அவிழ்க்கப்பட்ட முடிச்சு

முனைவர் செ.இராஜேஸ்வரி


தையல் மிஷின் ஓடிகொண்டிருந்தது. பாக்யத்தாய் கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே என்று பாடியபடி தைத்துக்கொண்டிருந்தாள். தையல் தைத்தே தன் குடும்பத்தை நடத்தி வந்தாள். அப்போது சந்திரன் வந்தான். அவன் ஒரு லேடிஸ் ஆஸ்டலில் வாட்ச்மேனாக இருந்தான் . அங்கு பிள்ளைகள் தரும் ஜாக்கட்களை வாங்கி இங்கு வந்து தைக்க கொடுப்பான்; பின்பு வாங்கி செல்வான்.

மூன்று மாதத்துக்கு முன்பு வந்தான். அதில் இருந்து அடிக்கடி வர தொடங்கினான். ஒரு நாள்
"நீங்கள் ரெடிமேடி ஜாக்கட் தைக்கலாமே" என்றான்

"தைக்கலாம் முதல் போடனுமில்லை" என்றாள்.

"நான் வாங்கி வர்றேன் என்றவன் மறு நாள் ஒரு டஜன் ஜாக்கட் பீஸ்களோடு" வந்தான்.
 
மறு நாள் சில சம்கி, கண்ணாடி, லேஸ் போன்றவற்றை வாங்கி வந்தான்

திருமணத்துக்கு பிளவுஸ் தைக்கப்படும் என்று ஒரு போர்டை கொண்டு வந்து மாட்டினான்.

தினமும் ஒரு மணிக்கு வருவான். மூன்று மணி வரை இருப்பான். பிறகு போய்விடுவான் . அவன் வளர்த்திக்கு கட்டிலில் கால் நீட்டமுடியவில்லை என்று தன் பழைய சேலைகளைக் கொண்டு ஒரு மெத்தை தைத்து போட்டாள்.

இன்று வந்தவன் உம்மென்று உட்கார்ந்திருந்தான்

அவள் என்னாச்சு என்றாள்

எனக்கு கல்யாணம் முடிவாயிருச்சு. ஊருல போய் பேசி முடிச்சுட்டாங்க. எனக்கே தெரியாது . வீட்டு மாப்பிள்ளையாம்

அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. நெஞ்சில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல வலித்த்து. நெஞ்சில் கையை வைத்தாள்

அவன் எழுந்து உள்ளே போய் கட்டிலில் படுத்தான். ஆனால் அவள் போக வில்லை. சிறிது நேரத்தில் அவன் கிளம்பிவிட்டான். அவன் வாசம் அந்த வீடு முழுக்க நிறைந்திருந்தது.

மனைவியை இழந்தவன். மறுதிருமணம் செய்ய மாட்டான் என்று நினைத்திருந்தாள். தென்றல் போல வந்தவன் புயல் போல புறப்பட்டுவிட்டான். இடி விழுந்த மரம் போல அவள் மனம் கருகிவிட்டது.

இனி யாருக்காக வாழவேண்டும் என்று நினைத்தாள். செத்துவிடலாம் என்று முடிவு செய்தாள். அப்போது அவள் நினைவு பின்னோக்கி சென்றது.

தன் கணவன் இறந்த மறுநாள் அழுதுகொண்டிருந்த பாக்கியத்தாயிடம் நெருங்கி வந்த மச்சான்
அழாதே பாக்கியம் நான் இருக்கேன் என்று தோளை தொட்டார்.

‘’நீங்க இருந்து என்ன செய்ய? எனக்கு அவர் மாதிரி வருமா? எங்க அக்கா சாகவும் அத்தானுக்கே என்னை ரெண்டாம் தாரமாக எங்கம்மா கட்டிக் கொடுத்தாங்கள்ல; அது மாதிரி இப்ப அத்தான் செத்துட்டாங்க. அவர் தம்பிக்கு என்ன கல்யாணம் கட்டி வைங்க’’ என்றாள். அவள் மச்சானுக்கு அதிர்ச்சியாகிவிட்டது
.
‘’அறுதலி முண்ட என்ன சொல்லுதா பாரு. இவளுக்கு பட்டா பய கேக்குதாக்கும்; ஏன் நாங்க பத்தலியோ’’ என்றபடி விருட்டென்று போய்விட்டார். அன்று முதல் புகுந்த வீட்டு சொந்தம் அற்றுப்போய்விட்டது. மூன்று பிள்ளைகளோடு கிடந்து கஷ்டப்பட்டாள்.

சந்திரன் வந்ததும் வாழ்வில் வசந்தம் வீசியது போல உணர்ந்தாள். இன்று அவனும் விலகிவிட்டான்
இனி எதற்கு வாழவேண்டும் என்று தன்னை தானே கேட்டு கொண்டாள். எங்கேயாவது போய் செத்துவிடலாமா என்று தோன்றியது. இருட்டிவிட்டது. யாரோ வாசலில் வந்து கூப்பிடும் சத்தம் கேட்டது. எழுந்து லைட்டை போட்டாள்; வாசலில் மார்த்தாம்மா நின்றிருந்தார்.

‘’தாயி கொஞ்சம் என்னோட துணைக்கு வர்றியா. என்னால தனியா போக முடியல; இன்னைக்கு ஒரு நாளைக்கு கொஞ்சம் என்னோடு வா தாயி’’ என்றார். மார்த்தாம்மா தினமும் ஆஸ்பத்திரிக்கும் வீடுகளுக்கும் ஊழியத்துக்கு போவார். இவளுக்கும் இன்று வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. அவருடன் கிளம்பினாள். அன்றில் இருந்து தினமும் மார்த்தாம்மாவுடன் போகத்தொடங்கினாள். இவளுக்கு வேத வாசிப்பு ஜெபம் எதுவும் தெரியாது; மார்த்தாம்மா ஒவ்வொருவருக்கும் ஜெபித்துக்கொண்டே வருவார். இவள் சும்மா வேடிக்கை பார்ப்பாள். அந்த நேரம் சந்திரனை மறந்திருப்பாள்.

மார்த்தாம்மாவுடன் போகும்போது இவளுக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும். பிள்ளைகளுக்கு கொண்டுபோய் கொடுக்கும்படி சிலர் திண்பண்டங்களும் சிற்றுண்டியும் கொடுத்து அனுப்புவார்கள். அவளுக்கு அது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. மற்றபடி இவள் பிள்ளைகள் மதியம் பள்ளிக்கூடத்திலேயே சத்துணவு சாப்பிட்டுவிடுவார்கள். இவள் தையல் தைப்பதை கூட விட்டுவிட்டாள். சந்திரன் இல்லாத வாழ்க்கை வெறும் வானம் போல இருட்டாக இருந்தது.

ஒரு நாள் இவள் காலையில் சோம்பலாக படுத்துக்கிடந்த போது முதல் நாள் ஊழியத்துக்கு போனது நினைவுக்கு வந்தது. ‘’அப்பாடா நமக்கு கடன் தொல்லை இல்ல; நோய் தொந்தரவு இல்லை; நம்ம வீட்டுல எந்த பச்ச பிள்ளையும் சாக பிழைக்க கெடக்கல;’’ என்று நினைத்தாள். சட்டென்று தன் பிள்ளைகளை சில மாதங்களாக கவனிக்கவேயில்லை என்பது அவள் புத்தியில் உறைத்தது.

சே, இனி எவனும் வேணாம்; என் பிள்ளைங்க இருக்கும்போது எனக்கு என்ன குறை? என்று சொல்லிக்கொண்டே எழுந்தாள். இயேசு சாமி பாட்டை பாடியபடி தையல் மிஷனுக்கு எண்ணெய் விட்டாள். வீட்டை சுத்தப்படுத்தினாள்; அவள் மனதும் சுத்தமாயிற்று,. மீண்டும் தையல் மிஷன் ஓடத் தொடங்கியது.




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்