|
நெருஞ்சிமுள்...!!!
அகில்
அன்று சனிக்கிழமை. நானும் மனைவியும் வேலை
முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம். எனக்குப் பக்கத்து
சீட்டில் அமர்ந்திருந்த மனைவி களைப்பின் மிகுதியால் மெல்லக்
கண்ணயர்ந்திருந்தாள். காரின் பின் சீட்டில் அவளுடைய கைப்பை
சரிந்துகிடந்தது. வார இறுதிநாள் என்பதால் அன்று வாகன நெரிசல் அற்று
பெருந்தெரு அமைதியாக விரிந்துகிடந்தது.மேல்வானில் மெல்ல மெல்ல இருள்
படரத் தொடங்கிவிட்டிருந்தது. தீபாவளிப் பண்டிகைக்கு தீப அலங்காரம் செய்தது
போல, வீதியின் இருமருங்கும் மின்குமிழ்கள் ஒளிர்ந்து அணிசெய்தன. வெளியே
குளிர்காலநிலை என்பதால், ஹீட்டரை 'ஓன்' செய்து காருக்குள் அளவாக வெப்பத்தை
பரவவிட்டேன். இதமாக இருந்தது. பத்து நிமிட ஓட்டத்தில் கார் வீட்டை
நெருங்கிவிட்டது.
காரை வீட்டின் முன் 'பாக்' பண்ணவும், மனைவி விழித்துக் கொள்ளவும் சரியாக
இருந்தது. அலுப்பும் சலிப்புமாக காரை விட்டு இறங்கிய மனைவி, என்னைக்
கையோடு கடை அலுவலையும் முடித்துக்கொண்டு வரும்படி பணித்தாள். வார
இறுதிநாட்களில்தான் 'ப்ரஷ்ஷா'க மரக்கறியும், மச்ச அயிட்டங்களும் வாங்கலாம்.
மற்றைய நாட்களில் பழைய மிஞ்சிப்போன காய்கறிதான் கிடைக்கும். எனவே நான்
வார இறுதிநாட்களிலேயே 'சொப்பிங்'கை முடித்துக்கொள்வது வழக்கம்.
'என்னம்மா சாமான் வாங்கவேணும்.....?'; வீட்டின் கதவைத் திறந்துகொண்டு
உள்ளே நுளைய எத்தனித்த மனைவியிடம் அவசரமாகக் கேட்டேன். என் குரல்கேட்டு
சலிப்புடன் திரும்பிப் பார்த்தாள். கைப்பையைத் திறந்து அதற்குள் இருந்த
ஒரு வெற்றுப் பேப்பர் துண்டில் எதையோ வேகமாகக் கிறுக்கிவிட்டு நீட்டினாள்.
'ம்..... எத்தினை தரம் சொல்லியாச்சு' என்று கொடுப்புக்குள் சிரித்தபடி
திரும்பி நடந்தாள் மனைவி. அவள் நீட்டிய சிட்டையை வாங்கி 'பொக்கற்'றுக்குள்
திணித்துக்கொண்டேன்.
'என்ன இயந்திரத்தனமான வாழ்க்கை. வேலை....., வேலை முடிஞ்சால் வீட்டு
அலுவல்கள்...., வெளியலுவல்கள்....., பிள்ளையளின்ற பிரச்சினை.....
சனிக்கிழமை கூட வேலைக்கு போனால்தான் வீட்டில காசுப்பிரச்சினை இல்லாமல்
சீவிக்கலாம். இதுல இருந்து எப்பத்தான் ஓய்வு கிடைக்கப்போகுதோ.....'.
அலுப்புடன் மனம் நினைத்துக்கொண்டது. கூடவே 'மகன் துவாரகனுக்கு பிரெஞ்சு
வகுப்பு முடிஞ்சிருக்கும். கடையலுவலை கெதியாக முடிச்சிட்டு, அவனையும்
கூட்டிக்கொண்டு வரவேண்டும்' என்பதும் ஞாபகம் வந்தது.
கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. காரை எங்கே 'பாக்' பண்ணுவது என்பதிலேயே
என் முப்பது நிமிடங்கள் வீணானது. எதேச்சையாக ஒருவர் தனது காரை வெளியே
எடுக்க அந்த இடத்தில் எனது காருக்கு ஒரு இடம் கிடைத்தது. காரைப் பாக்
பண்ணவும் 'மிஸ் கோல்' ஒன்று வரவும் சரியாக இருந்தது.
மகன் துவாரகன் தான் தொலைபேசியில்; அழைத்தான். அன்றைக்கு ஓவியனின் அப்பாவே
வேளைக்கு வந்து தங்களை பிக்கப் பண்ணிவிட்டதாகவும், தான் அங்கே இருப்பதால்,
அங்கு வந்து அழைத்துப் போகும்படியும் கூறினான். இன்னும் அரை மணி நேரத்தில்
அவனிடம் வருவதாகக் கூறிவிட்டு அவசரமானேன்.
முன்னமேயே தெரிந்திருந்தால் மனைவியே அவனை அழைத்து வந்திருப்பாள். எனக்கு
அந்த வேலை இருந்திருக்காது.
'பாவம் பிள்ளை நான் வரும்வரையும் காத்துக்கொண்டு இருக்கப்போறானே....'
என்ற நினைவு என்னை வேகமாக இயங்க வைத்தது.
துவாரகன் இப்போது நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்.
சனிக்கிழமைகளில் நடக்கும் மாலை நேர பிரெஞ்சு வகுப்புக்கு சந்து வீட்டில்
இருக்கும் ஓவியனின் அப்பாதான் இவனையும், ஓவியனையும் கூட்டிக்கொண்டு போவார்.
வகுப்பு முடிய, இருவரையும் வீட்டுக்கு கூட்டிவரும் பொறுப்பு எனக்கு உரியது.
நானும், மனைவியும் வேலைக்குப் போய் வருவதால், மகனின் பொறுப்பை ஓவியனின்
தாயிடமே ஒப்படைத்து விட்டோம். ஓவியனின் தாயார் வேலைக்குப் போகாதது
எங்களுக்கு சௌகரியமாகப் போய்விட்டது. காலையில் துவாரகனை பாடசாலைக்கு தயார்
செய்து அவனுக்குத் தேவையான மாற்றுடைகள், உணவு வகைகள், குளிர்பானங்களோடு
அவனை ஓவியன் வீட்டில் விட்டுவிடுவோம். அவர்களை பாடசாலைக்குக் கொண்டு
செல்வது, பத்திரமாக அழைத்து வருவது என்று எல்லாவற்றையும் ஓவியனின் அம்மா
பார்த்துக்கொள்ளுவார். துவாரகன் நாங்கள் வரும்வரை ஓவியனின் தம்பி
தங்கையுடன் விளையாடிக்கொண்டு அங்கேயே இருப்பான். வேலை முடிந்ததும் நேராக
அங்கே போய் துவாரகனை அழைத்துக்கொண்டு தான் வீட்டுக்குப் போவோம். எங்களைக்
கண்டுவிட்டால் அவனுக்குப் போதும். உற்சாகம் தொற்றிக்கொள்ள என் தோளிலே
மாலையாக தூங்குவான். வாய் ஓயாமல் அன்று நடந்த பள்ளிக்கதைகளையெல்லாம்
தாயிடம் ஒப்பிப்பான்.
பொக்கற்றுக்குள் துளாவிய கைகளில் மனைவி தந்த காகிதத்துண்டு சிக்கியது.
விரித்துப் பார்த்தேன். அவள் தந்த பட்டியலில் இருந்தது மீனும்,
இறைச்சியும் தான். உண்மையைச் சொல்வதென்றால், அதற்கு பட்டியலே
தேவையில்லைதான். வேலை முடிந்து வரும்வழியில் இரண்டு, மூன்று தடவை அவள்
சொன்னதுதான். 'இன்றைக்கு மச்சம் மட்டும் வாங்கினால் காணும்.' அவள் சொன்னது
அப்போதுதான் மண்டையில் உறைத்தது. மனைவி கொடுப்புக்குள் சிரித்ததன்
காரணமும் அப்போதுதான் புரிந்தது. புன்னகை அரும்ப கடைக்குள் நுளைந்தேன்.
கடை இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முன்பக்கம் மரக்கறியோடு, மற்றைய பலசரக்குச்
சாமான்களையும் அழகாக அடுக்கி வாடிக்கையாளர்கள் இலகுவாக பொருட்களை
எடுத்துக்கொண்டு நகர்வதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருந்தது. பின்புறப்பகுதி
மீன், இறைச்சி விற்பதற்கு ஏற்றவகையில் குளிரூட்டப்பட்ட நிலையில் இருந்தது.
அதன் இரு கதவுகளில் வலப்பக்க கதவின் வழியாக உள்ளே நுழைந்து, இடப்பக்கமாக
உள்ள கதவு வழியாக வெளியேற வேண்டும். வலப்பக்கக் கதவைத் திறந்து உள்ளே
நுளைந்ததும் மீன் வாடை என்னை வரவேற்றது. நீண்ட வரிசையில் நின்றவர்களுடன்
கடைசியாக நானும் இணைந்துகொண்டேன். துவாரகனின் நினைவு என்னை
அவசரப்படுத்தினாலும், என் முறை வரும்வரை நான் பொறுமையோடு
காத்திருக்கவேண்டி இருந்தது.
'அப்பா, குயிக்கா வாங்கோ' மகன் தொலைபேசியில் சிணுங்கியது ஞாபகம் வந்தது.
'துவாரகன் அப்பா வரும்வரைக்கும், ஓவியனோட இருந்து விளையாடுங்கோ. குழப்படி
செய்யக்கூடாது. அப்பா இப்ப வந்துடுவன்' என்று சொல்லிவிட்டுத்தான் போனை கட்
பண்ணினனான்.
எவ்வளவு நேரம் சென்றாலும் ஓவியனின் தாய், துவாரகனைத் தன்ர பிள்ளையப்
பார்க்கிற மாதிரி கவனமாகத்தான் பார்ப்பா. வெளியில குளிரெண்டபடியா ஓவியனும்,
துவாரகனும் நான் வரும்வரைக்கும் கெம்பியூட்டர்ல ஏதாவது கேம் விளையாடுவீனம்.
அல்லது டீ.வியில காட்ரூன் பாப்பீனம். போகேக்க அவையளுக்கு ஏதாவது 'ஸ்வீட்'
வாங்கிக்கொண்டு போகவேணும்.
எனக்கு முன்னால் நின்ற கணவன், மனைவி இருவரும் தங்களுக்குத் தேவையான மச்சச்
சாமான்களுக்கு ஓடர் கொடுத்து விட்டுக் காத்திருந்தனர். அருகில் இருந்த
கதவைத் திறந்துகொண்டு ஒருவர் வெளியேறிக்கொண்டிருந்தார். அடுத்தது நான்தான்.
சற்று முன்னால் நகர்ந்து நின்றேன். அப்போதுதான் அது நடந்தது.
நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்த இடப்புறக் கதவின் வழியாக அவசரமாக
உள்ளே நுளைந்தாள் அந்தப் பெண்.
'அவள் என்னைக் கவனிக்கவில்லையா.....? அல்லது அன்றுதான் முதல்முதல் அந்தக்
கடைக்கு வருகிறாளா....? அவளுக்கு கடையின் நடைமுறைகள் கண்ணில்படவில்லையா....?'
என்பது எனக்குத் தெரியவில்லை.
'அவசரமா....? அசட்டையா....?' எனக்குப் புரியவில்லை.
'நான்...., எனக்குப் பின்னால் ஒருவர்...., அவருக்குப் பின்னால்.... என்று
ஒரு பத்துப் பதினைந்துபேர் வரிசையில் இவ்வளவு நேரமாக காத்திருக்க அவள்.......!!!!
'மற்றவர்களைப் போல் வரிசையில் நின்று வரவேண்டும் என்ற பொது அறிவுகூட
அவளுக்கு இல்லையா.....!!!
இடப்புறக் கதவின் வழியாக வந்தவள் எனக்கு சற்றுத்தள்ளி நின்றுகொண்டாள். தன்
கையில் வைத்திருந்த பையில் எதையோ தேடிக்கொண்டிருந்தாள். எனக்கு முன்னால்
நின்ற தம்பதிகள் அப்பால் நகர, மீன் வெட்டும் பையன் குரல் கொடுத்தான்.
'அடுத்த ஆள் ஆரு.....?' என்றபடி கண்களை என்மீதும், வந்தவள் மீதும்
படரவிட்டான் அவன்.
'ஆ.... தம்பி....!!!'
அந்தச் சொற்கள் என் தொண்டைக்குள்ளேயே சிக்கிக்கொண்டன. அந்தப் பெண் எனக்கு
முன்னால் வேகமாக நகர்ந்துவிட்டாள்.
'தம்பி, இந்த விளைமீனை எடுத்துப் போடுங்கோ. மான் இறைச்சி இருக்குதோ....'
என்றபடி அந்த மீன்வெட்டும் பையனிடம் தனது ஆர்டரை சொல்லத் தொடங்கினாள்.
என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு, தயங்கியபடி அவளது ஆர்டரை கவனிக்கத்
தொடங்கினான் அந்தப் பையன்.
அவள் செய்கையைப் பார்த்த எனக்கு கோபம் உச்சிக்குப் போனது. யாரோ முகத்தில்
ஓங்கி அறைந்தாற்போல இருந்தது.
'என்னை என்ன பைத்தியக்காரன் என்று நினைத்துவிட்டாளா....?'
என்னுள் கோபம் கொப்பளித்தது.
'எவ்வளவு நேரமாக நான் வரிசையில் நிற்கிறேன். துவாரகன் வேறு என்னைக்
காணவில்லை என்று தேடப்போகிறான்'. என்னுள் சிந்தனைகள் ஓடியது.
'வேறு வேலையில்லாமலா நான் வந்து இவ்வளவு நேரமாக இங்கே நின்றுகொண்டு
இருக்கிறேன்'.
ஆத்திரத்தில் உதடுகள் துடித்தன. இதெல்லாம் மூளையில் வந்து போக ஒரு கண
நேரம்தான் எடுத்தது.
'என்ன ஜென்மம் இவள்......!!!'
என் இரத்த நாளங்களில் சூடு பரவ அதற்கு மேல் என் கோபத்தைக் கட்டுப்படுத்த
முடியாமல், அவளை நெருங்கினேன்.
தன் வேலையை சாதூரியமாகச் செய்துமுடித்த திருப்தியுடன் அவள் மெதுவாகத்
தலையைத் திருப்பி என்னைப் பார்த்து லேசாக முறுவலித்தாள். அவளது புன்னகை
எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் என் கோபத்தை மேலும் வளர்த்து
விட்டது. உதடுகள் துடிக்க அவளைத் திட்டுவதற்காக வாயைத் திறந்தேன்.
'எப்படி மனச்சாட்சி இல்லாமல்.....' சொல்ல நினைத்தேன். முடியவில்லை.
'மனச்சாட்சி இல்லாமல்.....'
'மனச்சாட்சி இல்லாமல்.....'
'மனச்சாட்சி.....'
என் உள்நாக்கு மேலண்ணத்துடன் ஒட்டிக்கொள்ள அப்படியே சிலையானேன். நேற்று
நடந்த அந்தச் சம்பவம் பொறிதட்டினாற் போல மனதில் வந்துபோக அப்படியே
உறைந்துபோனேன்.
நேற்று காலை முதல் மனைவி ஒரே நச்சரித்துக்கொண்டிருந்தாள். அன்றைக்கு
பின்னேரம் நடக்கப் போகிற மாவீரர் தினக் கூட்டத்திற்கு மூன்று பேருமாக போய்
எங்கள் மண்ணை மீட்கப் போராடி விதையாகி வீழ்ந்த மாவீரர்களுக்கு மலர்தூவி
அஞ்சலி செலுத்த வேண்டும் என்றாள். நானும் சரியென்று சொல்லியிருந்தேன்.
வேலைத்தளத்தில் இருக்கும்போது என் கைத்தொலைபேசி அலறியது. மறுமுனையில்
அவள்தான்.
'அப்பா, துவாரகன் பள்ளிக்கூடத்தில ரெண்டு, மூன்டுதரம் சத்தியெடுத்தவனாம்.
வகுப்பு டீச்சர் போன் பண்ணினவா. நான் இங்க வேலையில லீவு போட்டுட்டு மகனைப்
போய் பிக்கப் பண்ணுறன். பிள்ளைக்கு என்னவோ தெரியேல்ல. மனம் படபடக்குது.'
என்றாள் பதற்றமாக. சில நிமிடங்கள் சிந்தனையுடன் என் வலக்கை விரல்கள்
தாடையைத் தடவின.
'ஒன்றும் பிரச்சனையிருக்காது. நான் 'கோல்டாக்சி'க்கு அடிக்கிறன்.
அப்பிடியே மகனை பிக்கப் பண்ணிக்கொண்டு வீட்ட போங்க. ஏதாவது அவசரம் என்றால்
எனக்கு போன் பண்ணுங்க' என்றேன்.
மனைவிக்கு கார் 'ட்ரைவிங்' பழக்காதது எவ்வளவு பிழை என்று இது போன்ற
சந்தர்ப்பங்களில் தான் மண்டையில் உறைக்கிறது. அவளுக்கு வேலை நான் வேலை
செய்யும் இடத்திற்கு பக்கமாக என்பதால்; வேலை முடிந்து வரும்போது அவளையும்
என் காரிலேயே ஏத்திக்கொண்டு வருவேன்;. கார் பிரச்சினை பெரிதாகத்
தெரிவதில்லை.
பின்னேரம் நான் வீட்டுக்குப் போனபோது துவாரகன் விளையாடிக்கொண்டிருந்தான்.
முகத்தில் கொஞ்சம் உற்சாகம் குறைவாகத் தெரிந்தது.
'சாப்பாடு ஒத்துவரேல்லையாக்கும்...' மகனின் சத்திக்கு மனைவி விளக்கம்
தந்;தாள்.
தாயையும், மகனையும் வீட்டில் விட்டுவிட்டு நான் மட்டும் மாவீரர் தின
நிகழ்வுக்குப் போய்வர முடிவெடுத்தேன். அரைமனதுடன் தான் மனைவி
ஒப்புக்கொண்டாள். கனடாவுக்கு வந்த பின்பும் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு
அவள் போகாமல் இருந்ததே இல்லை. அன்று மகனின் உடல் நிலையாலும், வெளியே
வீசிய கடும்குளிர் காலநிலையாலும் அவளால் என்னை மறுத்துப் பேச முடியவில்லை.
நான் தனியாகவே புறப்பட்டு விட்டேன்.
மாவீரர் நிகழ்வுகள் காலை, மாலை இருவேளையும் நடந்தது. மாலை இரண்டு
நிகழ்வுகளாக மூன்று மணிக்கு ஒரு அஞ்சலி நிகழ்வும், ஏழுமணிக்கு மற்றைய
நிகழ்வும் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
'அனேகமான சனங்கள் வேலை முடிந்து ஏழுமணிக் கூட்டத்திற்குத்தான் வருவீனம்.
சரியான கூட்டமாக இருக்கப் போகுது. குளிர்வேற' என் மனம் நினைத்துக்கொண்டது.
நாம் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் 100 மைல்களுக்கு அப்பால் உள்ள
ஓரிடத்தில்தான் மாவீரர் தின நிகழ்வுகள்; ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்தியாவிலிருந்து கூட்டத்தில் பேசுவதற்கு என்று அழைக்கப்பட்டிருந்த
சீமானை கனடிய அரசு பேச அனுமதி மறுத்து திருப்பியனுப்பிய செய்தி என்னுள்
வேதனையாய் புகைந்துகொண்டிருந்தது.
'தாய் மண்ணின் விடுதலைக்காக உயிர்நீத்த புனிதர்கள் இந்த மாவீரர்கள்.
அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த நாம் தவறவே கூடாது. தலைவனின் தலைமையில்
அணிதிரண்டு தாய் மண்ணை மீட்டெடுக்கும் போரிலே ஆகுதியானவர்கள் அவர்கள்.
அவர்களுக்கு இந்த மாவீரர் நாளில் மலர்தூவி அஞ்சலி செலுத்துவது தமிழனாய்ப்
பிறந்த ஒவ்வொருவனினதும் தலையாய கடமை'
பெருந்தெருவில் வாகன நெரிசல் அதிகமாகவே இருந்தது. பெரும்பாலான வாகனங்களில்
தமிழ் முகங்களே தெரிந்தன.
ஏழு மணிக்கு ஆரம்பமாகும் கூட்டத்திற்கு நான் பேய்ச் சேர்ந்தது அரைமணிநேரம்
பிந்தித்தான். அஞ்சலி செலுத்துவதற்காக வெளியே பெருங்கூட்டம் நின்றது.
வாகனத்தை நிறுத்துவதற்கு தரிப்பிடம் ஒன்றைக் கண்டுபிடிப்பதே சிரமமாக
இருந்தது. வந்திருந்த மக்கள் கூட்டம், எனது கணக்கின்படி சுமார்
முப்பதாயிரம் பேரைத் தாண்டியிருக்கும். மண்டபத்தின் பிரதான வாயில் வழியாக
பகுதி, பகுதியாக வரிசை முன்னகர மற்றொரு கதவின் வழியாக கூட்டம்
வெளியேறிக்கொண்டிருந்தது. வரிசை எங்கே முடிகின்றது என்பதை கண்டறிய
முடியாமல் நீண்டுகொண்டே போனது.
குளிர் வேறு உடம்பை ஊசியாய் குத்தியது. கையில் இருந்த குளிர்த் தொப்பியை
எடுத்து தலையில் அணிந்துகொண்டேன். நல்ல வேளையாக கம்பளி ஜாக்கட் 'பொக்கற்றினுள்'
கையுறையும் இருந்தது. எடுத்து அணிந்தபடி நகர்ந்தேன். அதற்குள் குளிரில்
காது விறைத்துவிட்டது. 'மப்பிளரா'ல் கழுத்தை இறுக்கி குளிர் உட்புகாதவாறு
சுற்றிவிட்டு, ஜாக்கட் 'சிப்'பை நன்றாக இழுத்துவிட்டுக்கொண்டேன்.
தொப்பியையும் இழுத்து காதுவரை மூடிக்கொண்டேன்.
என் மனம் ஏன் அன்றைக்கு அப்படிப் போனது என்று எனக்கே தெரியவில்லை. என்னைப்
பொறுத்தவரை அது பெரிய தவறுதான். குளிக்கப் போய் சேறு பூசுகின்ற செயல் அது.
அதைவிட நான் அந்தக் கூட்டத்திற்கே போகாமல் இருந்திருக்கலாம். என்னை நானே
அசிங்கமாக உணர்ந்தநாள் அது. மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு
வந்தாலும், வழிநெடுகிலும் நான் செய்த ஈனச்செயல் என் மனதை
குத்திக்கிழித்தது.
'எத்தனை வயோதிபர்கள்....., நோயாளிகள்...., குழந்தைகள்..... வரிசையில
நின்றிருந்தார்கள்? நான் ஏன் அப்படியொரு காரியம் செய்தேன்.'
தொண்டர் படையாகச் செயல்பட்ட இளைய தலைமுறையினர் மக்கள் ஒழுங்கான முறையில்
வரிசையில் செல்வதற்கு உதவிய வண்ணம் இருந்தனர். குழந்தைகளுடன்
வந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. வரிசை கொஞ்சம் வேகமாக நகர்வது
போலத் தெரிந்தது. எப்படியென்றாலும் அனுமார் வால்போல் நீண்டுகொண்டு
செல்லும் வரிசையின் கடைசி அந்தத்தில் நிற்போர் உள்ளே நுளைவதற்கு இரண்டு,
மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் எடுக்கலாம் என்று என் உள்மனம்
சொல்லிக்கொண்டது.
குறுக்காக கைகளைக் கட்டியபடி முன்வாசல் பகுதியை அண்மித்தேன். அங்கே
இருந்த திரையில், இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், ஈழவேந்தன்
உரையாற்றிக்கொண்டிருந்தார். சிறிதுநேரம் நின்று அவரது பேச்சைக்கேட்டுக்
கொண்டு நின்றேன். என்னைப் போல நிறையப் பேர் அந்த இடத்தில் நின்றுகொண்டு
இருந்தனர். இடையிடையே என் கண்கள் வரிசையில் யாராவது தெரிந்த முகங்கள்
தென்படுகின்றனவா? என்பதைக் கவனிக்கத் தவறவில்லை.
நேரம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. என்னருகில் நின்று
பேசிக்கொண்டிருந்த சிலர்; மெதுவாக நழுவி வரிசையில் புகுந்து
விட்டிருந்தனர்.
'என்ன செய்யலாம்?' என்று நானும் தாடையைச் சொறிந்தபோதுதான் என் நண்பனின்
குடும்பம் கண்ணில் பட்டது. அவர்கள் பிரதான வாயிலை
நெருங்கிக்கொண்டிருந்தார்கள். எதேச்சையாகத் திரும்பிய நண்பனின் கண்களும்
என்னை அடையாளம் கண்டு சிரித்தன.
அதுதான் சரியான தருணம் என்று என் மூளை சுட்டிக்காட்ட வேகமாக அவர்களை
நெருங்கினேன்.
'ஹாய் மச்சான்.... எப்படியடா இருக்கிறாய்?' என்றபடி அவன் கைகளைப் பற்றிக்
குலுக்கினேன். எங்கள் சம்பாசனை சுவாரஸ்யமாக, வரிசை முன்னே நகர நானும்
வரிசையுடன் சேர்ந்து நகர்ந்தேன். என்னைத் தொடர்ந்து இன்னும் இரண்டொருவரும்
இடையில் வந்து நுழைந்து கொண்டனர். நட்புடன் புன்னகைக்கும் நண்பனின்
மனைவியின் கடைவாய்ச் சிரிப்பில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது. அவளுக்கு நான்
இடையில் புகுந்தது பிடிக்கவில்லை போலும்.
'நான் என்ன செய்ய? மனுசன் இந்தக் குளிருக்க நிற்பானா?' மனம் என் செயலுக்கு
நியாயம் கற்பித்தது.
இடையில் புகுந்துவிட்ட என்னை அடையாளம் கண்டுவிட்ட ஒரு தொண்டர்படையைச்
சேர்ந்த இளைஞன் வந்து என்னை பிடித்துக்கொண்டான்.
'அண்ணெ, வரிசையில வாங்கோ, இப்பிடி இடையில நுளையவேண்டாம். பிளீஸ்...'
என்றான் என் வலக்கரத்தை பற்றியபடி.
அவமானத்தை என்னால் தாங்கமுடியவில்லை. அப்போது நான் செய்தது பிழையாகவே
எனக்குத் தோன்றவில்லை. எப்படியாவது உள்ளே நுழைந்து அஞ்சலி செலுத்திவிட்டு
வெளியேறினால் போதும் என்றிருந்தது.
முகம் கோபத்;தில் சிவக்க, 'தம்பி இவ்வளவு நேரமும் நான் வரிசையில
நின்டுதான் வாறன். உங்களுக்கு மற்ற ஆட்களத் தெரிய இல்லை. என்னைத் தான்
தெரியுதோ' என்றேன் சத்தமாக. அதற்கு மேல் அந்த இளைஞன் என்னோடு வாதிக்க
விரும்பாமல் அப்பால் நகர்ந்தான். வெற்றிப் பெருமிதத்துடன் தலையைத்
திருப்பிக்கொண்டேன்.
அப்போதுதான் பின்னால் இருந்து ஒரு பெண் குரல் ஒலித்தது.
'அண்ணெ, உங்களுக்கு மனச்சாட்சி இருக்கா? நாங்க இங்க எவ்வளவு நேரமா
வரிசையில நின்டுவாறம். ஒருக்கா பின்னுக்கு திரும்பிப் பாருங்கோ. எத்தனை
பேர் குழந்தைப் பிள்ளையளோட வந்து வரிசையில நிக்கீனம் என்டு. நீங்க இப்பிடி
செய்யுறீங்களே. உங்களுக்கெல்லாம் மனச்சாட்சி இருக்கா?.....' என்று அப்பெண்
சொல்ல சிரித்தபடி அவள் பக்கம் திரும்பினேன்.
'தங்கச்சி இவ்வளவு நேரமா நானும் வரிசையில தான்; நிண்டனான். 'வோஷ;ரூமு'க்கு
போயிட்டு இப்பத்தான் வாறன்' என்று ஒரு பொய்க்குண்டை எடுத்து வீசினேன்.
'சரி சரி. முன்னால நகருங்க..... இப்பிடிச் சொல்;லிக்கொண்டு முன்னுக்கு
வரிசையில பூந்தவை உங்களைப் போல நிறையப்பேர்' என்று அவள் முணுமுணுக்க பதில்
சொல்லமுடியாமல், அவள் சொல்வது எதுவும் காதில் விழாதவன் போல முன்வாயிலை
நெருங்கினேன்.
அன்று முழுவதும் என்னை சித்திரவதை செய்த வாசகம் அதுவாகவே இருந்தது.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டேன் என்ற ஆத்ம திருப்தி கூட என்னிடம்
இருந்து விடைபெற்றிருந்தது.
'அண்ணெ, உங்களுக்கு மனச்சாட்சி இருக்கா.....'
'அண்ணெ, உங்களுக்கு மனச்சாட்சி இருக்கா......'
அந்தக் குரல்; திரும்பத் திரும்ப காதில் ஒலித்துத் தூங்க விடாமல் செய்தது.
மனைவிக்குத் தெரிந்தாலும் அவளிடமும் வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டும்
என்பதால் அதைப் பற்றி அவளிடம் வாய் திறக்;கவில்லை.
காலை எழுந்ததும் வழமையான அவசர உலகத்திற்கு நான் தயாராகிவிட்டேன். நேற்று
நடந்தது எல்லாமே மறந்து போயிருந்தது எனக்கு.
'அண்ணெ, அடுத்த ஆள் நீங்கதானே. முன்னுக்கு வாங்கோ..'
'அண்ணெ சொல்லுங்கோ....'
'அண்ணெ என்ன யோசிக்கிறீங்க? என்ன வேணுமென்டு சொல்லுங்கோ' என்றான் மீண்டும்
கடைப்பையன் சற்று அழுத்தமான குரலில்.
அவனது அழைப்பு என்னை யதார்த்தத்திற்குக் கொண்டு வந்தது. வெளியேறும் கதவு
வழியாக உள்ளே நுழைந்த அந்தப் பெண் தனக்குரிய பொருட்களை எடுத்துக்கொண்டு
பணம் செலுத்தும் பகுதியை நோக்கி நடக்க, நான் என் வாயை அழுந்த மூடியபடி
முன்னகர்ந்தேன்.
editor@tamilauthors.com |