மனிதம்
கதைப்பிரியன்
வேலை முடிந்து
வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாள் வதனி. அவள் ஸ்கூட்டி புளுதியைக்
கிளப்பிக்கொண்டு சந்தில் நுளைந்தபோது எதிரே தேவி அன்ரி
வந்துகொண்டிருந்தாள். ஒரு கையில் மரக்கறிக் கூடையையும், மறுகையில்
தண்ணீர் கானையும் தூக்கியபடி வேர்க்க விறுவிறுக்க நடந்து வந்த தேவி
அன்ரி வதனியைக் கண்டதும் தன் வேகத்தைக் குறைத்தாள். சின்னச் சிரிப்புடன்
தன் ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்திவிட்டு தேவி அன்ரியுடன் பேசத் தொடங்கினாள்
வதனி.
'அன்ரி எப்பிடி இருக்கிறீங்கள்?'
'ஏதோ இருக்கிறன் பிள்ள' அதிருப்தியாய் பதிலளித்தாள் தேவியன்ரி. தெருவின்
ஓரமாய்க் கிடந்த குற்றியின் மீது தன் கைப்பாரத்தை இறக்கி வைத்துவிட்டு,
கன்றிவிட்ட தன் உள்ளங்கைகளை தேய்த்துக்கொண்டாள்.
'முகுந்தன் எங்க? வீட்டிலயா அன்ரி?'
'இல்லையம்மா. அவன் வேலைக்குப் போய்ட்டான். இப்பதான் அவன்ட சாப்பாட்டை
பியோனிட்ட குடுத்திட்டு, அப்பிடியே கையோட இந்தச் சாமான்களையும்
வாங்கிக்கொண்டு வாறன்' என்ற தேவியன்ரி, தொடர்ந்தாள்.
'அதுசரி. கலியாணத்துக்கு இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு. கல்யாணப்
பொண்ணு இப்பிடி வேகாத வெய்யில்ல வேலைவேலையென்டு திரியலாமா?'
சிரிப்பை பதிலாக உதிர்த்தாள் வதனி.
'முகுந்தனுக்கும்; கல்யாணம் பேசுறன். ஒரு இடமும் வந்து கை கூடுதில்ல'
பேச்சுவாக்கில் தன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினாள் தேவியன்ரி.
உள்ளிருந்து வெளிப்பட்ட பெருமூச்சில் அவள் மார்புகள் விம்மித் தணிந்தன.
'முகுந்தனுக்கு ஏற்ற பொம்பிளை எங்கயோ ஒரு இடத்தில இருக்கத்தானே போறாள்.
எல்லாம் நல்லபடியா நடக்கும் அன்ரி. நீங்க கவலைப்படாதேங்கோ'. தேவியன்ரியை
சமாதானப்படுத்தினாள் வதனி.
வதனியுடன் சிறிது நேரம் பேசிவிட்டு, தன் பைகளைத் தூக்கினாள் தேவியன்ரி.
'ஒரு நிமிஷம் அன்ரி' என்ற வதனி தன் ஸ்கூட்டியை நோக்கி நடந்தாள். அதில்
மாட்டியிருந்த பையைத் திறந்து அடுக்கியிருந்த கவர்களின் மத்தியில்
முகுந்தன் என்று பெயரிடப்பட்ட கவரை எடுத்து தேவியன்ரியிடம் நீட்டினாள்.
'வெடிங் இன்விடேசன் குடுக்கிறதுக்காக நேற்று உங்கட வீட்டுப்பக்கம்
வந்தனான் அன்ரி. வீடு பூட்டியிருந்துது. அதுதான்...... றோட்டில
வச்சுத்தான் தாறன். குறை நினைக்காதேங்கோ அன்ரி'
'சீச்சீ எனக்குத் தெரியாதா என்ன. சுமதியும்; வகுப்புக்குப் போயிருப்பாள்.
முகுந்தனும் வேலைக்குப் போயிருப்பான். வீட்டில ஒருத்தரும் இருந்திருக்க
மாட்டீனம். அது பிரச்சினையில்லப் பிள்ள. இது வாத்தியார் வீட்டுக்
கல்யாணம். நீ சொல்லாவிட்டாலும் நாங்க குடும்பத்தோட வந்து முன்னுக்கு
நின்று இந்தக் கலியாணத்தை நடத்திவைப்பம். நீ ஒன்றுக்கும் யோசிக்காத
பிள்ளை' என்ற தேவியின் கண்கள் மகிழ்ச்சியில் பனித்தன. அவளிடமிருந்து
விடைபெற்றுக்கொண்டு தன் ஸ்கூட்டியை ஸ்டாட் செய்தாள் வதனி.
ஸ்கூட்டி முன்நோக்கிச் செல்ல அவள் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.
முகுந்தனும் வதனியும் ஒரே கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். முகுந்தன்
படிப்பிலும், கால்பந்து விளையாடுவதிலும் கெட்டிக்காரன். மற்றைய
கல்லூரிகளுடன் நடக்கும் கால்பந்து போட்டிகளில் தன் அணிக்கு பெரும்
வெற்றிகளை அள்ளிக் குவித்தவன் அவன். நல்ல உயரம். சிவந்த மாநிறம்.
சுருண்டு அடர்ந்த முடி. எப்போதும் உதடுகளில் புன்முறுவல் என்று ஒரு
சினிமாக் கதாநாயகனைப் போலவே கல்லூரியில் பவனிவந்தான்;.
படிப்பு முடிந்த கையோடு வதனிக்கு ஒரு தனியார் வங்கியில் நல்ல வேலை
கிடைத்தது. அதிக மதிப்பெண்களை வாங்கி மாகாணத்திலேயே முதன்மை மாணவனாகத்
தெரிவான முகுந்தனுக்கு அவுஸ்திரேலியா சென்று படிப்பதற்கான புலமைப்
பரிசில் ஒன்றுக்கு பல்கலைக்கழகத்திலிருந்து அழைப்பு வந்திருந்தது.
முகுந்தனுக்கோ தாய் நாட்டின் மீது அப்படியொரு பக்தி. தான் பிறந்த
மண்ணுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே அவனது இலட்சியமாக இருந்தது.
பிஞ்சும் பூவுமாய் உதிரும் உயிர்களைக் காணும்போதெல்லாம் அவன் இரத்தம்
கொதித்தது. தாய் மண்ணைச் சுரண்டி, அநியாயமாக மக்களைக் கொன்றுகுவிக்கும்
அடாவடித்தனத்தை அடக்க நினைத்தான். அதற்காகவே களம் புகுந்து தன்
இன்னுயிரைத் தியாகம் செய்யவும் துணிந்தான்.
வதனிக்கு வீடு வந்ததே தெரியவில்லை. உறவினர்கள், நண்பர்கள் என்று
திருமணவீடு களைகட்டிக்கொண்டிருந்தது. அதன் பிறகு வதனிக்கு
மூச்சுவிடக்கூட நேரம் இருக்கவில்லை. நண்பிகளின் கேலிப்பேச்சும், திருமண
வாழ்வின் இனிய நினைவுகளும் அவளைச் சூழ்ந்துகொண்டன.
அன்று பிரியாவுக்குத் திருமணம். மணமகன் மேடையில் கம்பீரமாக
அமர்ந்திருக்க, ஐயர் மந்திரங்களை உச்சரித்தபடி ஓமகுண்டத்தில் நெய்யைத்
தொட்டு இட்டுக்கொண்டிருந்தார். மணமகனின் தந்தை அடிக்கடி தன் கண்களால்
சுந்தரம்பிள்ளை வாத்தியாரை ஏதோ எச்சரிக்கை செய்துகொண்டிருந்தார்.
மணப்பெண் அறையில் பிரியாவுக்கு அப்போதுதான் அலங்காரம் நடந்து
முடிந்திருந்தது. காலை முதல் வெறும் வயிற்றுடன் இருந்த மணமகளுக்கு அவள்
தோழி வசந்தி கண்ணாடிக் குவளையில் கொஞ்சம் பழச்சாறு கொடுத்தாள்.
'இதையாவது குடிச்சால்தான் மாப்பிள்ளைக்குப் பக்கத்தில தைரியமா
உட்கார்ந்திருக்க முடியும். இல்லையென்டால் மாப்பிள்ளை உன்னை அணைச்சு
வச்சுத்தான் தாலி கட்ட வேண்டியிருக்கும்.' தன் கண்களைச் சிமிட்டியபடி
வசந்தி தோழியை கிண்டல் செய்தாள். வதனி கன்னம் சிவக்கத் தலை குனிந்தாள்.
'முகூர்த்த நேரம் முடியப் போகுது, பெண்ணைக் கூட்டி வாங்க'
மணமேடையிலிருந்து ஐயர் குரல் கொடுக்க, குடித்தது பாதி குடிக்காதது
பாதியாக பழச்சாற்றை உறிஞ்சி விட்டு, கண்ணாடிக் குவளையை தோழியின் கைகளில்
கொடுத்துவிட்டு மீண்டும் தன்னை கண்ணாடியில் பார்த்து சரி செய்துகொண்டாள்
வதனி. திடீரென்று பக்கத்து அறையில் கேட்ட சலசலப்பு அவள் கவனத்தைத்
திருப்பியது. அப்பா சுந்தரம்பிள்ளை வாத்தியாரின் குரல் தீனமாய் ஒலிக்க
தன் காதுகளை கூர்மையாக்கினாள். இப்போது மாப்பிள்ளையின் தந்தையின்; குரல்
சற்று அதிகாரமாகவே ஒலித்தது.
'தாலி கட்டுறதுக்கு முதல் பேச்சுப்படி தர வேண்டிய இருபது லட்சத்தையும்
கொடுத்துடுங்க. அதுக்குப் பிறகு என்ர பிள்ளை உங்கட மகளின்ட கழுத்துல
தாலியக் கட்டுவான்'
'மன்னிக்கனும் சம்மந்தி. பணம் கொண்டு வந்து தாறன் என்டு சொன்ன நண்பரை
இன்னும் காணயில்ல. இருபது லட்சத்துக்கு இன்னும் ஒரு மூன்று லட்சம் போல
குறையுது. எப்பிடியும் அவர் வந்துடுவார். அவர் நம்பிக்கையானவர்.
வந்ததும் மிச்சப் பணத்தை தந்துடுறன். இப்ப நடக்கவேண்டிய காரியத்தை
கவனிக்கலாமே' பவ்வியமாகப் பேசினார் வாத்தியார்.
'அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. பணம் கிடைச்சால் தான் கலியாணம்
நடக்கும்.' என்றார் விறைப்பாக.
சுந்தரம்பிள்ளை வாத்தியார் சற்று நேரம் கைகளைப் பிசைந்தபடி சம்மந்தியின்
கல்லாய் இறுகிப் போயிருந்த முகத்தைப் பார்த்;தார். அந்தக் கல்லில்
எந்தக் கசிவையும் காணாமல் சோர்வுடன் அறையை விட்டு வெளியே வந்தார்.
தெருமுனை வரை சென்று திரும்பினார். நண்பர்; வரும் அறிகுறியே
தென்படவில்லை. நண்பரைச் சென்று அழைத்துவர உடனே ஆள் அனுப்பினார்.
கலியாணக்களை கட்டிய மண்டபம் சற்று நேரத்தில் நிசப்தம் ஆனது. தவில்
நாதஸ்வரக்காரர்கள் தமது வாசிப்பை நிறுத்தி விட்டு தம்மை
ஆசுவாசப்படுத்திக்கொண்டனர். மணமக்களை வாழ்த்த வந்திருந்த உறவினர்கள்
தமக்குத் தெரிந்த வம்பு தும்புகளை எடுத்து விடத் தொடங்கினர். சிலர்
மாப்பிள்ளை வீட்டாருக்குச் சார்பாகப் பேசினர். சிலர் சுந்தரம்பிள்ளை
வாத்தியாரின் நாணயத்தைப் பற்றி வாதாடினர். நேரம் போய்க் கொண்டிருக்க
மாப்பிள்ளை எழுந்து தன் அறைக்குள் சென்று விட்டார்.
வதனியால் அவமானத்தைத் தாங்கமுடியவில்லை. அவளது உற்சாகம் எல்லாம் அடங்கி,
கண்களின் ஓரம் கண்ணீர் கசியத் தொடங்கியது. வசந்தி அவளது கண்களைத்
துடைத்து, தன் தோளோடு அணைத்துக்கொண்டாள்.
வெறுங்கையுடன் சுந்தரம் வாத்தியார் வருவதைக் கண்டதும் மாப்பிள்ளையின்
தந்தை விறுவிறுவென்று தங்கள் அறையை நோக்கி நடந்தார். ஏதோ விபரீதம்
நடக்கப் போவதை அவரது நடையின் வேகம் காட்ட, சுந்தரம் வாத்தியார்
அச்சத்துடன் அவரைப் பின்தொடரந்;தார். மாப்பிள்ளை தந்தையின் முகத்தைப்
பார்த்ததும் ஏதோ விபரீதம் என்பதைப் புரிந்துகொண்டவனாக மேடையை விட்டு
எழுந்து தந்தையைத் தொடர்ந்தான்.
'மகன் இந்தக் கலியாணம் நடக்காது. மாலையைக் கழட்டி வச்சுட்டு வா. இதுக்கு
மேலயும் காத்திருக்க ஏலாது. நல்ல ஏமாத்துக்காரர் தான். பேச்சு மாறுற
ஆக்களின்ட சம்மந்தம் எங்களுக்கு வேண்டாம்' மாப்பிள்ளையிடம் அவர் அப்பா
சொல்வதையெல்லாம் பக்கத்து அறையில் இருந்து வதனி கேட்டுக்கொண்டிருந்தாள்.
அவள் கண்கள் மீண்டும் ஆறாகப் பெருகத் தொடங்கின.
'ஐயோ அப்பிடி சொல்லாதீங்க. பணம் கொண்டு வந்து தாரதாகச் சொன்னவருக்கு
என்ன பிரச்சினையோ தெரிய இல்ல. அவர் இப்பிடிச் செய்கிற ஆள் இல்ல. நீங்க
என்னை நம்புங்க சம்மந்தி. கலியாணம் முடிஞ்ச கையோட நான் வேற இடத்துல
பணத்துக்கு ஏற்பாடு பண்ணுறன். எனக்கு இருக்கிறது ஒரே மகள். நான்
அவளுக்குச் செய்யாமல் ஆருக்குச் செய்யப்போறன்.' தளதளத்தது
சுந்தரம்பிள்ளை வாத்தியாரின் குரல்.
'இல்ல இல்ல. நாங்க உந்தப் பேச்ச நம்பத்தயார் இல்ல. வாத்தியார் குடும்பம்
நல்ல குடும்பம் என்று நம்பித்தான் வந்தனாங்கள். நீங்கள் பேச்சு
மாறுறியள். நான் காசு விசயத்தில எப்பவுமே கராராகத் தான் இருப்பன்.
உந்தக் கதையெல்லாம் சொல்லி என்னை ஏமாத்த ஏலாது. தம்பி என்ன
பார்த்துக்கொண்டு இருக்கிறாய். வா' மகனின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு
அறையை விட்டு வெளியே வர முற்பட்டார் சம்மந்தியார்.
தந்தையின் பேச்சைக் கேட்டு நடப்பதா? அல்லது வதனியின் தந்தைக்கு இரக்கம்
காட்டுவதா என்று புரியாமல் இரண்டும் கெட்டானாகத் தடுமாறியபடி மாப்பிள்ளை
தன் தந்தையின் இழுப்புக்குப் பின்னால் போக, சுந்தரம்பிள்ளை வாத்தியார்
மாப்பிள்ளையின் கைகளைப் பற்றிக்கொண்டு கெஞ்சத் தொடங்கினார்.
'போகாதீங்க மாப்பிள்ளை. உங்கட காலப் பிடிச்சிருக்கிற மாதிரி
நினைச்சுக்கொண்டு கேட்கிறன். தயவு செய்து போகாதீங்க.' மகளின் திருமணம்
இத்தோடு நின்றுபோய் விடுமே என்று கண்ணீர் விடத் தொடங்கிய சுந்தரம்பிள்ளை
வாத்தியாரின் மூலையில் திடீரென்று அந்த யோசனை உதித்தது.
'வேணும் என்றால் இப்பவே எங்கட வீட்டுப் பத்திரத்தை உங்கட கையில
குடுத்திடுறன்.'
அதன் பின் அந்த அறையில் அமைதி நிலவியது. பக்கத்து அறையில் சுவரோடு
சுவராக நின்று அத்தனையையும் கேட்டுக்கொண்டிருந்தாள் வதனி. ஏதோ தன்னுள்
நினைத்துக்கொண்டவளாக தன் தோழிகளிடம் 'ஒரு நிமிடத்தில வந்திடுறன்' என்று
சொல்லிவிட்டு உள்ளறையை நோக்கி நடந்தாள். அவளுடன் கூட நடந்த வசந்தியிடம்
முகுந்தனை தன்னிடம் அழைத்துவருமாறு கூறிவிட்டு அவனுக்காகக்
காத்திருந்தாள்.
மணமகன் அறையில் நடந்ததையெல்லாம் வதனி சொல்லச் சொல்ல கோபமானான் முகுந்தன்.
'ஒரு பெண்ணை வச்சு காப்பாத்துறதுக்கு நல்ல மனுசனாக இருந்தால் அதுவே
காணும். சும்மா வாற காசும், சொத்தும் எவ்வளவு காலத்துக்கு சாப்பாடு
போடும்' ஆத்திரமாய் வெளிவந்தன அவன் வார்த்தைகள். வதனியின் உதட்டோரம்
சிறு புன்னகை பிறந்தது.
'அதைத்தான் நானும் சொல்லுறன். எனக்கு கணவனாக வருகிற தகுதி உங்களுக்கு
இருக்கு. நீங்க என்ன சொல்லுறீங்க. என்னை கலியாணம் செய்ய உங்களுக்குச்
சம்மதமா?' வதனியின் வார்த்தையில் அதிர்ந்துபோனார்கள் வசந்தியும்,
முகுந்தனும்.
'நீ என்ன கேட்கிறாய் வதனி. யோசிச்சுத்தான் கதைக்கிறீயா? இல்லையென்றால்
என்னை கிண்டல் பண்ணுறியா?' தடுமாறினான் முகுந்தன்.
'நீங்க என்னை நல்லபடியாக வச்சுக் காப்பாத்துவீங்க என்ற நம்பிக்கை எனக்கு
இருக்கு. ஒரு பணத்தாசை பிடிச்சவனை கலியாணம் செய்யுறதை விட உங்களைப் போல
ஒரு நல்ல மனுசனை கலியாணம் கட்டுறதைத்தான் நானும் விரும்புறன். நாங்க
படிக்கிற காலத்தில ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு கொண்டு, ஒருத்தருக்கு
ஒருத்தர் விட்டுக்கொடுத்து நல்ல நண்பர்களாக இருந்த அந்தக் காலம்
உங்களுக்கு நினைவிருக்கும். நாங்க நல்ல மனமொத்த தம்பதிகளாக வாழுவம்
என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. பணவெறி பிடிச்ச அவங்களுக்கு நல்ல பாடம்
புகட்ட வேணும்'
'நட்பு வேற. வாழ்க்கை வேற. நீ சொல்லுறது சாத்தியப்படாது.'
'அந்த ஆள் மேல எனக்கு நம்பிக்கையில்ல. அந்த ஆளோட வாழ இனி நான் தயாராக
இல்ல' வதனியின் குரலில் ஒரு உறுதி தெரிந்தது.
'கொஞ்சம் நிதானமாக யோசி வதனி' தொடர்ந்து வாதாட முயன்ற முகுந்தனை
இடைமறித்தாள் வதனி.
'எனக்கு நேரமாகுது. நான் இதைப் பற்றி நல்லா யோசிச்சுத்தான் இந்த
முடிவுக்கு வந்திருக்கிறன். நீங்க படிப்பு முடிஞ்ச கையோட உங்கட
இலட்சியத்துக்காக போராடப் புறப்பட்டுட்டீங்க. எனக்கு கலியாணம்
நிச்சயமாகின பிறகுதான் திரும்பவும் உங்களப் பார்க்க முடிஞ்சுது. அதுவும்
யுத்தமுனையில் ஏற்பட்ட காயத்தோட. அந்த இழப்பையும் இலகுவாக ஏற்றுக்கொண்டு,
பழைய முகுந்தனாக திரும்பவும் ஊருக்காகவும், நாட்டுக்காகவும்
உழைக்கிறீங்க. உங்களுக்கு இருக்கிற தன்னம்பிக்கையில பாதிகூட அந்த
மாப்பிள்ளைக்கு இருக்குமா என்கிறது சந்தேகம்தான்' என்ற வதனி சற்று நேர
அமைதிக்குப் பிறகு மீண்டும் பேசத் தொடங்கினாள்.
'நான் என்ர முடிவைச் சொல்லிப்போட்டன். எனக்கு உங்களில நம்பிக்கை
இருக்குது. உங்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தால் மேடையில உட்கார
ரெடியாகுங்க' என்று விட்டு வசந்தியை இழுத்துக்கொண்டு நடக்கத்
தொடங்கினாள். அறை வாசலில் நின்ற தேவியன்ரி மகிழ்ச்சியில் பனித்திருந்த
தன் கண்களைத் துடைத்துக்கொண்டு வதனியை நன்றியுடன் பார்த்தாள். அவளது
கால்களில் விழுந்து நமஸ்கரித்துவிட்டு, சிலையாய் நிற்கும் முகுந்தனை
மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு அப்பால் நடந்தாள்.
மணமகள் அறையில் வதனி தனது முகத்தை சீர்படுத்திக்கொண்டிருந்தாள்.
மீண்டும் ஐயர் 'பெண்ணைச் சீக்கிரம் கூட்டிக்கொண்டு வாங்க' என்று குரல்
கொடுக்க, தோழிகள் புடைசூழ மேடையை நோக்கி நடந்தாள் வதனி.
மணமேடையில் மாப்பிளை மிடுக்காய் அமர்ந்திருந்தார். அவன் கண்கள் ஆவலுடன்
மணமகளை வரவேற்றன.
குனிந்த தலை நிமிராமல் மேடையை நெருங்கினாள் வதனி. அவள் கண்கள் ஒருமுறை
சுழன்று முகுந்தன் மீது நிலைத்தது. அவனுடைய முகத்தில் பாதி விருப்பமும்,
மறுபாதி விருப்பமின்மையுமாக குழப்பத்தின் ரேகைகள் படிந்திருந்தன. மகனின்
முதுகை வருடிக் கொடுத்தபடி தேவியன்ரி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள்.
முகுந்தனுக்குப் பக்கத்தில் நின்றிருந்த அவனது தங்கை சுமதி
நம்பிக்கையாய்; வதனியுடன் கண்களால் பேசினாள்.
மணமகனுக்குப் பக்கத்தில் நாணிக்கோணி உட்கார வேண்டிய வதனி சட்டென்று தன்
கழுத்தில் அணிந்திருந்த மாலையைக் கழற்றினாள். அவள் முகத்தில் நாணத்தின்
ரேகைகள் துடைக்கப்பட்டு, கோபச்சிவப்பு கொப்பளித்துக்கொண்டிருந்தது.
'எழுந்திருங்க. இந்தக் கலியாணம் நடக்காது. பணத்தாசை பிடிச்ச உங்களோட
என்னால வாழமுடியாது.' வதனியிடமிருந்து வார்த்தைகள் நிதானமாக
வெளிப்பட்டன. திடுக்குற்ற மாப்பிள்ளை வதனியை ஆச்சரியாய் பார்த்தபடி
எழுந்தான்.
'அப்பா எனக்காக உங்கட காலில விழுந்தபோது கொஞ்சம் கூட இரங்கம் காட்டாத
நீங்க, எங்கட வீட்டுக்கு ஆசைப்பட்டு என்னை கல்யாணம் பண்ண
சம்மதிச்சிருக்கிறீங்க. நீங்கள் எல்லாம் ஒரு மனுஷன்;. உங்களோட வாழப்போற
பொம்பிள எப்பிடி இருக்க வேணும் எங்கிறது முக்கியமில்லை. பணம் தான்
உங்களுக்கு முக்கியம். அப்பிடித்தானே?' வதனி பொரிந்து தள்ள அவமானத்துடன்
கழுத்தில் இருந்த மாலையைக் கழட்டினான் மாப்பிள்ளை. சிங்கம் போல்
சிலிர்த்துக்கொண்டு கூச்சல் போட்டார் மாப்பிள்ளையின் தந்தை.
'வதனி என்னம்மா இதெல்லாம்,?' எல்லாம் கைகூடி வரும் நேரம் வதனியின்
பேச்சில் குழம்பிப் போனார் சுந்தரம்பிள்ளை வாத்தியார்.
'அப்பா மாப்பிள்ளை அறையில் நடந்ததை எல்லாம் நான் கேட்டுக்கொண்டுதான்
இருந்தேன். இவர் எனக்கு வேண்டாம் அப்பா.' தன் கைகளைக் கூப்பியபடி
தந்தையிடம் கெஞ்சினாள் வதனி.
'பாத்தியா கலியாணமும் அதுவுமா அவள் போடுற கூச்சல. சரியான திமிர்
பிடிச்சவள் போல இருக்கு. ஏதோ எங்கட நல்ல நேரம் நாங்க தப்பிச்சோம். இவள்
என்ன கலியாணத்தை நிறுத்துறது. நான் சொல்லுறன் இனி இந்தக் கலியாணம்
நடக்காது.' துண்டை உதறியபடி முழங்கினார் மாப்பிள்ளையின் தந்தை.
'இன்னும் என்ன முளிஞ்சுகொண்டு நிக்கிறாய். வா. உன்னைக் கலியாணம் பண்ண
ஆயிரம் பொம்பிளை கிடைப்பா. இவளுக்கு எப்பிடி கல்யாணம் நடக்குதென்டு
பார்க்கிறன்' என்றபடி தன் குடும்பத்துடன் வெளியேறினார். திருமணத்துக்கு
வந்த உறவினர்கள் மத்தியில் சிறு சலசலப்பு எழுந்தது.
'என்னம்மா இதெல்லாம்' என்றபடி ஏக்கத்துடன் மகளின் முகத்தை ஏறிட்டார்
சுந்தரம்பிள்ளை வாத்தியார்.
'மணமேடை வரை வந்து கலியாணம் நிண்டு போன உனக்கு இனி நான் எப்பிடி வேற
மாப்பிள்ளை தேடப் போறன்' என்ற அவரது வார்த்தைகளில் நடுக்கம் தெரிந்தது.
'அப்பா கவலைப்படாதீங்க. எனக்கு கலியாணம் நின்டுபோகயில்ல. நீங்க குறிச்ச
முகூர்த்தத்திலயே எல்லாம் நல்லபடியா நடக்கப்போகுது. ஆனால் நீங்க
பார்த்த மாம்பிள்ளையைவிட நல்ல ஒரு மனிதர் எனக்கு கணவராக வரப்போரார்';
என்றாள் வதனி. ஒன்றும் புரியாதவராய் சுந்தரம்பிள்ளை வாத்தியார் மகளின்
பார்வை சென்ற திக்கை நோக்கினார்.
கலியாணத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் ஆச்சரியமாய்
பார்த்துக்கொண்டிருக்க, கூட்டத்தை விளக்கியபடி தனது பொய்கால் பூட்டிய
வலதுகாலை முன்னே எடுத்து வைத்து மாப்பிள்ளைக் கோலத்தில் வதனியின்
அருகில் வந்துநின்றான் முகுந்தன்.
முற்றும்.
|