தகப்பன் சாமி

வித்யாசாகர், குவைத்

காலை 8 மணி வேலைக்கு புறப்படும் நேரம்.

அவனும் மனைவியிடம் சொல்லிவிட்டு புறப்பட்டான்...
'சரிம்மா.. எனக்கு நேரமாச்சி.. நான் கிளம்பறேன்''
'என்னங்க வேலைவிட்டு வரும்போது ரெண்டு மாம்பழம் வாங்கிட்டு வாங்க'
'ஏன்டி - வீட்ல இருக்கறதெல்லாம் உனக்குப் பொருளா தெரியலையா?'
'என்ன இருக்கு வீட்ல; எப்போ மாம்பழம் வாங்கிட்டு வந்தீங்க?'
'திராட்சை இருக்கு, மாதுளம் பழம் இருக்கு, மெலாம் பழம் இருக்கு ஆப்பிள் இருக்கு அதலாம் முதல்ல தீரட்டும்... பிறகு மாம்பழம் வாங்கலாம்' அவன் மிடுக்காய் சொல்லிவிட்டு தன் தோள் பையை எடுத்து மாட்டினான்.

அதற்குள் அவன் குழந்தை அவனிடம் ஓடிவந்து..
'அப்பா அப்பா இங்க வாயேன்' என்றது.
'ஏம்மா அப்பாவுக்கு நேரமாச்சிடா..'
'ஒரு அஞ்சு நிமிஷம்பா.. எனக்காக.. வாயேன்'.
உள்ளே போனான்.
'ம், உன் சட்டையை கழற்று'.
'ஏன்!'
'கழட்டு சொல்றேன்'
'அடி வாங்க போற.. ஏன்னு சொல்லு'
'கழட்டுப்பா ஒரு விஷயம் இருக்கு'

'ஏய் சுமதி.. இங்க வந்து இவளை என்னன்னு கேளு' மனைவியிடம் குரல் கொடுத்து விட்டு அவன் நகர முற்பபட்டான்.

'ம்ஹீம்.. நான் விடமாட்டேன். நீ போனியினா அப்புரம் நான் அழுவேன்'.
என்று அடம் பிடித்தது குழந்தை.

திரும்பியவன் அந்தக் குழந்தையை முறைத்தான். அது அவனிடம் கனிவாய் 'கழட்டுப்பா.. எனக்காகப்பா' என்று கெஞ்ச...
'ஏம்மா இப்படி வேலைக்குப் போற நேரத்தில தொல்லை பண்ற?'

'இந்தா அதை கழற்றிட்டு இந்த சட்டையை போட்டுக்கோ..'
அந்தக் குழந்தை சுவற்றில் மாட்டியிருந்த வேறொரு சட்டையை எடுத்துத் தந்தது.

'உனக்கென்ன பைத்தியமா..அதலாம் அலுவலுக்குப் போடக் கூடாது'
'அப்போ இந்தா இதைப் போட்டுக்கோ' வேறொன்றை எடுத்துக் கொடுத்தது.
'அது இந்த முழுக்கால் சட்டைக்கு பொருத்தமா இருகாதுமா'
'அப்போ இது'
'அது நல்லால்லையே..'
'இந்தா இதைப் போட்டுக்கோ. இது எனக்கு ரொம்பப் பிடிக்கும்'

'எனக்கு பிடிக்கலை!!' அவன் கத்தினான்.

'பாத்தியா உனக்கு மட்டும் நீ புடிச்ச சட்டையை தான் நீ போடுவ; ஆனா அம்மா மட்டும்
அவுங்களுக்கு பிடிச்ச மாம்பழத்தை கேட்க கூடாதா? என்னப்பா நியாயம் இது'

அந்தக் குழந்தை இடுப்பில் ஒரு கையை வைத்துக் கொண்டு, சிரித்தார் போல் தலையலடித்துக் கொண்டது!

அவனுக்கு தலையில் சம்மட்டியால் அடித்தது போல உரைத்தது. பிறர் உணர்வுகளை மதிக்காதது எத்தனை பேறிழிவு என்றுணர்த்திய தன் மகளைத் தூக்கி முத்தமிட்டு விட்டு அருகிலிருந்த மனைவியிடம் வேலை விட்டு வரும் பொழுது மாம்பழம் வாங்கி வருவாதகச் சொல்லி புறப்பட்டான் அவன்.

அந்த தகப்பன் சாமிக் குழந்தை அம்மாவை பார்த்து 'பார்த்தியா' என்பது போல் கண்ணடித்து சிரித்தது.




vidhyasagar1976@gmail.com