வாழ்ந்த மனுசன்

முனைவர் கிட்டு.முருகேசன்
 

திகாலை நாலு மணிக்கெல்லாம் ஒரே சத்தம். வீட்டுக்கு முன்னாடி ஆளுங்க கூடிட்டாங்க. சிலர் ஓடுகிறார்கள், சிலர் வாயில் விரல் வைத்துக்கொண்டு; இப்புடி ஆகிப்போச்சே என்று பேசிக்கொண்டிருந்தனர்.

அன்னக்கி அமாவாசைவேற, கொஞ்சம்கூட இருள் விலகவில்லை. அங்குமிங்குமாக நடப்பவர்களைப் பார்த்தால் முழுமையாகக் கூடத் தெரியவில்லை. ஏதோ! ஊர்ந்து செல்வதைப் போலத் தெரிந்தது.

ஊர்ப் பெரியவர் வந்து நின்னுக்கிட்டுச் சத்தம் போடுறார். யாரப்பா அங்கே? இங்கே வா! போயிட்டு முத்தையா மகனுக்குப் போனைப் போட்டு வரச் சொல்லப்பா’.

உடனே பாண்டியன் சரிங்கய்யா; எனக் கூறிவிட்டு ஓடினான். சத்தமில்லாத இடத்தில் நின்றுகொண்டு தன்னுடைய செல்போனை எடுத்துக் காதில் வைத்து ஹலோ............ ஹலோ என்று சொல்லும்போதே அவனது கண்களில் நீர் தாரைத் தரையாகக் கொட்ட ஆரம்பித்தது. தேமித்தேமி அழுதபடியே; குமரா ஓம் அப்பா செத்துப்போயிட்டாருடா! ஒடனே கிளம்பி வாடா! என்று சொல்லி முடித்தபோது, அந்த செல்போனே கண்ணீரினால் நனைந்து போய்விட்டது. இத்தனைக்கும் இவன் பக்கத்துத் தெருவச் சேர்ந்த முத்தையாவின் நண்பரோட மகன்.

முத்தையா சாதாரண விவசாயிதான். சின்ன வயசுலே இருந்தே விவசாயம் செய்றதுலப் பக்குவப்பட்டவர். தமிழனுக்கேத்தக் கருப்பான உடல் தேகத்துடன், லேசாக நரையோடிப்போன தலைமுடி, எப்போதும் புன்னகைப் பூத்துக்கிடக்கும் மொகம், யாருடனும் எளிமையாகப் பேசிப் பழகும் குணம். இவரை மரியாதக் கொறவா அந்தப் பொன்னப்பட்டியில யாருமே பேசினது கெடையாது.

ஊர் மக்கள் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். ஊர்ல யாராவது உதவி கேட்டால்; அவரால முடிஞ்ச அளவுக்குச் செய்யும் அறநெறியுடையவர். இதனாலேயே இவரை ஊர்க்காரங்க கர்ணன் என்று பட்டம் வைத்து அழைப்பார்கள். அதுவும் சரிதானே இறக்கக் குணம் உள்ளவர்களை கர்ணன் என்று சொல்வதில் தவறில்லையே! இக்குணம் படைத்தவர்கள் கொறைவுதானே உலகில் இன்று.      

முத்தையாவோடப் பொண்டாட்டி அவருக்கேத்தத் தொணை. கணவனே கண்கண்ட தெய்வம் என்பதாக நடந்துக்கிருவா. நேரத்துக்கு நேரம் சாப்பாடு செஞ்சு போடுறது. பக்கத்து டவுன்ல படிக்கிற மவனுக்குச் சோறு ஊட்டிவிட்டு, யூனிபார்ம் மாட்டிவிட்டு, ஸ்கூல் வேனுல அனுப்புறது, பிறகு தூக்குச்சட்டியில சோத்த அள்ளிப் போட்டுக்கிட்டு பொடினடையா வயலுக்குப் போயிருவா. தெனமும் சந்திராவுக்கு இந்த வேலையை முடிக்கிறதே பெரும்பாடய்ப் போயிரும்.

வயல்ல நிக்கிற முத்தையாவை அழைச்சு சாப்பாட்டைக் கொடுத்து சாப்புடச் சொல்லிட்டு, இவ ஒழவு மாட்டைப் பத்தி ஓட்ட ஆரம்பிச்சிருவா. பின்பு முத்தையா சாப்புட்டு வந்தவுடனே, அவருக்கிட்ட ஒழவை ஒப்படச்சிட்டு, வயலுக்குக் கெழக்கே இருக்கிற கடலைச் செடிகுள்ள கெடக்குற புல்லப் பிடுங்குரத்துக்காக கலக்கொட்ட எடுத்துக்கிட்டு போயிருவா.

மாலை மூன்றரை மணிக்கு மேலதான் வீடு திரும்புவார்கள். அப்போது, முத்தையா தோள்ல கலப்பை இருக்கும். இரண்டு மாடுகளையும் கையில் பிடித்துக்கொண்டு, தலையில்  காலையில கொண்டுபோன சாப்பாட்டுப் பாத்திரத்தை வைத்துக்கொண்டும், இடுப்பில் ஒரு கூடையுடனும் சந்திரா பேசிக்கொண்டே நடந்து வருவாள். இப்படி மகிழ்ச்சி ஒன்றையே அனுபவித்து வந்த குடும்பம்.

ஒரே மகன் என்பதால் பள்ளிப் படிப்பை முடித்த குமரனை, சென்னையிலுள்ள தனியார் தொழிற்நுட்பக் கல்லூரி ஒன்றில் கணினி மென்பொருள்த் துறையில் சேர்த்துப் படிக்க வச்சாங்க.

குமரனுக்குத் தான் எப்போதும் ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள்ளே இருந்தது. ஒரே மகனென்று செல்லம் கொடுத்து கேட்பதெல்லாம் வாங்கிக்கொடுத்தால் ஆடம்பரம் வராமல் என்ன செய்யும்.  

பள்ளியில் படிக்கும் போதே வீட்லேயிருந்து நிறைய காசு எடுத்துவந்து செலவு செய்வான். என்னைக் கேக்காம காசை எடுக்காதடா! என்று முத்தையா கண்டிக்கும் போதெல்லாம், சந்திரா இடைமறித்து ஒரே புள்ள அவனுக்குத்தானே எல்லாமே! ஏன் அவனை இப்புடிக் கரிச்சுக் கொட்டுரிங்க எனச் சொல்வாள். இந்த அரவணைப்பு குமரனுக்கு சப்போட்டாக இருந்தது.

கல்லூரியில் படிக்கும் போதும் அவனுக்கு அதே பழக்கம் இருந்தது. தன்னுடன் படிக்கும் மாணவர்களிடம் தன்னை பெரிய ஆபிசரோட பிள்ளை என்பதுபோலக் காட்டிக்கொள்வான்.

ஒருமுறை எட்டாயிரம் ரூபாய் பணம் கேட்டு வீட்டுக்குப் போன் பண்ணினான், உடனே சந்திரா அந்தப் பணத்தினை அவனது அக்கவுண்டில் போட்டுவிட்டாள். ஓரளவிற்கு எலுதப்படிக்கத் தெரிந்தாலும் மகன் மீது கொண்ட அன்பினால் அவனிடம் எதுவும் கேக்காமல் பணத்தை அனுப்பிவிட்டாள்.

பணம் வந்ததுமே; தண்ணியாகச் செலவு செய்தான். இவனுக்குப் பணமும் அழகும் இருந்ததால், எத்தனையோ பெண்கள் நெருங்க நினைத்தபோதும் யாரையுமே ஏடெடுத்துக்கூட பார்க்கவில்லை. இவனுக்கு மகிழ்ச்சியெல்லாம் தன் நண்பர்களோடு புகைத்து மகிழ்வது, மது அருந்துவது, பின்னர் ஊர் சுற்றித்திரிவது மட்டும்தான்.

நான்காண்டு கல்லூரிப் படிப்பு முடிந்தது. வேலைக்கு வெளியூர்களில் நாயாய் அலைஞ்சு திரிஞ்சான். சில மாதங்கள் பொன்னப்பட்டியில் வந்து தங்குவான். அப்போது அக்கம் பக்கத்து வீடுகளிலுள்ள வயதானவர்கள், இவனிடம் வந்து என்ன தம்பி வேலைக்கு எதுவும் போகலையா? என்று கேட்கும் போதெல்லாம் அடிவயிற்றில் புளியைக் கரைக்கிற மாதிரி இருக்கும்.

ஒருநாள் காலையில நாலு மணிக்கெல்லலாம் முழுச்சிக்கிட்டே படுத்திருந்தான். பலவாறு யோசிச்சான். என்ன செய்யலாம். ஒரு முடிவுக்கு வந்தான். எப்படியாவது அந்த மூன்று அரியர் பேப்பரையும் க்கிலியர் பன்னிரணும்னு நெனைச்சான்.

இப்போதுதான் அவனுக்குள் வெறி வர ஆரம்பித்தது. எங்கு வேலை கேட்டுப்போனாலும் அந்த அரியரைக் க்கிலியர் பண்ணு ... அந்த அரியரைக் க்கிலியர் பண்ணுன்னு சொன்னதுனாலதான் இந்த வெறி அவனுக்குள் வந்ததுபோலும்.

காலை எழு மணி இருக்கும் மொகத்துல சூரிய ஒளி பட்டதுனால படுக்கையிலிருந்து எழுந்திரிச்சான். அன்று முதல் போராடி அந்த மூனு பேப்பரையும் க்கிலியர் பண்ணினான். கல்லூரியிலிருந்து எல்லாச் சான்றிதழ்களையும் வாங்கினான். அமெரிக்காவிலுள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலைக்காக விண்ணப்பித்திருந்தான்.

யார் செய்த புண்ணியமோ! அவனுக்கு வேலை கிடைத்துவிட்டது. வேறு யார் செஞ்ச புண்ணியம் எல்லாம் முத்தையாதான்’.

அமெரிக்கா போவதற்கு உண்டான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. ஊர்க்காரர்கள் எல்லாம் முத்தையாவையும் சந்திராவையும் புகழ்ந்து பேசினார்கள். இந்த புகழுரைகலெல்லாம் கேட்கும் போது ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் என்ற வாசகம் மனக் கண்முன்னே வந்து போனது.

பொன்னப்பட்டி கிராமத்தில இருந்து அமெரிக்காவுல வேல பாக்குற குமரனுக்குப் பொண்ணு தர்ரதுக்கு ஏகப்பட்ட  போட்டிவேற. உள்ளூர், பக்கத்து ஊர்ல, பக்கத்து டவுன்லன்னு கீவுல நிக்கிறாங்க.

ஊர்க்குள்ள எங்கே பாத்தாலும் இதே பேச்சுதான்.

முத்தையா காதுல விழும் போதெல்லாம் பெருமை பட்டுக்குவார்.

சந்திராவுக்குச் சொல்லவா வேணும்.

* * * * *

அன்று காலை சரியாகப் பதினொரு மணி இருக்கும். வீட்டுக்குப் போன் வந்தது. சந்திராதான் அதை எடுத்தாள்.

அந்த அழைப்பில் அம்மா! அம்மா .. நான்தான் குமரன் பேசுறேன் அம்மா’.

என்னம்மா கேக்குதா?’

ம்.... சொல்லுடா தங்கம். ஏண்டா ரெண்டு நாளா போன் பண்ணவேயில்லை. ஓம் ஒடம்புக்கு ஏதும் முடியாமப் போச்சோன்னு மனசு பதறிப் போச்சுட்டா.  

எப்படி இருக்க? சாப்பாடெல்லாம் நேராநேரத்துக்குச்  சாப்புடுரியா? ஒடம்பப் பத்திரமாப் பாத்துகோய்யா; நாங்கதான் இந்த கிராமத்துல காட்டுலேயும் மேட்டுலேயும் அலஞ்சு திரிஞ்சுக்கு கெடக்குறோம்.  நீயாவது சந்தோசமா இருய்யா. தொடர்ந்து மகனுக்கிட்டப் பேசிக்கிட்டே இருந்தாள்.

முத்தையா வயல்ல நின்னுட்டு அப்போதான் வந்து வீட்டுக்குள்ள நொழைஞ்சார். அவர் வந்த சத்தம் காதுல லேசா சந்திராவுக்குக் கேட்டது. ஏங்க! இங்கே வாங்க; குமரன் போன் பேசுறான்.

அவ சொன்ன வார்த்தை காதுல விழுந்ததோ இல்லையோ? உடனே வேகமாக ஓடினார். இருக்காதா பின்னே! ஒரே மகனில்லையா பாசம் கொரஞ்சாப் போகும்.

என்னப்பா? குமரா நல்லா இருக்கியா?. எப்போதும் ஒண்ணப் பத்துன நெனப்பவே இருக்குதுப்பா. நம்ம ஊருக்கு எப்ப வருவ? ஒனக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணி பேரக்குழந்தைகள பாத்துட்டா நாங்க நிம்மதியாப் போய்ச்சேந்திருவோம் எனக் கூறிவிட்டு கண்கலங்கினார்.

ஒங்களுக்கு வேற வேலையே இல்லை. போனைக் கொடுங்க என்று சந்திரா பிடுங்கி மறுபடியும்  பேசினாள்.

ஏம்பா! குமரா ஒண்ணப் பாக்கணும் போல இருக்கு, எப்படா வருவ? இருபத்தி மூணு வயசுல போனவன், ஒண்ணப் பிரிஞ்சு இந்த ஆறேழு வருசமா ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம். ஒனக்குப் பொண்ணு கொடுக்குரத்துக்கு நீ, நான்னு போட்டி போடுறாங்க. நானும் ஓம் அப்பாவும், எதாயிருந்தாலும் எம்மகன் வரட்டும்னு சொல்லிட்டோம். தொடர்ந்து ரெண்டுபேரும் மாறிமாறி பேசிமுடித்தார்கள். கடைசியாகக் குமரன் பேசினான்.

அம்மா கவலைப் படாதீங்க நான் ஒண்ணும் சின்னப் பையன் இல்லை. எனக்கு எல்லாம் தெரியும். செளகரியமாத்தான் இருக்கேன். உங்கக்கிட்ட ஒண்ணு சொல்லணும், என்னை மன்னிச்சிருங்க.

என்னடா குமரா இப்படி பேசுற! என சந்திரா இடைமறித்துக் கேட்டாள்.

இல்லம்மா, நான் சென்னையிலப் படிக்கிறப்போ, என்கூடப் படிச்ச ஒரு பொண்ண காதலிச்சேன். அவளும் என்னை உயிருக்கு உயிரா நேசிச்சா. இப்பக்கூட அவ நா வேலைபாக்குற கம்பெனியிலதான் வேலையும் பாக்குரா.

இதைக் கேட்ட சந்திரா; ஏங்க! என்னங்க இவன் இப்புடி தலையில கள்ளத்துக்கிப் போடுறான்.

என்னடி சொல்லுற! போனைக் குட்டுன்னு முத்தையா வாங்கினார்’.

குமரா என்னடா சொன்ன! அம்மா இப்படிப் பதறிப்போய் இருக்காளே’.

ஒண்ணுமில்லப்பா. என்கூட படிச்ச ஒரு பொண்ண விரும்பினேன். அவளும் இங்கே என்கூடதான் வேல பாக்குரா. ஒரு நாளு அவளோட அப்பா, அம்மா இங்கே வந்திருந்தாங்க. அவ எங்களோட காதலைப் பத்தி அவங்கக்கிட்டா சொல்லிருக்கா, அவங்களும் சம்மதம் தெரிவிச்சதோட மட்டுமில்லாம, நாங்க ஊருக்குக் கெளம்புரத்துக்குள்ள கல்யாணத்த முட்டுச்சுட்டுப் போய்றோம்னு சொன்னதுனால; இங்கே உள்ள ஒரு சர்ஜ்ல மோதுரம் மாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவ ஒரு கிறிஸ்தவப் பொன்னுன்னு சொல்லி முடிச்சான். இதை எதிர் பார்க்கவே இல்லை அந்த ரெண்டு பேரும்.

ஏண்டா! இப்புடி பண்ணுன? ஒன்னையே நெனைச்சுக்கிட்டு கெடக்குற எங்களுக்கு, இந்த ஊரக்கூட்டி எல்லாரு கண்ணுமுன்னால ஜாம்ஜாம்னு கல்யாணம் பண்ணுறத்துக்கு கனவு கண்டுக்கிட்டு இருக்கோம். ஆனா!  இப்புடி தலையில இடி விழுந்த மாதிரிப் பேசுரியடா!

ஊருக்குள்ள இனிமே நாங்க தலைநிமிந்து நடக்கமுடியுமா? ஒனக்குத் தெரியாதா? மாதம் மாத்தி, சாதி மாத்தி கல்யாணம் பண்ணுனா; நம்ம சாதி சனம் ஒத்துக்குமா? நாளைக்கு நீயே ஊருக்கு வந்தாலும் நம்ம ஒறவுக்காரங்க கண்ணுல முழிக்க முடியுமா? நீ அவமானப் படரதப் பாத்துக்கிட்டு எங்களோட உசுறு நெலச்சு இந்தப் பூமியில வாழ்ந்திருமா?

கண்களில் நீர் அருவியாய்க் கொட்ட, கேள்விமேல கேள்வியாக் கேட்டுக்கிட்டே இருந்தார் முத்தையா. அவருக்குள்ள பயமெல்லாம், மகன் தவறு செஞ்சிட்டானேன்னு கிடையாது. இந்த ஊரும், சாதி சனமும் தவறாப் பேசுமேங்கிறதுதான்.  

* * * * *

அவரு நெனச்ச மாதிரி ஊர்ல எல்லாரும் பேச ஆரம்பிச்சிட்டாங்க. முத்தையா மகன் வெளிநாட்டுல ஒரு வெள்ளக்காரப் புள்ளையே கல்யாணம் பண்ணிட்டானாம். அவன் இனிமே ஊருக்கே வரமாட்டானாம். அப்புடி இப்புடின்னு ஊருக்குள்ள நாலுபேரு நாலு விதமா பேசத் தொடங்கிட்டாங்க.

குமரன ஒழுங்கா வளத்திருந்தா, இந்த கெதி வந்திருக்குமா? என்னதான் ஒரே மகனா இருந்தாலும் கண்டிச்சு வளக்கணும்ல; அத இந்த சந்திரா செஞ்சாள? ரொம்ப செல்லம் கொடுத்துள்ள மகன வளத்தா. அதான் அவன் இப்புடி பண்ணிட்டான். நம்ம ஊர்ல பக்குவமா வாழ்ந்த குடும்பம்,  இந்தப் பயலாள சந்தி சிருச்சு நிக்குது.

 

இதையெல்லாம் கேட்டா; அந்தப் பெரியவுங்க மனசு தாங்குமா?.

சந்திரா மனச திடப்படுத்த முடியாம, நொந்து அழுது புலம்பினாள்.

நாளாக நாளாக முத்தையாவின் உடல்நிலை மோசமாகிப் போச்சு. ஒரே! ஒரு மகன ஆசையா வளத்து; அவன்! இப்புடி பண்ணிட்டானேங்கிற கவலை, அவரைப் படுத்தப் படுக்கையாக்கிவிட்டது. சொந்தக்காரங்க வேற, ரெண்டுபேரையும் வந்து வந்து பாக்குறாங்க. ஆறுதல் சொல்லுரங்கிற பேர்ல மனச நோகடிக்கிறாங்க.

மழைத் தூறல் போட்டுக்கொண்டே இருந்தது. சந்திரா வாசல்ல கெடந்த துணிகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள்ளே வந்தாள். தொடர்ந்து மழை பெரிதாகப் பெய்யத் தொடங்கியாது.

கட்டில்லப் படுத்துக் கெடந்த  முத்தையா எழுந்து வந்து, வீட்டுக்கு உட்ப்புறமாக இருந்த திண்ணையில ஒக்காந்தார். அருகில் வந்த சந்திரா; என்னங்க? இப்ப ஒடம்புக்கு எப்புடி இருக்கு? என்று பறிவோடு கேட்டாள்.

நான் எதையும் பேசுற நெலமையிலா இல்ல, ஒடம்பெல்லாம் படபடக்குது. கண்ண வேற இருட்டிக்கிட்டே வருதுன்னு சொல்லிக்கிட்டே மரத்தூனப் புடிச்சுக்கிட்டு கண்ணில் நீர் ததும்ப மனுசன் பொலம்பிக்கிட்டே  இருந்தார். பிறகு கொஞ்சம் தண்ணிகுடு சந்திரா என்று கேட்டுவிட்டு, மறுபடியும் அந்தக் கட்டில் இருக்கும் இடம் நோக்கி நடந்தார்.

தண்ணீர் கொண்டுவந்த சந்திராவுக்கு ஒரு நிமிடம் என்ன பேசுவதென்றே தெரியல. கையில் இருந்த சொம்பு தானே கீழே விழுந்தது. உருண்டோடிய சொம்பு, கீழே விழுந்துகெடந்த முத்தையாவின் வாய்ப் பக்கத்தில் கெடந்து நீரைக் கொட்டியது.

சந்திரா சிலை போலவே அப்படியே நின்றாள். தான் பாதுகாத்து வைத்திருந்த சொம்பு; ஒருவாய்த் தண்ணி கொடுக்குது. ஆனா! இத்தனை வருசம் ஆசையா வளத்த மகன் எங்கையோ இருக்கான்  என்று நினைத்தாள். அந்த சொம்பும் இவளைப் பார்த்து கேள்வி கேட்பது போல மொகத்தக் காட்டி திரும்பி நின்றது.

அருகில் சென்றாள். ஐய்யய்யோ!........ என்ன விட்டுப் போயிட்டிங்களா! என்று அழுது துடித்தாள், அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்கல்லாம் வந்து ஒண்ணு கூடிட்டாங்க.

பக்கத்து வீட்டுல மகிழ்ச்சியா இருந்தாப் பொறாமப் படுறதும், அதே நேரத்துல துன்பப்பட்டா கூடி நின்னு வேடிக்கை பாக்குறதும் மக்களோட வழக்கமாகிப்போச்சு.

* * * * *

ஊர்ப் பெரியவர் வந்து சத்தம் போட்டார். “ஏண்டா! பாண்டியா இன்னுமாட போன் பண்ணுற?

என்னடா சொல்லுறான் அந்தப் பய! போனை இங்கக் கொண்டா?”

ஐய்யா! குமரங்கிட்டேப் பேசிட்டேங்கய்யா

அப்படியா! சரி  என்னதான் சொல்லுறான்’?.

அதுங்கய்யா.......என்று இழுத்தபடி; ஆகவேண்டியதப் பாருங்க வரமுடிஞ்சா வந்துர்றேன்னு சொல்லிப், போனைக் கட் பாண்ணிட்டாங்கய்யா.

என்னடா சொல்லுற?, இப்படியொரு புள்ளையைப் பெத்துட்டாங்களேன்னு வாயில கைய வச்சு மனம் வருந்தினார் அந்தப் பெரியவர். 

அம்மா.... அம்மா! நான் எவ்வளவு சொல்லியும் குமரன் எதுத்துப் பேசுறாம்மா. நீங்க பேசுங்க என்று பாண்டியன் போனைப் போட்டு சந்திராவிடம் கொடுத்தான்.

காற்றலைகளோடு கண்ணீரும் கடல் தாண்டிச் செல்வதுபோல, குமரா என்னும் அலறல் அமெரிக்கவுல ஒலித்தது.

குமரா ஒங்க அப்பா ம்ம...ம்மம்ம..ஐயோ.. செத்துப்போயிட்டாருடா! ஒன்னையே நெனச்சுக்கிட்டு இருந்த மனுசன். அவரு மொகத்தைக் கடைசியா ஒரு தடவையாவது வந்து பாத்துர்ரா; என்று கண்ணீரும் கம்பலையுமாகப் போனோடு அழுது புலம்பினாள்.

அம்மா! கவலைப்படாதீங்க. என் மாமனார் சென்னையிலதான் இருக்காரு, அவருக்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன். இன்னேரம் அவரு சென்னையைவிட்டு கெளம்பியிருப்பாரு. அப்பாவ அடக்கம் பண்றத்துக்கான செலவெல்லாம் அவர் பாத்துக்குவார். என்னால இப்ப வரமுடியாது என்று சொன்னான்.

ஏண்டா குமரா! ஒண்ண மார்லயும் தோள்ளேயும் தூக்கிச் சொமந்த மனுசனுக்குச் செய்யிற கைமாறு இதானடா. ஒண்ண இப்ப நெனைக்கிறப்ப ஈரக்கொலையெல்லாம் நடுங்குதுடா. என் வயித்துல பத்து மாசம் இருந்தது அவரோட உதிரம்டா, அதுவே இன்னைக்கு அவரை ஏளனம் செய்யும்போது இந்த வயித்த அறுத்து எறிந்திடலாம்னு தோணுது. போனை வையிடா நாயே...! என்று சொல்லி அழுதுத் துடித்தாள் சந்திரா.

டேய்! பாண்டியா இனி ஏண்டா லேட் பண்ணிக்கிட்டு, நல்லா வாழ்ந்த மனுசன்; அவரோட ஆத்மா சாந்தியடையும்படி ஆகவேண்டிய காரியத்தப் பாருங்கடா என்று பெரியவர் சத்தம் போட்டார்.

ஊர்ல பேர் சொல்லும்படி  வாழ்ந்த மனுசனை, அங்கிருந்த ஒரு ஆள் துக்குங்கடாப் பொணத்தை என்று சொல்லி மனதுக்குள்ளே நொந்துகொண்டார்.

வீட்டின் மூலையில் ஒரே கெடையாகக் கிடந்தாள் சந்திரா. முத்தையாவின் படத்துக்கு முன்னே விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதனை இருட்டில் இருந்தபடியே பார்த்தாள். அவளுக்குள் ஏதோ ஓர் பிரையோகம், எழுந்து வீட்டுக்குள்ளே போனாள். அங்கிருந்த குமரனின் போட்டோவை எடுத்து வந்து முத்தையாவின் படத்தோடு வைத்து, அந்த விளக்கை ரெண்டு போட்டோவுக்கும் நடுவில் வைத்து அழுது புலம்பினாள். நல்லா “வாழ்ந்த மனுசனுக்கு மகனே வாய்க்கரிசி போட்டுட்டானேங்கிற வேதனையில்”.

 

முனைவர் கிட்டு.முருகேசன்
உதவிப்பேராசிரியர்
டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்.)
காளப்பட்டி சாலை
, கோயம்புத்தூர் – 641 048
 


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்