சின்னச் சம்பவம்

அ.முத்துலிங்கம்


சின்னச் சம்பவம் என்று ஒன்றும் உலகத்தில் கிடையாது. வழக்கம்போல வாடகைக் கார் நிறுத்தத்தில் காரை நிறுத்தி வைத்துக்கொண்டு வாடிக்கையாளருக்கு காத்திருந்தேன். எனக்கு முன்னால் இரண்டு கார்களும் பின்னால் நாலு கார்களும் நின்றன. பகல் பத்து மணி. மே மாதம் என்பதால் குளிரும் இருந்தது. வெப்பமும் இருந்தது. அன்று கொஞ்சம் வெப்பம் வெற்றி பெற்ற நாள். ரொறொன்ரோவின் அலுவலக அவசரம் முடிந்துவிட்டதால் சிறிது அமைதி நிலவியது. ஒரு பெண் தூரத்திலே நடந்து வந்தாள். ரோஸ்டரில் வாட்டிய முழுக்கோதுமை ரொட்டியின் நிறம். கையிலே கைப்பை இல்லை. காலிலே ஓட்டக்காரர் அணியும் காலணி. மெலிந்த தேகம் ஆனால் எங்கேயெங்கே சதை வேணுமோ அங்கேயங்கே அது இருந்தது. தினம் தேகப்பயிற்சி செய்யும் உடம்பு. சமீபத்தில் வந்தபோது முகத்தைப் பார்த்தேன். பெரிய அழகி என்று சொல்ல முடியாது. தேனின் மேல் சூரிய ஒளி பட்டதுபோல கண்கள். எந்த ஓர் ஆணையும் வசப்படுத்தும் கவர்ச்சி இருந்தது. எனக்கு முன்னால் தரித்திருந்த கார்களை விலக்கிவிட்டு நேராக என்னிடம் வந்தாள். ஒரு கையை இடுப்பில் வைத்து சற்று சாய்ந்து நின்று காலை வணக்கம் சொன்னாள். நானும் சொன்னேன். அவள் எங்கேயும் பயணம் போகப்போவதாக இல்லை. வழிகேட்பதற்காக இருக்கலாம்.

'ஒரு சிகரெட் இருக்குமா?' என்றாள்.

புத்திசாலியான பெண் என்று உடனேயே தெரிந்தது. அங்கே நின்ற 7 வாடகைக் கார்ச் சாரதிகளில் சிகரெட் குடிப்பவன் நான் மட்டுமே என்பதை எப்படியோ ஊகித்து கண்டுபிடித்து என்னிடம் நேரே வந்திருக்கிறாள். சிகரெட் பக்கெட்டை நீட்டினேன். ஒரு சிகரெட்டை மட்டும் உருவி எடுத்து உதட்டிலே பொருத்தி வைத்துக்கொண்டு நின்றாள். என்னுடைய லைட்டரால் பற்ற வைத்தேன். நன்றி என்று விட்டு நகராமல் அதே இடத்தில் நின்றாள். அவள் வந்த விசயம் முற்றுபெறவில்லை என்று நினைக்கிறேன்

'உங்களிடம் இரண்டு டொலர் இருக்கிறதா?' ஒரு பெண் முன்பின் தெரியாத ஒருவரிடம் இரண்டு டொலர் கேட்டால் அவருக்கு யாசிப்பவரிடம் கேள்வி கேட்கும் உரிமை கிடைத்துவிடுகிறது. 'எதற்கு என்று சொன்னால் தருகிறேன்.' 'இரண்டு டொலரை வைத்து என்ன செய்யமுடியும்? கோப்பி குடிப்பதற்குத்தான்.' 'கோப்பிக்கடை தூரத்தில் அல்லவா இருக்கிறது. நான் உங்களை அங்கே கொண்டுபோய் விடுகிறேன்.' 'கோப்பிக்கு காசில்லை. டாக்சிக்கு கொடுக்க பணம் எங்கிருந்து வரும்?'

நான் அவளைப் பார்த்தேன். உடம்பை ஒட்டிப் பிடிக்கும் பழைய ஜீன்ஸ் அணிந்திருந்தாள். பழசாக்கப்பட்ட ஜீன்சை புதிதாக கடையில் வாங்கினாளா அல்லது திருப்பி திருப்பி அணிந்து பழசாகினதா என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தவறான சலவையில் சிவப்பும் மஞ்சளும் கலந்ததுபோன்ற ஒரு நிறத்தில் தொளதொளவான டீசேர்ட். அதிலே TAIBU என்ற வார்த்தை எழுதியிருந்தது. இரண்டு டொலர் காசைக் கொடுக்கமுன்னர் அதற்குப் பெறுமதியான விவரங்களை பெற்றுவிட வேண்டுமென்பது என் கொள்கை.

'TAIBU  என்றால் என்ன?'

'ஓ, அதுவா?' சிரித்தாள். முதல் முறையாக அவள் பற்கள் வெளியே தெரிந்து பளிச்சிட்டன. 'என் கணவருடைய டீசேர்ட். ஸ்வாஹிலி மொழியில் TAIBU என்றால் 'உடல் நலம் பெறுக' என்பதுபோல ஒரு வாழ்த்து. அவர் கென்யாக்காரர்' என்றாள். ஒவ்வொரு விவரத்தையும் நான் பிடுங்கமுன்னர் அவளாகவே சொன்னாள். ஆரம்பத்திலிருந்து அடிமனதில் இருந்த கேள்வியை கேட்டேன். 'நீங்கள் தமிழா?' 'நான் தமிழ்தான், கொஞ்சம் பேசவரும், சொல்வது முழுக்க புரியும். அப்படித்தான் அப்பாவுடன் சம்பாசணை செய்வேன். இது என்ன வகுப்பறையா? கையை தூக்காமல் கேளுங்கள்.' 'இங்கே கனடாவில் பிறந்தீர்களா?' 'இங்கேதான். இன்னும் எத்தனை கேள்விகளுக்கு பதில் சொன்னால் காசு கிடைக்கும்?' என்றாள். அவள் சிகரெட் எரிந்து கடைசி நிலையை எட்டியிருந்தது.

நான் இரண்டு டொலர் காசைக் கொடுத்துவிட்டு சொன்னேன். 'நீங்கள் ஏதோ பெரிய சங்கடத்தில் மாட்டியிருக்கிறீர்கள். எங்கே போகவேண்டுமோ அங்கே டாக்சியில் கொண்டுபோய் இறக்கி விடுவேன்பணம் வேண்டாம்.' அவள் என்னை நிமிர்ந்து நேராகப் பார்த்தாள். 'உங்கள் கருணையான உள்ளத்துக்கு நன்றி. இது நான் உண்டாக்கிய பிரச்சினை. நானே தீர்க்கவேண்டும். என் கணவர் என்னை வீட்டைவிட்டு துரத்திவிட்டார். இரவு முழுக்க சித்திரவதை செய்தார். எல்லோரையும்  பொறாமைப்பட வைக்கும் அருமையான வேலை எனக்கு இருந்தது. அதைத் துறந்துவிட்டு அவருக்கு அடிமையாக வாழ்கிறேன். இது என் தேர்வு.' உடனே எது செய்யக்கூடாதோ அதைச் செய்ய ஆரம்பித்தேன். புத்திமதிகள் என் வாயை நிரப்பின. 'இது கனடா. உங்களை ஒருவர் தொடமுடியாது. பொலீஸை தயங்காமல் அழையுங்கள். அவர்கள் நிமிடத்தில் வந்து அவரைக் கைது செய்து போவார்கள்.' 'எனக்குத் தெரியும். இதற்கு முன்னரும் அவர் என்னைத் துரத்தியிருக்கிறார். இன்றிரவு வந்து என்னிடம் கெஞ்சுவார். நான் அவரை நேசிக்கிறேன். அளவுக்கு அதிகமாக நேசிக்கிறேன். நான் செத்துப்போவேன், ஆனால் அவரை பொலீஸில் பிடித்துக் கொடுக்கமாட்டேன்.' சம்பாசணை முடிந்துவிட்டது என்பதுபோல சட்டென்று திரும்பி நடந்தாள். நான் கொடுத்த இரண்டு டொலரை எறிந்து எறிந்து ஏந்தினாள். அது சூரிய ஒளியில் மின்னியது.

பத்தடி தூரம் போனவள் எதையோ நினைத்து மறுபடியும் திரும்பினாள். 'இன்றிரவு நீங்கள் தூங்கச் செல்லும்போது 'அட பெயரைக் கேட்க மறந்துவிட்டோமே' என்று வருத்தப்படுவீர்கள். நீங்கள் நல்லவர். அந்த துக்கம் உங்களுக்கு வேண்டாம். 'என் பெயர் அல்கா' என்று சொல்லி கையை நீட்டினாள். குளிர்ந்த பூவைத் தொட்டதுபோல இருந்தது. 'அல்காவா? அப்படி ஒரு தமிழ் பெயரா?' என்றேன். 'என் அப்பாதான் இன்றைக்கும் அவர் வைத்த பெயரால் என்னைக் கூப்பிடுவார். வாயில் நுழையாத பெயர். அதன் சுருக்கம்தான் இது. உலகத்துக்கு நான் அல்கா.' இப்படிச் சொல்லிவிட்டு நடந்தாள். அவள் தலை மறைந்ததும் மற்ற டாக்சி ஓட்டுநர்கள் அத்தனை பேரும் என்னை வந்து சூழ்ந்து கொண்டார்கள்.

நான் 20 வருடமாக ரொறொன்ரோவில் டாக்சி ஓட்டுகிறேன். 25வது வயதில் ஆரம்பித்த வேலை இன்றும் தொடர்கிறது. இந்த இருபது வருடத்தில் எத்தனையோ அனுபவங்கள் கிடைத்திருந்தாலும் இன்றைக்கும் ஆச்சரியமேற்படுத்தும் சம்பவங்கள் நடந்த வண்ணம்தான் இருக்கின்றன. சில அதிர்ச்சியை தரும். சில சொல்லமுடியாத நிறைவைத் தரும். துக்கம் தந்தவையும் இருக்கின்றன ஆனால் அவ்வப்போது ஏற்படும் புதிர்களும் மர்மங்களும் என் வேலையை சுவாரஸ்யமாக்கியிருக்கின்றன

எங்கள் கம்பனியில் 96 டாக்சி ஓட்டுநர்கள் வேலை செய்தார்கள். வெள்ளையர், கறுப்பர், இந்தியர், சீனாக்காரர், பிலிப்பினோக்காரர், பாகிஸ்தானியர் என்று பல நாடுகளிலிருந்து வந்தவர்கள். தமிழர்கள் நாலே நாலு பேர். வாடிக்கையாளர்கள் டெலிபோனில் கம்பனியை அழைப்பார்கள். கம்பனியிலிருந்து எங்களுக்கு ரேடியோத் தகவல் வந்ததும் நாங்கள்  குறிப்பிட்ட முகவரிக்கு போவோம். முதல் நாளைப்போல அடுத்த நாள் இருக்காது. ஆனால் அவ்வப்போது நடக்கும் சில சம்பவங்கள் ஆச்சரியத்தை கொடுக்கும். நேற்றிரவு நடந்ததும் புதுமையான அனுபவம். ரேடியோவில் தகவல் வந்தபோது இரவு 11 மணி. ஒரு விலாசத்தை தந்து அங்கு போகச் சொன்னார்கள். ஆனால் அந்த வீட்டுக் கார் பாதையில் வாகனத்தை நிற்பாட்டாமல் வெளியே ரோட்டில் நிறுத்தவேண்டும் என்பது கட்டளை. இப்படியான சமயங்களில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒரு வீட்டு நம்பரைக் கொடுத்து இன்னொருவர்  அழைக்கிறார் என்பதால் எந்த வீட்டிலிருந்து அழைத்தவர் வருவார் என்பது தெரியாது. எஞ்சினை ஓடவிட்டபடியே காத்திருந்தேன். இருட்டான இடம். வீட்டின் முன்னே உயரமான செடிகள் வளர்ந்திருந்தன. செடிகள் அசைந்த அடுத்த கணம் ஓர் உருவம்  சட்டென்று காருக்குள் ஏறி உட்கார்ந்து 'ஓடு, ஓடு' என்றது. 'எங்கே போகவேண்டும்?' 'நேரே போ. நேரே போ. வேகம், வேகம்.' சில மைல்கள் தூரம் போனதும் திரும்பி பார்த்தேன். பள்ளி மாணவி. சீனப் பெண்இ மகத்தான பூவாகப் பூக்க ஆரம்பித்திருந்தாள். 'எங்கே போகிறீர்கள்?' அவளுடைய வகுப்பு தோழிகள் பியர் பார்ட்டி வைக்கிறார்கள். அதில் கலந்துகொள்ள பெற்றோருக்கு தெரியாமல் போகிறாள். சட்டப்படி நான் சவாரியை மறுக்கலாம். அவள் முகத்தில் காணப்பட்ட குதூகலத்தை கெடுக்க விரும்பவில்லை. கள்ள நோட்டு கொடுத்து சாமான் வாங்கியதுபோல மகிழ்ச்சி கிடைத்தது; குற்றவுணர்ச்சியாகவும் இருந்தது. 'எப்படி வீட்டுக்கு திரும்புவீர்கள்?' அவள் பதில் பேசவில்லை. செல்போனில் மூழ்கிக் கிடந்தாள். அவளுடைய பெற்றோர்கள் வீட்டிலே ஒன்றும் அறியாமல் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

வாடகைக்கார் ஓட்ட வந்த முதல் நாள் நடந்த சம்பவத்தை நினைக்கும்போது இப்போது சிரிப்பு வந்தது. மற்றைய சாரதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென எனக்கு நிறையப் புத்திமதி சொல்லியிருந்தனர். என்னுடைய முதல் சவாரி ஓர் இளைஞன். காரில் ஏறியவுடனேயே நான் கேட்டுக்கொண்டிருந்த ரேடியோ சானலை மாற்றச் சொன்னான். மாற்றினேன். பின்னர் இன்னொரு சானலுக்கு மாற்றச் சொன்னான். அதையும் செய்தேன். அதுவும் பிடிக்கவில்லை. தானே திருக வந்தான். 'நான் உங்கள் சாரதி, உங்களுக்கு ரேடியோ போடுபவர் அல்ல. எங்கே போகவேண்டும். அதைச் சொல்லுங்கள்' என்றேன். அவன் சொல்லவில்லை. 'நேரே போ, வலது பக்கம் போ, இடது பக்கம் போ' என்று என்னை அதிகாரம் செய்தான். பல இடங்களில் என்னை நிறுத்தி, நிறுத்தி ஓடவைத்தான். இறுதியில் ஒரு பெட்ரோல் ஸ்டேசனில் இறங்கப் போவதாகச்  சொன்னான். நிறுத்தியதும் கதவைத் திறந்து குதித்து குறுக்குப் பாதையால் ஓடினான். நான் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டு நிற்க மறைந்துவிட்டான். வேலை தொடங்கிய முதல் நாள் நட்டம் 140 டொலர்.

டாக்சிக்காரருக்கு எல்லோரும் டிப் தருவதில்லை. சிலர் தாராளமாகத் தந்திருக்கிறார்கள், ஆனால் நான் டிப் கொடுத்த சம்பவங்கள் பல உள்ளன. பனிக்காலம் வந்தால் மதியம் முடிந்தவுடனேயே இரவு தொடங்கிவிடும். 12 மணிநேரம் வேலை செய்த களைப்பில் கென்னடிஎக்லிண்டன் சந்திப்பில் காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். பனியகற்றும் வாகனங்கள் உர்ரென்று சத்தமிட்டுக்கொண்டு நகர்ந்தன. பனி கொத்துக்கொத்தாக நிற்காமல் கொட்டியது. 'இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும்' வேலை செய்தால்தான் பணம். ஒரு வெள்ளைக்காரப் பெண் கைகாட்டி நிறுத்தினாள். கையுறை இல்லை. தொப்பி இல்லை. நீண்ட ஓவர்கோட் அணிந்திருந்தாள். அந்த இடம் பாதுகாப்பானது அல்ல. எதற்காக அங்கே தன்னந்தனியாக நிற்கிறாள்? நான் காரை நிறுத்தியதும் அதைக் கட்டிப் பிடிப்பதுபோல அணுகி அதன் வெப்பத்தில் குளிர் காய்ந்தாள். 'என்னிடம் காசில்லை' என்றாள். அடுத்த நிமிடம் அவள் கண்களிலே பொலபொலவென்று நீர் கொட்டியது. இரண்டு பக்கமும் பார்த்தேன். ஏதாவது தந்திரமாக இருக்கும் என்று பட்டது. ஆனால் அவள் பாசாங்கு செய்யவில்லை, நிசமாகத்தான் அழுதாள். 'என்ன பிரச்சினை? இது ஆபத்தான இடம்' என்றேன். 'என் அப்பா என்னை வீட்டைவிட்டு துரத்திவிட்டார். அம்மா அழுது கொண்டிருக்கிறார். எனக்கு இரவு தங்க இடமில்லை.'

அவளுக்கு 17, 18 வயதுதான் இருக்கும். மேல் பள்ளியில் படிக்கிறாள் என்று ஊகிக்க முடிந்ததுஎன்ன உதவிசெய்வது என்று என்னால் முடிவெடுக்க முடியவில்லை. என் வாழ்க்கையில் என்றென்றும் மறக்கமுடியாத ஒரு வாசகத்தை அந்தப் பெண் அப்போது சொன்னாள். 'இந்த மோசமான குளிரில் என்னை விட்டுவிட்டுப் போகவேண்டாம். நான் செத்துப்போவேன். எப்படி வேண்டுமென்றாலும் என்னை உபயோகித்துக் கொள்ளலாம். ஓர் இரவு மட்டும் தங்க ஏற்பாடு செய்யுங்கள்.' பச்சைக் கண்களுக்கு பக்கத்தில் அத்தனை சிவப்பு உதடுகளை நான் கண்டதே கிடையாது. இந்தப் பெண் என்னை பெரும் சிக்கலில் மாட்டிவிடக்கூடும். உதவி செய்யாவிட்டால் இன்னும் மோசமாக ஏதாவது அவளுக்கு நடக்கலாம். ஒரு ஹொட்டலில் அன்றிரவு தங்க ஏற்பாடு செய்வதாகச் சொன்னேன். அவள் நன்றி சொல்லிக்கொண்டு சடக்கென்று காரில் ஏறினாள்.

'என்ன காரணத்துக்காக அப்பா உங்களை வீட்டைவிட்டு துரத்தினார்? காதல் விவகாரமா?' 'இல்லை. இல்லை. காதல் விவகாரம் என்றால் அவர்கள் சந்தோசப்படுவார்கள்.' 'பரீட்சையில் பெயிலாகிவிட்டீர்களா?' 'அதற்கு வாய்ப்பே இல்லை. நான் தொடர்ந்து யு எடுக்கும் மாணவி.' 'நடுநிசியில் ஒரு தகப்பன் தன் மகளை எதற்காக வீட்டைவிட்டு துரத்தினார்?' 'நிலவறை திறப்பை கைமறதியாக வைத்துவிட்டேன்.' 'அதற்காகவா? எதற்கு நிலவறைத் திறப்பு உங்களுக்கு தேவைப்பட்டது?' 'ஏணியை எடுப்பதற்கு.' 'ஏணி எதற்கு?' 'அப்பதானே சீலிங்குக்குள் போய் தேட முடியும்.' 'எதற்கு சீலிங்குக்குள் நுழைந்து தேடுகிறீர்கள்?' 'அங்கேதானே போதை மருந்து ஊசி கிடக்கிறது.'

டாக்சி ஓட்டுநர் கூட்டத்திலே எங்கள் தொழிலின் மேன்மைகள் விவாதிக்கப்படும். ஏற்றத் தாழ்வில்லாமல் சம உரிமை கொடுத்து நடத்தும் தொழில் இது. முதல் நாள் உலகப் புகழ் விஞ்ஞானி ஒருவர் உங்கள் டாக்சியில் பயணம் செய்வார். அடுத்தநாள் அதே இருக்கையில் செக்ஸ் தொழில் செய்யும் பெண் உட்கார்ந்திருப்பார். இருவரையும் நாங்கள் சமமாகத்தான் நடத்துவோம். ஏறக்குறைய ஒரே வயது ஆண்கள் கூட்டமாக ஏற முயற்சித்தால் அந்த சவாரியை நான் தவிர்த்துவிடுவேன். அதுவும் இரவு நேரமென்றால் எச்சரிக்கை தேவை. அன்று டண்டாஸ் ரோட்டில் போய்க் கொண்டிருந்தபோது இரவு பதினொரு மணி. இரண்டு இளைஞர்கள் கைகாட்டி நிறுத்த ஒருவர் முன் சீட்டில் பாய்ந்து ஏறினார், மற்றவர் பின் சீட்டில் அமர்ந்தார், ஆனால் கதவைச் சாத்தவில்லை. சட்டென்று எங்கிருந்தோ இன்னும் இரண்டு பேர் உண்டாகி காரில் ஏறிவிட்டார்கள். இதெல்லாம் முன்னேற்பாடு என்பது எனக்கு தெரியவில்லை. கெட்ட சம்பவம் நடப்பதற்கு காத்திருந்தது. 'எங்கே போகவேண்டும்?' நடுக்கம் தெரியாமல் இருக்க உரத்துப் பேசினேன். 'இந்த ரோட்டு போகும் இடத்துக்கு.' கார் எஞ்சின் சத்தத்துக்கு போட்டியாக நெஞ்சு அடித்தது. தப்பிப்பதற்கான உத்திகளை மனம் உற்பத்தி செய்தது. ஒரு பழைய கட்டிடத்துக்கு பின்னே காரை விடச் சொன்னார்கள். ஒருவன் கத்தியை எடுத்து கழுத்தில் வைத்து என்னிடம் இருந்த அத்தனை காசையும் பிடுங்கினான். ரப்பர் பாய்க்கு கீழே தேடினார்கள். கால் சப்பாத்தை கழற்றி உதறிப் பார்த்த பின்னர் 'போ' என்று என்னை துரத்திவிட்டார்கள். எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. கார்ச் சாவியை கொடுப்பதற்கு தயாராக இருந்தேன். அவர்களுக்கு தேவை காசு மட்டுமே. என் அதிர்ஷ்டத்தை நம்பமுடியாமல் அதி மகிழ்ச்சியுடன் வீடு வந்து சேர்ந்தேன். என் மனைவி நினைத்தார் அன்று எனக்கு அதிக வரும்படி என்று. அவருக்கு தெரியாது அன்றைய பெரிய வருமானம் என்னுடைய உயிர் என்பது.

விடுக்கமுடியாத புதிர்போல என் மூளைக்கு அப்பால்பட்ட சில சம்பவங்களும் அவ்வப்போது நடக்கும். பெரிய அளவில் செக்ஸ் பெண்களை வைத்து தொழில் நடத்தும் ஒருவர் என் வாடிக்கையாளர். இவர் ரேடியோவில் அழைக்காமல் நேரடியாக என் செல்போனில் தொடர்புகொள்வார். எந்தப் பெண்ணை எங்கே அழைத்துச் செல்லவேண்டும், எத்தனை மணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் போன்ற விவரங்களை தருவார். அவருடைய கண்ட்ராக் கிடைத்தால் அன்று வேறு வேலை செய்யக்கூடாது. என்னுடைய சன்மானம் இரண்டு மடங்காக இருக்கும். பல வருடப் பழக்கம் என்பதால் என் மீது ஒருவிதமான நம்பிக்கை அவருக்கு இருந்தது.

ஒருநாள் அவரிடமிருந்து அழைப்பு வந்தது. 60 மைல் தூர ஹொட்டலில் இருந்த பெண்ணை அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றிவிடவேண்டும். அதிகாலையே போய் அவளுக்காக காத்திருந்தேன். சுழலும் கதவில் விடுபட்டு தேவதைபோல் தோன்றிய ஒரு பல்கலைக்கழக மாணவிதான் வெளியே வந்தாள். இப்படி தொழில் செய்யும் பெண் என்று எனக்கு தோன்றவே இல்லை. எத்தனையோ பெண்களை என்னுடைய காரிலே ஏற்றியிருக்கிறேன். இந்தப் பெண்ணின் சௌந்தர்யம் அபூர்வமானதாக இருந்தது. ஒடுங்கிய இடையை மேலும் சிறுக்கவைத்த நீண்ட ஸ்கர்ட். குதிவைத்த காலணிகள்எத்தியோப்பியாவில் இருந்து படிக்க வந்தவள் என்று பின்னால் அறிந்தேன். பைபிள் கதையில் சோலமன் அரசனை மயக்கிய எத்தியோப்பிய அழகி இப்படித்தான் இருந்திருப்பாள். கருகருவென்று சுருண்டு வளர்ந்திருந்த முடியை இழுத்து நேராக்கி சிறு சிறு பின்னல்களாக கட்டியிருந்தாள். கரிய பெரிய கண்களும், மினுங்கிய உடம்பும் அவளுக்கு விலைமதிக்கமுடியாத வசீகரத்தை கொடுத்திருந்தது. காரில் ஏறியவுடனேயே இதற்கு முன்னர் பலதடவை சந்தித்தவள்போல கலகலவென்று பேசத் தொடங்கினாள். அவள் வார்த்தைகளால் கார் நிரம்பியது. ஒருவருடமாக ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் சமூகமானிடவியல் துறையில் முனைவர் பட்டம் படிப்பதாகச் சொன்னாள்.

'கோடை காலம் முழுக்க உங்கள் திட்டம் போடப்பட்டு விட்டதா?' என்று கேட்டேன். வெளிநாட்டு எழுத்தாளர்கள் புத்தக சுற்றுக்கு வரும்போது அவர்களை காரில் ஏற்றி வேறு வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு மாகாணமாகச் சென்று புத்தகங்களை கையெழுத்திட்டு விற்பனை செய்வார்கள். இந்தப் பெண்ணுக்கும் பத்து  மாகாணங்களுக்கும் மூன்று பிரதேசங்களுக்கும் திட்டம் போட்டுவிட்டார்கள். மூன்று மாத காலம் விடுமுறையில் அவள் நகரம் நகரமாகச் சுற்றுவாள். இன்ன தேதி இன்ன இடம் இன்ன நபர் இன்ன தொலைபேசி என்ற சகல விவரங்களும் அவள் கைப்பையில் இருந்தன. சுற்றுலாவுக்கு புறப்பட்டதுபோல அவள் உடம்பிலிருந்து மகிழ்ச்சி வீசி காரை ஓட்டிய என்னையும் தாக்கியது.

'உங்கள் பெற்றோருக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரியுமா?' 'ஆண்டவனே, அம்மாவுக்கு தெரியாது. அப்பா இல்லை. அம்மா கிராமத்து சேர்ச்களில் போய் என் வெற்றிக்காக மன்றாடுகிறாள்.' 'உங்களுடைய ரேட் என்ன?' என்று கேட்டேன். இப்படியான பெண்களுக்கு டாக்சி சாரதிகளின் நட்பு முக்கியம். அவர்கள் ஒன்றையும் மறைக்கமாட்டார்கள். 'ஓர் இரவுக்கு 1500 டொலர். இரவும் பகலும் என்றால் 2000 டொலர்.' உங்கள் பங்கு என்ன?'  'நாளுக்கு 1000 டொலருக்கு குறையாமல் கிடைக்கும்.' 'இந்த தொழிலை விரும்பி செய்கிறீர்களா?' 'இது என்ன கேள்வி. விருப்பமில்லாமல் ஒரு தொழில் செய்தால் அடுத்த வாடிக்கையாளர் கிடைப்பாரா?' 'எத்தியோப்பியாவில் இருந்து புறப்பட்டபோதே இப்படி உழைக்கவேண்டும் என்று திட்டமிட்டீர்களா?' அவள் அதற்கு பதில் பேசவில்லை. சிறிது நேரம் பழைய நினைவில் இருந்தாள். பின்னர் தானாகப் பேசினாள்.

'அடிஸ் அபபா புனித மேரி பெண்கள் பள்ளிக்கூடத்தில் படித்தேன். நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவள். ஆனால் வகுப்பில் முதலாக வருவேன். ஒருநாள் ஆசிரியை கூம்பு வடிவத்தின் கொள் அளவை எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்டார். நானாக யோசித்து விடை சொன்னேன். அவர் எனக்கு ஒரு கைக்கடிகாரம் பரிசு தந்தார். அதுதான் முதன்முதலாக சொந்தமாக கிடைத்த பரிசு. அதன் பின்னர் யோசித்தேன். என் வழியை நானே கண்டுபிடிக்க வேண்டும்; வேறு ஒருவர் எனக்காக உருவாக்க முடியாது.' 'இந்தப் பணத்தை என்ன செய்வதாக உத்தேசம்?' என்று கேட்டேன். 'பட்டப்படிப்பு கட்டணம் கட்டுவேன்' என்று சொல்லுவாள் என எதிர்பார்த்தேன். 'ஓஇ நான் ஒரு எஸ் கிளாஸ் மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாங்குவேன்' என்றாள் தயங்காமல். 'அது 100,000 டொலர் அல்லவா?' 'அதற்கென்ன. பென்ஸ் கம்பனி தலைவர்கூட என் வாடிக்கையாளர்தான்' என்றுவிட்டு மர்மமாகச் சிரித்தாள்.

'பென்ஸ் கார் வாங்கவேண்டும் என்பது என் வாழ்நாள் ஆசை. அது இத்தனை இலகுவாக ரொறொன்ரோவில் கைகூடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.' 'ஒரு மாணவியாக இருந்துகொண்டு பென்ஸ் காரில் போய் இறங்கும்போது உங்களுக்கு  சங்கடமாக இருக்காதா?' 'விருந்துக்கு போனால் எப்படி கார் வாங்கினாய் என்று ஒருவரும் கேட்கமாட்டார்கள். என்னை ஒருமுறை அதில் ஏற்றிப்போவாயா என்றுதான் கேட்பார்கள்.' 'உங்கள் பட்டப் படிப்புக்கு என்ன நடக்கும்?' 'ஒன்றுமே நடக்காது. என் விடுமுறையில்தானே இதை செய்கிறேன். ஓர் அனுகூலம் உண்டு. பேராசிரியர் என்னுடைய எஸ் கிளாஸ் மெர்சிடிஸ் பென்ஸ் காரை பார்த்தபிறகு வாழ்க்கையில் வெற்றிபெற என்ன என்ன செய்யவேண்டும் என்று போதிப்பதை நிறுத்திவிடுவார்.' அவள் பெரிதாக வாய்விட்டுச் சிரித்தாள். பியர்ஸன் விமான நிலையத்தில் நீண்ட கைப்பை தோளிலே தொங்க, சில்லு வைத்த பயணப்பெட்டியை நேராக உருட்டிக்கொண்டு கயிற்றுப் பாலத்தில் நடப்பதுபோல மெதுவாக நடந்து கடைசி தூரத்தை ஓடிக் கடந்தாள். திடீரென்று நினைவுக்கு வந்து 'உங்கள் தொலைபேசி எண்?' என்று கத்தினேன். அவளுக்கு கேட்கவில்லை. படம் எடுத்த பின்னர் சிரித்ததுபோல எனக்கு ஏமாற்றமாகிவிட்டது. இது நடந்து நாலு வருடங்கள் ஓடிவிட்டன. இன்றுவரை அவளை தேடுகிறேன். எஸ் கிளாஸ் மெர்சிடிஸ் பென்ஸ் காரை ஓட்டும் சமூகமானிடவியல் துறை பேராசிரியரை ஒருநாள் நான் சந்திப்பேன்

இத்தனை அனுபவங்கள்  என் வாழ்க்கையில் கிடைத்திருந்தாலும் கடந்த ஆண்டு டிசெம்பர் மாத ஆரம்பத்தில் நடந்த சம்பவத்துக்கு அவை என்னை தயாராக்கவில்லை. ஒரு வீட்டுக்கு போகச் சொல்லி ரேடியோவில் எனக்கு தகவல் வந்தது. அந்த மனிதர் தமிழ் பேசும் சாரதி வேண்டும் என்று கேட்டிருந்தார். தாறுமாறாக உடையணிந்த 65 வயது ஆள் எனக்காகக் காத்துக்கொண்டு பழைய கட்டிடத் தொகுதி ஒன்றின் முன் தோள்மூட்டில் கிழிந்த மேலங்கியுடன் நின்றார். ஒரு கட்டடம் அதன் மேலேயே விழுவதுபோல அவர் உடம்பு  உடைந்து கொண்டிருந்தது. மூச்சுவிட எடுக்கும் உழைப்புக்கான பிராண வாயு அவர் இழுக்கும் சுவாசத்தில் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். கைகள் இரண்டையும் மடித்து நெஞ்சுக்கு முன்னால் ஒரு பையை பிடிப்பது போல பிடித்திருந்தார். மெல்லிதாக விரல்கள் நடுங்கின. 'நீங்கள்தானா தமிழ் பேசும் டிரைவரை கேட்டது?' 'ஓம் நான்தான்.' 'என்ன விசயம்?' 'நான் பொலீஸ் ஸ்டேசனுக்கு போய் ஒரு முறைப்பாடு கொடுக்கவேண்டும். நீங்கள் மொழிபெயர்க்கவேண்டும்.' மனிதரைப் பார்க்க பாவமாக இருந்தது. 'சரி' என்றேன்.

ஒரு வாரமாக சவரம் செய்யாத முகம். முன்னுக்கு நீண்ட தாடை. அவர் கதைக்கும்போது கழன்று விழுந்துவிடுமோ என்று அச்சம் தோன்றும்விதமாக ஆடியது. கண்ணாடியில் பார்த்தேன். பின் சீட்டில் பெரும் யோசனையோடு அமர்ந்திருந்தார். மனதை என்னவோ செய்தது. 'தனியாகவா இருக்கிறீர்கள்?' 'எனக்கு ஒரு மகள் இருக்கிறார். பெரிய உத்தியோகம். அடிக்கடி பயணம் செய்வார். எங்கே நின்றாலும் தொலைபேசியில் அழைப்பார். மூன்று நாட்களாக தகவல் இல்லை. எனக்கு வேறு ஒருவரும் இல்லை.' மனிதர் விக்கி அழத்தொடங்கினார். 'கவலைப்படாதீர்கள். அவர் எங்கோ பிஸியாக இருக்கிறார். உங்களுக்கு நல்ல சேதி வரும்.' என்று ஆறுதல் கூறினேன்.

இதற்கிடையில் பொலீஸ் ஸ்டேசன் வந்துவிட்டது. வரவேற்பு யன்னலில் இரண்டு பொலீஸ்காரர்கள் கறுப்பு உடையில் அமர்ந்திருந்தார்கள்அவர்களிடம் விசயத்தை சொன்னேன். முதியவரிடம் பெயரைக் கேட்டார்கள். அவர் 'சந்திரசேகரம்' என்று சொன்னார். 'உள்ளே போய் அமருங்கள். உங்கள் கேசை விசாரிக்கும் பொலீஸ்காரர் உங்களிடம் வந்து பேசுவார்.' நாங்கள் உள்ளே போனோம். அங்கே இன்னும் சிலரும் காத்திருந்தார்கள். இருக்கை ஊத்தையாகிவிடும் என்பதுபோல பாதி சோபாவில் பாதி பிருட்டத்தை வைத்து உட்கார்ந்தார். நான் பக்கத்தில் அமர்ந்தேன். நடுவில் அச்சம் கிடந்தது. இரண்டு பக்கமும் திரும்பி திரும்பி பதற்றத்துடன் கிழவர் பார்த்தார். அவருடைய நடுக்கம் சற்று அதிகமானது.

எங்களுக்கு முன்னே இருந்த சுவரில் 'காணாமல்போனவர்கள்' என்ற தலைப்பின் கீழ் பல படங்கள் ஒட்டியிருந்தன. பெரியவர் உட்கார்ந்தவாறே அவற்றை பார்வையிட்டுக்கொண்டு வந்தார். 'உங்கள் மகளின் பெயர் என்ன?' என்று கேட்டேன். 'அழகுராணி. நான்தான் அழகுராணி அழகுராணி என்று அழைப்பேன். அவளுக்கு பிடிக்காது. அதைச் சுருக்கி 'அல்கா' என்று பெயர் வைத்திருந்தாள்.' 'அல்காவா?' பெரியவர் பதில் சொல்லவில்லை. திடீரென்று எழுந்து நின்று ஒரு படத்தை உன்னிப்பாகப் பார்த்தார். நானும் எழுந்து நின்றேன். படத்தின் கீழே 'அல்கா கென்யாட்டா' என்று எழுதியிருந்தது. பெண்ணின் டீசேர்ட்டில் TAIBU என்ற வார்த்தை காணப்பட்டது. மூன்று நாட்களுக்கு முன்னரே கணவன் அவள் தொலைந்து போனதாக முறைப்பாடு செய்திருந்தான்.

'மிஸ்டர் சந்திரசேகரம், மிஸ்டர் சந்திரசேகரம்' என அழைத்தபடி ஒரு பொலீஸ்காரர் எங்களை நோக்கி வந்தார். பெரியவர் திரும்பியும் பார்க்கவில்லை. நெஞ்சுக்கு கிட்டப் பிடித்த அவருடைய கைவிரல்கள் கட்டுமீறி ஆடத் தொடங்கின.