இதயம் பேசும் மொழி

முனைவர் கிட்டு.முருகேசன்

திசையெங்கும் இருள் விலகும் நேரம். கதிரவன் வரவுக்காக காத்திருந்த பனித்துளிகள். ஒவ்வொன்றாகச் சொட்டுச் சொட்டென்று மண்ணில் வீழ்ந்தன. தொட்டவுடனேச் சிணுங்கிக் கொள்ளும் தொட்டாஞ் சிணுக்கியாய் அட்டைப் பூச்சிகள் உடலைச் சுருக்கிக் கொண்டது. அருகம் புள்ளின் அரவணைப்பில் உறங்கிய முயல் பட்டெனத் தாவிக் குதித்தோடியது. வழியெங்கும் மெத்தையென புல்வெளிகள்.  குளிர்ந்த காற்றும் இதமான மண் வாசனையும் இதயக் கதவை மெல்லத் திறந்தது. இதுதான் எனது எழில் என்று இயற்கை கர்வம் கொண்டது.

சின்னஞ்சிறு குழந்தையின் பாதச் சுவட்டையும், வள்ளிக்கொடியாய் அசைந்தாடும் கம்மலும், இந்திரன் மயங்கும் மேன்மை அழகும், இடுப்பில் ஒரு ரப்பர் குடமும், இடது கையில் சிறு குடமுமாக ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து போகையில், பார்த்த உயிர்களெல்லாம் கண் சிமிட்டாமல் உற்று நோக்கும் தேவதை முகம். இனியாவது அடங்குமா? இயற்கையின் கர்வம்.

கோயில் கோயிலா.. அலஞ்சு தவமிருந்து பிறந்த பிள்ளை. வீட்டிற்கே ஒரே புள்ள. அப்புடின? கேக்குறதுக்கு சொல்லவா... வேணும் மிகவும் செல்லமாக வளர்ந்தவள். பெற்றோர் விரல் பிடித்து படிக்கவில்லை. ஏதோ... அவர்கள் உழைப்பின் மிச்சத்தில் அரசுப் பள்ளியில்தான் படித்தாள். மேற்படிப்பு வறுமையின் உச்சத்தில் கனவாகவே தகர்ந்தது. அது ஒன்றும் கலையரசிக்குக் கவலையாகத் தெரியவில்லை. பொறுப்புணர்ந்த புள்ளைக்கு சொல்லியா கொடுக்கனும்.

வயது என்னவோ! பதினெட்டுதான். ஆனா பெரியோற்கு புத்தி சொல்லும் அளவுக்கு வாய்ப் பேச்சுக்காரி. படித்தது பன்னிரெண்டுதான் என்றாலும் எதையும் நேர்த்தியா செய்யும் பக்குவத்திற்கு முனைவர் பட்டமே கொடுத்துவிடலாம்.

பணத்தால் பெறும் கல்வி; காசுதேடும் மனதை உற்பத்தி செய்யுமே தவிர, உழைப்பின் பெருமை அறியாது; என்பதை புரிந்தவள் கலையரசி. பெற்றோர் பாசமும், அவர்களோடு இருக்கும் தருணங்களும் சொல்லிக்கொடுக்கும் பாடம்தான் எனக்கு மேற்படிப்பும் உயர்ந்த வருமானமும் என்பதை ஒவ்வொருநாளும் தன் பள்ளிப் பருவத் தோழிகளிடம் சொல்லி பெருமைப்படுவாள்.

முத்து பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது கலையரசியின் கல்வித்திறமை கண்டு வியந்து போனவன். வஞ்சகம் இல்லாத பேச்சு, படிப்பில் கவனம், ஆசிரியர்கள் இவள் மீது காட்டும் பரிவு இவையெல்லாம் கவனித்த முத்துவுக்கு ஒருவிதமான உணர்வை ஏற்படுத்தியது.

கலையரசி பன்னிரெண்டாம் வகுப்பில் ஆயிரத்து நூற்று இருபத்தைந்து மதிப்பெண் பெற்றவள். எழுநூற்று என்பத்தாறு மதிப்பெண் மட்டுமே பெற்றவன் முத்து. அப்பா ஆளுங்கட்சி கவுன்சிலர் என்பதால் வருமானத்திற்கு குறைவு இல்லை.

 பொறியியல் படிப்புக்கு அது அவசியம் தேவைதானே!.

முத்துவுக்கு மார்க்சிய கொள்கை மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. கல்லூரி காலங்களில் காரல் மார்க்ஸின் மூலதனம் விரும்பிப் படித்தான். லெனின், ஆபிரகாம் லிங்கன், சேகுவாரா, பிடல் காஸ்ட்ரோ போன்ற போராளிகளின் வாழ்க்கை வரலாற்று நூல்களை தேடித் தேடி படித்து,  ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக மாற்றிக் கொண்டான். புத்தகங்களை வாசிப்பது பின்னர், அதைப் பற்றி நண்பர்களோடு விவாதம், விமர்சனம் என கல்லூரி வாழ்க்கை நகர்ந்தன.

பொறியியல் படிப்பு முடித்துவிட்டு; தனது கடின உழைப்பின் மூலம் வங்கிப் போட்டித்தேர்வுக்குத் தயாரானான். அதில் வெற்றியும் பெற்று, வங்கியில் பணியாற்றி வருகிறான்.

 வங்கிக்குப் போவதும் பின்னர் வீட்டிற்கு வருவதுமாக முத்துவின் பணிகள் இருந்தன. முன்பு மாதிரியாக புத்தகம் வாசிக்கும்  பழக்கம் குறைந்தது.

அதிக நேர உழைப்பு அதற்கேற்ற ஊதியமின்மை போன்ற காரணங்களை முன்வைத்து, வங்கி ஊழியர்களை ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டம் ஒன்றைத் தொடங்கி அதில் வெற்றியும் பெற்றான். கல்லூரி காலத்தில் வாசித்த போராளிகளின் வாழ்க்கை பற்றிய அனுபவமே  வெற்றிக்குத் துணை நின்றிருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. 

சில நேரங்களில் அப்பாவின் போக்கு அவனை வேதனைக்கு உள்ளாக்கியது. அவரது ஊழல் நிறைந்த  அரசியல்  அவனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

தினமும் இருசக்கர மோட்டார் வாகனத்தில் வங்கிக்கு போயிட்டு வருவது அவனது  வழக்கமாக இருந்தது. ஒருநாள் சாலையோரம் கொட்டிக்கிடந்த ஜல்லிக் கற்கள் இடறி கீழே விழுந்துகிடந்தான். அந்த வழியாக வந்த கலையரசி, அவனுக்கு முதலுதவி செய்தாள்.

அந்தச் சாலையை காண்ரைக்ட் எடுத்தவர் முத்துவின் அப்பாதான்.

பிறகு அப்பாவின் மீது கோபம் வராமலா இருக்கும்.

மெதுவாக எழுந்து வீட்டிற்குச் சென்றான். படுக்கையில் கிடந்தபடியே; கலையரசியின் நினைவுகள் அவன் மனக் கண்ணெதிரே நிழலாடியது. இதயங்கள் பேசிய மொழிகளும் இருவர் கண்கள் உரையாடிய தருணங்களும் வள்ளுவன் வார்த்த குறிப்பறிதலையே நினைவூட்டியது.

கலையரசி குலதெய்வத்திடம் வேண்டிக்கொண்டாள். கோயிலைச் சுற்றி அங்கப்பிரதேட்சனம் செய்து, சூடம் ஏற்றி, இருகை கூப்பி இறைவனிடம் பணிவாக முத்துவின் உடல்நிலை குணமடைய பிராத்தனைகளை முடித்து வீடு திரும்பினாள்.

தங்கள் தலைமேல் இருக்கும் பெரும் பாரத்தை இறக்கி வைக்க நினைத்த கலையரசியின் பெற்றோர், திருமணத்துக்கான பேச்சை ஆரம்பித்தனர். இந்தச் செய்தி அவள் காதில் விழுந்தது. உடல் முழுதும் ஓடும் ரத்தம் சற்று இருக்கப் பிடித்துக் கொண்டு கெட்டியாக ஓடுவது போன்ற வலி தென்பட்டது. கடைக்கண்ணில் வழியும் நீர் காற்றில் பறந்தது.

கலையரசியின் பெற்றோர்; திருமண செலவுக்கு என்ன செய்வது என்று யோசிக்கையில், கவுன்சிலரின் நினைவு வந்தது.

கவுன்சிலரிடம் சென்று நிலைமையை எடுத்துச் சொல்லி கடனாக சில லட்சம் ரூபாயைக் கேட்டார். பக்கத்து அறையில் படுத்திருந்த முத்துவின் காதில் இந்தச் செய்தி விழுந்தது. அவன் நினைவுகள் சுக்குநூறாய் உடைந்தது. இதயத்தில் எழுந்த இதமான வீணையின் ஓசை முகாரியின் ராகத்தை எழுப்பியது.

கலையரசியோட  அப்பாவின் முகம், அவரது வார்த்தைகளில் இருந்த தத்தளிப்பு இவையனைத்தும் ஜன்னலின் ஓரம் எட்டிப் பார்த்தபடி நின்ற முத்துவின் மனதில்  வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதாய் இருந்தது. பணம் இல்லை என்று தன் அப்பா கூறியவுடன் அவரது முகத்தில் தெரிந்த கவலை இவனை கொன்று விடுவதாய் இருந்தது.

மாலை நேரம்; கதிரவன் வாங்கிய கடனுக்கா முக்காடு போட்டுக்கொண்டான். முத்துவின் வண்டி கலையரசியின் வீட்டை நோக்கிப் பயணப்பட்டது. வண்டியின் பின்புறம் சேகுவேராவின் புகப்படம் ஒட்டப்பட்டிருந்தது. அது புரட்சியின் அடையாளம்.

தனது சொந்த கணக்கில் வங்கியில் கடன் பெற்று அதனை கலையரசியின் தந்தையிடம் கொண்டுபோய்க் குடுத்தான்.

அவருக்கு ஒன்றும் புரியவில்லை. திகைத்துப் போய் நின்றார்.

ஏன்? தம்பி அப்பா ஏதாவது சொல்லப்போராரு’.

அதெல்லாம் ஒன்னுமில்லை. இதைப் பிடிங்கய்யா என்று கையில் திணித்தான்.

அருகில் கலையரசி தண்ணீர் குடத்துடன் நின்று கொண்டிருந்தாள். அவளது கண்ணில் ஒரு வரவேற்பைத் தவிர்த்துவிட்ட ஏக்கம். ஒன்றும் பேசவில்லை. அப்படியே நின்றாள்.

பணத்தை கொடுத்த முத்து. “கலைக்கு மாப்பிள்ளை யாருங்கய்யா?” என மென்மையாகக் கேட்டான்.

அவளுடைய தாய் மாமன்தான் தம்பி;  அதாவது…. அவ அம்மாவோட  தம்பி! என்று சொன்னவுடன் இதயம் வெறுமை சுமக்க; சரிங்கய்யா நான் வர்றேன் எனப் புறப்பட்டான். இதய வீணை இசைபாடும் சப்தம் சாந்தமானது. முத்துவின் முரண்பட்ட நடை கலையரசியின் கண்களைக் குளமாக்கியது. கலையரசியின் கண்கள் கலங்கின, கீழே விழப்போன கண்ணீரை முந்தானையில் துடைத்துக் கொண்டாள்.

தன்னந்தனியே பேசிய மொழிக்கு அர்த்தம் புரியாமல் இருள் சூழ்ந்தது. விளக்கின் துணையுடன் கலையரசி வாசலுக்கு வந்தாள். ஒளியில் அப்பாவின் முகம் பூரிப்பில் இருந்தது கண்டு மகிழ்ந்தாள்.

உருவமில்லாத மொழிக்கு உருவம் கொடுக்க மனம் நாட்டியதை; எவரும் அறியாத தருணம், இதயங்கள் பேசிய மொழியாகவே நின்றுவிட்டது.

அவளது வாழ்க்கைச் சக்கரமும் சுழலத்தான் செய்தன.


முனைவர் கிட்டு.முருகேசன்
உதவிப்பேராசிரியர்
டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
காளப்பட்டி சாலை, கோயம்புத்தூர் – 641 048
அலைபேசி : 9751809470, 8072794623
மின்னஞ்சல் :
muruganthirukkural@gmail.com


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்