பேராசிரியர் எஸ்.மௌனகுரு - இலக்கியப் படைப்பு உபாயங்கள் ஊடான பயணம்.

ஏ.பீர் முகம்மது (இலங்கை)


(
பேராசிரியர் எஸ். மௌனகுரு அவர்களின் 77 ஆவது பிறந்த தினம் 09.06.2020 ஆகும். அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுமாகிறது. )


மட்டக்களப்பு கூத்து மரபில் வந்து அக்கூத்தினை மீளுருவாக்கம் செய்து சர்வதேச தரத்துக்கு ஏற்ப செந்நெறி வடிவில் அதனை கொண்டு வந்தவர் பேராசிரியர் எஸ்.மௌனகுரு அவர்கள். கூத்து என்றாலே நினைவுக்கு வருவது மௌனகுருதான் எனும் அளவில் கூத்தின் பிரமாண்டத்தில் அவர் வாழ்கிறார். இதன் காரணமாக கூத்துக் கலையில் அவரை 'அளந்து கொண்டவர்கள்' தமிழிலக்கியப் படைப்பு உபாயங்களில் அவரது பங்களிப்புபற்றி பெரிதாகப் பேசவில்லை. பாலுக்குள் நெய் பதுங்கியிருப்பதைப்போல அவருக்கு இன்னுமொரு முகமும் உண்டு. அவர் ஒரு படைப்பிலக்கியவாதி. ஒரு கவிஞர். சிறுகதை எழுத்தாளர். நாவலாசிரியர். திறன் நோக்காளர். அவரின் படைப்பாக்க உபாயங்கள்பற்றிப் பேசுவதே இக்கட்டுரையின் மையமாகும்.

பேராசிரியர் மௌனகுரு அவர்கள் இலங்கையின் கிழக்குப் பிரதேசமான மட்டக்களப்பில் பிறந்தவர். அரசு பணியிலிருந்து
2008 இல் ஓய்வு பெற்ற பின்னரும்கூட தமது மண்ணுக்கும் மக்களுக்கும் பணி செய்து கொண்டு திருப்தியோடு வாழ்பவர். சுவாமி விபுலாநந்தருக்குப் பிறகு இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழுக்கு ஒருசேரப் பணி செய்தவர் பேராசிரியர் மௌனகுருவே என்பது என்கட்சி.

அவர் கவிதைகளின் ஊடாக படைப்பிலக்கியத் தளத்துள் கால் பதித்தவர். வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் பயின்ற காலத்தில் தேனருவி என்ற கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டு அதில் சிறிய கவிதைகளை எழுதி மகிழ்ந்தவர்.

முதலாவது கவிதை அச்சில் வெளியானதிலிருந்து இன்றுவரை அவர் எழுதிய சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான கவிதைகளை ஒருசேரத் தொகுத்து நோக்குதல் கவிதையூடான அவரின் பயணத்தின் திசையை அறிந்து கொள்ள நமக்கு உதவும்.

அவருடைய கவிதைகள் இரு தொடைகளாகப் பிரிந்துள்ளன. ஒன்று தமிழ்உணர்வு மற்றும் தமிழ் தேசியம் சார்ந்தன. இரண்டு இடதுசாரிக் கோட்பாட்டின் பின்னணியிலான சமூகவிடுதலைநோக்கியது மௌனகுரு அவர்கள் வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் பயின்ற காலத்தில் பாடசாலை நூலகத்திலிருந்து பாவேந்தல் பாரதிதாசனின் கவிதை நூல்களைப் பெற்று விரும்பி வாசிப்பவராக இருந்தார். இவர்மீது பாரதிதாசனின் கவிதைகள் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தன என்று விசுவாசிப்பதற்கு இடமுண்டு. அக்காலத்தில் தமிழ்ப் பிரதேசமெங்கும்; தமிழ் தேசிய உணர்வும் விடுதலை வேட்கையும் மேலோங்கியிருந்தன. எனவே மௌனகுரு அவர்கள் ஆரம்பகாலக் கவிதைளில் தமிழ்ப்;பற்றும் இனவிடுதலைக்கான வேர்விடுகையும் பேசுபொருளாயிருந்தன.

அறுபதுகளின் முதல் கந்தாயத்தில் பேராதனை பல்கலைக்கழகம் செல்லும் மௌனகுரு அவர்கள் அங்கு நடைபெற்ற 'பட்டப்பகலில் பாவலர்க்குத் தோன்றுவது' என்ற தலைப்பிலான கவியரங்கக் கவிதைப் போட்டியில் பரிசு பெறுகின்றார். இதன்மூலம் கவிதைப் பயணத்தில் முதல் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்கிறார். அறுபது எழுபதுகள் கவியரங்கக் கவிஞர்களை கைதட்டி வரவேற்ற காலம். எனவே பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், கொழும்பு தமிழ் சங்கம் என்று அவரின் கவியரங்க வெளிப்பாடு குஞ்சம் கட்டி உலா வந்தது. சார்வாகன் என்ற புனைபெயரிலும் சில கவிதைகளை எழுதியுள்ளார். இக்காலத்தில் இவர் எழுதிய கவிதைகள் மணிக்கொடி தமிழ்கொடி போன்ற இந்திய சஞ்சிகைகளிலும் தினகரன் போன்ற இலங்கைப் பத்திரிகைகளிலும் வெளிவந்திருந்தன.

பல்கலைக்கழகம் சென்ற மௌனகுரு அவர்கள் இடதுசாரிச் சிந்தனைகளில்பால் ஈர்க்கப்பட்டு அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இதன் பின்னரான காலங்களில் அவர் எழுதிய கவிதைகள் சமூக விடுதலை பெண்விடுதலை என்று பேசத் தொடங்கின.
1963 இல்வெளியான கவிதையின் தலைப்பு 'சேச்சேச்சே நீங்களும் மனிதர்களா'என்பதாகும்.. வித்தியாசமான சாங்கத்தில் தலைப்பு அமைந்திருந்தது. விதவையின் வாழ்வுக்காக ஏங்கும் ஒரு கவிஞனை அக்கவிதையில் நாம் தரிசிக்க முடியும்.
 
எழுபதுகளின் முன்னரைக்கூறு முழுவதும் அவர் எழுதிய கவிதைகள் தன்னை இடதுசாரியாகக் கட்டமைத்து வெளிவந்தவையாகும். கவிஞன் என்ற கவிதை இதழில் 'நிலவே உனைப்பாட நேரமில்லை' என்ற மௌனகுருவின் கவிதை வெளிவந்துள்ளது .சமூகப்பற்றுக் கொண்ட கவிஞனின் குரலை இக்கவிதையில் நாம் தரிசிக்கலாம். கவிஞன் என்ற இச்சஞ்சிகையில் மௌனகுரு அவர்களோடு சேர்த்து ஜீவா ஜீவரத்தினம், மருதூர்க் கொத்தன், அண்ணல், சண்முகம் சிவலிங்கம், ஏ.இக்பால், மு பொன்னம்பலம் ஆகியோரின் கவிதைகளும் பிரசுரமாகியிருந்தன. அக்கால கட்டத்தில் பிரசித்தி பெற்ற கவிஞர்களுடன் மௌனகுரு அவர்களும் இருந்தார் என்று கவிதைப் பரப்பில் அவரின் இருப்பின் திணிவைச் சுட்டிக்காட்டவே இதனைச் சொல்ல வேண்டி வந்தது.

தமிழ் நாடகப்பரப்பின் முழுநேர ஈடுபாடு காரணமாக
1975–2000ஆம் ஆண்டு வரையான காலத்தில் கவிதை எழுதும் போக்கு குறைவாகக் காணப்படுகின்றது. ஒன்றிரெண்டு கவிதைகள் வெளிவந்திருக்கலாம். எனினும் அக்காலகட்டங்களில் வெளியான சங்காரம், மழை, சரிபாதி, சக்தி பிறக்குது, தப்பி வந்த தாடி ஆடு போன்ற நாடகங்கள் வெற்றி பெற்றமைக்கு இந்நாடகங்களில் ஊடுபாயும் இவரின் கவிதா ஆற்றலும் காரணமாயமைந்தன.

2000 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலத்துக் கவிதைகளில் வாழ்வியல் அநுபவங்கள் இடம் பிடிக்கின்றன. இறுதியாக 2016ஆம் ஆண்டு தமிழ் மிரர் பத்திரிகையில் அவரின் கவிதை பிரசுரமானது. கவிதைகள்மீதான விடுபடமுடியாத ஏக்கம் அவருள் எப்போதும் இருந்தே வந்துள்ளது என்பதையே இடைவெளிவிட்டு கவிதை எழுதும் அவரின் மனோபாவம் நமக்கு நினைவுட்டுகின்றது.

அவரது கவிதைப் பரப்பில் பேச வேண்டிய இன்னுமொரு விடயம் சிறுவர் பாடல்கள்பற்றியதாகும். ஒருகாலத்தில் வானொலியில் ஒலிபரப்பான சின்னச் சின்னக் குருவிகள், சேருவோம் ஒன்று சேருவோம் போன்ற மெல்லிசைப் பாடல்கள் இதற்கான சோற்றுப் பருக்கைகளாகும்.

சிறுகதைகளைப் பொறுத்தவரையில் நான்கு சிறுகதைகள்பற்றிய தகவல்களே உள்ளன. சமரசபூமி, சலனம், உலகங்கள் மூன்று, இருள் இன்னும் முற்றாக விலகவில்லை ஆகிய நான்கு சிறுகதைகள் உள்ளன.

தமிழ் உணர்ச்சி பொங்கிப் பெருகிப் பிரவாகமெடுத்த ஆரம்ப காலங்களில் 'சமரசபூமி' எழுதப்பட்டது.. தினகரன் வாரமஞ்;சரியில் அது பிரசுரமானது. பலராலும் பாராட்டிப் பேசப்பட்டது' என்ற குறிப்பு 'மௌனம்' மணிவிழா மலரில் காணப்படுகின்றது.

சலனம்
1958 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தைப் பதிவு செய்யும் கதை.. உலகங்கள் மூன்று என்னும் கதை தாய், தந்தை, பிள்ளை எனும் பாத்திரங்களின் மோதுகையை சுட்டிநிற்கின்றது. இருள் இன்னும் முற்றாக விலகவில்லை என்பது பொலநறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையில் நின்று இன மோதல்கள் இன்னமும் முற்றுப் பெறவில்லையே என்ற ஆதங்கத்தை முறையிடும் கதை. இனஐக்கியத்தை வலியுறுத்தியும் அதற்குத் தடையான காரணிகளைச் சுட்டியும் இக்கதை நகர்கிறது. உலகங்கள் மூன்று என்ற கதையைத் தவிர ஏனையவை தமிழ் மக்களுக்கு எதிரான இனவிரோதத்தின் பின்னாலுள்ள அரசியலைப் பேசுகின்றது.

குறுநாவலும் எழுதியுள்ளார். புனைவு என்ற வகையில் சார்வாகன் என்னும் குறுநாவல் பலராலும் பேசப்பட்டதாகும். யுத்தங்களின் அழிச்சாட்டியத்தையும் அதற்கெதிரான நிலைப்பாட்டையும் சார்வாகன் என்ற பாத்திரம் ஓங்கி ஒலிக்கின்றது. உலக சமாதானத்தைத் தேடுவோருக்கு சார்வாகன் வழிகாட்டும் ஒரு நாவல்.

இலக்கியமும் எழுத்தும் இன ஐக்கியத்தைப் பேணவும் வேண்டும். பேசவும் வேண்டும் என்ற கொள்கையுடைவர் பேரா.மௌனகுரு என்பதை இவரது கவிதைகளும் புனைவுகளும் ருசுப்படுத்துகின்றன.






ஏ.பீர் முகம்மது .
                             


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்