பேரம்

இரா.கருணாகரன்

'என்ன பாட்டி மண் சட்டிக்கு விலையக் கேட்டா பித்தளை சட்டி விலை சொல்ற' அருகில் நிறுத்தியிருந்த பைக்கில், தொங்கிக்கொண்டிருந்த பிரபல டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வாங்கிய மளிகை சாமான் பையை ஓரக்கண்ணால் பார்த்தபடி அதட்டும் அதிகார தொனியில் வினவினான் சுவாமிநாதன்.

'அம்பது ரூபா தாம்பா கேட்டேன்' ஜாக்கெட் இல்லாமல் பழைய நூல் புடவையுடன் உழைத்து கருத்த உடம்புடன் இருந்தால் அந்த பாட்டி. காலை
11.00 மணி ஆகியும் இன்னும் போனியாகாமலும் அதனால் காலையில் சாப்பிடாமலும் லேசான பசி மயக்கத்தில் வேறு இருந்தாள்.

'பதினைந்து ரூபாய் தரேன். மண்ணை என்ன காசு கொடுத்தா வாங்கறீங்க'

'வேணும்னா அஞ்சு ரூபா குறைச்சுக்கப்பா' எப்படியும் போனி பண்ணிடனும்னு நினைத்தால் பாட்டி.

'அதெல்லாம் முடியாது. வேணும்னா இருபது ரூபாய் வச்சுக்க'

'இன்னாப்பா இப்படி கேக்கற. காலைலதான் ஒரு தம்பி வந்து என்ன போட்டோ புடிச்சுட்டு சட்டி பானை செய்றதெல்லாம் ஒரு கலைனு சொல்லிச்சு. கலைனுல்லாம் பாக்க வேணாம்பா. விலைவாசிய கொஞ்சம் பாருப்பா'.

பிகு செய்வதுபோல் வண்டியை நோக்கி நகர்ந்தான் சுவாமிநாதன்.

'வாப்பா இருபது ரூபாயே கொடு'

அங்கு இருந்த சட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்து தட்டி தட்டி பார்த்து அதில் ஒன்றை தேர்வு செய்தான். பேரம் பேசி சட்டி வாங்கியதை மனைவியிடம் சொல்லனும். எப்போது பார்த்தாலும் உங்களுக்கு சமர்த்து பத்தாதுங்கனு சொல்லிகிட்டே இருப்பா.

வீட்டு வாசலில் தன் அம்மா வழி பாட்டி உட்கார்ந்திருந்ததை கவனிக்காதது போல் வேகமாக பையுடன் உள்ளே சென்றான்.

ஐந்து வயது காவ்யா ௐடி வந்து 'அப்பா எனக்கு என்ன வாங்கியாந்திங்க' என்றது.

பையிலிருந்து அந்த பிரபலமான கம்பெனியின் டப்பாவில் அடைக்கப்பட்ட கொய்யாப்பழ ஜூஸை எடுத்து தந்தான்.

வேகமாக உள்ளே சென்று மனைவியிடம் 'பார்த்தியாம்மா ஐம்பது ரூபாய் சட்டிய இருபது ரூபாய்க்கு வாங்கிட்டேன்' பெருமையாகக் கூறினான்.

'ஆமா நேத்து ஐம்பது ரூபாய் மீனை நூறு ரூபாய்க்கு வாங்கியாந்திங்க' உடனடி பதில் மனைவியிடமிருந்து.

'ச்சே... இந்த பொம்பளங்ககிட்ட நல்ல பேரே வாங்க முடியாது' எரிச்சலுடன் கைலிக்கு மாறினான் சுவாமிநாதன்.

ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தான். சிறிது நேரம் கழித்து 'இன்னேரம் காவ்யா கார்ட்டூன் பார்க்கனும்னு வருவாளே' நினைத்துக்கொண்டிருக்கும்போதே மனைவியின் அலறல் குரல் கேட்டது.

'என்னங்க சீக்கிரம் வாங்க காவ்யா மயங்கிக்கிடக்கிறா'

மயங்கிக்கிடந்த காவ்யாவின் அருகில் அந்த பிரபல கம்பெனியின் கொய்யாப்பழ ஜூஸ் டப்பா கிடந்தது.

'சீக்கிரம் கிளம்பு நான் போய் ஆட்டோ கூட்டிட்டு வரேன்'

வேகமாகச் செல்லும் சுவாமிநாதனை வழிமறித்து கூப்பிட்டாள் பாட்டி.

'கிழவி ஒரு மூலையில உட்கார்ந்திருக்க மாட்டியா' கோபமும் எரிச்சலுமாக திட்டிக்கொண்டே வேகமாகச் சென்றான்.

நான்கு அடுக்குமாடி கொண்ட அந்த பிரபல நர்ஸிங்ஸ்ஹோமின் வாசலில் ஆட்டோ நின்றவுடன் இரண்டு வெள்ளுடுப்பு பணியாளர்கள் ஸ்ரெட்சரில் வைத்து காவ்யாவை உள்ளே அழைத்து சென்றனர்.

அரைமணி நேரம் கழித்து டென்ஷனுடன் உலாத்திக்கொண்டிருந்த சுவாமிநாதனை ஒரு இள வயது நர்சு அழைத்தாள் 'சார் உங்களை டாக்டர் கூப்பிடறார்'.

டாக்டர் ரூமில் நுழைந்தவுடன் 'என்ன சார் சாப்பிட கொடுத்தீங்க குழந்தைக்கு' சற்று கோபமாகவே கேட்டார் டாக்டர்.

டாக்டர் கேட்பார் என்று கையோடு கொண்டு வந்திருந்த ஜூஸ் டப்பாவை தந்தான்.
ஜூஸ் டப்பாவை திருப்பி பார்த்தவர் 'படிச்சவங்கதானே சார் நீங்க? காலாவதியான ஜூஸை கொடுத்திருக்கிறீங்க'

'இல்ல சார்..' அந்த பிரபல டிபார்ட்மெண்டல் ஸ்டோரின் பெயரைச் சொல்லி 'அங்கதான் சார் காலையில வாங்கினேன். அங்க இதுமாதிரியெல்லாம் இருக்காதுனு நினைச்சேன் சார்'

டாக்டர் பிரிஸ்கிரிப்ஷனை நீட்டியபடி 'இந்த மருந்தெல்லாம் கொடுங்க. இப்ப பயப்படற மாதிரி இல்லை. இருந்தாலும் நாளை காலை வரை கண்காணிப்பில் வச்சு பார்க்கலாம்னு நினைக்கிறேன்'.

ரூமைவிட்டு வெளியே வந்தவனிடம் பில்லை நீட்டினாள் அந்த நர்சு. மருந்து மாத்திர, பெட் வாடகை என மொத்தமாக பதினைந்தாயிரம் ரூபாய் வந்திருந்தது. தனது மாத வருமானத்தில் இது மிகப்பெரிய செலவு என நினைத்துக்கொண்டே அருகில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்து செலுத்தினான். நாளை காலைவரை இருந்தால் இன்னும் அதிகமாக செலவாகும் என எண்ணியபடி டாக்டரிடம் சென்று 'டிஸ்சார்ஜ் பண்ணுங்க டாக்டர். வேணும்னா மறுபடியும் கூட்டிட்டு வரேன்'.

ஒருவித கோபமான மனநிலையுடன் வாசலில் அமர்ந்திருந்த பாட்டியை முறைத்தவாறு கீரைத்தண்டாய் துவண்டு கிடந்த காவ்யாவை தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

சகஜ நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்த சுவாமிநாதனுக்கு மனைவியின் அலறல் மறுபடியும் கேட்டதும் தூக்கி வாரிப்போட்டது. வேகமாக குழந்தையின் ரூமிற்குள் நுழைந்தான். அங்கே காவ்யா வாயில் நுரை தள்ளியபடி வெட்டி வெட்டி இழுத்துக்கொண்டிருந்தாள்.

'உடனே கிளம்பு. நான் போய் ஆட்டோ கூட்டிட்டு வரேன்' சொல்லிக்கொண்டே வேகமாக வெளியே ஓடினான்.

ரூமிற்குள் நைட்டியிலிருந்து புடவைக்கு மாறிக்கொண்டிருந்தவளுக்கு சமையல் கட்டிலிலிருந்து ஒரு வித வாசனை வருவதை உணர்ந்தாள். சுவாமிநாதன் ஆட்டோவை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே வேகமாக நுழைந்தான். குழந்தையின் ரூமிற்குள் வந்தவுடன் அவன் கண்கள் ஆச்சரியத்தால் அகலமாயின. அங்கே காவ்யா கட்டிலில் அமர்ந்துகொண்டு கையில் டெடிபேர் பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது. அருகில் பாட்டி காலையில் பேரம் பேசி வாங்கிய சட்டி மற்றும் ஒரு டம்ளருடன் அமர்ந்திருந்தாள். சட்டிக்குள் ஒரு கருப்பு நிற திரவம் இருந்ததை கண்டான்.

'என்ன கிழவி என்னா செஞ்ச'

'ஒன்னும் இல்லப்பா.. புது சட்டியில் கஷாயம் வச்சு கொடுத்தா எப்பேர்ப்பட்ட விஷ உணவும் முறிஞ்சிடும்னு என் பாட்டி சொல்வாப்பா.. அதத்தான் செஞ்சேன்'

ஏதோவொரு உண்மையை உள்ளூர உணர ஆரம்பித்தான் சுவாமிநாதன். 'ஒரு பைசாக் கூட பேரம் பேச முடியாத அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வாங்கிய ஜூஸ் என் குழந்தைக்கு கேடு விளைவித்துவிட்டதே.... ..ஆனால் வயதான பாட்டியிடம் பேரம் பேசி வாங்கிய சட்டி என் குழந்தைக்கு நல்லது செய்திருக்கிறதே..... சரி பேரம் பேசிய அந்த முப்பது ரூபாயை அந்த பாட்டியிடம் கொடுத்திடனும்' நினைத்தவாறே குழந்தையின் அருகில் அமர்ந்தான்.

மூன்று நாட்கள் கழித்து அந்த வழியாக சென்றவனுக்கு ஞாபகம் வந்தது. கடையின் அருகே பைக்கை நிறுத்திவிட்டு இறங்கினான். கடையில் பாட்டி இல்லை. பதின்மூன்று வயது மதிக்கத்தக்க சின்ன பொண் ஒன்று பழைய அழுக்கு பாவாடை சட்டையுடன் உட்கார்ந்திருந்தது.

'பாட்டி இல்லையாம்மா'

'பாட்டியா! முந்தா நேத்து ஓடையில மண்ணு வெட்ட போச்சு.... போன இடத்தில பாம்பு கடிச்சி செத்துப்போச்சி'

உள்ளூர உடைந்தான் சுவாமிநாதன். இயலாமை அவனை கடுமையாக தாக்கியது. தன்னையும் அறியாமல் கண்கள் குளமாவதை உணர்ந்தான். தெரியாமல் இருக்க கர்ச்சீப்பால் ஒற்றி எடுத்தான்.

வீட்டு வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு வாசலில் அமர்ந்திருந்த பாட்டியிடம் சென்றான். முழந்தாலிட்டு அமர்ந்து பாட்டியின் தோள்மீது வாஞ்சையுடன் கை வைத்தபடி 'பாட்டிம்மா சாப்டிங்களா' தழு தழுத்த குரலுடன் விசாரித்தான்.

பாட்டியின் சுருங்கிய கண்கள் ஆச்சரியத்தில் அகலமாக விரிந்தது. எப்பவும் கிழவின்னு கூப்பிடறவன் இன்னைக்கு பாட்டிம்மானு கூப்பிடறானேனு நினைத்தபடி 'சாப்பிட்டேம்பா.....நீ போய் சாப்பிடு... உன் பொண்டாட்டி சாப்பிடாம காத்திருக்கா..............' 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்