நான் சீரழியமாட்டேன்

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


எதிர்காலம் சூனியமாய் இருண்டு கிடக்க, முள்ளாய்க் குத்துகின்ற நிகழ்காலம் முடிவில்லாமல் நீண்டு கொண்டு போகின்றது. இனிமை நிறைந்த என் இளமைக்காலம் கடந்தகாலமாய்ப் பறந்து போய்விட்டது. ஏன் எனக்கு இப்படி? ஏன் எனக்கு மட்டுமே இப்படி? நான் என்ன பாவம் செய்தேன்? யாருக்கு என்ன தீமை செய்தேன்? பெண்ணாகப் பிறந்தது என் குற்றமா? பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை மணந்தது குற்றமா? அவரை நம்பியது குற்றமா? எனக்கு அறிமுகமான நாட்களில் அன்பொழுகப் பேசினார். என் அழகை அவர் இரசித்த போது நான் நாணத்தால் கூசினேன். அவருக்கு, அவருக்கே நான் சொந்தமாய் ஆனபோது இந்த உலகமே என்வயப்பட்டுவிட்டது போல ஆனந்தம் அடைந்தேன். நான் அவருக்கு மனைவியாகக் கிடைப்பது தான் செய்த புண்ணியம் என்று அவர் என்னைப் புகழ்ந்தபோது, நான் நெகிழ்ந்து போனேன். எப்படி இருந்தவர் இப்போது எப்படி மாறிவிட்டார்? மறக்கமாட்டேன் என்றவர் நினைக்கமாட்டாமல் இருப்பதென்ன கொடுமை. நெஞ்சம் தாங்கவில்லையே. இவரே இப்படியென்றால்.. ஆண்களில் எவருமே நல்லவர்களாக இருக்க முடியாதே. எல்லா ஆண்களுமே இப்படித்தானா? பெண்களை வாழவிடாமல் வதைப்பதுதான் இவர்களின் குணமா?

என்ன இது? என்கதை இப்படித் தொடக்கத்திலேயே சோகமாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? என் வாழ்வின் தொடக்கம் இப்படி இருக்கவில்லை. ஊரிலே மதிப்போடும், செல்வத்தோடும், வசதியாக வாழ்ந்தது எங்கள் குடும்பம். அம்மா ஆசிரியை. அப்பா ஆயுர்வேத வைத்தியர். அவர்களுக்கு நான்தான் ஒரேயொரு பிள்ளை. செல்லப்பிள்ளை. கேட்டதெல்லாம் எனக்குக் கிடைக்கும். வீட்டில் நான் விரும்பியபடிதான் எல்லாம் நடக்கும். நான் வைத்ததுதான் சட்டமாக இருக்கும். அம்மாவும், அப்பாவும் என்மீது கொள்ளை அன்பை வைத்திருக்கிறார்கள். பாடசாலையில் கூட வகுப்பில் நான்தான் முதல் பிள்ளை. நடனம், நாடகம், விளையாட்டு எல்லாவற்றிலும் முன்னணியில் இடம் பிடித்தேன். என்னைச் சுற்றி தோழிகள் கூட்டம் ஒன்று எப்போதும் இருந்துகொண்டேயிருக்கும். எந்தவித கவலையும் இல்லாமல் நான் ஒரு சிட்டுக்குருவிபோலப் பறந்து திரிந்தேன்.

என் பள்ளித் தோழிகளில் சிலர் பருவ உணர்ச்சிகளுக்கு அடிமையாகிக் காதலில் வீழ்ந்தபோதும் எனக்கு அது ஏற்பட்டதேயில்லை. நான் பதினோராம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது எனது பெற்றோர் எனக்குத் திருமணம் செய்யத் தீர்மானித்தார்கள். காலாகாலத்தில் எனக்குக் கலியாணம் செய்து வைக்க வேண்டும் என்னும் வாழ்வியல் நடைமுறையில் அவர்கள் கரிசனையோடு ஈடுபட்டார்கள். மேற்கொண்டு படிக்க எனக்கு ஆசை இருந்தாலும் பெற்றோரின் முயற்சிக்கு நான் தடையாக இருக்கவில்லை. உள்ளூரிலும் வெளியூர்களிலிருந்தும் எத்தனையோ மாப்பிள்ளைகளை என்பெற்றோர் விசாரித்தார்கள். இறுதியில், ராஜாவை எனது கணவனாக அப்பாவும் அம்மாவும் தேர்ந்தெடுத்து முடிவு செய்தார்கள். ராஜாவும் எங்கள் ஊர்தான். இப்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறார். ஒரேயொரு பிள்ளையான எனக்கு அவுஸ்திரேலிய மாப்பிள்ளையை அப்பா நிச்சயம் செய்தது தன்பிள்ளை எங்காவது வெளிநாட்டில் நிம்மதியாக இருக்கட்டும் என்ற நோக்கத்தில்தான். எந்தநேரத்தில் எது நடக்குமோ என்று சொல்லமுடியாத நிம்மதியற்ற, அபாயகரமான நாட்டுப்பிரச்சினைதான் அதற்குக் காரணம்.

ராஜாவை எனக்கு முடிவுசெய்த பிறகு அவர் தொலைபேசியில் என்னோடு கதைக்கத் தொடங்கினார். அவருடன் கதைப்பது ஆரம்பத்தில் பயமாகவும் வெட்கமாகவும் இருந்தது. பிறகு போகப்போக இயல்பாகிவிட்டது. பின்னர் அவரது தொலைபேசி அழைப்புக்காக ஏங்கிக்காத்துக்கொண்டிருப்பதே எனது நாளாந்த வேலையாகிவிட்டது. மணிக்கணக்கில் என்னோடு கதைப்பார். கடைசியில், வைக்கட்டா என்று அவர் சொல்லும்போதெல்லாம் சரி என்று வாய் சொன்னாலும், இல்லை என்று சொல்லவேண்டும்போல இதயம் துடிக்கும்.

என்ன பேசுவது என்றில்லாமல் என்னென்னவோ எல்லாம் பேசினோம். எதைப் பேசுவது என்று தெரியாமல் எதையெதையெல்லாமோ பேசினோம். சுகம் விசாரிப்பதில் தொடங்கி சுற்றம் சூழல்களைப் பற்றியெல்லாம் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதெல்லாம் அங்கே அவரருகே நானும், இங்கே என்னருகே அவரும் இருப்பதுபோன்ற உணர்வு இருக்கும். இதயங்கள் இடம்மாறிக்கிடக்கும்.

ராஜாவும் நானும் தொலைபேசியில் கதைக்கத் தொடங்கி, நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி கிட்டத்தட்ட ஒருவருடத்தை எட்டிக்கொண்டிருந்தது. ஏற்கனவே பேசித் தீர்மானிக்கப்பட்ட சம்பந்தம் என்பதால், நாங்கள் இருவரும் இதயத்தால் கணவன் மனைவி போலவே நெருங்கிவிட்டிருந்தோம். நேரிலே ஒருவரை ஒருவர் பார்க்கவேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருந்தது. விரைவில் அவரோடு நான் போய் இணைந்துவிடவேண்டும் என்று என் மனம் தவியாய்த் தவித்தது. அப்போது, ராஜாவுக்கு அவுஸ்திரேலியாவில் வதிவிட உரிமை கிடைக்கவில்லை. அது கிடைக்கும்வரை அவர் இலங்கைக்கு வரமுடியாதாம். அதனால், என்னைப்பார்ப்பதற்காகச் சிங்கப்பூருக்குத் தான் வருவதாகவும், என்னையும் அங்கே வரும்படியும் சொன்னார்.

இதை வீட்டில் சொன்னதும் எந்தவித எதிர்ப்புமே வரவில்லை. ஆனால் அப்பாவையும் என்னுடன் போகும்படி அம்மா வற்புறுத்தினார். ஆனால் அப்பாதான், என்னைத் தனியே போய்வரும்படி சொன்னார். 'படிச்சபிள்ளை. இந்தா இருக்கிற சிங்கப்பூருக்கு போய்வாறதுக்கு எதுக்கு பயம்? அதோட மாப்பிளை அங்க வந்து நிக்கப் போறார். இங்க எயாப்போட்டில இருந்து நாம ஏத்தி அனுப்பிவிட்டால் அங்க அவர் நிண்டு கூட்டிப்போகப் போறார். பிறகு அவர் அங்கயிருந்து ஏத்திவிட்டால் நாங்க இங்க ஏயாப்போட்டுக்குப் போய்க் கூட்டி வரப்போறம். அவ்வளவுதானே? ' என்று அப்பா அம்மாவைச் சமாதானப்படுத்தினார். அப்பாவும் வந்தால் பரவாயில்லை என்றுதான் நானும் முதலில் நினைத்தேன். பிறகு ஏனோ தெரியவில்லை. தனியே போவதற்குச் சார்பாகவே இதயத்தில் எண்ணம் மிதந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் எங்களுக்குத் திருமணம் நடக்கப்போகின்றது என்ற நம்பிக்கையைவிட, ஒருவருடகாலமாக தொலைபேசிமூலமாக இருவரும் இதயத்தால் இணைந்தவிட்டமைதான் தனியே சென்று அவரைச் சந்திப்பதற்கான துணிவையும், சந்திப்பதில் ஆசையையும் எனக்குக் கொடுத்தது என்று நினைக்கிறேன்.

நான் சிங்கப்பூருக்கச் செல்வதற்கு இரண்டு வாரங்கள் இருக்கும்போது ஒருநாள் இன்னும் ஒரு நல்ல செய்தியைக்கூறி, என்னை சந்தோசக் கடலில் மிதக்கவைத்தார். ஆம்! அவுஸ்திரேலியாவில் அவருக்கு வதிவிட அனுமதி கிடைத்தவிட்டதாம். இனி என்னை அழைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாமாம் என்றார். இதுவரை இழுபட்டுக் கிடந்த தனது விண்ணப்பம் இப்போது எற்றுக்கொள்ளப்பட்டுத் தனக்கு வதிவிட அனுமதி கிடைத்தது
என்னால்தானாம், நான் அவருக்குக் கிடைத்த அதிஸ்டம்தானாம் என்று அவர் மீண்டும் மீண்டும் சொல்லி என்னை மட்டுமன்றி என் பெற்றோரையும் பெருமைப்படுத்தினார். விசாவுக்கு நான் விண்ணப்பிப்பதற்கான பத்திரங்களை சிங்கப்பூருக்கு வரும்போது கையோடு கொண்டுவருவதாகச் சொன்னார். சந்தோசத்தில் நான் துள்ளிக் குதித்தேன்.

வதிவிட அனுமதி கிடைத்துவிட்டால் அவர் இங்கேயே வரலாமே. வந்தால் கலியாணத்தையும் செய்யலாம் அல்லது பதிவையாவது வைக்கலாமே என்று அப்பா என்னிடம் சொன்னார். உடனே ராஜாவைத் தொடர்புகொண்டு இதுபற்றிக் கேட்டேன். வதிவிட அனுமதி கிடைத்ததும் சொந்த நாட்டுக்குப் போவது சரியில்லையாம். நேற்றுவரை சொந்தநாட்டில் தனக்குப் பிரச்சினை என்று விண்ணப்பித்தவிட்டு இன்றைக்கு விண்ணப்பம் அனுமதிக்கப்பட்டதும் மறுநாளே சொந்த நாட்டுக்குச் செல்வது சட்டத்தைப் பச்சையாக ஏமாற்றுவதாகுமாம். அப்படிப் பலர் செய்கிறார்கள்தானாம் ஆனால் தான் இன்னும் இரண்டு வருடங்களுக்குப்பிறகு பிரசாஉரிமை எடுத்தபின்னர்தான் நாட்டுக்கு வருவாராம் என்று சொன்னார். அவர் அப்படிச் சொன்னது எனக்கு அவ்வளவு முக்கியமானதாகத் தெரியவில்லை. உடனேயே அவர் ஊருக்குவந்து என்னைத் தன்னோடு அழைத்துச் செல்லவேண்டும் என்ற ஆசை மனதில்நிரம்பியிருக்கும்போது சட்டம்பற்றிய விடயம் எதையும் மூளை கிரகிப்பதாக இல்லை. ஆனால் அப்பா ராஜாவை மிகவும் மிகவும் புகழ்ந்தார். தன்னைப் போலவே தனது மருமகனும் நேர்மையானவராக இருப்பதாகச் சொல்லிப் பெருமைப்பட்டார்.

இரண்டு வாரங்கள் எனக்கு இரண்டு வருடங்கள்போல நீண்டு, அந்த நாளும் வந்தது. சிங்கப்பூர் விமான நிலையத்தில் அவர் எனக்காகக் காத்துநின்றார். பின்னர் அவருடன் காரில் அருகே அமர்ந்திருந்ததும், அவரோடு ஹோட்டலுக்குச் சென்றதும், அவரோடு தனியாகக் ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததும் எனக்குப் புதுப்புது அனுபவங்கள். என் வாழ்வில் மறக்கமுடியாத அத்தியாயங்கள். அவரோடு சிங்கப்பூரில் தங்கிநின்ற அந்த நாட்களில் நான் இந்த உலகத்தையே மறந்திருந்தேன். வானத்தில் பறப்பதுபோன்ற கனவில் மிதந்திருந்தேன். மனமெல்லாம் மகிழ்ச்சி நிரம்பித் திளைத்திருந்தேன். குதூகலத்தில் களித்திருந்தேன்.

ஒரே அறையில் தங்கியிருந்தோம். ஒன்றாகச் சுற்றினோம். கடைகடையாக ஏறி இறங்கினோம். அப்படியிருந்தும் முதல் இரண்டு நாட்களும் ராஜாவின் விரல் நுனிகூட என்மேல் பட்டதில்லை. அதனால் அவர்மீதிருந்த அன்பைவிட மதிப்பு மேலும் உயர்ந்தது. இப்படிப்பட்டவருக்கு மனைவியாவது எனக்குப் பெருமையாக இருந்தது. மூன்றாம் நாள் செந்தோசா என்ற இடத்திற்குப் போனோம். அந்தச் சுற்றுலா மையத்தில் இருவரும் சிட்டுக்குருவிகளைப்போலச் சுற்றித் திரிந்தோம். நாள் முழுவதையும் அங்கேயே கழித்துவிட்டு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்தபோது இருவருமே மிகவும் களைத்துப் போயிருந்தோம்.

அன்றிரவுச் சாப்பாட்டுக்கு அங்கே இருக்கும் ஒரு தமிழ்ச் சாப்பாட்டுக் கடைக்குச் சென்றோம். அந்த இடம் எனக்குக் கொழும்பில் இருப்பதுபோன்ற உணர்வைத் தந்தது. அந்தக்கடையில் இட்லி,தோசை, சப்பாத்தி என்று வகைவகையான உணவுகளைப் பரிமாறினார்கள். அத்துடன் அங்கே மெல்லிய சத்தத்தில் எந்நேரமும் தமிழ்ப்பாடல் கேட்டுக்கொண்டேயிருந்தது. ராஜா எங்களுக்குத் தோசை வரவழைத்தார். தோசையென்றால் தோசை அப்படியொரு தோசையை நான் கண்டதேயில்லை. இரண்டடி விட்டத்தில் பெரிதாக இருந்தது. போப்பரைப்போல மெல்லியதாக இருந்தது. சுவையாகவும் இருந்தது. என்னைப் பொறுத்தவரையில் தோசையின் சுவையைவிட அந்தநேரம் அங்கே கேட்டுக்கொண்டிருந்த பாடல் இதயத்திற்கு இன்னும் சுவையாக இருந்தது. உண்மையில் தோசையின் சுவைக்கு அந்தப்பாடல் என்மனதில் ஏற்படுத்திய தாக்கம்தான் காரணமோ தெரியவில்லை. 'நீயேதான் எனக்கு மணவாட்டி என்னை மாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி..' என்ற அந்தப்பாடல் எங்களுக்காகவே அங்கே ஒலிப்பது போலவே எனக்கு இருந்தது.

அங்கிருந்து ஹோட்டல் அறைக்கு வந்தபோது மிகவும் அசதியாக இருந்தது. அன்றுமுழுக்க செந்தோசாவில் சுற்றிய களைப்பு. இரவுச் சாப்பாட்டின்பின்னர் இன்னும் அதிகரித்தது. அப்படியே படுக்கைக்குச் சென்றுவிட்டோம். சில நிமிடங்களில் என்ன உணர்வு அவருக்கு எற்பட்டதோ தன்கையை என்மேல் படரவிட்டார். நான் தடுக்கவுமில்லை. தள்ளிப் படுக்கவும் இல்லை. உண்மையில் அவரது கை என்மேல் படுவதை என்மனம் விரும்பி ஏற்றுக்கொண்டது என்றுகூடச் சொல்லலாம். அவரது கை என்மேல் படும்வரை எவ்வளவோ பேசிக்கொண்டிருந்த நாங்கள் அந்தக் கணத்திலிருந்து ஒரு வார்த்தைகூடக் கதைக்கவில்லை. இருவருக்கும் இடையில் மௌனம் நிலவியது. இடைவெளி குறைந்தது. என்னருகே அவர் வந்தாரா அல்லது தன்னருகே என்னை இழுத்துக் கொண்டாரா என்பது எனக்குத் தெரியவில்லை. அப்படியே திடீரென்று என்னை அணைத்துக்கொண்டார். அவ்வளவுதான் உள்ளங்களின் இணைப்பு முன்னின்று இழுக்க, தம்பதிகளாகப்போகிறோம் என்ற பிணைப்பு பின்னின்று தள்ள, எந்த நினைப்பும் இல்லாமலே இளமைதீயில் இருவரும் எரிந்து குளிர்ந்தோம். அன்றிரவு என்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டேன்.

காலை எழுந்ததும் எனக்குக் கவலையாக இருக்கவில்லை. நாளை நடக்கவேண்டியது நேற்று நடந்துவிட்டது என்ற அளவில்தான் என் மனநிலை இருந்தது. அதனால் அங்கிருக்கும்வரை அந்த உரிமையை அவர் மீண்டும் மீண்டும் எடுத்துக்கொண்டபோது அது என்கடமை என்று நான் இணங்கிக்கொண்டேன்.

முன்னர் திட்டமிட்டிருந்த படியே மூன்று நாட்களில் நான் கொழும்புக்கு வந்துவிட்டேன். ராஜா மறுநாள் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றார். சேர்ந்த உடனேயே தான் சுகமாகச் சேர்ந்ததுபற்றிச் சொல்லிவிட்டு சிங்கப்பூரில் எங்களுக்குள் நடந்தவைகளைப்பற்றியெல்லாம் கதைத்தார். தொலைபேசி உண்மையில் ஓர் அற்புதமான சாதனம்தான். நேரிலே கதைப்பதற்குத் தயங்குகின்ற எவ்வளவோ விடயங்களைக் கொஞ்சங்கூடக் கூச்சமில்லாமல் தொலைபேசியில் கதைக்க முடிகிறது. சிங்கப்பூரின் இன்ப நினைவுகளைமீட்டுக் கொண்டிருந்த அவரது அன்பு வார்த்தைகளில் நான் கசிந்து உருகினேன். அடுத்தவாரமும் அழைத்தார். என்னைச் சிணுங்கவைத்து அவர் மகிழ்ந்தார். அவரை மகிழவைத்து நான் சிணுங்கினேன்.

எனது இன்பமும், மகிழ்ச்சியும் அதிக நாள் நீடிக்கவில்லை. அதற்குப் பின்னர் இரண்டு வாரங்களாக அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பே வரவில்லை. ஏதாவதுசுகயீனமோ என்று நாங்கள் கவலைப்பட்டோம். பின்னர் நானே தொடர்புகொள்ள முயன்றேன். அவரது கைத்தொலைபேசி துண்டிக்கப்பட்டுவிட்டதாக அறிவித்தல் வந்தது. வீட்டுத் தொலைபேசியின் மணி அடித்துக்கொண்டேயிருந்தது. யாருமே எடுப்பதாக இல்லை.

பலநாட்கள், பலமுறை முயன்ற பின்னர் அவரோடு தங்கியிருந்த பாலா எடுத்தார். அவரது பேச்சு முன்புபோல இல்லை. முன்னக்குப்பின்முரணாகக் கதைத்தார்.என்னோடு கதைக்க விரும்பாதவர் போலக் காட்டிக்கொண்டார்.

எனக்கு இதயத்தில் விண்ணென்று வலித்தது. ராஜா இப்போது அங்கே இல்லை என்றும் ஒருவாரத்திற்கு முன்னர் வேறு விட்டுக்குப் போய்விட்டதாகவும் சொன்னார். தனக்கு அவர் எங்கே போயிருக்கிறார் என்று தெரியாதென்றும், அவரது தொலைபேசித் தொடர்புகள் எதும் தன்னிடம் இல்லை என்றும் சொன்னார். அவரது பேச்சு நம்பக்கூடியதாக இருக்கவில்லை.

எங்கள் வீட்டில் சோக மேகங்கள் சூழ்ந்தன. அப்படியிருக்குமோ, இப்படியிருக்குமோ என்று எப்படியெப்படியெல்லாமோ எண்ணியெண்ணிக் குழம்பினோம். நான் அங்கே போனதும் இருவருக்குமாக இப்போதே புது வீடுபார்த்து அங்கே போயிருக்கிறாரோ என்று அம்மா சாதகமான ஒரு சந்தேகத்தை என்னிடம் விதைக்க முனைந்தார். அப்படியென்றால் ராஜா அதை மிகவும் சந்தோசமாக என்னிடம் சொல்லியிருப்பாரே. தொடர்பு கொள்ளாமலே இருப்பாரா? ஒருவேளை அவருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருக்குமோ? நினைக்கவே
நெஞ்சம் நடுங்கியது. ஓவென்று அழுதுவிட்டேன். அவருக்கு ஏதோ நடந்துவிட்டது. அந்தப் பாலாவும் அதை மறைக்கிறான். அவர் ஒருநாளும் இப்படி இருக்கமாட்டார். என்னோடு பேசாமல் இருக்க அவரால் முடியாது. இதில் ஏதோ மர்மம் இருக்கிறது அவருக்கு என்னவோ நடந்துவிட்டது என்று நான் அழுது புலம்பினேன்.

ராஜாவைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவரைப்பற்றி எந்தத் தகவலையும் அறிய முடியவில்லை. ராஜாவின் குடும்பத்தவர்களுக்கு அவர் சிங்கப்பூர் வருவதும், என்னை வரச்சொன்னதும் ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. என்ன அவசரம் என்றும் வீண் செலவு என்றும் அவர்கள் வெளிப்படையாகவே சொல்லியிருந்தார்கள். அவர்களுக்காக ராஜா என்னிடம் தந்திருந்த நகைகள், பொருட்களையெல்லாம் அம்மா அவர்களின் வீட்டுக்கச் சென்று கொடுத்தபோதுகூட அவர்கள் திருப்திகரமாக நடந்துகொள்ளவில்லை என்று அம்மா கவலைப்பட்டது எனக்குத் தெரியும் அதனால்தான் ராஜாவைப்பற்றி அவர்களிடம் இவ்வளவு நாளும் விசாரிக்கவில்லை. இனி வேறு வழியில்லை என்று கடைசியாக அப்பா ராஜாவின் பெற்றோரிடம் விசாரித்தார். அப்படி எதுவும் இல்லை என்றும் அதற்கு முதல்நாள்தான் தங்களுடன் ராஜா தொலைபேசியில் கதைத்ததாகவும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதை நான் அறிந்தால் மேலும் கவலைப்படுவேன் என்று அப்பா உடனே என்னிடம் சொல்லவில்லை. எதையும் நன்றாக யோசித்து நிதானமாக முடிவெடுக்கும் அப்பாவுக்கு ராஜாவில் சந்தேகம் வந்துவிட்டது. ராஜா சிங்கப்பூரில் என்னிடம் எப்படி நடந்துகொண்டார் என்றும் எங்களுக்குள் ஏதாவது பிரச்சினை, வாக்குவாதம் ஏற்பட்டதா என்றெல்லாம் கேட்டார். அப்படி எதுவுமே இல்லை என்றும் என்னோடு மிகவும் அன்பாகவே இருந்தார் என்றும் நாங்கள் மிகவும் சந்தோசமாகவே இருந்தோம் என்றும் உண்மையைச் சொன்னேன்.

எங்களின் சொந்தக்காரர் ஒருவரும் குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் இருக்கிறார். அப்பா அவரைத் தொடர்பு கொண்டார். அவர் இருப்பது மெல்பேணிலாம். ராஜா இருப்பது சிட்னியில். அதனால் தனக்கு எதுவும் தெரியாதென்றும் விசாரித்துவிட்டுச் சொல்வதாகவும் முதலில் சொன்னாராம். என்ன சிட்னியும். என்ன மெல்பேணும். எல்லாம் அவுஸ்திரேலியாவில்தானே. என்ன சொல்கிறார்கள் இவர்கள் எல்லாம், என்று எனக்கு எரிச்சல்தான் அப்போது வந்தது. ஆனால் சில நாட்களில் அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டார். நான்தான் எடுத்தேன். அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. அப்பாவோடு கதைக்கவேண்டும் என்றார். அப்பாவிடம், ராஜாவை நம்பவேண்டாம் என்றும், ராஜா என்னைத் திருமணம் செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார். நான் பதினோராம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறேனாம். என்படிப்பு அவுஸ்திரேலியாவில் போதாதாம். என்னைக் கலியாணம் செய்தால் அங்கேயிருக்கும் தமிழ் மக்களிடையே தனக்கு அவமானமாக இருக்குமாம் என்றும் ராஜா சொன்னதாகச் சொன்னாராம். நான் இதையெல்லாம் நம்பவில்லை. ராஜாவே பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது படிப்பை விட்டுவிட்டுச் சவூதிக்குப் போனவர். பின்னர் அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் போனவர். அவுஸ்திரேலியாவிலும் தான் ஆங்கிலத்தைத் தவிர வேறு ஒன்றுமே படிக்கவில்லை என்று என்னிடம் சொல்லியிருக்கிறார். அவரா இப்படிச் சொல்லியிருப்பார். இருக்க முடியாது. இதில் ஏதோ சூது இருக்கிறது. யாரையும் நம்பமுடியாது என்று அப்பாவிடம் சொன்னேன்.

அப்பாவிடமும் அம்மாவிடமும் நான் என்னதான் மறுத்துக்கதைத்தாலும் என் உள்ளத்திலும் ஒருவித பயம் படரத்தொடங்கியிருந்தது. நான் ஏமாற்றப்பட்டு விடுவேனோ என்ற எண்ணம் நாளாக நாளாக எனக்கு வலுத்துக்கொண்டே வந்தது.

முன்னர் சிந்திக்காத சில விடயங்கள் அப்போது என் சிந்தனக்கு வந்தன. சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நான் அவரை அவரது கைப்பேசியில் அழைத்தபோது, தான் குடிவரவுத் திணைக்களத்திலிருந்த அப்போதுதான் வந்துகொண்டிருப்பதாகவும், என்னை அங்கே எடுப்பதற்கான எல்லா பத்திரங்களும் கிடைத்துவிட்டதாகவும், வரும்போது அவற்றைக் கொண்டுவருவதாகவும் சொன்னார். சிங்கப்பூரில் இருந்து நான் வெளிக்கிடும்போது அந்தப் பத்திரங்களைக் கேட்டேன். அவை இன்னும் தன்கைக்கு வரவில்லை என்றும் அதற்கு இன்னும் நாள் எடுக்கும் என்றும் பின்னர் தபாலில் அனுப்பிவைப்பதாகவும் சொன்னார். அன்றைய மன நிலையில் அதுபற்றி எனக்கு எதுவுமே வித்தியாசமாகத் தோன்றவில்லை. ஆனால், பிரச்சினை எழுந்தபின்னர் அதையெல்லாம் மீண்டும் மீண்டும் மூளை துருவிப்பார்த்துத் துடித்தது. எடுத்துவிட்டேன் என்று அவுஸ்திரேலியாவில் இருந்து சொன்னது பொய்யா? அல்லது இன்னும் கிடைக்கவில்லை என்று சிங்கப்பூரில் வைத்துச் சொன்னது பொய்யா? முன்னையது பொய்யென்றால் அதை வெறும் புழுகு என்று ஒதுக்கிவிடலாம். அது உண்மையாயிருந்தால், பின்னர் சொன்னது வெறும் பொய்மட்டுமல்ல திட்டமிட்ட பொய்யல்லவா? ராஜா ஏன் இப்படி நடக்க வேண்டும்?

எப்போதும் கலகலவென்று மகிழ்ச்சி மட்டுமே நிலவிய எங்கள் வீட்டில் கவலை நிறைந்துகொண்டது. சோகம் சூழ்ந்து கொண்டது. ஒருநாள் அம்மா சிங்கப்பூரில் ஏதாவது இசகு பிசகாக நடந்ததா என்று வெளிப்படையாகவே துருவித்துருவிக் கேட்டபோது என்னால் ஒழிக்க முடியவில்லை. வெட்கத்தோடும் வேதனையோடும் அம்மாவிடம் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டேன். அம்மா தன் தலையில் அடித்துக்கொண்டா. அந்தக் கணத்திலிருந்து அடிக்கடி விம்மிவிம்மித் தனக்குள் அழுதுகொண்டேயிருப்பா. அன்றிலிருந்து என்னிடம், 'என்னடி வந்துற்றா இல்ல..ஏதாவது பிரச்சினையா?' என்று ஒவ்வொருநாளும் கேட்டுக்கொண்டேயிருந்தா. சிலவேளை நான் மௌனமாக இருந்துவிட்டால் 'வாயைத் திறந்து சொல்லண்டி..' என்று அதட்டுவா. அப்போதெல்லாம் அவவின் தொண்டையில் இறுகிநிற்கும் துயரமும், கண்களை நிறைத்துநிற்கும் கண்ணீரும் என் நெஞ்சைப் பிழியும். இதெல்லாம் வீணாண பயம் என்று ஆரம்பத்தில் நினைத்திருந்த நான் உண்மையாகவே நாள் தள்ளிப் போனபோது அதிர்ந்துவிட்டேன். முதன்முதலில் அந்தச் சந்தேகம் எனக்கு எழுந்தபோது வயிற்றில் பகீர் என்று பயம் எரிந்தது. ஈயத்தைக் காய்ச்சி இதயத்துள் விட்டதைப்போல திகில் நிறைந்தது. என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

எந்தப் பிரச்சினையுமே இல்லாமல் ராஜாவும் நானும் திருமணம் செய்வதாக இருந்தாலும் கூட திருமணத்திற்கு முன்னர் தாயாகிவிட்டால் அது இந்தச் சமுதாயத்தின் மத்தியில் என் வாழ்வின் மாறாத வடுவாகிவிடும். அப்படியிருக்கும்போது, ராஜா என்னைக் கட்டுவாரா என்பதே கேள்விக்குறியாக இருக்கும்போது...என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

நாள் தள்ளிப் போவதை நான் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. எல்லாம் ஒழுங்காக வருவதுபோல அம்மாவிடம் நடித்துக்கொண்டேன். நானே அதற்கொரு தீர்வு காண முடிவெடுத்தேன். நான் விட்ட தவறினால் ஏற்படக்கூடிய விபரீத விளைவில் இருந்து நான்தான் என்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். ராஜாவுக்கும் எனக்கும் திருமணம் நடந்தாலும்சரி, நடக்காமல் போனாலும் சரி, எனது முடிவினால் எந்தப் பாதிப்புமே ஏற்படப்போவதில்லை.

யாருக்கும் தெரியாமல் டாக்டர் குமுதினியைச் சென்று சந்தித்தேன். எல்லா விபரங்களையும் அவரிடம் சொல்லி அழுதேன். எனது கதையைக் கேட்டு அவரது கண்களும் கலங்கின. ஆனால் நான் எடுத்த முடிவுக்காக என்னைப் பாராட்டினார். எனக்கு ஆறுதல் கூறினார். நல்ல வார்த்தைகளால் தைரியமூட்டினார். மூன்றாம் நாள் எல்லாம் சரியாகிவிட்டது. ஒரு மாதத்தின் முன்னர் உடலின் ஏறிய சுமை இறங்கிவிட்டது. என் உயிர் உள்ள வரை இறக்கிவைக்க முடியாத உள்ளத்தின் சுமையோ ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டிருந்தது.

ராஜாவின் வீட்டுக்காரரும் வரவர எங்களை வெறுக்கத் தொடங்கினார்கள். காரணம் தெரியாமல் நாங்கள் கலங்கினோம். ராஜா தங்களோடும் தொடர்புகொள்வதில்லை என்று அவர்கள் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அது உண்மையா பொய்யா என்பது தெரியாவிட்டாலும் அதற்குப்பிறகும் ராஜாவைப்பற்றி அவர்களிடம் கேட்பதில் பயனில்லை என்று விட்டுவிட்டோம். ராஜாவின் அண்ணன் மட்டும் ஒருநாள் என்னைக்கண்டு ராஜாவை மறந்துவிடும் படியும், அவன் என்னைத் திருமணம் செய்யமாட்டானாம் என்றும், தான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவன் கேட்பதாயில்லை என்றும் சொன்னார். அழுகையைத்தவிர அவரோடு எதுவும் பேச என்னால் முடியவில்லை.

ராஜாவுக்கு நான் எத்தனையோ கடிதங்கள் எழுதித் தெரிந்தவர்கள்மூலம் அனுப்பியிருக்கிறேன் ஒன்றுக்கும் பதில் இல்லை. எங்களுக்குத் தெரிந்தவர்கள், எங்களைத் தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று அவுஸ்திரேலியாவில் யார்யாரையெல்லாம் தொடர்புகொள்ள முடியுமோ அவர்கள்மூலமாகவெல்லாம் ராஜாவுக்குத் தூதுவிட்டோம். பலர் எங்களுக்காகப் பரிதாபப்பட்டார்கள். அவர்களில் சிலர் உண்மையாகவே முயற்சியெடுத்து ராஜாவைத் தொடர்புகொண்டு எங்களுக்கு விபரம் சொன்னார்கள். பெரும்பாலானோர் தந்த தகவல்கள் ஒரே மாதிரியாகவே இருந்தன. ராஜா என்னை மறந்துவிட்டார். அவருக்கு என்னைவிட(தன்னைவிட) படித்த மனைவி தேவைப்படுகிறது. சிங்கப்பூருக்கு என்னைப் பெண்பார்க்கப் போனதாக சிலரிடம் ஒத்துக்கொண்டிருக்கிறார். சிலரிடம் அப்படி நடக்கவில்லை என்றும், என்னைத் தான் கண்டதேயில்லை என்றும் சொல்லியிருக்கிறார். இப்படியே ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. இதற்குமேலும் ராஜாவை எப்படி நம்புவது? அவரின் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. என்னைப்பார்த்து என் அம்மாவும் அப்பாவும் படும் வேதனையை ஆரம்பத்தில் என்னால் தாங்கமுடியாமல் இருந்தது. இப்போது எல்லாம் பழகிவிட்டது. எனக்கு வேறொரு திருமணம் செய்வதற்கு முயற்சிகள் நடக்கின்றன. நான் சிங்கப்பூருக்குப் போய் ராஜாவோடு தங்கிநின்றது ஊருக்கே தெரிந்த விடயம்.

அங்கே என்ன நடந்ததென்பது யாருக்கும் தெரியாவிட்டாலும், எதுவும் நடக்காமல் இருந்திருந்தாலும் கூட எல்லாமே நடந்திருக்கும் என்று சத்தியம் செய்து சொல்லக்கூடிய சமுதாயத்தில் என்னால் எப்படி இன்னொருவருடன் நிம்மதியாகக் குடும்பம் நடத்த முடியும்.
எப்படிப்பட்ட உத்தமராக எனக்குத் தெரிந்தவர் இப்படி ஏமாற்றியிருக்கும்போது. இன்னொருவரை நான் எப்படி நம்பமுடியும்? யாரையும் நான் ஏமாற்ற மாட்டேன். எல்லா உண்மைகளையும் சொல்லி விடுவேன். அதற்குப் பின்னரும் என்னை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்பவரின் தாராளமனப்பான்மை எவ்வளவு காலத்திற்குத் தாக்குப் பிடிக்கும்? சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் என் உள்ளத்திற்குச் சாட்டை அடி விழாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? பிள்ளைகளைப் பெறுவதும், கட்டியவருக்குப் பணிசெய்வதும்தான் வாழ்க்கையா? அதற்காக வாழ்நாள் முழுவதும் துன்பத்திலேயே உழல வேண்டுமா? ஒருவரின் தொடர்பும், ஒருநாள் உறவும் என் ஆயுள் வரைக்கும் போதும்.



(யாவும் கற்பனை)


 


srisuppiah@hotmail.com