நின்னைச் சில வரங்கள் கேட்பேன்.

பாரதி, ஜேர்மனி


                            எந்தன் மனையும் மண்ணும் மகவும்
                                      எல்லாம் தொலைத்து ஏதிலியாகி
                           எந்தக் காட்டில் எரிந்தபோதும் ....
                                      அழிந்து போமோ? அத்தனை துயரமும்.
                           அனலில் பொங்கும் உலையாய் மனது.               
                                      அருவி நீரிலும் அணையா நெருப்பாய்.
                           மரணம் என்பது உடலுக்கு மட்டும்.
                                       என் மனசும் உணர்வும் மண்ணகம் எங்குமாய்.

'அம்மா அம்மா' என் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டபடி காதோரம் கிசுகிசுப்பாய் மீண்டும் 'அம்மா அம்மா' என்ற அழைப்பு. இது..... இது..... என் சின்னமகளின் செல்லச் சிணுங்கல் அல்லவா? 'என் செல்வமே'. நான் அழைப்பது எனக்கே கேட்கவில்லையே? ஏன்? ஏன்? என் குரல் எழும்பவில்லை. என் கண்மணியைப் பார்க்கும் துடிப்புடன் கண்களை விழித்துப்பார்க்க முனைகிறேன். ஜயோ கடவுளே இதென்ன கொடுமை. ஏன் என் கண்கள் தூக்கத்திலேயே இருக்கின்றன. என் செல்வமே உன் குரல் மட்டும் என்னுள் ஒலித்தபடியே. என்னால் உன்னைக் கண்குளிரப்பார்க்க முடியவில்லையே என் தங்கமே. இதயம் துடிக்க அழுகிறேன்.

ஓரு வாரமாக படுத்த படுக்கைதான். சாப்பாடு கூடஇல்லை. கண்களிலிருந்து கண்ணீர் பெருக உதடுகள் மட்டும் அடிக்கடி அசைகின்றன. மூத்தவள் சுவேதா யாரிடமோ என்னைப்பற்றிச் சொல்கிறாள். ம்.... மனசுக்குள் என்னென்ன கவலைகளோ? எத்தனை நினைவுகளோ? இன்னொரு பரிச்சயமில்லாத குரல் மெதுவாகச் சொல்வது கூட எனக்குக் கேட்கிறது. நான் கதைப்பது மட்டும் ஏன் இவர்களுக்குக் கேட்கவில்லை. 'பிள்ளைகளைப்பெற்று வளர்த்து வாழ்ந்த வீட்டிலேயே கண்மூடவேண்டும். என் ஆறு பிள்ளைகளும் மருமக்கள் பேரப்பிள்ளைகளுடன் அருகிலிருந்து எல்லாக்காரியங்களையும் செய்து வழியனுப்ப வேண்டும். என் ஊர் சுடுகாட்டில்தான் என்னுடல் வேகவேண்டும்' என்று அம்மா அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பா. நாட்டில் யுத்தமேகம் சூழ்ந்தவுடன் சுமந்து பெற்றவர்களை மறந்து வளர்ந்த மண்ணைத் துறந்து தங்கள் உயிரைக் காப்பதற்காக என்னைத்தவிர எல்லோரும் ஓடிவிட்டார்கள்

'அன்ரி. நானும் என்னால் முடிந்தவரை அம்மாவை வசதியாக வைத்திருந்தாலும் தான் வாழ்ந்த ஊரை தன் வீட்டைப்பிரிந்த ஏக்கம் கொள்ளிபோட ஆண்பிள்ளைகள் அருகில் இல்லாத கவலை. எல்லாவற்றையும் விட கடைக்குட்டி நிவேதா என்றால் அம்மாவுக்கு உயிர். அவளது திருமணத்தைக் காணவில்லை. மருமகனைத் தெரியாது. பேரப்பிள்ளைகளையாவது ஒரேஓரு முறை பார்த்துவிடவேண்டும் என்று ஒருநாளைக்கு ஆயிரம் தடவையாவது சொல்லிக்கொண்டே இருப்பா. எல்லாக்கவலைகளும் சேர்ந்து அம்மாவைப் படுக்கையில் விழுத்திவிட்டது. போதாக்குறைக்கு இந்த வன்னிவெய்யிலும் நுளம்பும் வேறு அடிக்கடி காய்ச்சல் கொடுக்க வாடிப்போய்விட்டா. அன்ரி கொஞ்சநாளாக அம்மாவுக்கு மனதில் பயம். சுவேதா என்ரை பிள்ளைகளைக்காணாமலே நான் சாகப்போகிறேன் போலிருக்கு. அப்பாவை எரித்த இடத்தில் என் உடலும் எரியவேண்டும் என்ற என் நினைவு கனவாகப்போய்விடுமோ? என்றெல்லாம் கவலைப்பட்டபடி சொல்வா அன்ரி. மூத்தவள் சுவேதா சொல்வதையெல்லாம் கேட்டபடி படுத்திருக்கிறேன். என் இதயம் இரத்தக் கண்ணீர் வடித்தபடி துடிக்கிறது.

மெல்ல மெல்ல பேச்சுக்குரல்கள் தேய்ந்து அடங்க மனசு மட்டும் விழித்தபடி மெதுவாக என்னை நிதானமாக்கிட முனைகின்றேன். அப்போ.. அப்போ.. கொஞ்ச நேரத்துக்கு முன் என்னைக் கட்டியணைத்து வாஞ்சையுடன் அம்மா என அழைத்தது.. என் நிவேதாக்குட்டி இல்லையா? அப்போ நிவேதா நீ சொன்னதெல்லாம் பொய்யான வார்த்தைகளா? இந்த அம்மாவை ஏமாற்ற எப்படியம்மா உனக்கு மனம் துணிந்தது? நினைவு நெருப்பு தீக்கங்குகளால் மறுபடி தீண்டிப்பார்க்கப்படும் வேதனை எனக்குள்.

எனது உள்ளமெல்லாம் பார்த்துப்பார்த்து நாங்கள் கட்டிய வீடுவளவையும் பிள்ளைகளையும் சுற்றிச்சுற்றி வருகிறது. ஜந்தாவது மகனும் பிறந்து இவன்தான் கடைசிப்பிள்ளை என்று நினைத்திருந்த நேரத்தில் நீண்ட இடைவெளியின்பின் பிறந்தவள்தான் நிவேதா. முத்தவர்கள் ஜவரும் கல்யாணமாகி வேலை என்று வேறிடங்களில் வாழத்தொடங்கிய நேரம்அது. கணவரும் வியாபாரநிமித்தம் வெளியிடங்கள் சென்றுவிட நானும் நிவேதாவும் மட்டும் வீட்டில் தனியாக இருக்கும் நாட்கள்தான் அதிகம். சகோதரர் களுக்கும் அவளுக்கும் உள்ள வயது இடைவெளி அதிகம் என்பதாலோ என்னவோ அவர்களுடன் மனம்விட்டுப்பழக அவளால் முடியவில்லை. என்னோடுமட்டும் அருமையான சிநேகிதியாய்ப் பழகும் அவளது இயல்பு எனக்கு நிறையப்பிடித்திருந்தது.

வீPட்டின் பின்புறம் உள்ள பெரிய படிக்கட்டில் இருந்து கிணற்றடியில் குலைகளைச் சுமந்தபடி நிமிர்ந்து நின்றிருக்கும் தென்னை மரங்களை ரசித்தபடி மணிக்கணக்காகத் தனித்திருப்பாள். அந்தி சாயும் நேரம் குங்குமம் பூசிய வானத்தைப் பிரமிப்புடன் பார்த்திருப்பாள். தென்னங்கீற்றூடாக வானத்தையும் வாரியிறைத்த
விண்மீன்களையும் பார்ப்பது தனியழகு. இந்த அற்புதமான காட்சியை விட்டுவிட்டு அடுப்படியில் என்ன பண்ணுகிறீங்க? என்றபடி என்னை இழுத்துச்சென்று படிக்கட்டில் இருத்திவிடுவாள். நிலவொளியில் மணல்கும்பியில் என் மடியில் தலைவைத்துப்படுத்தபடி சீதையையும் சாவித்திரியையும் மாதவியையும் கேட்டு ரசிப்பாள். ம்...... இவற்றையெல்லாம் விட்டுப்பிரிந்து எவ்வளவு துயருற்றிருப்பாள் என் குழந்தை. பாயில உறங்கிப் பழக்கமில்லை நிவேதாவுக்கு. சின்ன வயசிலிருந்தே கட்டிலில்தான் தூங்குவாள். ஆனால் வெய்யில்கால மாலை நேரங்களில் புழுக்கம் தணிய காற்றோட்டமாகப் பின்கதவைத் திறந்துவிட்டு சிமென்ற் தரையில் என் சேலை ஒன்றை விரித்து அதன்மேல் படுத்திருப்பாள். பாய்போட்டுப்படு என்றால் இந்தச் சேலையில் வீசும் அம்மாவின் அற்புதமான சுகந்த வாசனை பாயில் வருமா? தலையை ஆட்டியபடி புத்தகத்தில் ஆழ்ந்துவிடும் என் மகளை தாய்மையுடன் பார்ப்பேன். என் மனம் அந்தக் கணங்களில் புல்லரித்துப் பூரிக்கும். தாயைமட்டுமல்ல தாய்மண்ணையும்கூட மாறாக்காதலுடன் நேசித்த என் மகளை அப்போது ஏன் புரிந்துகொள்ளாமல் போனேனோ?

அம்மா நான் உங்களையும் அப்பாவையும் மட்டுமல்ல. இந்த வீட்டை என் கிராமத்தை எல்லாம் பிரிந்து இருக்கமாட்டேன் அம்மா. அண்ணாவை அக்காவை எல்லாரும் கல்யாணம் செய்தவுடன் எல்லாவற்றையும் மறந்துபோன மாதிரி என்னால் போகமுடியாது. எனக்குக் கல்யாணமே வேண்டாம். நான் உங்களுடனேதான் இருப்பேன். உங்கள் தலைசாயும்போதும் என் மடிதானம்மா தாங்க வேண்டும். ஊரில் யாராவது இறந்ததுபற்றிக் கதைக்கும்போதெல்லாம் இப்படிச்சொல்வாள்.

நிவேதா படிப்பை முடித்து கணக்காளராக அலுவலகம் ஒன்றில் வேலைபார்க்கத்தொடங்கிய நேரம் அது. அப்போதுதான் மண்மீட்புப்போராட்டத்தில் இளைஞர் கூட்டமும் வெடித்துப்பொங்கி எழுந்த காலம். ஆங்காங்கே புரட்சிப்பொறிகள் வெடித்து எழ எழ அந்நியரால் அடக்குமுறையும் அராஜகமும் அவிழ்த்துவிடப்பட நாளாந்த வாழ்வே போராட்டமாய்ப்போன காலம்.

இயல்பிலேயே மண் மீது மாறாத பாசம் கொண்ட நிவேதா கொடுமைகள் கண்டு கொதித்தாள். அரசின் அட்டுழியம் கண்டு ஆயதம் எடுத்துப் போராட முனைந்த பிள்ளைகளுக்கு சின்னச்சின்ன உதவிகள் செய்ய ஆரம்பித்து நீண்ட நேரங்களை அதற்காகவே ஒதுக்கத்தொடங்கியபோது..... எனக்குப்பயம் தோன்ற ஆரம்பித்தது. என் மகளைப்பற்றி மட்டும் கவலைப்பட்ட எனக்கு அஸ்தமனத்தில் இருக்கும் நேரம்தான் மண்ணின் அருமை எழுவது வேடிக்கையாக இருக்கிறது. இதைத்தான் சுடலைஞானம் என்பார்களோ?

அம்மாவைச் சுற்றியே தன் உலகத்தை அமைத்துக்கொண்டு வாழ்ந்த என் மகள் ஆயுதத்தை அணைக்கப்போகிறாளோ? என்ற பயத்தில் உறவினர் வீட்டுத்திருமணத்துக்கு கொழும்புக்குச்சென்று வருவோமென அவளை அழைத்துச்சென்று விமானத்தில் ஏற்றியபோது அவள் வடித்த கண்ணீரை இப்போதும் நினைக்கிறேன். என் நெஞ்சுக் குழியிலிருந்து விம்மல் வெடித்தெழுகிறது.

அம்மா நிவேதா உன் விருப்பத்துக்கு மாறாக அந்நிய மண்ணுக்கு அனுப்பிய கோபத்தில் எனக்குக் கடிதம் போடாமல் ஒரு வருடமாக மௌனமாய் இருந்து என்னை அழவைத்ததைக்குட நான் மறந்துவிட்டேன். ஆனால் .. இப்போ... மகளே... நீ அடிக்கடி சொல்வாயே.. அம்மா உங்களுக்கு முன்பு அப்பா இறந்தால் அவரை எரித்த இடத்திலேயே உங்களையும் அடக்கம் செய்வேன்.ஆனால் நீங்கள் சாகும்போது உங்கள் வைரத்தோடும் முக்குத்தியும் எனக்குத் தான் தரவேண்டும் என்பாயே. உனக்குத் தருவதற்காக காத்திருக்கிறேன் மகளே.. வாம்மா..வந்து பெற்றுக்கொள்ள மாட்டாயா?

மகளே.. இந்த வன்னியில் வாடகை வீட்டில் நான் செத்தால் ஒருசொட்டுக்கண்ணீர் சிந்தக்கூட யாருமில்லை அம்மா.. மூத்தமகள் இருக்கிறாளே என்று நினைக்கிறாயா? உன் அக்கா சுவேதா யாழ்ப்பாணத்திலிருந்து ஊர் ஊராக வீடு மாறிமாறி அலுத்துவிட்டதில் நானும் அவளுக்கு ஒரு சுமையாகப் போய்விட்டேன் என்பதால் இந்த வயதான அம்மா செத்திட்டேன் என்றால் அவளுக்கு அழுகை வராது. ஆறுதல் பெருமூச்சுத்தான் வரும். என்னசெய்வது? நாட்டு நிலைமை மனிதர்களை மாற்றிவிட்டதம்மா. தெரியாத முகங்கள் பரிச்சயமில்லாத மனிதர்கள். எந்தக் காட்டில் என்னை எரிக்கப் போகிறார்களோ? எந்தக் கடலில் என்னைக் கரைக்கப்போகிறார்களோ?. எனக்குப் பயமாக இருக்கிறது மகளே. இப்போது இந்தக் கணங்களில்.... நீ..... என்னை வந்து பார்க்காவிட்டால்..... இனி எப்போதுமே பார்க்க முடியாதம்மா. என்னுடல் எரிந்த இடத்தைக்காட்டக்கூட எந்தத்தெரிந்த முகமும் இருக்காமல் ஒருநாளைக்கு நீ தேடித் தேடி அழுவாய் என்று நினைக்கும்போது .. உனக்காக வேதனைப்படுகிறேன் மகளே. மரண தண்டனை நிறைவேற்றப்படும் சமயத்தில் குற்றவாளியைக்கூட கேட்பார்கள் உன் கடைசி ஆசை என்ன? என்று. எனக்கும் ஓர் ஆசை. பிறந்தமண்ணைவிட்டு என்னைப் பலவந்தமாகப் பிரித்து அனுப்பிய குற்ற உணர்வுடன்தான் உன் அப்பாவும் இறந்தார். அப்பா எரிந்த இடத்தில் என்னையும் எரிக்கவேண்டும். மகளே..... உன் விழியிலிருந்து வழிந்து என் முகத்தில் படப்போகும் துளிநீருக்காகத் துடிக்கிறேன். நாங்கள் எரிந்த இடத்தில் உன் பாதம் பட்டால் ராமர் பாதம்பட்டு சாபவிமோசனம் பெற்ற அகலிகை போல எங்கள் மனம் நிறைந்து விடும்.மகளே.....  உதிரத்தையே உணவாக்கித் தந்த எனக்கு ஒரு  மிடறு நீராவது தந்து என் தாகங்களைத் தீர்க்க வருவாயா? மகளே....

ஓங்கிக்குரலெடுத்து அழுகின்றேன். என் குரல் இந்த மனிதர்களுக்கு இப்போதும் கேட்கவில்லைப் போலும். என் வாயை மெதுவாக மூடுகிறார்களே. மகளே. மண்ணே மதியே காற்றே. உங்களுக்குக் கூடவா என் குரல் கேட்கவில்லை?.

 


scanma2000@t-online.de