நளாயினியின் மகள்

முனைவர் செ.இராஜேஸ்வரி


ண்ணம்மாவின் கணவன் கலை வேந்தனின் தீவிர ரசிகன். அவ்னை கலை வேந்தன் என்று சொல்வதை விட அவன் காதல் வேந்தன் என்றே சொல்லி மகிழ்வான்.. அன்று. அந்தக் காதல் வேந்தனின் மூன்றாவது கல்யாணச் செய்தி பத்திரிகைகளில் வந்தது. வெளிநாட்டு படப்பிடிப்புக்கு போயிருந்த போது காதல் மலர்ந்ததாக நடிகர் கலை வேந்தன் பேட்டியில் குறிப்பிட்டார். அவர் புது மனைவியோடு தன் வீட்டுக்கு வந்ததும் அவரது முதல் மனைவி வைதேகி இருவருக்கும் ஆரத்தி எடுத்து வரவேற்றதும் செய்தியாக வந்திருந்தது. வைதேகி தன் முதல் படத்தில் நடிகர் கலை வேந்தனுடன் நடித்தாள். அதற்கு பிறகு நடிக்கவில்லை. அந்த படம் தோல்வி அடைந்ததால் அவளை யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. தன் கணவனை பார்த்து ‘’ஆமாம் அவன் மூனு கல்யாணம் பண்றான். நீ ஏழு கல்யாணம் பண்ணு’’ என்று கண்ணம்மா கோபப்பட்டாள்.

கிருஷ்ணபுரத்தின் பெரிய வீதியில் கோயில் பிரசாதத் தூக்குடன் நடந்து வந்தாள் ராதா. அவள் வீட்டில் ஒரு காலத்தில் வெளி வேலைகள் செய்து வந்த கண்ணம்மா, எதிரே வந்தாள். இவளை பார்த்த்தும்,

‘’ராதா நல்லாருக்கியா’’

.’இருக்கேங்க்கா. பாப்பா நல்லாருக்காளா’’

கண்ணம்மா ராதாவை கொஞ்சம் ஓரமாக அழைத்து போனாள். ‘’என்னம்மா சாப்பிடவே மாட்டியா. இப்படி எலும்பா இருக்கியே. உன்னை வச்சு பட்டர் குடும்பமே சாப்பிடுது. நீ இப்படி இருந்தா எப்படி’’ என்றாள்.

ராதா சிரித்தபடி, ‘’அக்கா எனக்கு தபால் ஆபிசுல வேலை கெடச்சிருக்கு’’, என்றாள்

‘’அப்படியா எப்படிம்மா. அது மத்திய சர்க்கார் வேலை ஆச்சே? .யாராவது ஒங்க ஊருல இருந்து சொல்லியிருப்பாங்க’’ என்றதும் ராதா தலை குனிந்தாள்.

‘’சரி, நல்லா வேலை பாரு; நல்லா சாப்பிடு; உடம்பை பார்த்துக்க. இப்படி கடைவீதியில நின்னு எங்கூட நீ பேசுறதை ஒங்க வீட்டாளுக யாராச்சும் பார்த்தா ஒன்ன திட்டுவாங்க’’. என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.
கண்ணம்மாவும் ராதாவும் பட்டர் வீட்டாருக்கு தெரியாமல் தோழிகளாக இருந்தனர். ராதாவின் அம்மா அப்பா யாரென்று அவளுக்கே தெரியாது. ஆனால் அவளுக்கு சென்னையில் இருந்து யாரோ பணம் அனுப்புகிறார்கள். அவள் இங்கே கிருஷ்ணன் கோயில் பட்டர் வீட்டில் ஆறு வயது முதல் வளர்ந்துவருகிறாள். அதனால் அவளை யாரிடமும் பேச விட மாட்டார்கள்.

ராதா மிகவும் ஒல்லி; சிவந்த நிறம்; நீண்ட அடர்த்தியில்லாத முடி; அவளது களையான முகத்தில் எப்போதும் சோகம் ததும்பும். அசோக வனத்து சீதை போல தூசு படிந்த ஓவியமாக காட்சி தருவாள். அவள் ஒரு நடிகையின் மகள் என்று ஊருக்குள் ஒரு பேச்சு உண்டு.

ராதா தன் சிறு வயது பற்றி கண்ணம்மாவிடம் மட்டும் சொல்லியிருக்கிறாள். அவள் ஒரு பாட்டி வீட்டில் இருந்தாள். அங்கு நிறைய பெண்கள் இருந்தனர். அவளுக்கு அங்கு பாட்டும் பரதமும் ஒருவர் வந்து சொல்லிக் கொடுத்தார். அதில் அவளுக்கு ஆர்வம் வரவில்லை.. இது அதுக்கு சரிப்படாது என்று அடிக்கடி அங்கு சொல்லியது மட்டும் அவளுக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஒரு நாள் ஒரு மாமா இவளை ரயிலில் அழைத்து வந்து பட்டர் வீட்டில் விட்டுவிட்டார். மாதந்தோறும் மணியார்டர் வரும். அதில் குழந்தை சௌக்கியமா என்று ஒரு வரி எழுதியிருக்கும். இதுதான் அவள் வாழ்க்கை சுருக்கம்.

ஒரு நாள் ராதா மூன்று பிள்ளைகளுடன் ஒரு காரில் ஏறியதை பார்த்த கண்ணம்மா ராதா என்று சத்தம் போட்டு கூப்பிட்டாள். ராதா திரும்பி பார்த்து , சிரித்தபடி அவளிடம் வந்தாள். எனக்கு மூனு குழந்தைங்க கண்ணம்மா என்று ஆசையாக சொன்னாள். அடுத்த ஊரில் வசிப்பதாக்ச் சொன்னாள். இப்போது ஆள் சற்று குண்டாக மகிழ்ச்சியாக காணப்பட்டாள். கண்ணமாவ ஒரு நாள் எங்க வீட்டுக்கு வா எங்க வீட்டுக்காரர் ரொமப் நல்லவர். அவர் உன்னைய ஒன்னும் சொல்ல மாட்டார் என்றாள். தாயில்லாத அவளின் தாய்மைப்பண்பு கண்ணம்மாவின் கண்ணீல் கண்ணீரை வரவழைத்தது.

கண்ணம்மா மகிழ்ச்சியாக வீடு திரும்பினாள். அவள் கணவன் நடிகர் கலை வேந்தன் மாரடைப்பால் இறந்த செய்தியை சொல்லி வருத்தத்தோடு மாலை பேப்பரை காட்டினான். பார்த்தாள். அதில் கலை வேந்தன் ஜோடி ஜோடியாக மூன்று மனைவியரோடு இருந்தார். அதில் அவரது முதல் மனைவி வைதேகியை நளாயினி என்றும் தன் கணவரின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என்று வாழ்ந்தவர் என்றும் பாராட்டி எழுதியிருந்தனர்.. கலை வேந்தனும் வைதேகியும் திருமணம் முடித்த போது எடுத்த போட்டோவும் இருந்தது. அந்த போட்டோவில் வைதேகி அருகில் நின்று கொண்டிருந்தவரின் முகம் அவளுக்கு தெரிந்த முகமாக தோன்றியது. ஆம்; கண்டுபிடித்துவிட்டாள்.. அவர் அடிக்கடி பட்டர் வீட்டுக்கு வருவார். கண்ணம்மாவுக்கு பொறி தட்டியது. மீண்டும் அந்த ‘நளாயினியின்’ முகத்தை உற்று பார்த்தாள். அவள் முகத்தில் தன் தோழியின் முகம் டபுள் எக்ஸ்போஷர் ஆயிற்று.





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்