மீண்டும் வேலை எடுக்கலாமெனக் கூறி நம்பிக்கையூட்டுகிறான். 'எள்ளல் மிகுந்த நடையில் எழுதப்பட்ட கதை' இதுவென எஸ். பொ. நூலின் முன்னீட்டில் இக்கதையைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். எழுத்தாளரின் பெயர் கதையில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் கதையின் தலைப்பு, பாத்திரம் பயணிக்கும் வீதியின் பெயர், கல்வி கற்ற பாடசாலை என்பன வாசகர்களுக்கு பாத்திரத்தினை இனங்காண வழிசமைக்கின்றன. முற்போக்கு பேசி நடைமுறையில் அதற்கு எதிராக இலஞ்சம், ஊழல், மோசடி என வாழும் முரண்-எழுத்தாளனைப் பற்றிய புனைவு இங்கே இலக்கியத் தரமுள்ள சிறுகதையாகின்றது.

ஆ. ஈழத்தின் சிறந்த சிறுகதைப்படைப்பாளில் ஒருவரான உமா வரதராஜனால் எழுதப்பட்ட வெருட்டி என்ற சிறுகதை 1996 ஆம் ஆண்டு மூன்றாவது மனிதன் இதழில் வெளியாகி காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட உமா வரதராஜன் கதைகள் (2011) தொகுப்பில் உள்ளடக்கப்பட்டள்ளது. தன்னை ஒரு அதிமேதாவியாகக் கருதும் எழுத்தாளரைப் பற்றிய கதை இது. இக்கதாபாத்திரத்திற்கு தான் காணும் கலைப்படைப்புக்கள் அனைத்தும் வேறு ஒருவருடையதை பிரதி செய்யப்பட்டதென்ற ஐயம் உள்ளது. இறுதியில் பாத்திரம் மனோதத்துவ வைத்தியரிடம் செல்கின்றது. வைத்தியர் அவரை தியானம் செய்யுமாறு கூறுவகிறார். உமா வரதராஜன் இக்கதையை கிண்டல் மிக்க நடையில் எழுதியுள்ளார். தன்னை ஏனையோர் உயர்வாக கருதவேண்டுமென்பதற்காக மற்றவர்களின் படைப்புக்களை மட்டந்தட்டி அவற்றை பிரதி செய்யப்பட்டவை எனக்கூறி இழிவுபடுத்தும் இப்பாத்திரத்தை உண்மையானதா இல்லைப் புனைவா என்பதை ஊகிப்பது கடினமாகவே உள்ளது. ஆனால் இலங்கையின் தென் கிழக்குப் பகுதியில் வாழ்வோரால் இக்கதாபாத்திரம் யாரென இனம்காண முடியலாம். கதை சொல்லும் பாணியில் சிறப்பானதாக இக்கதை திகழ்கின்றது.


இ. அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய இரண்டாம் யாஸீர் அரபாத் என்ற சிறுகதை 2011 ஆம் ஆண்டு தினக்குரலில் வெளியானது. சர்வதேச எழுத்தாளர் மாநாடு (2011) இணை ஒட்டி டென்மார்க் ஜீவகுமாரனினால் தொகுக்கப்பட்ட முகங்கள் தொகுதியிலும் இக்கதை இடம்பெற்றுள்ளது. இக்கதையில் வரும் எழுத்தாளன் தன்னை பெரியவனாகக் காட்ட முயற்சி செய்கிறார். இறுதியில் அவர் தன் உயிருக்கு ஆபத்து எனக் காட்ட சான்றுகள் தயாரித்து மேலை நாடென்றில் புகலிடம் தேடுகின்றார். இக்கதையும் உமா வரதராஜனின் வெருட்டி போன்றே கிண்டல்மிகு நடையில் எழுதப்பட்டுள்ளது. இக்கதையில் எழுத்தாளனின் போலிவாழ்வு அம்பலப்படுகின்றது. இக்கதையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் யாவும் உண்மையானவையா இல்லை கற்பனையானவையா என்பது ஐயத்திற்கு உரியது. முஸ்லீம் எழுத்தாளன்இ சஞ்சிகை நடத்தியவர்இ தற்போது புலம்பெயர்ந்திருப்பவர் போன்ற தகவல்கள் வாசகர்களுக்கு இப்பாத்திரத்தினை இனங்காட்ட துணைபுரியலாம்
.

ஈ. க. பரணீதரன் எழுதிய விட்டு விடுதலையாகி நிற்பாய் .என்ற சிறுகதை ஜீவநதியில் இதழ் 21) வெளியாகி பின்பு மீண்டும் துளிர்ப்போம் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. பல பெண்களுடன் தகாத தொடர்புகளை வைத்துள்ள எழுத்தாளரொருவர் அதனைத் தட்டிக் கேட்கும் மனைவியை வீட்டை விட்டுத் துரத்துகின்றார். அவளை நடத்தை கெட்டவள் எனக் கூறுகின்றார். மனைவி அவரை விட்டு விட்டுவெளிநாட்டுக்குச் செல்ல ஆயத்தமாகின்றார். இக் கதையைப் பற்றி டொக்டர் எம்இ கே.முருகானந்தன் பாலியல் பிறழ்வுகளும் வக்கிரங்களும் கொண்ட ஒருவனின் மனைவியாக வாழ்வதின் துன்பத்தை 'விடுதலையாகி நிற்பாய்' பேசுகிறது. பெண்ணியம் இழையோடுகிறது. அவனது செயற்பாடுகள் உளவியல் பிரச்சனையின் வெளிப்பாடு என்பதைச் சுட்டிக் காட்டுவதுடன்இ உள ஆற்றுப்படுத்தல் அதிலிருந்து மீள உதவும் என்கிறது. 'எனக்கு விசர் எண்டு சொல்லுறியோ' இது தனது தன்மானம் பாதிக்கப்பட்ட அந்த ஒற்றைக் கணவனின் எதிர்வினைத் தனிக்குரல் என்று மட்டும் என்னால் கொள்ள முடியவில்லை. மனநோய்கள், உள ஆற்றுப்படுத்தல் போன்றவை பற்றி இன்னும் தவறானக் எண்ணக் கருக் கொண்ட எமது சமூக பண்பாட்டுத் தளத்தின் குரலாகவே ஒலிக்கிறது எனக் குறிப்பிடுகின்றார்.

இப்பாத்திரம் உண்மையான ஒருவரை வைத்து எழுதப்பட்டதா இல்லை முற்றிலும் கற்பனையான பாத்திரமா எனத் தீர்மானிப்பது கடினமாக உள்ளது. இப்பாத்திரம் ஒரு சமுர்த்தி உத்தியோகத்தர் என்ற தரவானது வாசகர்களுக்கு பாத்திரத்தினை உய்த்தறிய வகை செய்யலாம்.

உ.) மல்லிகை செப்ரெம்பர்(2000) இதழில் முற்போக்கு எழுத்தாளர் செ.யோகநாதன் மூன்றாவது பக்கம் என்ற சிறுகதையை எழுதியுள்ளார். இக்கதையில் மக்களை ஏமாறும் பயண முகவரொருவர் சத்தியமூர்த்தியின் மகனாக இலக்கிய விமர்சகர் பரசுராமன் வருகின்றார். பரசுராமன் படைப்புக்களை விமர்சியாது படைப்பாளிகளின் தோற்றம், அந்தரங்க விடயங்கள் என்பவற்றை விமர்சிக்கிறார். பணய முகவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர் பயணமுகவருடன் கைகலப்பில் ஈடுபட தனது தந்தைக்காக அந்த மனிதரை இலக்கிய விமர்சகர் பரசுராமன் தாக்குகின்றார். அடிவாங்கிய கோபத்தில் ஏமாந்த மனிதர் 'மொட்டைக்கடிதம்'அனுப்ப விமர்சகர் கைதாகின்றார்.

இக் கைது விடயம் ஊடகங்களில் பரபரப்படைய விமர்சகர் விடுதலையாகி செல்வாக்கால் வெளிநாடொன்றின் பல்கலைக் கழகத்திற்கு செல்கின்றார். ஏமாந்த மனிதரும் அவருக்கு நகையை அடகுவைத்து பணம் கொடுத்த அவரின் சகோதரியும் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஏமாற்றுக்காரின் மகனான இலக்கிய விமர்சகரினதும நடத்தையை இங்கு கதையாக்கப்பட்டுள்ளது. சொந்தப் பிரச்சினைக்காக கைதாகி விடுதலையாகும் விமர்சகன் அந்தக் கைது விடயத்தை அரசியலாக்கி இலாபந்தேடி வெளிநாடு செல்லும் நுட்பம் கதையில் நையாண்டியாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. இக்கதை இலகுவான நடையில் சொல்லப்பட்டுள்ளது. கதையில் வரும்பாத்திரத்தை இனங்காண்பது கடினமாகவேயுள்ளது. எனினும் சில சம்பவங்கள் நினைவுள்ளவர்களுக்கு சிலவேளைகளில் பாத்திரத்தை இனங்காணச் துணைபுரியலாம் மேலே கூறப்பட்ட ஐந்து சிறுகதைகளிலும் இலக்கியவாதிகள் பாத்திரங்களாக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் உண்மையான பெயர் கதைகளில் கையாளப்படவில்லை. ஆனால் சில பாத்திரங்கள் உண்மையான இலக்கியவாதிகளை மையமாக வைத்தே புனையப்பட்டவை என்பதை வாசகனால் ஊகிக்கமுடியும். இச்சம்பவங்கள் உண்மையானவையாக அல்லது புனைவுகளாக அமையலாம். ஆனால் இங்கு சிறுகதைகளில் எடுத்தாளப்பட்ட விடயங்களை வைத்து கதைகளை புனைவதில் படைப்பாளிகள் வெற்றி கண்டுள்ளனர்.

2.2 ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கியவாதிகளை பாத்திரங்களாக்கப்பட்டுள்ள சிறுகதைகள்.

இப்பிரிவினுள்ளேஎன்.கே.ரகுநாதன் எழுதிய பஜகோவிந்தம், வெடியரசன் எழுதிய சின்ன மாமா, சண்முகம் சிவலிங்கம் எழுதிய திசை மாற்றம் த.மலர்ச்செல்வன் எழுதிய மனக்கால், இராகவன் எழுதிய யேசுகாவியம் ஆகிய கதைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அ. மூத்த முற்போக்கு எழுத்தாளர் என். கே.ரகுநாதன் கார்த்தி நேசன் என்ற புனைபெயரில் யாழ்ப்பாணத்தில்
1989-1990 காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான திசை (மார்ச்1990) இல் பஜகோவிந்தம் என்ற சிறுகதையைப் படைத்துள்ளார். எழுத்தாளர் ஒருவர் சொத்துக்கு ஆசைப்பட்டு ஆண்மை அற்ற ஒருவருக்கு தனது மகளை திருமணம் செய்த வைக்கின்றார். இந்த திருமணத்தின்; வரவேற்புபசாரத்தில் பங்குகொள்வதா இல்லையா என்ற மனப்போராட்டத்தில் பேராசிரியர் ஒருவர் குழப்பமடைந்து பின்னர் எழுத்தாளர் தன்னைப் பற்றிக் கூட்டங்களில் இழிவாகப் பேசக்கூடும் என்ற பயத்தினால் கலந்து கொள்கிறார். பேராசிரியரின் நினைவுகளினூடாக இக்கதை நகர்கின்றது. எழுத்தாளர் பாத்திரத்தினை தொழிலதிபர் எனவும் அவரது நாவல்களில்; நயினார் பாத்திரங்கள் வருகின்றன எனவும் குறிப்பிடுவது புகழ்பெற்ற தலித் எழுத்தாளர் எனப்படும் எழுத்தாளரொருவரை வாசகர்களுக்கு நினைவூட்டலாம். மேலும் இக்கதையில் வரும் பின்வரும் பகுதி மேலும் சில எழுத்தாளர்களை வாசகர்களுக்கு இவ்வாறு அறிமுகப்படுத்துகின்றது: 'டூப் மாஸ்ரர் பட்டம் பெற்ற இலக்கியக் கொம்பனைக் கண்டதும் பேராசிரியருக்கு பெரும் ஆச்சரியம். காலம் முழுவதும் தருணபாவணனின் பரமவிரோதி, இளமைக்கால காதல் விளையாட்டுக்கள் கதைகள் எழுதி கோடேறி வழக்கும் ஆடியவர், திடீரென்று இப்போது கொஞ்ச நாட்களாக நண்பர், நண்பர ;என்று குத்தி முறிகின்றார்.இந்த மர்மம் பேராசிரியருக்குப் விளங்கவில்லை. ...முகமுடிகளை கழற்றி வைத்து விட்டு சிறிது நேரம் பேசித் சுகிப்போம் அழைப்பு விடுத்து காமக்தைகள் பேசி, மன விசாரங்கள் தீர்த்த ஒன்று கூடல்நிகழ்ச்சி நடத்தியவரும் இவர்தான் நீலநிர்வாகத்தில் மாடிவீடும் பச்சை நிர்வாகத்தில் மனையாட்டிக்கு பதவியுயர்வும் பெற்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய புத்திரச் செல்வத்தை கருங்காலியாக வேலைசெய்யவிட்டு, பின்னர் நிரந்தரமாக வேலை பெற வங்கி நிர்வாகத்திற்கு பந்தம் பிடித்த பகட்டு எழுத்தாளர் அவர்அருகில். எழுத்தை விமர்சியுங்கள்;எழுத்தாளனை விமர்சியாதீர்கள், மற்றப்படி எழுத்தாளனை விமர்சிப்பவனை ஒதுக்கித் தள்ளுங்கள் என பகிரங்க வே;டுகோள் விடுத்த பரிகார எழுத்தாளர் இன்னொருபுறம். நல்ல கதை எழத ஒருபோதும் துணியான்!' என்று தருணபாவணன் தூக்க வீச, இலக்கிய கெடுமுடி' என்று அவரைப் புகழ்ந்து எழுத பின்னர் தருணபாவணன் தனது வாரிசாக அறிவித்த எழுத்தாளர் இன்னொருபுறம் இன்னும் சப்புகள், சருகுகள், திண்டுகள் முண்டுகள்...கம்புகள், என்று பலர்.

இக்கதையில் குறித்த ஓர் எழுத்தாளரின் பலவீனமான நடத்தை கலாபூர்வமாகக் கதையாக்கப்ப்டுள்ளது. இக்கதையைப் பற்றி த. அஜந்தகுமார் 'முற்போக்கு எழுத்தாளரொருவர் சொத்துக்கு ஆசைப்பட்டு ஆண்மையற்ற ஒருவனுக்கு தன்மகளைக் கட்டிக் கொடுத்த வக்கற்ற தன்மையை இக்கதை கடுமையாக விமர்சிர்க்கிறது. அப்போது இலக்கிய உலகில் பிரபலமாயிருந்த பலரின் முகத்திரை கிழிக்கப்படுவதைக் காணலாம்' என 'தனித்துத் தெரியும் திசை' (
2009)என்னும் ஆய்வு நூலில் குறிப்பிடகின்றார்.

ஆ. வெடியரசன் எழுதிய 'சின்ன மாமா' என்ற சிறுகதை கனடாவிலிருந்து வெளியாகும் காலம் (2009) சஞ்சிகையில் வெளியானது. முற்போக்கு அணியைச் சேர்ந்த, ஊழல் மோசடிகளால் பதவி நீக்கம் செய்யப்பட்டு பின்னர் தமிழ் நாட்டில் வாழ்ந்து பின்னர் நாடு திரும்பி மறைந்த விட்ட பிரபல எழுத்தாளரொருவரை இக்கதை சித்தரிக்கின்றது. எழுத்தாளரின் சகோதரியின் மகன் எழுத்தாளரின் அஞ்சலிக் கூட்டத்தில் இருந்து தனது நினைவுகளை மீட்டுவதாக கதைப்பின்னல் அமைந்துள்ளது. இக்கதையில் பிரபல எழுத்தாளர் கடல்கொண்டான், எழுத்தாளரும் சஞ்சிகை ஆசிரியருமான பத்மநாதன், மூத்த எழுத்தாளர் டேவிட் சின்னையா ஆகிய பாத்திரங்களும் வருகின்றன. சாதி ஒழிப்பு, சமவுடமை எனப்பேசியும் எழுதியும் வரும் இலக்கியவாதியொருவரிடம் இவற்றுக்கெதிரான அம்சங்கள் மிகுந்திருப்பதை கலைத்துவத்துடன் சித்தரிக்கும் இச்சிறுகதையைப்கதையைப் பற்றி பேராசிரியர் எம். ஏ. நுஃமான், இவ்வாறு கூறுகிறார்: சாதியில் தன்னைவிட உயர்ந்த ஒருத்தியைக் காதலித்துத் திருமணம் செய்தபின் தன் குடும்பத்தை முற்றிலும் புறக்கணித்த ஒரு பிரபல எழுத்தாளரைப் பற்றியது கதை. ஒரு எழுத்தாளனின் போலி வாழ்க்கையை அம்பலப்படுத்துவது என்பதற்குமேல் சொல்லும் முறையில் கதை சிறப்பாக அமைந்துள்ளது.


இ. ஈழத்து இலக்கிய உலகில் தனது பெயர்களின் முதல் எழுத்தக்களால் சசி என அழைக்கப்படுபவர் சமீபத்தில் மறைந்த இலக்கியவாதி சண்முகம் சிவலிங்கம். இவரால் எழுதப்பட்ட திசை மாற்றம் என்னும் சிறுகதை மூன்றாவது மனிதன் இதழில் (ஒக்டோபர்-டிசம்பர்
2001)வெளியானது. 1975 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு எழுத்தாளர் மாநாட்டை மையமாக வைத்து எழுதப்பட்ட இக்கதையில் சசி, உமா, நீர்வை, காவலூர், குப்பிழான் ஐ.சண்முகன், யேசுராசா ஆகிய நிஜமான இலக்கியவாதிகளின் பெயர்களுடன் உண்மையான பெயர்களை சற்றுமாற்றி எழுதப்பட்ட பேராசிரியர் வைகுந்தன், அவரது மனைவி சகலகலாவல்லி, நோமன், நரேம்ஜி, மல்லிகை நேசன், முதுகீரன் என்ற பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இப்பெயர்களை பரீட்சயமுள்ள வாசகர்கள் இலகுவாக இனங்காண்பர். தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை தொடர்பாக அன்று முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடந்த கொண்ட முறையை இக்கதைசாடுகின்றது.இம்மாநாட்டின் மேடையில் சண்முகம் சிவலிங்கம் (சசி) மாநாட்டின் நோக்கத்தில் காணப்பட்ட குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி கவிதையை வாசித்தாரென எழுத்தாளர் உமா வரதராஜன் கடந்த ஆண்டு (2011) தீராநதிக்கு அளித்த பேட்டில் தெரிவித்திருந்தார். இக் கூற்றுக்கும் சசி என்னும் பாத்திரம் சொல்வதற்கும் தொடர்புள்ளது. இதனை சசி என்ற பாத்திரம் இவ்வாறு சொல்கின்றது. '... நீங்கள்தான் நீங்கள் ஒவ்வொருவருந்தான், அந்தக் கவிதையை எழுதும்படி என்னைத் தூண்டினீர்கள். வடக்குக் கிழக்கில் உள்ளவர்கள் தங்கள் சனநாயக உரிமைகளைக் கேட்டால் அது வகுப்பு வாதம். தெற்கில் உள்ள இனத்துவேஷத்துக்குப் பெயர் தேசியம். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இந்த தீக்கோழித்தனந்தான்-இந்த ஒற்றைக்கண் நெல்சனின் பார்வைதான் என்னை அந்தக் கவிதை எழுதத் தூண்டியது...' உண்மைச் சம்பவத்தை தரமான சிறுகதையாக சசி படைத்துள்ளார். இக்கதையில் எவரையும் தனிப்பட்ட ரீதியில் சாடாமல் அவர்களின் மரசியலை விமர்சிக்கின்றது.


ஈ. பிரான்ஸில் இருந்த வெளியாகும் உயிர் நிழலில் த.மலர்ச்செல்லன் மனக்கால் என்ற சிறுகதையை எழுதியுள்ளார். இக்கதையில் உண்மைப் பெயர்களுடன் நந்தினி சேவியர், சு.வில்வரெத்தினம் ஆகியஇலக்கியவாதிகளுடன் யுமு என்ற கற்பனை பெயருடன் இலக்கியவாதியொருவரும் இடம்பெறுகின்றனர். சிறுகதை ஆசிரியர் த.மலர்சசெல்வன் தன்னை 'செல்வன்'; என்ற பாத்திரமாககியுள்ளார் என்பது விளங்குகின்றது.
2005 ஆம் ஆண்டுக்கான வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் 'தனித்தத் திரிதல்' என்னும் கவிதை நூலுக்கு பரிசு வழங்கப்படாது தடுக்கப்பட்டது தவறென கதை கூறுகின்றது. நந்தினி சேவியரும் யுமு யும் சேர்ந்து அதனை நிறுத்தியதாகவும் பின்னர் முறையீட்டின் பின்னர் செல்வனுக்கு பரிசு வழங்கப்பட்டதாகவும் கதை புனையப்பட்டுள்ளது. பின்நவீனத்துவப் பாணியில் எழுதப்பட்டள்ள இக்கதையில் இரண்டு கடிதங்களும் இடம்பெற்றுள்ளன. இக்கதை வெளியானதன் பின்னர் வெளியான உயிர் நிழலில் நந்தினி சேவியர் ஏன் பரிசு நிராகரிக்கப்பட வேண்டியது என்பதை விளக்கி ஆதாரங்களுடன் எழுதிய கடிதம் பிரசுரமாகியது.

இக்கதையில் ஒரு பாத்திரமாக அவரின் பெயர் பயன்படுத்தப்பட்ட படியால் நந்தினி சேவியரால் எதிர்வினையாற்ற முடிந்தது இங்கு கவனிக்கத்தக்கது. பொய்யான விடயங்களை மெய்யென நிருபிப்பதற்காக இவ்வாறு சிறுகதைகள் படைப்பதானது வக்கிரமாகவே தோன்றுகின்றது

. உ. இராகவன் எழுதிய யேசுகாவியம் என்ற கதை தமிழ் நாட்டிலிருந்து வெளியாகும் கணையாழி (ஏப்ரில் 2012) இதழில் வெளியானது. ஈழத்தின் முக்கிய இலக்கியவாதியொருவரின் சொந்தவாழ்வைக் கேலி செய்யும் நோக்கத்தொடு புனையப்பட்ட இக்கதையில் பாத்திரத்ததை இலகுவாக இனங்காணத்தக்கதாக பல கோடிகாட்டல்கள் இடம்பெற்றுள்ளன. இக்கதையில் பேராசிரியர் கைதி, நாபிக்கமலம், இலக்கிய விமர்சகர் அழகரட்சனா, அருணாகரன், கவிஞர் நாகநாதன், சமூகவியலாளர் வேழமுகன், சுவாமிநாதன் போன்ற இலக்கியவாதிகள்; இடம்பெறுகின்றனர். இப்பெயர்கள் உண்மையான பெயர்களை சற்றுமாற்றி அமைக்கப்பட்டவை என்பதை வாசகர்கள் உணரத்தக்கதாக இடப்பட்டுள்ளன. இக்கதையில் நூல்கள் சஞ்சிகைகள் என்பனவற்றின் பெயர்களும் இடம் பெறுகின்றன. சொறிவும் எரிவும் ஏனைய கதைகளும், சொறிதல், மறைபாதி, நாழிகை, எரிதல் ஆகிய பெயர்கள் உண்மையான நூல்களின், சஞ்சிகைகளின் பெயர்களை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகின்றன. இக்கதையின் நோக்கம் கிண்டல் பண்ணி இழிவுபடுத்தி சந்தோசம் காணும் மனநிலையெனலாம். மேலும் இக்கதையில் உண்மைத் தரவுகளுடன் பொய்யான தகவல்களையும் கலந்து வழங்கி எல்லாம் உண்மையென வாசகனை நம்ப வைக்கும் திட்டமிட்ட முயற்சி இடம்பெற்றுள்ளதை அவதானிக்கலாம். முற்றிலும் பொய்யான சில விடயங்களும் இக்கதையில் உள்ளடக்கப்பட்டு குறித்த பாத்திரத்தினால் குறித்துக்காட்டப்படும் இலக்கியவாதியை அவமானப்படுத்தும் நோக்கு அப்பட்டமாக வெளிப்படுகின்றது.

இக்கதை 'யாழ்ப்பாணத்தின் கரையோரக் கிராமமான பெருநகரில் வசித்து வந்த கவியரசு கண்ணதாசனின் தீவிர இரசிகரான அம்பலவாணர் யேசுகாவியத்தை வாசித்துக் கொண்டிருந்தநாளில் தமக்குப் பிறந்த குமாரனுக்கு யேசுகாவியம் எனப்பெயரிட்டார்.'என்று ஆரம்பிக்கின்றது. கண்ணதாசன் யேசுகாவியத்தைப் படைத்தது
1982 இலாகும். எனவே அம்பலவாணரின் குமாரன் பிறந்தது 1982 இல் அல்லது அதற்குப் பின்பு எனக் கொள்ளப்படல் வேண்டும். ஆனால் இக்கதையின் இன்னொரு இடத்தில் யேசுகாவியத்தின் 'சொறிவும் எரிவும் ஏனைய கதைகளும்' தொகுப்பிற்கு இலங்கை அரசு 1982 காலப்பகுதியில் சாகித்திய மண்டலப் பரிசினை வழங்கியது என வருகின்றது. இது வாசகனுக்கு குழப்பத்தினை ஏற்படுத்துகின்றது. குழந்தை பிறந்த ஆண்டில் அல்லது பிறப்பதற்கு முன்னர் எவ்வாறு சாகித்திய விருது பெற்றது? சிறுகதைகளில் இவ்வாறான குழப்பமான விடயங்கள் ஏற்படுவது சரியன்று. மேலும் இக்கதையில் கதாசிரியரின் தார்மீகச் சீரழிவும் முரண்பாடுகளும் தெளிவாக வெளித்தெரிவதை அவதானிக்க முடிகின்றது. இச்சிறுகதையில் கேலிக்குரிய விடயங்களாக எடுத்தாளப்பட்ட விடயங்கள் கேலிக்குரியவை அல்ல. உதாரணம் : 15 வயது வித்தியாசத்தில் இருவர் மனம் விரும்பிக் காதலித்தல், விலை மோசடியை சுட்டிக்காட்டுதல்இ நல்ல தமிழ்ச் சொற்களை உருவாக்குதல்.குறித்த ஒரு எழுத்தாளர் மீதான தனிப்பட்ட வக்கிரத்தை தீர்ப்பதற்காகவே இக்கதை(?) படைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகின்றது.

இங்கு பகுப்பாய்வு செய்யப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கியவாதிகளை பாத்திரங்களாக்கப்பட்டுள்ள சிறுகதைகளில் பஜகோவிந்தம், சின்ன மாமா, திசை மாற்றம் என்பவற்றில் புனைவு காணப்படவதோடு மனக்கால், யேசுகாவியம் என்பவற்றில் வக்கிரத்தன்மை மிகுந்து காணப்படுவதை கவனத்தில் கொள்ளலாம்.

சில அவதானிப்புக்கள்

இங்கு எடுத்தக் கொள்ளப்பட்ட சிறுகதைகளில் ஒரு சிறுகதையைப் படைத்த எழுத்தாளர் ஒருவரைப் பற்றி வேறிருவர் சிறுகதைகள் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒரு எழுத்தாளர் மூன்றுகதைகளில் டூப் மாஸ்ரர் பட்டம் பெற்ற இலக்கியக் கொம்பன், டேவிட் சின்னையா, மல்லிகை நேசன் ஆகிய வௌ;வேறு பெயர்களில் துணைப்பாத்திரமாக்கப்பட்டுள்ளார்.பெண்ணெழுத்தாளர்களில் குந்தவை மட்டுமே சகஇலக்கியவாதியை பாத்திரமாக்கி சிறுகதை படைத்தள்ளார்.

நிறைவு:

சில சம்பவங்கள் அல்லது மனிதர்களின் நடத்தைகள் சிறுகதை எழுதவதற்குரிய படைப்புந்தலை படைப்பாளிக்கு கொடுக்கலாம். ஆனால் உந்தல்கள் அனைத்தும் கலைத்துவமான சிறுகதைகலாவதில்லை. இலக்கியவாதிகளைப் பற்றிய விடயங்களை கலைத்துவமான சிறுகதைகளாகப் படைக்க முடியாதவிடத்து அவற்றை கண்டணங்களாகவோ அல்லது கட்டுரைகளாகவோ வடிப்பது பயனள்ளதாகும். குறித்த ஒரு இலக்கியவாதியென இனங்காட்டத் தக்க கோடிகாட்டல்களை கதையில் படைத்துவிட்டு அவரைப் பற்றிய பொய்யான விடயங்களை கதையில் அடக்குதல் அபத்தம். ஈழத்தில் சக எழுத்தாளர்களை பாத்திரமாக்கி புனையப்படும் சிறுகதைகள் காலத்தக்குக் காலம் வெளியாகின்றன. இத்தகைய பல கதைகள் குறித்த ஒரு விடயத்தை மையமாகக் கொண்டு கலைத்துவமாகப் படைக்கப்பட்டள்ளன. சில கதைகளில் வக்கிரத்தன்மை காணப்படுகின்றது. கலை இலக்கியமுயற்சிக்கு குரோதமும் பொய்களும் வக்கிர சந்தோச நாட்டமுமே அடிப்படையாக அமைதல் சீரழிவான தன்மையாகும். எழுத்தாளன் முதலில் அறம் சார்ந்த நிலைப்பாட்டக் கொண்டவனாக இருத்தல் வேண்டும். அப்படி இருக்கும்போதுதான் தரமான படைப்புக்கள் உருவாகும்.

 




- தேவமுகுந்தன்
                               


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்