இடைவெளியே ஓடிவிடு

ஐரேனிபுரம் பால்ராசய்யா

நடு நிசி கழிந்ததொரு இரவு இருட்டை கலைக்க மனமின்றி படர்ந்திருந்தது. குளிர் படர்ந்த குடிசைக்குள் சுருண்டு படுத்திருந்த கோமதியை பார்வதியம்மாள் தட்டி எழுப்பிய போது, வெடுக்கென்று பனையோலைப் பாயை விட்டு எழுந்து கண்களை திருகியபடியே மண்பானையிலிருந்த தண்ணீரை சொம்பில் மோந்து முகம் கழுவினாள் கோமதி.

அதிகாலை இருட்டு வெளியேற மறுத்து அடர்ந்திருந்தது. காற்று சொல்லாமல் கொள்ளாமல் வீசிவிட்டுப் போனதில் உடல் லேசாய் ஆட்டம் காண பழைய துணி ஒன்றை எடுத்து தனது உடலுக்கு போர்த்தியபோது அதன் வாசம் சகிக்க பிடிக்காமல் தூர வீசி எறிந்து விட்டு காய்ந்து குளிர்ந்து கிடந்த தென்னைமர ஓலையை கைப்பிடியளவு இணிந்து ஒரு கட்டு கட்டி அதன் முனைக்கு நெருப்பு வைத்தாள் பார்வதியம்மாள்.

அடித்துப்போன குளிர்ந்த காற்றுக்குக்கு நெருப்பும் துணைபோக, அது ஏனோ பற்றிக்கொள்ள மனமின்றி அணைந்து கொண்டே போனது. குடிசைக்குள் எரிந்துகொண்டிருந்த மண்ணெண்ணெய் விளக்கை திறந்து அதிலிருந்து ஐந்தாறு சொட்டு மண்ணெண்ணெய் துளிகளை ஓலையில் நுனியில் படும்படி ஒழுகவிட்டு எரிந்துகொண்டிருந்த விளக்கின் தீ சுவாலையில் காட்டியபோது நெருப்பு எந்தவித மறுப்புமின்றி தானாகவே பற்றிக்கொண்டது.

குடிசையின் ஒரத்தில் வைத்திருந்த பையை தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள் கோமதி. தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் அவள் முகம் தங்கமாய் ஜொலித்தது கண்டு மனதுக்குள் பெருமிதம் கொண்டாள் பார்வதியம்மாள்.

''கோமதி கிளம்பலாமா?'' பார்வதியம்மாள் பவ்யமாகக் கேட்டாள்.

''ம்'' என்று முனகியபடியே தனது பையை தோளில் மாட்டிக்கொண்டு தீப்பந்த வெளிச்சத்தில் இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள். பார்வதியம்மாளின் வலது கையில் அரிவாள் ஒன்று பாதுகாப்புக்காக கம்பீரமாக அமர்ந்திருக்க, இடது கையில் தீப்பந்தம் பிடித்தபடி வெளிச்சத்தை வழிநெடுக நகர்த்த, வெளிச்சம் பரவிய வழித்தடங்களில் நிரம்பிக்கிடந்த கற்களுக்கிடையிலும், முட்புதர்களுக்கிடையிலும் கவனமாக அடி எடுத்து வைத்து நடந்தார்கள்.

அடர்ந்து வீசிய பெருங்காற்று தீப்பந்தத்திலிருந்த தீயையும் சேர்த்து இழுத்துப்போனதில் தீப்பந்தம் நெருப்பு கனலோடு இருட்டில் பளபளத்தது. பார்வதியம்மாள் தீப்பந்தத்தை மேலும் கீழுமாய் நான்கைந்து முறை அசைக்க ஓடிபோன தீ மீண்டும் வந்து அமர தீப்பந்தம் கொளுந்துவிட்டு எரிந்தது.

மூன்று கிலோமீட்டர் தூரத்தை தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் கடந்து பிறகுதான் சூரியன் தெரியாமலேயே வெளிச்சம் லேசாய் பரவஅரம்பித்தது. அந்த வயல்வரப்பின்மீது பையை பத்திரமாக வைத்துவிட்டு அணிந்திருந்த நைட்டியைமுட்டளவு உயர்த்தி இடுப்பில் சொருகிவிட்டு பச்சை பசேலென ஒரு அடி உயரத்துக்கு வளர்ந்து நின்ற நாற்றுக்களை பிடுங்க ஆரம்பித்தாள் கோமதி.

நாற்றை பிடுங்குவதில் கோமதியின் வேகத்துக்கு ஈடு கொடுக்கமுடியாமல் சற்று பின்தங்கியிருந்தாள் பார்வதியம்மாள். காலை எட்டு மணிக்கு சூரியன் லேசாக சுட ஆரம்பித்தான். இருவரும் மொத்த நாற்றுக்களை பிடுங்கி முடித்து அதை கைப்பிடி அளவுக்கு முடிந்து கட்டி வைத்தார்கள்.

''பாட்டி நான் கிளம்பறேன் சாயங்காலம் இங்கேயே வந்துடுறேன்!'' இடுப்பில் சொருகியிருந்த நைட்டியை இறக்கி விட்டபடியே சொன்னாள் கோமதி.

''சரிம்மா நீ கிளம்பு!''  என்றாள் பார்வதியம்மாள்.

கோமதி வரப்பிலிருந்த பையை தூக்கிகொண்டு அருகிலிருந்த குளத்துக்கு வந்தாள். அணிந்திருந்த உடையோடு ஓடிவந்து குளத்தில் குதித்தாள். தரையிலிருந்து மூன்றடி தூரம் விலகி தண்ணீருக்குள் தொப்பென்று விழுந்தவள் மூன்று நிமிடம்வரை தண்ணீருக்குள்ளேயே தம் கட்டி நீந்தினாள், மூச்சு திணறவும் தண்ணீரைவிட்டு மேலே எழும்பி வந்து மூச்சு வாங்கினாள். நேற்று கடந்த தூரத்தைவிட இன்று சற்று தூரம் அதிகமாக நீந்தியிருப்பது கண்டு உள்ளுக்குள் புன்னகைத்தாள் கோமதி.

குளித்து முடித்துவிட்டு பையிலிருந்த சீருடையை அணிந்துகொண்டு அங்கேயே தலைவாரி, இரட்டை ஜடை போட்டு அதற்க்கு சிகப்பு நிற ரிப்பன் கட்டி,கண்ணாடியில் முகம் பார்த்து கண்களுக்கு மை எழுதி புத்தகப் பையை தோளில் அணிந்து கொண்டு ஈரத்துணியை பாட்டியிடம் தந்துவிட்டு பள்ளிக்கூடத்துக்கு வேகமாக நடக்க ஆரம்பித்தாள் கோமதி.

அவள் படிக்கும் பிளஸ் டூ வகுப்பாசிரியை வகுப்புக்கு வந்து வருகைப்பட்டியலை சரிபார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்து நின்றாள் கோமதி. வகுப்பறையில் கொல்லென்ற சிரிப்புச்சத்தம் எழுந்து அடங்கியது.
தினமும் அவள் காலதாமதமாக வகுப்புக்குள் நுழைவதும், வகுப்பாசிரியை அவளை முறைப்பதும்,  திட்டுவதும் அரங்கேறினாலும் கோமதி ஒருநாளும் சரியான நேரத்துக்கு வந்தபாடில்லை. அவள் படிப்பதில் சுட்டி என்ற சலுகையில் தனது இருப்பிடம் வந்து அமர்ந்தாள்.

அவளுக்கு வலப்பக்கம் அமர்ந்திருந்த ராகவன் லேசாய் புன்னகைத்து ''இன்னைக்கு ஏன் லேட்டு'' என்று ஸ்கெச் பென்னால் ஜாமிட்டிரி பாக்ஸ்சின் பின்புறம் எழுதி வகுப்பாசிரியைக்குத் தெரியாமல் கோமதிக்கு காட்டினான்.

கோமதி முறைத்து விட்டு பாடத்தை கவனித்தாள். இருபது மாணவர்கள் படிக்கும் அந்த வகுப்பில் ராகவன் மட்டும் தன்னை ஏன் ஆழமாய் ஊடுருவி பார்க்கவேண்டும், பாடத்தைக் கவனிக்காமல் நிமிடத்துக்கொருமுறை தன்னைப் பார்த்து சிரிப்பதை கண்டும் காணாமலிருந்தாள் கோமதி. அனேகமாக அவன் தன்மீது காதல் வசப்பட்டிருப்பானோ? என்ற கவலை ஒருபுறம் அவளைத்துரத்த மனசு ஒருநிலைப்படாமல் அலைந்துகொண்டிருந்தது.


அன்று மாலை வகுப்பு முடிந்து பள்ளிக்கூடம் விட்டு வெளியேறி வயலங்கரைக்கு வேகமாய் நடந்துகொண்டிருந்தாள் கோமதி. அவளுக்குப் பின்னால் சைக்கிளில் வந்துகொண்டிருந்தான் ராகவன். கோமதிக்கு ஒருவித படபடப்பு வந்து ஒட்டிக்கொண்டது.

''கோமதி ஏன் என்னப் பார்த்தா பேசமாட்டேங்கற, சிரிக்கமாட்டேங்கற!''சைக்கிளை அவள் பக்கம் நெருக்கமாய் மிதித்தபடியே இயல்பாய் கேட்டான் . கோமதி பதிலெதுவும் பேசாமல் நடந்தாள்.

''கோமதி உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, என் மனசுக்குள்ள நீ தான் இருக்கிற தெரியுமா?,  நான் உன்ன விரும்பறேன் கோமதி!''

கோமதி இதை எதிர்பார்த்ததுதான், அவனின் குறுகுறு பார்வையும் சிரிப்பும் வேண்டுமென்றே வலிய வந்து வழிவதுமாக நடந்துகொள்ளும்போதே புரிந்துகொண்டாள், கூடிய விரைவில் இவன் தன்னை காதலிக்கிறேன் என்று கடிதமோ அல்லது நேரிலோ சொல்லிவிடப் போகிறான் என்று.

' ராகவன் நீ ஐயர் வீட்டு பையன், நான் தாழ்ந்த சாதிப்பொண்ணு, நீயோ நானோ மனசார விரும்பினாலும் இந்த சமுதாயம் விரும்பாது, உங்க சாதிக்கும் என் சாதிக்கும் நிறைய இடைவெளிகள் இருக்கு, இந்த சூழ்நிலையுல நீ என்ன காதலிச்சாலோ அல்லது நான் உன்ன காதலிச்சாலோ ரெண்டு சாதி சனத்துக்குள்ள சண்டை, அடிதடி, வெட்டு குத்து, கொலை யின்னு பட்டியல் நீண்டுகிட்டே போகும், எங்க சாதிக்காரங்க எண்ணிக்கையுல குறைவு அதனால சேதாரம் எங்களுக்குத்தான் அதிகமாயிருக்கும், ஒரு காதல வாழ வைக்க நிறைய உசிருங்க போகும், இப்பிடிப்பட்ட காதல் நமக்குத் தேவையா'. ஒரு பட்டிமன்றத்தில் பேசும் சிறந்த பேச்சாளரைப்போல கோமதி பேசியதைக்கேட்டு ராகவன் வெலவெலத்தான்.

கோமதி நடக்க ஆரம்பித்தாள் . அவள் போவதையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் ராகவன் சைக்கிளை மிதிக்க மனமின்றி.

' போ, எத்தன வருஷமானாலும் உனக்காக நான் காத்துகிட்டே இருப்பேன்''

கோமதி அவன் பேச்சைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் வயலங்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் வயலங்கரைக்கு வந்து சேர்ந்த போது பார்வதியம்மாள் முழு வயலையும் தானே நடவு நட்டு முடித்திருந்தாள். இருவரும் திரும்ப வீட்டுக்கு நடந்தார்கள். வழியிலிருந்த சிவன்கோவிலை நெருங்கியபோது என்றுமில்லாமல் கோவிலுகுச்ச்சென்று சாமி கும்பிட்டுவிட்டு வரலாமா எனத்தோன்றியது கோமதிக்கு.

' பாட்டிஇ சாமி கும்பிட்டுட்டு வந்துடலாமா?'

அவள் அப்படி கேட்டது பார்வதியம்மாளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் சின்ன வயதில் அரிவாளோடு அமர்ந்திருந்த அய்யனார் சிலையைப்பார்த்து பயந்து ஜுரம் கண்டதிலிருந்து கோவில் பக்கம் போவதையே வெறுத்திருந்தாள்.
சிவன்கோவில் நடைவாசலை அடைந்ததும் வாசல்படியில் கால் வைக்கப்போன கோமதியை சட்டென்று கையைப்பிடித்து இழுத்து நிறுத்தினாள் பார்வதியம்மாள்.

'நாம் வழக்கமா சாமி கும்பிடுறது இந்த கோவில் இல்லம்மா, இன்னும் கொஞ்சம் தூரம் போனா வருமே இசக்கி அம்மன் கோவில் அது தான் நம்ம குலதெய்வக்கோவில், நாம அங்கேயே சாமி கும்பிடலாம்!'

'ஏன் இந்த கோவில்ல சாமி கும்பிட்டா சாமி ஏத்துக்கமாட்டாரா!' கோமதி மீண்டும் சிவன்கோவில் வாசல்படியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

'கோமதி,.... நான் சொல்லிகிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு என் பேச்ச கேக்காம போய்கிட்டே இருக்கே!' சற்று மிதமான கோபத்தில் சொன்னாள் பார்வதியம்மாள்.

''பாட்டி உனக்கு விருப்பம் இல்லையின்னா நீ இங்கேயே நில்லு, நான் போய் சாமி கும்பிட்டுட்டு வந்துடுறேன்!''

'ஐய்யோ இவளுக்கு எப்படி புரியவைக்கிறதுன்னு தெரியலையே, ஏய் கோமதி இது மேல்சாதிக்காரங்க கும்பிடுற கோவில், நாம இந்த கோவிலுக்குள்ள எல்லாம் போகக் கூடாது,'' பார்வதியம்மாளின் பேச்சைக்கேட்டு ஒருகணம் திகைத்தாள் கோமதி.

தனக்கு ஏன் இன்று சாமி கும்பிட ஆசை வந்தது அது வராமலேயே இருந்திருக்கலாமே, சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் இந்த இடைவெளிகள் இருப்பது கண்டு மனம் வெறுத்தாள் கோமதி. இந்த இடைவெளிகள் எப்பொழுது களையப்பட்டு கோவிலுக்குள் அனைவரும் சரிசமமாக எப்பொழுது சாமி கும்பிடுவார்கள் என்ற சிந்தனையோடு கோவிலை திரும்பி பார்த்த படியே நடக்க ஆரம்பித்தாள்.

அவள் எதிரில் சாமி கும்பிட வந்துகொண்டிருந்தான் ராகவன் அவளைப்பார்த்து புன்னகைத்தபடியே. கோமதியின் மனதில் சட்டென்று ஒரு எண்ணம் தோன்றியது. என்றாவது ஒருநாள் அந்த கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட்டு வந்துவிடுவேண்டும். தனது சாதி பற்றிய எண்ணத்தை முற்றிலும் தளர்த்திவிட்டு, எதிரே கடந்து போன ராகவனைப்பார்த்து அவ்ளது உதடுகள் அவ்ளையறியாமலேயே புன்னகைத்தன. தன்னை கோமதி விரும்புகிறாள் என்பதற்க்கு அடையாளம் தான் அவளது புன்னகை என நினைத்து ராகவன் ஆன்ந்த கூத்தாடினான்.


 



lgmrajaia@gmail.com