பொம்மைகளின் சதுரங்கம்

ஆத்மார்த்தி

தூக்கத்தில் இருந்தஅவனுக்குத் தலை வலித்தது போல் இருந்தது.சமீப காலமாக இப்படித்தான்.

சமீப காலம் என்றால்....? சரியாக சொல்லப்  போனால் தீப்தி அவனை மிக மோசமாகத் திட்டி விட்டு "இனி என் முகத்தில் விழிக்காதே" என போன மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மாலை  சென்றதிலிருந்து இந்த தலை வலி வருவதாக அவன் நம்புகிறான்.

அவனை தீப்தியின் பிரிவு ஒரு பல்முனை இழப்பாக மாற்றம் அடைந்து வேறு வேறு தோற்றங்களில்  பாதிக்கத் தொடங்கிவிட்டது. அவனை முதன் முதலில் தீப்தியுடன் பார்த்தவர்கள் ஆச்சர்யம் உள்பட பலவிதமான கருத்துக்களை தீவிரமாகவும், அவசரமாகவும்  அவன் மனதுக்குள் ஏற்படுத்தி விட முயன்றார்கள்.

அவள் கணவனுடன் ஒரு நாள் மட்டும் வாழ்ந்தவள்,அவள் ஒரு கோபக்காரி,அவள் நிறைய்ய பணத்தை மாதாந்திர பராமரிப்பு தொகையாகவும்,பெருந்தொகையை நிரந்தர பங்கு ஆகவும் அவள் கணவனிடம் பெற்றவள் எனவும், தன்னை அழகு படுத்திக் கொள்வதில் மிகத் தீவிர ஆர்வமுள்ளவள் எனவும், அவளை ஒருவன் கவர்ந்து விடுவது அபூர்வம் எனவும், அவள் ஆண்களைப் பற்றிய கேவலமான அபிப்ராயம் கொண்டவள் எனவும், அவளை வீழ்த்துவது சுலபம் என்றும், அவளை விட்டு விலகுவது மிக கடினம் எனவும், அவள் ஒரு செக்ஸ் மேனியாக், அவள் ஒரு ஆணை அடிமையாக்கி விடுபவள், அவள் ஒரு நாகப் பாம்பு மாதிரியானவள் என்பது வரை தம் தம் அபிப்ராயங்களினால் அவனை துளைத்தார்கள்.

 
அவன் அவள் தன்னிடம் இயல்பாக நெருங்குவதையும்,பேசுவதயும் மிகுந்த மன நடுக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவளிடம் சாதாரணமாகத் தன்னை காட்டி கொண்டான். அவள் நேரில் மட்டுமல்ல, அன்றைக்கிரவே அவனுடன் பல நாள் பழகி நெருங்கியவள் போல செல்லிட பேசியிலும் பேசத் தொடங்கி விட்டாள்.

 
தனது பால்ய காலம் முதற்தொட்டு இப்போதைய சூழல் வரை அவனிடம் தீப்தி சரளமான நடையில் தனது வாழ்வின் நகர்வுகளை சொல்லிக் கொண்டு வந்தது அவனை ரசிக்க வைத்தது. தவிரவும் அவன் அன்றைக்கிரவு தூங்காமல் இருந்தது வெகு நாட்களுக்கு பிறகு நடந்ததும் அவனுக்கு பிடித்து இருந்தது.

மறுதினம் காலை வழக்கம் போல அவன் அலுவலகத்தில் நுழைந்ததில் இருந்தே அவனை யாரோ குறுகுறுவென்று பார்ப்பது போல இருந்தது. முந்தைய நாளின் இரவு சம்பாஷணை அவன் மனசுக்குள் ஒரு ரம்யமான மறக்க விரும்பாத வாசனையாய் தங்கிவிட்டது. அவன் தனது வேலையை மிக அதிக உற்சாகமாய் கவனிக்க தொடங்கினான். சாயந்திரம் 4மணிக்கு ஆபீஸ் சிப்பந்தி டீ கொடுக்க வந்த  போது தான் இவன் தனது காலை உணவை சாப்பிட்டு கொண்டு இருந்தான்.

அன்றைக்கு இரவு தீப்தி அவனை கூப்பிடவில்லை. மணி 11 ஆனது. பன்னிரண்டு மணிக்கு அவனுக்கு ஒரே ஒரு குறுந்தகவல் மட்டும் அனுப்பியிருந்தாள். "எனக்கு மூட் சரியில்லை.தவறாக நினைக்க வேண்டாம். நாளை பேசுகிறேன். குட் நைட்."

அவன் அந்த குறுந்தகவல் வந்ததும் ஒரு வகையாக சமாதானம் அடைந்து உறங்கத் தொடங்கிவிட்டான். அதிகாலை அவனது கனவுக்குள் அவனுக்கு பரிச்சயமான யாருடைய குரலோ அவனை தட்டி அவன் பெயர் சொல்லி எழுப்பியது. அவன் அதை விரும்பவே இல்லை. முந்தைய இரவு வேறு அவன் முழு உறக்கத்தையும் இழந்து இருந்ததால் அவன் சற்று எரிச்சலானான் என்பது தான் அந்த கணத்தின் நிஜம்.

அவன் கேட்க விரும்பாத வகையில் தீப்தியை ஆபாச மொழிகளால் மிக கடுமையாக திட்டத் தொடங்கிய அந்தக் குரலை அறுத்து விடும் நோக்கிலேயே அவன் உறக்கத்தை முறித்துப் போட்டு எழுந்து அமர்ந்தான். அதற்குப் பின்னர் மிச்சமிருந்த இரவு முழுவதும் அவன் அந்தக் குரல்யாருடையதாயிருக்கும் என மூளையை கசக்கி அதன் நினைவு அடுக்குகளில் இருந்து கண்டறிவதில் தோற்பதில் செலவழித்தான்.

மறுதினம் அவன் அலுவலகத்தில் இருக்கும் போது அவனை தொலை பேசியில் அழைத்தாள் தீப்தி.

இருவரும் ஒரு தேனீர் விடுதியில் சந்தித்து வெகுநேரம் உரையாடினர். உண்மையில் அந்த சந்திப்பு அவனுக்கு மிகவும் ஆறுதல் அளிப்பதாக இருந்தது. அவளுடன் உரையாடிக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவன் மனசுக்குள், இனி எந்தக் கனவில் எவர் வந்து தீப்தி பற்றி என்ன சொன்னாலும் அதைப் புறந்தள்ளி விடுவது எனவும், அங்கனம் புறந்தள்ளிய பின்பும் அது தொடர்ந்தால் அதனை எதிர்த்து பலமான ஒரு போராட்டத்தை நிகழ்த்தி விடுவது எனவும் அவன் முடிவுக்கு வந்திருந்தான்.

தீப்தி அவனுடனான தனது புதிய ஸ்னேகம் தனக்கு மிகவும் ஆறுதலாய் இருப்பதாக அவனிடம் சொன்னாள். அவனை சந்தித்து இருக்கா விட்டால் அவள் எதிர் கொண்டிருக்க வேண்டிய ஒரு சூன்யத்திலிருந்து அவன் தன்னை காப்பாற்றி ரட்சித்திருப்பதாகவும் நன்றி தெரிவித்தாள்.

அவனுக்கு சில தூர உலகங்கள் தன் குடையின் கீழ் வந்ததைப் போலிருந்தது. அதற்கடுத்த இரண்டு மாதங்களின் எல்லா தினங்களும் சர்க்கரை தடவிய நாட்களையும் வாசனைத் திரவியங்கள் பூசப்பட்ட பொழுதுகளையும், நினைத்த உடன் பெய்யத் தயாராய் தொடர்ந்து வரக்கூடிய மழையினையும் உட்கொண்டதாய் இருந்தது.

அவன் தீப்திக்காக எதையும் செய்ய கூடியவனாய் தான் மாற்றம் அடைந்ததை தானே ரசித்தான். அவன் அதற்கு முந்தைய அவனது நாட்களில் தனது வழிகளில் எதிர்ப்படக்கூடிய எந்த ஒரு அன்னிய மானிடனும் திடீரென தன்னை நிறுத்தி தீப்தி பற்றி எதையாவது சொல்லி விடுவது போல பயந்து இருந்தான். தீப்தி பற்றிய பல விதமான அனுமானங்களால் சூழப்பட்டிருந்தவன் அவளைப்பற்றிய எந்த ஒன்றையும் நிஜம் எனவும், பொய் எனவும் நம்பினான். இப்பொழுது அவள் உடனான பரிச்சயம் பலப்படுத்தப்பட்ட பின் தீப்தி பற்றிய கருத்துக்களுக்கு அப்பாற்பட்ட தூரத்தில் தான் தற்பொழுது நின்று கொண்டிருப்பதாக நம்பினான்.

அவள் பேசும் பொழுது ஒருமுறை சொன்னாள் "நாளைக்கு உனக்கு ஒரு பரிசு தரப்போகிறேன்....என்ன என கண்டு பிடி" என்றாள்."

மறு தினம் அவள் அவனது அறைக்கு வந்த பொழுது அவன் ஷவரம் செய்து கொண்டிருந்தான். அவள் அந்த அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவனைப் பார்த்து ஒரு துவக்கப் புன்னகையை வீசினாள். அவள் கையில் ஒரு பரிசுப்பொட்டலம் இருந்தது. அதை ஒயிலாக தன் வலது கையில் ஏந்தியவள்

"இது உனக்கு என் அன்பு பரிசு. இதில் இருப்பது... நீ தான். எனக்கு நீ இப்பொழுது எப்படியோ...  அதை உனக்கு எப்பொழுதும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்... என்ன என சொல் பார்க்கலாம்" என்றாள்.

அவன் ஷவரத்தை முடித்துக் கொண்டு,"என்னால் யூகிக்க முடியவில்லை..." என்றான். அவள் வெற்றிக் களிப்புடன் அதை நீட்டினாள். திற.. என்றாள் அதனுள் ஒரு போர்வீரன் கையில் பெரிய்ய குத்தீட்டியை வைத்துக் கொண்டு நின்றான்.

"எனக்கு நீதானே பாதுகாவல்..?"என்றாள்.

அதற்குப் பின் அவன் தனது அலுவல் நேரங்களை சுருக்கிக் கொண்டான். மற்ற நேரங்களில் எல்லாம் அவனும் தீப்தியும் உடல்களால் பல முறை மொழிந்தார்கள். மௌனத்தால் பல முறை இணைந்தார்கள். மற்ற நேரங்களில், தம் இருவரையும் இவ்வளவு இறுக்கமாய் பிணைத்து போட்டது எது என வார்த்தைகளால் வியந்தார்கள்.

அவளது வீடும், அவனது அறையும் அவர்களிருவரின் பொது வாசஸ்தலங்களாயின. எப்பொழுதாவது அவளும் அவனும் தனிதனியாய் இரவை கழிக்க வேண்டியிருந்தால், அந்த இரவு முழுக்க இருவரும் செல்லிட பேசியின் நேரலையிலேயே இருந்தனர்.

அவள் அவனுடைய குடியிருப்பை தனது ஆளுமையால் நிறைய மாற்றி இருந்தாள். அவனது அறையின் விசாலத்தில் மூலையில் இருந்த ஒரு அலமாரியை அவள் அவ்வப்பொழுது அவனுக்கு பரிசாக கொடுத்த பொம்மைகளால் நிரப்பி இருந்தாள்.
          
 
ஒரு கட்டத்தில் அவன் அவளுக்கு பிடித்தமான எந்த ஒரு செயலை செய்தாலும், அது அவளை முத்தமிட்டதாகவும் இருக்கலாம், அல்லது அவளது தலைவலிக்கு தைலம் தேய்த்ததாகவும் இருக்கலாம், அல்லது அவளுக்கு பிடித்தமான திரைப்பட பாடல் ஒன்றை அவள் வேண்டி கேட்ட பொழுதில் பாடியதாகவும் இருக்கலாம், அதற்கு நேர் மாறாக அவள் கூச்சல் இட்ட பொழுதொன்றில் அவன் அமைதி காத்ததாகவும் இருக்கலாம். அவளுக்கு பிடித்த எந்த ஒரு செயலுக்கு பதிலாகவும் அவள் அன்றைக்கு இரவோ அல்லது மறுதினமோ அவனுக்கு ஒரு பொம்மையை பரிசாக அளிப்பதினை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள்.

அந்த அலமாரி, தீப்தி அவனுக்கு வழங்கிய பரிசு பொம்மைகளின் இடமாயிற்று. வித விதமான நாய் பொம்மைகள். கறுப்பு, சிவப்பு, கருனீலம், வெள்ளை, டால்மேஷன், லாப்ரடார் என ரக ரகமான வித விதமான நாய்கள். அலமாரியின் ஒரு வரிசையின் ஒரு ஒரம் முழுவதும் நாய்களின் வசிப்பிடமாய்.

மாதங்கள் ஒடின. அவன் தீப்தி எதை சொன்னாலும் தான் நம்புவதாய் சந்தேகப் பட்டான் அவள் தன்னை முழுமையாக ஆக்ரமித்திருப்பதாய் அந்த சந்தேகம் நீண்டது இவை அனைத்தும் நிகழ்கையில் அவன் அவற்றுக்கெதிரான தன் கருத்தை பதிவு செய்ய விரும்பினான். அனால் அவன் குரல் எழாமல் போயிற்று. ஏன் எனில் அவனுக்கு வெகு நாட்களுக்கு பிறகு கனவொன்றில் அது நிகழ்ந்தது தான்.

அன்றைய உறக்கம் கெட்டது. அவனுக்கும் தீப்திக்கும் அவனுக்குமான நிகழ்வாழ்வின் எந்த தொடர்சம்பவத்தையும் பாதித்து விடாமல் அவனே பார்த்துக் கொண்டான்.

அவனது அலமாரியின் தட்டுக்கள் நிரம்பி வழிந்தன. வித விதமான கண்ணாடியினாலான செருப்புகள். அவை அனைத்தும் தீப்தி அணிந்து வருவதை போன்றே இருந்தன. அவள் அவளது வீட்டிலிருக்கும் பொழுதும், அவனது அறையில் இருக்கும் பொழுதும் எல்லா நேரங்களிலும் செருப்புக்களை கழற்றுவதே இல்லை என்பது அவன் கவனத்தில் அவ்வப்பொழுது இடறும். ஆனாலும் அதையும் உள்பட அவளது எந்த ஒரு செய்கையினையும் அவன் விரும்புகிறவனாகவே இருந்தான்.
                         
கல்லினால் செய்யப்பட்ட அழகியரின் சிற்பங்கள் அலமாரியின் அடுத்த தட்டுக்களில் இருந்தன இசைக்கருவிகள், பல ரக இருசக்கர நாற்சக்கர வாகனங்களின் சிற்றுருவங்கள், அங்கே இருந்தன.
                           
அதற்கு பின்னதான ஒரு இரவில் தன்னை கட்டியணைத்துக் கொண்டிருந்த அவனது கரத்தை எடுத்து கட்டிலில் இருந்து கீழிறங்கி தன் நிர்வாணத்தை களைந்து அவள் வெகு வேகமாக வெளியேறிப் போன பிறகு மீண்டும் தொடர்ந்த அவனது தூக்கத்தின் தொடர்ச்சித் தனிமையின் உள்ளே பலமான நுழைவொன்றின் மூலமாக ஏற்பட்ட கனவில் கேட்ட குரல் அவனுக்கு மிகவும் பரிச்சயமானதாய்தான் இருந்தது.
                                     
ஒரு அடிமையாய் ,அவனை வளர்ப்பு ப்ராணியாய் தீப்தி நடத்துவதாகவும் இந்த நிலையில் அவள் அவனை தூக்கி எறிந்தால் அவன் பிழைக்கவியலாப் பெருவெளியில் போய் விழுவானெனவும் அந்தக் குரல் கெக்கலித்தது.
                        
இந்த முறை அவன் கனவென்றாலும் அதை எதிர்த்துப் போராட விரும்பி பெருங்கூச்சலிட்டான். அவனது வாய் கட்டப்பட்டிருப்பதையும் அந்த இரவின் கனவில் அவனுக்கு உணரும் உரிமையை அன்றி வேறெதுவும் இல்லை எனவும் அறிந்து தனது காயங்களை தானே வருடி அழலானான்.
                                            
மறுதினம் அவள் முழு நாளும் கழிந்து போய் இரவொன்றின் மிச்சம் மட்டும் எஞ்சிய நிலையில் அவன் அறைக்குள் நுழைந்தாள். மிக வசீகரமான ஒரு புன்னகையினை மட்டும் அவன் மீது தூக்கி எறிந்து விட்டு அவளோடு பயணித்து வந்த ஆடையினின்று வெளிப்பட்டு இன்னொரு இரவு ஆடைக்குள் புகுந்து கொண்டாள். அவளது தலைமுடி இன்றைக்கு புதிய மாதிரியாய் இருந்தது. அவளது உதட்டு வண்ணம் இது வரை அவள் உபயோகிக்காத புதிய நிறமாய் இருந்தது. அவளது காது அணிகலன்களும் புத்தம் புது தினுசில் இருந்தன. கழுத்தில் அவள் எப்பொழுதும் அணிந்திருக்கும் பெரியதொரு முத்து மாலையை அணியாமல் வெற்றுக் கழுத்தாய் விட்டிருந்தாள்.
                                        
 
தீப்தி அவன் பக்கத்தில் வந்து இயல்பாக கட்டிலில் சரிந்து கொண்டு தன் கழுத்து வரை போர்வையால் மூடிக் கொண்டு அவன் கையிலிருந்த தொலைக்காட்சி ரிமோட் தன் கையில் வாங்கி ஓடிக்கொண்டிருந்த காட்சியை வேறு சானலுக்கு மாற்றினாள். இதனை எல்லாம் அவல் இயல்பாக செய்தாள். ஒரு வார்த்தை கூட அவனிடம் பேசாமல் செய்தாள். அவன் தீப்த்தியிடம் அவளது  தோற்ற மாற்றங்களை தான் இன்றைக்கு வியந்து கவனித்ததாய் சொன்னான்.

 அதற்கு பதிலாகவும் அவள் புன்னகையொன்றை வீசுவாள் என அவன் எதிர்பார்த்த வேளையில் தீப்தி அவனிடம் "நீ மாறாமல் இருப்பதற்கு இந்த மாற்றங்கள் தொடர்பற்றவை" என்றாள்.
                                              
அன்றைக்கு இரவு அவள் அவனை தூங்காமல் இருக்குமாறு கூறிவிட்டு தான் மட்டும் தூங்கிப்போனாள். அவன் தீப்தியிடம் தன்னைக் கனவிலும் அவள் கட்டுப்படுத்த தொடங்கிவிட்டதாக சொல்ல விரும்பினான். அவனது கனவில் கேட்கும் குரல்களில் ஏதோ ஒன்றை இனம் காணக்கூடிய வாய்ப்பு ஒன்று தனக்கு இன்னும் மிச்சமிருப்பதாகவே அவன் இன்னும் நம்பினான்.
                                   
அதற்கு பிறகு மறு நாள் காலையில் தீப்தி எழுந்தவுடன்,அவன் இரவு முழுவதும் உறங்காமல் இருந்ததால் தான் தன்னால் ஒரு கனவில் சுதந்திரமான தனிமையை ஒரு வனாந்திரத்தில் அனுபவிக்க முடிந்தது எனவும் இதன் பின்னரும் அடிக்கடி தான் அந்த கனவின் தனிமையினை அனுபவிக்கும் இரவுகளில் எல்லாம் அவன் தான் அவளுடைய இரவின் முதல் அடுக்கில் இருந்து கொண்டு அடைகாக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்தாள்.

 அவள் அதற்கு மறு நாள் இரவின் துவக்கத்தில் அவனிடம், இன்று அவள் அவனது கனவுக்குள் நுழைந்து அதன் முதல் அடுக்கில் தூங்கப் போவதாகவும், அவன் தூங்கிக்கொள்ளலாம் எனவும் சொல்லி அவன் தூங்குவதற்க்காக காத்து இருந்தாள்.
                   
அவன் மறு நாள் காலை எழுந்த பொழுது தீப்தி சம்மந்தப்பட்ட எந்த ஒரு அடையாளமும் அவனுடைய அறையில் இல்லை. தீப்தி அவள் சம்மந்தப்பட்ட எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அவனது நேற்றைய கனவின் முதல் அடுக்கில் நுழைந்து விட்டிருந்தாள். அவளுடைய ஸ்பரிசம், அவளுடைய ஏதேனுமொரு நினைவின் வாசனை என ஒவ்வொன்றையும்  அவள் பார்த்துப் பார்த்து எடுத்துக் கொண்டு போயிருந்தது குறித்து அவன் கலங்கினான்.
                        
அவள் சம்மந்தப்பட்ட எல்லாமும் அவளால் கவர்ந்து கொள்ளப்பட்டிருந்தாலும் அவனுக்கு அவள் கொடுத்த எந்த ஒரு பரிசு பொம்மையையும் அவள் எடுத்து செல்லவில்லை. அவை எல்லாமும் அந்த அறையின் அலமாரியிலேயே தங்கியிருந்தன. அவன் அதற்குப் பின் வந்த ஒவ்வொரு இரவிலும் அவனுக்கான கனவு துவங்குமுன் அவனுக்கு வாய்க்கும் கடைசி ப்ரக்ஞையிலும் அவள் அவனுக்கு தந்த எதேனும் ஒரு பொம்மையை எடுத்துக் கொண்டு அதை அவள் அவனுக்கு தருவதற்காக முடிவு செய்த நிகழ்வினை பற்றிய நினைவுக்  குறிப்பை எண்ணுவதன் மூலம் அவனது அன்றைய கனவினுள் தீப்தியை புகுத்துவதில் வெற்றி கண்டான்.

நாட்களின் நகர்தலில் ஒரு நாளின் இரவில் அவனுக்கு தீப்தி கொடுத்திருந்த கடைசி பொம்மையான ஒரு சின்ரெல்லா பொம்மையை பயன்படுத்தி தூங்கியிருந்தான். அந்த இரவின் உறக்க முடிவில் அவன் எழுந்திரிக்க முற்பட்ட பொழுது... அந்த இரவின் நீட்சியில் பெருங்கூச்சல் ஒன்றை கேட்கலானான். விதவிதமான நாய்களின் ஊளை, பலவித செருப்புக் கால்களின் நடனம், கார்களும் பைக்குகளும்  ஒரே நேரம் கிளம்பும் ஒலிகள் பேரிரைச்சலாய் கேட்க தொடங்கின.
                  
 
அவனது அலமாரியின் கண்ணாடி அடைப்புகள் நொறுங்கிச் சிதறின. வரிசை வரிசையாய் சுவற்றில் இறங்கத் துவங்கின பொம்மைகள். போர் வீரன் ஒருவன் குத்தீட்டி ஏந்தி முன்னகர அவன் பின்னால் அணிவகுத்தபடி கட்டிலில் இருந்த அவனின் உடலை நோக்கி நகரத் துவங்கின.
                        
 
அவனது எல்லா முயற்சிகளும் தோற்றுப் போய் அவனது கனவிலிருந்து திரும்பி விடும் உத்தேசத்துடன் அவன் முன்கூட்டியே அவனது கனவின் கடைசீ மூலைக்கு ஓடினான். அங்கே அவனது வழியை மறைத்த படி ஒரு போர்வீரன் கையில் குத்தீட்டியுடன் நுழைந்து கொண்டு இருந்தான். பெருங்கூச்சல் ஒன்றுடன் தாவிக்குதித்து பின்தொடர்ந்தன அவனுக்கு பரிச்சயமான பொம்மைகள்.

 

aathmaarthi@gmail.com