போராட்டங்கள்

தேவமுகுந்தன்


'
செனற் ஹவுஸின்' முதலாவது மாடியிலுள்ள விசாரணை அறைக்கு முன்பாகப் போடப்பட்டிருந்த கதிரையில் சூசை அமர்ந்திருந்தான். அடுத்ததாக இவன்தான் உள்ளே போகவேண்டும். இவனைக் கடந்து சென்ற அந்தப் பல்கலைக்கழக ஊழியர்கள்; இவனைக் கண்டும் காணாதவர் போல விலகிச் சென்றனர். இவனுக்கு வெற்றிலை சாப்பிட வேண்டும்போல இருந்தது. அணிந்திருந்த காற்சட்டைப் பொக்கற்றினுள் காலையில் வாங்கிய வெற்றிலைச்சுருள் இருந்தது. விசாரணை முடிய வெற்றிலையைப் போடலாம் என எண்ணினான்.

இந்த விசாரணை வெறும்கண்துடைப்பென இவனுக்குத் தெரியும். தன்னை வேலையை விட்டு விலத்த ஏற்கனவே தீர்மானித்துவிட்டார்கள் என்ற செய்தி நான்கைந்து நாட்களுக்கு முன்பே இவனின் காதுகளை எட்டியிருந்தது.

பல்கலைக்கழக ஊழியர் தொழிற்சங்கம் இவனுக்காகக் குரலெழுப்பப் போவதில்லை. அவர்களின் பாiஷயின்படி இவனோர் கருங்காலி. நிர்வாகத்தின் பாiஷயின்படி இவனொரு கள்ளன்.
...
மூன்று மாதங்களுக்கு முன்பு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தொடங்கியது. கல்விசாரா ஊழியர்கள் தமது பணிகளில் ஈடுபடாது வேலைநிறுத்தத்தில் குதித்திருந்தனர். பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய சேவைகளுக்கு தடங்கல் இல்லாதுதான் ஆரம்பத்தில் வேலை நிறுத்தம் நடைபெற்றது.

விவசாயப்பீடத்தின் பரிபாலனத்தின் கீழிருந்த பல்கலைக்கழகப் பண்ணையைப் பராமரிப்பதுதான் இவனின் வேலை. எத்தனை விதமான ஆடுகளும் மாடுகளும் பண்ணையில் இருக்கின்றன. அவுஸ்ரேலியா, நியூசிலாந்து... என வௌ;வேறு நாடுகளில் இருந்து கூட பல கால்நடைகளை இங்கு கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். இவன் வழமையாக காலையில் வந்து மாட்டுச்; சாணம், ஆட்டுப் பிழுக்கை என்பவற்றை அகற்றி நிலத்தைக் கூட்டிச் சுத்தம் செய்வான். ஆடு, மாடுகளை அவிழ்த்து விட்டு பண்ணைக்குப் பின்னால் உள்ள மேய்ச்சல் தரைக்கு கூட்டிச் செல்வான்.

பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான மேய்ச்சல் தரை ஏழத்தாழ இருபத்தைந்து ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. கண்ணுகுக்கெட்டிய தூரம்வரை பச்சைப் பசேல் எனப் புற்களுடன் நீண்டிருக்கும். இடையிடையே வேம்பு, ஆல், அரசு பனை....எனப் பெரிய மரங்களும் பற்றைகளும் மேய்ச்சல் தரையில் இருக்கின்றன. வெய்யில் நேரம் மரங்களுக்கு கீழே கால்நடைகள் படுத்திருந்து இரை மீட்கும். இரணைமடுக் ;குளத்திலிருந்து வயல்களுக்குச் செல்லும் வாய்க்கால்களிலொன்று இந்த மேய்ச்சல் தரைக்கூடாக செல்கின்றது. கால்நடைகள் விரும்பிய நேரம் அதில் நீரருந்தும்.

கால்நடைகளைப் பற்றி ஆய்வு செய்யும் பல்கலைக்கழக மாணவர்கள் இவனுடன் வந்து கலந்துரையாடுவார்கள். அவர்கள் அவற்றினைப் பற்றி ஆய்வு செய்வதற்கு இவன் உதவி செய்வான். இப்படி ஆய்வு செய்த சில மாணவர்கள் பட்டம் பெற்று இப்பொழுது இப்பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளர்களாகக் கூட இருக்கிறார்கள்.

ஆடுகள், மாடுகள் இவனுக்கு பிள்ளைகள் மாதிரி. அவை ஒவ்வொன்றினைப் பற்றியும் தனித்தனியாக அறிவான். மாரிகாலத்தில் பண்ணையில்; கால்நடைகளை நுளம்புகள் குத்தக் கூடாதென்பதற்காக பெரிய சட்டிகளில் பொச்சு மட்டைகளை எரித்து அதில் வேப்பம் இலைகளையும் வித்துக்களையும் இட்டுப் புகைபோடுவான். ஆடு, மாடுகளின் மேலிருக்கும உண்ணிகளை பிடுங்குவான். காலத்திற்குக் காலம் கால்நடைகளை வாய்க்காலில் குளிப்பாட்டுவான். பல பசுக்கள் கன்று ஈன்றபோது இவன் அவற்றிகுக் கஞ்சி காய்ச்சி வைத்திருக்கிறான். கன்றுகள் தாயின் கருப்பையில் இருந்து கன்று பூமியில் விழும்போது அதனை கரங்களில் ஏந்தி நிலத்தில் பரப்பப்பட்ட வைக்கோலில் கிடத்தி இதன் கால் குளம்புகளை சீராக கூரான கத்தியால் வெட்டி விடுவான்.

கன்று ஈன்றதன்; பின்னர் தாய் மாட்டிலிருந்து வரும் இளங்கொடியை தாய்ப்பசு சாப்பிட்டால் அதற்குக் கூடாதென்று விழித்திருந்து எடுத்திருக்கிறான். எடுத்த இளங்கொடிகளை சாக்கில் இட்டு மேய்ச்சல் தரையில் உள்ள ஆல மரத்தின் கொப்பில் கட்டுவான். அப்படி பால் மரங்களில் இளங்கொடியைக் கட்டினால் தாய் மாட்டில் நிறையப் பாலூறும் என இவன் நம்புகிறான். கால்நடைகளுக்கு இவன் செல்வி, பொன்னி, கறுப்பன், கட்டையன்... எனப் பெயர்கள் கூடச் சூட்டியுள்ளான். இவன் பெயர் சொல்லிக் கூப்பிட்டால் அவை இவனருகே ஓடிவந்து உரசும்.

மாலை நான்கு மணிபோல மேய்ச்சல் தரையில் இருந்து அவற்றினை திரும்ப பண்ணைக்குக் கூட்டிச் செல்வான். இவன் நடக்க அவையும் சேர்ந்து நடக்கும்.

வேலைநிறுத்தத்தின் ஆரம்ப நாட்களில் இவன் தனது வேலைகளைச் செய்தான். இவனுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. வேலைநிறுத்தம் சில நாட்களில் முடிவுறும் என்றே எல்லோரும் ஆரம்பத்தில் எண்ணியிருந்தனர். அனைத்துப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர் தொழிற்சங்கத்திற்கும் உயர்கல்வி அமைச்சருக்குமிடையிலான சம்பள உயர்வு பற்றிய பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாட்டினை எட்டவில்லை.
பல்கலைக்கழக நுழைவாயிலில் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டன. மாணவர் விடுதிகள் காலவரையறையற்று மூடப்பட்டன. கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழக வாசலில் அமைக்கப்பட்ட பந்தலில் அமர்ந்திருந்தனர். விரிவுரைகள் தடைப்பட்டன. மாணவர் பல்கலைக்கழகத்திற்கு வந்து திரும்பிச் சென்றனர். இரண்டாம் வாரத்தில் அனைத்துப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கம் அத்தியாவசிய சேவைகளையும் புறக்கணிப்பதென முடிவெடுத்தது.

இவன் ஊழியர் சங்கத்தில் வேலைக்கு சேர்ந்த நாள் தொடக்கம் உறுப்பினன். மாதாந்தம் சம்பளத்திருந்து சங்கத்திற்கு ஐம்பது ரூபாய் சந்தாப் பணமாகப் போகின்றது. இவனுக்கு இவ்வருட ஆரம்பத்தில் நடந்த வைபவத்தில் இருபது வருட சேவை பூர்த்தி என்று பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் சான்றிதழையும் உபவேந்தர் வழங்கியிருந்தார்.

அன்று திங்கட்கிழமை காலையில் வழக்கம்போல பண்ணையை நோக்கி நடந்தவனை குமரேசன் இடைமறித்தான். அவனுடன் சிவலிங்கமும் நின்றான். குமரேசனும் சிவலிங்கமும் ஊழியர் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் முக்கிய பதவியில் இருப்பவர்கள்.

'சூசை பண்ணைக்குப் போக வேண்டாம். இன்றையிலிருந்து நாங்கள் எல்லா வேலைகளையும்; புறக்கணிக்கிறம்'

இவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது.

'குமரன், ஆடு மாடுகளுக்கு சாப்பாடு வைக்காட்டிக்கு அதுகள் செத்துப் போடுங்கள்'

'செத்தால் சாகட்டும் மனிசருக்கு சாப்பிடுறதுக்கு சம்பளம் காணாது, நீ ஆடு, மாடுகளைப் பற்றி யோசிக்கிறாய்...' சிவலிங்கம் சற்றுக் கோபமாய்ச் சொன்னான்.

இவனின் வாதாட்டம் அவர்களிடம் எடுபடவில்லை.

'வெளிவேடக்காரர்களே நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வுநாளில் தம்மாட்டையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்தது தண்ணீர் காட்டுவதில்லையா? ' என்ற சுவிஷேச வசனத்தை அவர்களிடம சொல்ல வேண்டும் போலிருந்தது.

'எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் பொதுவாக இப்படித்தான் நடக்குது. நாங்கள் அதை மீற முடியாது. நீ வா சூசை..' குமரேசன் இவனின் கையைப் பிடித்து பல்கலைக்கழக வாசலுக்குக் கூட்டிச் சென்றான். இவன் அவர்களுடன் செல்ல மனமில்லாது சென்றான்.

பங்குனி மாத வெய்யில் நெருப்பாகத் தகித்தது. வாசலில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் பலரும் அமர்திருந்தனர். பெண்கள் ஊர்கதைகள் பேசிக் கொண்டிருந்தனர். ஓரமாக பெரிய பானையில் மரவள்ளிக்கிழங்கு அவிந்து கொண்டிருந்தது. நிதிப்பிரிவில் பணிபுரியும் மஞ்சுளாவும் சியாமளாவும் சம்பல் இடித்துக் கொண்டிருந்தனர்.

வேலை நிறுத்தத்தினால் அந்த மாதச் சம்பளம் கிடைக்கவில்லை. சிற்றூழியர்கள் சிலர் வெளியில் கூலி வேலைக்குப் செல்கிறார்களாம். வேலை நிறுத்தமென்றால் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்காமல் பட்டினி இட முடியுமா? இவனது வீட்டில் இப்போது இரண்டுவேளை தான் அடுப்பெரிகின்றது. அது விரைவில் ஒருவேளை என்று ஆகக் கூடும். மேலும் தொடர்ந்தால்;;.....நினைக்கவே பயமாகவிருந்தது.

வேலைநிறுத்தம் இப்படியே தொடர்ந்தால். மாணவரின் இறுதிப் பரீட்சைகள், பட்டமளிப்பு விழா, ... பிற்போடப்படும். உரிய காலத்தில் பட்டம் பெறாது வேலை தேடி அலைய வேண்டியிருக்கும். பிள்ளைகள் படித்து குடும்பத்தை காப்பாற்ற இன்னும் கொஞ்சக் காலம்தான் இருக்குது என்று நம்பியிருக்கும் பெற்றோரின் கனவுகளில் மண் விழுந்து கொண்டிருக்கின்றது.

பேராசிரியர்களுக்கும் விரிவுரையாளர்களுக்குமென்ன காலையில் ஒன்பதரை பத்து மணிபோல கார்களில் பல்கலைக்கழகத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்கு விரிவுரைகளை நடத்தத்; தேவையில்லை. விரிவுரையாளர்களுக்கான பொது அறையில் அமர்ந்து வடையும் வாழைப்பழமும் சாப்பிட்டு தேநீர்குடித்து பத்திரிகைச் செய்திகளை படிக்கிறார்கள். அச்செய்திகளைப் பற்றி கதைக்கிறார்கள். பதினொன்றரை பன்னிரண்டு மணி போல வீடுகளுக்குத் திரும்புகிறார்கள். அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு சம்பளம் ஒழுங்காகப் போகின்றது.

விலங்கியல் ஆய்வு கூடத்தில் மீ;ன்களையும் எலிகளையும் பராமரிக்கும் ராகவன் அவற்றினைப் பற்றிய கவலையற்று உதயனைப் புரட்டிக் கொண்டிருந்தான். சாப்பாடு இல்லாது விட்டால் மீ;ன்கள் செத்தவிடுமல்லவா? அவற்றுக்கு தண்ணீர் மாற்றத்தேவையில்லையா? அடைத்து வைக்கப்பட்டு;ள்ள எலிகள் சாப்பாடு இல்லாது எத்தனை நாட்களுக்குத்தான் உயிர் வாழுமோ? ராகவனுக்கு இவற்றில் அன்பில்லையா? பல்கலைக்கழக நூலகம் கூட மூடப்பட்டுக் கிடக்கின்றது. பாவனையற்று புத்தகங்கள் இறாக்கைகளில் வாரக்கணக்காகக் கிடந்தால் அவற்றில் தூசுபடிந்து பழுதடையக் கூடுமல்லவா?

பல்கலைக்கழக பண்ணையில் பயிர்களுக்கு நீரூற்றும் கமலன்

'நாங்கள் விட்டுக்கொடுத்துப் போகக்கூடாது. சம்பளத்தை கூட்டும் மட்டும் போராட்டம் தொடர வேண்டும்.' என்று பல்கலைக்கழக பரீட்சைகள் பிரிவில் வேலை செய்யும் கேசவனிடம் சொல்லிக்; கொண்டிருந்தான். செடிகளுக்கு உயிர் உள்ளனவா? இரண்டு நாட்கள் தண்ணீர் ஊற்றாது விட்டால் செடிகள் காய்ந்துவிடுமல்லாவா? வாடிக் கொண்டிருக்கும் செடிகளைப் பற்றி இவன் கவலைப்பட்டான்.

'கமலன் சம்பளம் இல்லாமல், சாப்பாட்டுக்கு வழியில்லாமல் நாங்கள் கடன்காரராகிக் கொண்டிருக்கிறோம். சித்திரை வருசப் பிறப்பும் வருகுது. செலவுக்கு கையில ஒரு காசும் இல்லை'; கேசவன் சொன்னான்.

தேக்கம் இலைகளில் அவித்த மரவள்ளிக் கிழங்கையும் தேங்காய்ச் சம்பலையும் பரிமாறினார்கள். இவன் அவற்றினை வாங்கவில்லை. கால்நடைகள் பசியுடனும் தாகத்துடனும் இருக்கும்போது இவனுக்கென்ன சாப்பாடு வேண்டிக் கிடக்கிறது.

பிறந்து ஒருவாரமாகின்றது. செங்காரிப் பசுவின் கன்றை அவிழ்த்து விட்டால்தான் அது பால் குடிக்கும். இவனுக்கு கவலையாகவிருந்தது. பண்ணையில் உள்ள ஏழெட்டு கன்றுக்;குட்டிகள் இப்போது பால்குடிக்கும் பருவத்திலுள்ளன. அக்கன்றுகள் பசியால் துடிக்குங்கள். தாய் மாடுகள் பால் மடியில் நிரம்பி அவஸ்தைப்படுங்கள். இவனுக்கு தொடர்ந்து வாசலில் இருக்க முடியவில்லை.

ராகவனையும் கமலனையும்; கேசவனையும் ஒன்;றாகக் கூப்பிட்டு ஒதுக்குப்புறமாக நின்ற வேப்ப மரத்தடியில் நின்று கதைத்தான்.

' வாயில்லாச் சீவனுகள் பாவங்கள் அதுகளுக்கு சாப்பாடு போட வேணும், தண்ணி, சாப்பாடு இல்லாட்டிக்கு அதுகள் செத்திடுங்கள்' ' இவனின் குரல் தழுதழுத்தது.

' உனக்கென்ன விசரே சூசை பேசாமல் இரு. ஆடு, மாடு செத்தால் நாங்கள் என்ன செய்யிறது. பிறகு பல்கலைக்கழகம் புதுசா வாங்கும். நீ பேசாமல் இரு..' கமலன்; சொன்னான்.

இவன் விம்மினான்.

' நாங்கள் ஒண்டுஞ் செய்யேலாது சூசை. இப்ப நீ சாப்பாடு போடப்போனாய் எண்டால் இவங்கள் உன்னை கருஞ்காலி எண்பாங்கள்.' ராகவன் சொன்னான்.

'வேலைநிறுத்தப் போராட்டத்தால் , எங்களைப் போன்ற ஆட்களுக்கு அன்றாடச் சாப்பாடே பேராட்டமாக உள்ளது. வீட்டிலை பிள்ளைகளுக்கு ஒழுங்காய்ச் சாப்பாடு குடக்க முடியேலை '. கேசவன் சொன்னான்.

';வாயில்லாச் சீவனுகளுக்கு தண்ணி, சாப்பாடு வைக்கிறதுக்கு நான் போராட வேண்டியிருக்கு கேசவா'இவன் கண்ணீர் வழியச் சொன்னான்.
...
அன்றிரவு சூசை இரவோடிரவாக பண்ணையின் மதிலேறிக் குதித்தான். ஆடு மாடுகள் இவனை அடையாளங் கண்டு ஆனந்தக் குரலெழப்பின. காலெல்லாம் சாணி. சாணியும் மாட்டு மூத்திரமும் கலந்த மணம் குப்பென்று அடித்தது. இருளில் கன்றுகளைத் தேடி; அவிழ்த்து விட்டான். அவை தாய்களை நோக்கி ஓடின.

பண்ணையில் இருந்து மேய்ச்சல் தரைக்குச் செல்லும் வழியில் இருந்த கதவின் பூட்டை கல்லொன்று கொண்டு உடைத்தான். கதவைத் திறந்து விட்டுவிட்டு ஆடு, மாடுகளை ஒவ்வொன்றாய் அவிழ்த்து விட்டான். அவை பாசத்துடன் இவனை செல்லமாக உரசின. பசியுடனும் தாகத்துடனும் நின்ற அவற்றை மேய்ச்சல் தரையை நோக்கிக்; கூட்டிச் சென்றான்.

தோட்டப் பக்கமாய் நடந்தான். பெரிய தண்ணீர்த் தொட்டியை அடைத்திருந்த கட்டையை இழுத்தான்;. தண்ணீர் குபுகுபுவென வாய்க்;காலால் பயிர்களை நோக்கிப் பாய்ந்தது. இவன் திரும்பி நடந்து மதிலேறினான்.
' சூசை இந்த நேரத்தில் இஞ்சை என்ன செய்யிறாய் ' பல்கலைக் கழக விரிவுரையாளர் விடுதியில் குடும்பமாக தங்கியிருக்கும் விவசாயப்பீடாதிபதியின் குரல்போல இருந்தது. இவனது முகத்தில் 'ரோர்ச் லைட்டின்' வெளிச்சம் பாய்ந்தது. இவன் ஒன்றும் கேட்காதவன்போல மதிலால் பாய்ந்து தனது சைக்கிளை நோக்கி ஓடினான்.

...
மூன்று மாதங்களாகத்;; தொடர்ந்த தொழிலாளர் போராட்டம் வெற்றிபெற்று பல்கலைக்கழகம் ஆரம்பமாகியது. வேலைநிறுத்த காலத்தில் இவன் நான்கு ஆடுகளையும் மூன்று மாடுகளையும் களவெடுத்து விட்டதாக இவனுக்கு முன்னாலேயே பலரும் கதைத்தனர். இவனைப் பண்ணைக்குத் செல்லக் கூடாது என்ற உத்தரவுக் கடிதமும்; இயந்திர தொழில்நுட்பப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளான் என்ற அறிவித்தல் கடிதமும் ஒன்றாகக் கிடைத்தன. ஆடு, மாடுகளுக்கு உணவளித்தவன் இனி இயந்திரங்களைக் துடைக்க வேண்டுமோ?

தொலைந்த ஆடு, மாடுகள் தரவையில் எங்காவது நிற்கக் கூடும். வழிமாறி எங்காவது போயிருக்கக் கூடும். இவன் போனால் தேடிக் கண்ட பிடிக்கலாம் சிலவேளை ஊர்ச் சனங்கள் அவற்றினைப் பிடித்து வளர்க்கக் கூடும். இவன் ஊர்ப்க்கம் போய்த்; தேடினால் இரண்டொரு கிழமைகளில் அவற்றினை கண்டு பிடித்து விடுவான். இப்போது காணாமல் போனது மூன்று மாடுகளும் நான்கு ஆடுகளும் மட்டும்தான். இவன் அன்றிரவு அவற்றினை அவிழ்த்து விடாதுவிட்டிருந்தால் பண்ணையில் நின்ற எழுபத்தைந்து ஆடுகளும் அறுபத்து மூன்று மாடுகளும் அல்லவா செத்திருக்கும்.

விசாரணைக்கு வரும்படி கடிதம் வந்தது. இவன் கடிதத்தை எடுத்துக் கொண்டு சிற்றுண்டிச்சாலையில் நின்ற குமரேசனிடமும் சிவலிங்கத்திடமும் காட்டினான்.

' நாங்கள் உனக்குச் சொன்னனாங்கள் தானே. பண்ணைப் பக்கம் போகாதையெண்டு. பிறகேன் போன நீ' இருவரும் ஏசினார்கள். சம்பள உயர்வு, தொழிலாளர் உரிமை ..எனக் கதைக்கும் இவர்களுக்கு கால்நடைகளின் பசி புரியுமா?
...
' சூசைதாசன். ....'

விசாரணை அறையின் கதைவைத் திறந்து விசாரணைக் குழுவின் செயலாளப் பெண் இவனைக் கூப்பிட்டாள்;. இவன் உள்ளே போனான்;.

எந்திரவியல் பேராசிரியரும் கணித விரிவுரையாளரும் உள்ளே இருந்தனர். இவர்கள்தான் விசாரணைக் கமிட்டி உறுப்பினர்கள் போல. எந்திரங்களின் இயக்கங்களையும் கணிதச் சூ10த்திரங்களையும் கற்பிக்கும் இவர்களுக்கு கால்நடைகளின் பசி புரியுமா? அவர்களுக்கு காலை வணக்கம் கூறி முன்னால் இருந்த கதிரையில் இவன் அமர்ந்தான்.

இவனைப்; பொறுத்தவரையில் தான் செய்தது சரியென்றே இப்போதும் தெரிகின்றது. இதற்காக வேலையைவிட்டு நீக்குவதென்றால் நீக்கட்டும்.

தொலைந்து போன ஆடுகளினதும் மாடுகளினதும் பெறுமதியை இவனின் ஊழியர் சேமலாபநிதியில் இருந்து கழிக்கவும் கூடும். தன்னைக்; கள்வனென்று நிரூபிக்கத்தான் இந்த விசாரணைக் குழுவென்பது இவனுக்கு நன்கு விளங்குகின்றது.

அவர்கள் விசாரணையைத்; தொடங்கத்; தயாரானார்கள். செயலாளப் பெண் இவன் அளிக்கவிருக்கும் பதில்களை கணினியில் தட்டச்சுத் செய்ய ஆயத்தமானாள்.
 





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்