பருவங்கள் மாறலாம்

. ரவீந்திரநாதன்

இரவு முழுவதும் தூக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தேன். மனதில் ஏறிய பாரம் என் தூக்கத்தை விரட்டியபடி இருந்தது. எதிர்பாராமல் என் காதில் விழுந்த ஒரு சேதிதான் என் மனதில் இத்தகைய தவிப்பை விதைத்திருந்தது. நம்பமுடியாத அந்தச் செய்தியை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை சொல்லப் போனால், ஊரிலுள்ள எவருமே அதை நம்பமாட்டார்கள்! கேள்விப்பட்ட சம்பவம் ஒரு கனவாக இருக்கக் கூடாதோ என்றுகூட  நினைக்கத் தோன்றியது. எனது நண்பன்  பொன்னம்பலத்தைப் பற்றிய செய்தியாச்சே, அதுதான் அப்படி நினைக்க வைத்தது ஐம்பது வருடங்களைக் கடந்தது எங்கள் நட்பு. பிறந்து வளர்ந்தது முதல் அவனைப்பற்றித் தெரிந்த எனக்கு, இந்தச் செய்தி அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மதிப்பு மரியாதையோடு இருந்த ஒருவனிடத்தில்; இப்படிப்பட்ட ஒரு பலயீனத்தை இந்த வயதில் எப்படி எதிர்பார்க்க முடியும்?

பெண் சபலம் என்பது வயதெல்லையை கடந்து செல்லக்கூடியதென்றாலும், குறிப்பிட்ட சிலரை அப்படிப்பட்டவர்களாக நினைக்கவே மனம் தயங்குவதுண்டு. மரியாதை கொடுக்கத் தோன்றும்  தோற்றம் சிலருக்கு  இயல்பாகவே அமைவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு அமைதியான தோற்றம் பொன்னருக்கு! நாங்கள் இருவரும் நீண்டகால நண்பர்கள். ஓத்தவயதும், ஒரே ஊரில் பிறந்து வளர்ந்து, ஒரே பாடசாலையில் கல்வி பயின்றதனால் உண்டான நட்பே இன்னமும் தொடர்கிறது. சொந்தத்துக்குள் நடந்த எங்கள் திருமணங்கள் மேலும் எங்களை பிணைத்திருந்தது. தொழில்மார்க்கம் எங்களை அடிக்கடி பிரித்த தென்றாலும், நல்லநாள் பெருநாள் விடுமுறையின்போதெல்லாம் ஊரில் ஒன்றாக  நிற்போம்.

ஐம்பதைக் கடந்துவிட்ட நிலையில், ஊருக்கே வந்துவிடவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் பொன்னருக்கு ஏற்பட்டது. அவரது மனைவியின்  திடீர் மரணத்தால் அவரது வாழ்க்கைப் பாதை திருப்பம் கண்டது. அவசரமுடிவொன்றை எடுக்கவேண்டிய இக்கட்டான நிலை. உத்தியோக இடமாற்றலுக்கு முயற்சித்தார். ஊரோடு இடமில்லை என்றார்கள் பென்சனுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு ஊர் வந்து சேர்ந்தார். அவர் ஊர் வந்தபோது நான் சொந்த ஊரிலேயே வேலைபார்த்து வந்தேன். எங்கள் நட்பும் தொடர்ந்தது. வயதுகள் கடந்துவிட்ட நிலையிலும், ஒருவரையொருவர் வாடா போடா என்று கூப்பிடுவதை தவிர்த்துக் கொண்டோமே தவிர, எங்கள் நட்பு மாறாமலே இருந்தது.

இளவயதிலிருந்தே பொன்னம்பலம் அமைதியான போக்குடையவன். கலகலப்பாகப் பழகும் தன்மை குறைவென்பதால், பெரும்பாலும் ஒதுங்கியே இருந்து கொள்வான். பெண்களின் கடைக் கண் பார்வைக்காக ஏங்கும் பருவம் வந்து, எங்களை நாங்களே நாயகர்களாக நினைத்து, அங்கும் இங்குமாக அலைகையில், பொன்னன் எங்கள் சேட்டைகளையெல்லாம் ரசித்தபடி அமர்ந்திருப்பான். தானும் தன்பாடுமாக இருக்கும் அவனது அமைதியைக் கலைப்பதற்கு முயன்ற சில பெண்கள்  இருக்கத்தான் செய்தார்கள்.   'இவனெல்லாம் சரியான சாமியாரடி...!' என்று பெண்களே சலித்துக்கொள்ளும் அளவுக்கு பொன்னர் தன் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாதவனாகவே இருந்துள்ளான். அப்படிப்பட்டவனாக இருந்த ஒருத்தன், இந்த வயதில் இப்படியான ஒரு காரியத்தை செய்யத் துணிந்தார் என்பதை நம்ப முடியாமலே இருந்தது. பொன்னரிடத்தில் இருந்த பொறுமையும் நிதானமும்தான் மற்றவர்களிடத்தில் அவரது மதிப்பை உயர்த்தியிருந்தது. ஊர் பிரச்சனை எதுவானாலும் அவரது சொல்லுக்கு மதிப்புக்கொடுக்கும் நிலை இருந்தது. அதையெல்லாம் பாழடிக்கும்படியான ஒருசெயலை இந்த வயதில் செய்துவிட்டு நிற்கிறாரே என நினைக்கும்போது, மனதை ஏதோ அடைத்துக் கொள்வதுபோல் இருந்தது

பொன்னரைப் பற்றியே என் சிந்தனைகள் சுழன்று கொண்டிருந்தன. தூங்க முயன்று கண்ணை மூடினாலும், அவரது சிந்தனைதான் என்னை வட்டமிட்டன. வயது போய்விட்டதற்கு அறிகுறியாக இப்போதெல்லாம் எனக்கு இரவுத் தூக்கம் குறைந்து கொண்டே வந்துவிட்டது. பொன்னரின் பிரச்சனையும் இன்று சேர்ந்து கொண்டதால் தூக்கத்தை அறவே துறந்திருந்தேன். படுத்திருக்க மனம்பிடியாமல் ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்தபடி படுக்கையை விட்டு எழுந்தேன். வெளியே எங்கும் போனால் சிகரட்தான் பிடிப்பேன். வீட்டிலென்றால் இடையிடையே பீடிதான். கட்டுபடியாவதில்லை என்பதுதான் காரணம். புகையை இழுத்துவிட்டபடி, எரியும் தீக்குச்சி வெளிச்சத்தில்  கூடத்தின் இன்னொரு மூலையை கவனித்தேன். என் மனைவி அங்கே படுத்திருப்பது மங்கலாகத் தெரிந்தது. பிள்ளைகள் வளர்ந்துவிட்டதோடு நாங்கள் இருவரும் ஒன்றாகப் படுக்கும் வழக்கம் நின்றுவிட்டது. திடீர் பாய்ச்சல் ஏதும் நான் காட்டிவிடுவேனோ என்று பயந்தே அவள் என்னை நெருங்கிப் படுப்பதில்லை. எப்போதாவது அவள் மனம் வைத்தால்தான் எல்லாமே..! பகல் முழுதும் ஓடியாடி வேலை செய்துவிட்டு அலுப்போடு தன்னையே மறந்து தூங்கும் என் மனைவியை நின்று நிதானித்து ஒருமுறை பார்த்தேன். ஏதோ ஒரு நினைவில் எனக்கு உடல் சிலிர்த்துக் கொண்டது. மனதுக்குள் சிரித்தபடி வெளியே வந்தேன். போர்வையையும் தாண்டி குளிர் காற்று என் உடலில் புகுந்து விளையாடியது. பீடியை ஆழமாக இழுத்தேன். புகை நெஞ்சுக்கூட்டை நிறைத்ததும் நடுக்கம் தணிந்தது. உள்ளே சென்ற புகை, என் மூச்சுக் காற்றோடு கலந்து மீண்டும்  வாயிலிருந்து வெளியேறியது. நிலவு வெளிச்சத்தினூடே அவை கோலங்களாக மேலெ எழுந்தபோது, அதைப் பின்பற்றி என் சிந்தனைகளும் பொன்னம்பலத்தாரின் நினைவுகளோடு மேலெழுந்தன.

---                 ---                        --- 

 பொன்னம்பலத்தாரின் வாழ்க்கையில் சில சோகங்கள் நிரந்தரமாகவே தங்கிவிட்டன. சந்தோசமாக ஆரம்பித்த அவர்களது திருமண வாழ்க்கை, இரண்டாவதாகப் பிறந்த  பிள்ளையின் வரவோடு நாவூறு பட்டதுபோல் ஆகிவிட்டது. மூத்ததாகப் பிறந்தது ஒரு பெண் குழந்தை. அடுத்த பிள்ளையும் குறுகிய காலத்திலேயே உண்டானதால், அதை இல்லாமல் செய்துவிட அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர்களது அனைத்து முயற்சிகளையும் தாண்டி அந்தக் கரு வளர்ந்துவிட்டது. கண்ட கை மருந்துகளையும் பாவித்ததாலோ என்னவோ, அந்தக் குழந்தை பிறக்கும் போதே மனவளர்ச்சி குன்றியதாகப் பிறந்துவிட்டது. பொன்னரும் அவர் மனைவியும் அடைந்த கவலைக்கு அளவே இல்லை. எவ்வளவோ பணம் செலவளித்து வைத்தியம் பார்த்தும் அவர்களது முயற்சி பலனளிக்க வில்லை. பெத்த பிள்ளையின் கவலை அவர்களுக்கு நிரந்தரமாகியது. காலங்கள் ஏக்கங்களோடு கரைந்து, அந்தப் பிள்ளை இப்போது வளர்ந்து பெரியவனாகி விட்டான். கடந்துவிட்ட இத்தனை ஆண்டுகளிலும் அவனோடு அவர்கள் பட்டதுன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. மனநோயாளிகளின் மருத்துவநிலையங்களில் வைத்திருந்துகூட அவனை பராமரித்துப் பார்த்தார்கள். அவன் தெளிவடையவே இல்லை.

உத்தியோக மாற்றல் காரணமாக பொன்னர் வெளியிடங்களுக்குப் போய்விடுவதால், அவர் மகனோடு இருந்து கஸ்ரப்பட்டதைவிட, அவரது மனைவிதான் அவனோடு மல்லுக்கு நின்று தன்னையே உருக்கிக் கொண்டாள். மகனின் சோகம் அந்தத் தாயை சீக்கிரமே நோயாளி ஆக்கியது. திடீனென ஒருநாள் அவள் கண்ணை மூடியபோது பொன்னர்கூட அவளருகில் இருக்கவில்லை. மனைவியைப் பிரிந்த சோகமும், மகனுக்கு வேண்டிய துணையின் அவசியமும் அவரை நிலைகுலைய வைத்தது. உத்தியோகமா, பெற்ற மகனா என்ற நிலை வந்தபோது, அவர் வேலையை விடுவதற்கே முடிவு செய்தார். அதனால்தான் அவர் மூன்று நான்கு வருடங்கள் சேவை செய்யக்கூடிய கால அவகாசம் இருந்தும், வேலையை கைவிட்டு, அரைகுறைப் பென்சனோடு சொந்த மண்ணுக்கே வந்து சேர்ந்தார். அவரது ஓரே மகளும் திருமணம் முடிந்த கையோடு கணவனுடன் வெளிநாட்டுக்குப் போய்விட்டதால், சகலதையும் பொன்னரே பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

மனைவி உயிரோடு இருக்கும்வரை எல்லாக் கவலைகளையும் தங்களுக்குள்ளேயே  பகிர்ந்துகொண்டார்கள். அவளும் போய், மகளும் வெளிநாடு போனபின், மனநோயாளியான மகனோடு அல்லாடும் ஒரு நிலை பொன்னருக்கு ஏற்பட்டது. அதனால்தான் துணையில்லாத நீண்ட காலத் தனிமை அவரை ஆட்டிப் படைத்ததென்று சொல்லலாம். அந்தத் தனிமைதான் அவரது மனக்கட்டுப்பாட்டை தகர்த்திருக்கிறது என எண்ணத் தோன்றியது எனக்கு. தனிமையினால் உண்டாகும் ஏக்கங்கள் சபலங்களாக உருவெடுப்பது இயற்கை. ஆனால், அதற்கான வடிகாலைத் தேடி அலையும் துணிவு எல்லோருக்கும் இருப்பதில்லை. நடுத்தர வயதுக்கும் முதுமைக்கும் இடைப்பட்ட காலம், கையாலாகாத காலம் என்று சொல்லலாம். கடந்துவிட்ட இளமைக் காலத்தை எண்ணி ஏங்குகின்ற கோடை காலமாகவும் அதைச் கொள்ளலாம். அதுவும் துணைக்கென்று ஒருத்தி இல்லையெனில், உடல் உணர்வுகளோடு தவிக்கின்ற நிலை தவிர்க்க முடியாததாகிவிடும். கவர்ச்சியால் எவளும் தேடிவந்து ஒட்டிக்கொள்ளும் வயதா எங்களுக்கு? மனதை மட்டும் அதன் போக்கில் அலையவிட்டு, எவளும் வந்து அணையமாட்டாளா என்று ஏங்கும் நிலைதான் அனேகருக்கு...! அந்த நிலையில்தான் பொன்னரும் இருந்தார் என்றே சொல்லவேண்டும். ஆனாலும், எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டிக் கொள்ளாதவரான அவரால் இந்த விசயத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் போனதுதான் ஆச்சரியம். மனக்கட்டுப்பாட்டுக்குச் சோதனை வந்தபோது, உடல் சுகம் தேடி வெளியிடம் செல்லும் மனத்துணிவின்றி, சொந்த உள்ளுரிலேயே சாபக்கேடாக அமைந்த ஒருத்தியிடம் தன் தாகத்தை தீர்த்துக் கொண்டாரோ...? என எண்ணத் தோன்றியது எனக்கு.

பணத்துக்காக உடலை விற்கும் பெண்கள் எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆண்களின் பலயீனத்தைப் பயன்படுத்தி பிழைப்புக்கு வழிதேடும் பெண்கள் அதிகமாக நகர்ப்புறங்களையே தங்கள் தளமாக ஆக்கிக் கொள்கிறார்கள். ஆனால், எங்கள் ஊர்க்காரியான அருந்ததியோ இந்தக் கிராமப் புறத்திலேயே தன் உடலை விற்கவென பாயை விரித்திருந்தாள்.

பருவவயதை எட்டும்போதே தந்தையை இழந்து, தான்தோன்றித் தனமாக வளர்ந்தவள் அருந்ததி. தான் ஒரு அழகி என்ற மமதை அவளுக்கு! பருவத்துக்கு வந்தபோதே தன் அழகை ஆயுதமாக்கி, இளமட்டங்களை  வட்டமடிக்க வைத்தவள். பருவத்து உணர்வுகள் விழித்துக் கொண்டபோது, நெருக்கம் கொண்ட எவருடனும்  அதைப் பங்குபோட அவள் தயங்கவில்லை. இச்சைகளைத் தாண்டி பணத் தேவை அதிகமானபோது, தன் உடலையே அவள் விலைப்பொருள் ஆக்கிக்கொண்டாள். அவள் பெயர் அருந்ததி என்றாலும் கூட, அவளில் விழிப்பதற்கே ஊரவர் தயங்கும் அளவுக்கு அவளது நடவடிக்கைகள் எல்லை கடந்துவிட்டன.

அருந்ததியைத் தேடிவரும்  வெளியாரின் நடமாட்டம் ஊருக்குள் அதிகரித்ததால், இரவில் பெண்கள் நடமாடவே தயங்கினார்கள். ஒன்றுக்குள் ஒன்றான உறவென்பதாலும், உள்ள10ரிலேயே பலரது  கைரேகைகள் அவளிடத்தில் பதிவாகி இருந்ததாலும், ஊர்கூடி அவளைத் தண்டிக்கவோ விரட்வோ முடியாத சங்கடநிலை இருந்தது. கண்டிக்கத் துணிந்தவர்கள் கூட, அவளது வசைமாரிக்குப் பயந்து ஒதுங்கவே செய்தார்கள். முச்சந்தியில் வைத்து, வயதுக்கு மூத்தவர்கள் என்றுகூடப் பாராமல், எவரையும் வாய்க்கு வந்தபடி திட்டி அவமானப்படுத்தக் கூடியவள்தான்; அருந்ததி. அப்படிப்பட்ட திமிர் பிடித்த ஒரு வேசியிடம், பொன்னம்பலம் போன்ற ஒரு கௌரவமான ஊரவன் போய் வந்ததை எப்படி ஜீரணிக்க மூடியும்...! யாருக்கும் தெரியாமல் இது நடந்திருந்தால், அது வெளிவராதவரை எந்தப் பிரச்சனையுமில்லை. ஆனால் அவர் அருந்ததியிடம் போய் வந்ததை இளமட்டங்கள் இரண்டுபேர் பார்த்துவிட்டார்களே...! அவர்கள் பார்த்துவிட்ட விடயம் பொன்னருக்கு  இன்னமும் தெரியாதென்பது ஒருபுறம், அவர்கள் அதை வெளியே சொல்லாததால்தான், ஊர் இன்னமும் அடங்கிக் கிடக்கிறது என்பதையும் பொன்னர் அறியமாட்டார்

பொன்னர் அருந்ததியிடம் போய்வந்த விசயத்தை, அந்த இளமட்டங்கள்  தங்கள் நண்பனிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதுதான், நான் அதைக் கேட்க நேர்ந்தது. எதிர்பாராத அதிர்ச்சி என்றாலும், அந்த விசயத்தை பரவவிடாமல் தடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. ஒரு நல்ல மனிதன், அதுவும் எனக்கு இருக்கும் ஒரே நண்பன் மனைவியை இழந்து நெடுங்காலமாக தனிமையில் வாடும் ஒருவன், ஏதோ ஒரு சபலத்தில் இப்படி நடந்துவிட்டான் என்பதற்காக அவன் அவமானப்படுவதை என்னால் அனுமதிக்க முடியவில்லை. அந்த இளைஞர்களிடம் எவருக்கும் சொல்ல வேண்டாமென்று நான் மன்றாட்டமாகக் கேட்டுக் கொண்டேன். ஊரின் உயர்வுக்கு உதவும் ஒருவரென்பதால், அவரைக் காட்டிக்கொடுப்பதில்லை என்று அவர்களும் சத்தியம் செய்தார்கள். அவர்கள் பொன்னம்பலத்தாரை அருந்ததி வீட்டில் பார்க்க நேர்ந்த விபரத்தை மட்டும் கேட்டுத் தெரிந்துகொண்டேன். தயக்கத்தோடு அவர்கள் நடந்ததைச் சொன்னார்கள்.

சம்பவதினம் இரவு நேரம், மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. சாப்பாட்டை முடித்துக் கொண்டு, வழமைபோல் ஒன்றுகூடி பொழுதை போக்கவென தங்கள் வீடுகளிலிருந்து தெருவுக்கு வந்த அந்த இரு இளைஞர்களையும், ஊர்நாய்களின்  குரைக்கும் ஓசை பலமாக வரவேற்றது. அந்தச் சத்தம் அருந்ததி வீட்டுப் பக்கமிருந்தே வந்ததால், யாரோ ஒரு வெளியாளின் நடமாட்டம் அருந்ததி வீட்டில் இருப்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அவனை எப்படியும் பிடித்துவிடுவது என்று முடிவெடுத்த அந்த இளைஞர்கள், அதற்கேற்ற மறைவிடமொன்றில் இருக்கும் மதில்மேல் ஏறி அமர்ந்து கொண்டார்கள். அவர்கள் காத்திருந்த வேளை இரவு நேரமென்பதால், தெருவில் சனநடமாட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.

ஓய்ந்திருந்த நாய்களின் குரைக்கும் ஓசை சிறிது நேர இடைவெளியின் பின் மீண்டும் பலமாகக் கேட்க ஆரம்பித்தது. உள்ளே போனவன் திரும்புகிறான் என்பது இளைஞர்களுக்குப் புரிந்தது. அவர்கள் எதிர்பார்த்ததுபோல் அருந்ததி வீட்டு ஒழுங்கையால் வந்த அந்த உருவம், தெருவில் இறங்கி வேகமாக நடக்க ஆரம்பித்தது. சிறிது தூரம் போகவிட்டு அவனை மடக்கும் நோக்கில், மதிலிலிருந்து அந்த இளைஞர்கள் குதித்து இறங்க முயன்ற வேளை, வாகனமொன்று ஒளி பாய்ச்சியபடி சந்தியிலிருந்து திரும்பியது. அருந்ததி வீட்டிலிருந்து வந்த உருவத்தின்மேல் அந்த வெளிச்சம் பரவியபோது, மதில்மேல் குந்தியிருந்த அந்த இளைஞர்கள் இருவரும் திகைப்பில் உறைந்துவிட்டார்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒருவரை அவர்கள் அங்கே கண்டார்கள். ஊரிலேயே உயர்ந்தவர் எனக் கருதப்பட்ட பொன்னம்பலத்தை, இப்படியான இடத்தில் அந்த இளைய தலைமுறை காணநேர்ந்தபோது, அவர்கள் உண்மையிலேயே மனம் உடைந்து போனார்கள். நாகரீகம் என்ற பெயரில்  இளைஞர்கள் முறை தவறி நடக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டே, வயதானவர்கள்தான் பெரியவர்கள் என்ற போர்வையில் சமுதாயத்தை சீரழிக்கிறார்கள் என்று அந்த இளைஞர்கள் எண்ணும்படியாக அன்று அந்தச் சம்பவம் அரங் கேறியது. ஊரில் இருப்பவர்களுக்கு பொன்னரின்மேல் இருக்கின்ற நன்மதிப்பும், நடந்ததை மற்றவர்களுக்குச் சொல்வதால் எவருமே இலகுவில் அதை நம்பமாட்டார்கள் என்ற தயக்கமும் சேர்ந்து அந்த இளைஞர்களை வாயடைக்க வைத்தது. ஆனாலும், தங்கள் மனப்பாரத்தை இன்னொரு நண்பனோடு பகிர்ந்து கொள்வதை அவர்களால் தவிர்க்க முடியவில்லை. அவர்களது உரையாடலைத்தான் தற்செயலாக நான் கேட்கும்படி நேர்ந்தது!           

 அருந்ததியின் நடத்தையால் ஊரின் பெயரே நாசமாகிறதென்று, அவளோடு நேரடியாகவே மோதியவர் பொன்னம்பலம். அவளை ஊரைவிட்டே விரட்டவேண்டும் என்று ஊரைக் கூட்டி தீர்மானம் போட்டவர். அப்படிப்பட்ட ஒருவர் இன்று அவளது மடியிலேயே போய் விழுந்திருக்கிறார் என்றால், இந்த விசயம் வெளியே தெரியவரும் பட்சத்தில், எவ்வளவு பெரிய அவமானம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்! அப்படி ஒரு அவமானத்தை தாங்கிக் கொண்டு அவரால் இந்த ஊரில் வாழத்தான் முடியுமா...?

சரி பிழைக்கு அப்பாற்பட்டு என் மனம் என் நண்பனுக்காக இரங்கியது. தனிமையின் கொடுமை செய்த சதிக்காக அவன் தண்டிக்கப்படுவதை என்மனம் ஒப்பவில்லை. கண்ணால் கண்ட சாட்சிகளான அந்த இளைஞர்களை நான் கட்டுப்படுத்தி விட்டாலும், விசயம் வெளியே கசிய ஆரம்பித்துவிட்டது என்று பொன்னரை எச்சரிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு என்னுள் எழுந்துவிட்டதால், அதை அவருக்குத் தெரியப் படுத்தும்வரை என் மனஉழைச்சல் ஒரு போதும் ஓயாது என்பது எனக்குப் புரிந்தது. 'அகப்பட்டு விட்டோமே...!' என்று தெரிந்ததும் அவர் மனநிலை எப்படி இருக்கும் என்று எனக்குள்ளே சிந்தித்துப் பார்த்தேன். நினைப்பதற்கே எனக்குச் சங்கடமாக இருந்தது. அவரது திரைமறைவு வாழ்க்கை எத்தனை நாட்களாக நடக்கிறதோ தெரியவில்லை! நிலைமை மேலும் மோசமாவதற்கு முன் அவரை எச்சரிக்க வேண்டும் என்ற முடிவோடு, வராத என் தூக்கத்தை மீண்டும் வரவழைப்பதற்காக திரும்பவும் வந்து படுத்துக் கொண்டேன்.

.........................................

மறுநாள் நான் பொன்னம்பலத்தைத் தேடி அவர் வீட்டுக்குச் சென்றேன். அவர் கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்தார் நான் அவர் வீட்டு மல்லிகைப் பந்தலின் தென்றலை சுவாசித்தபடி நின்றிருந்தேன் என்னைக் கண்டதும் அவர் சீக்கிரமே குளித்து முடித்துவிட்டு தலையைத் துடைத்தபடி முற்றத்துக்கு வந்தார்.

'
என்னடாப்பா உன்னை இந்தப் பக்கம் காணவே கிடைக்குதில்லை...!|| என்ற அவரது குரலில் நட்புக்கான வரவேற்பு இருந்தது.

 'உன்னைப்போல நானும் பென்சன் எடுத்திட்டனெண்டால் அடிக்கடி சந்திக்கலாம்...!' என்று சொல்லியபடி அவர் முகத்தை ஊன்றிக் கவனித்தேன். அவரது தோற்றத்தில் எந்த  மாறுதலையும் காண முடியவில்லை. என்னைக் கண்டுவிட்டால் அவரிடத்தில் ஏற்படும் உற்சாகத்தை அன்றும் கண்டேன். நான் அவரிடம் சொல்ல நினைக்கும் வார்த்தைகள் அந்த உற்சாகத்தை அழித்துவிடும் என நினைக்கும்போது உண்மையிலேயே என்மனம் என் நண்பனுக்காக ஏங்கியது.

'வாவன்... பொன்னர் கோயிலடிப்பக்கம் போய் வருவம்...!|| என்று என் தவிப்பை மறைத்தபடி அழைத்தேன்.

'
அதுக்கென்ன போவம், இரு வாறன்...!' என்றபடி வீட்டினுள்ளே சென்றார் பொன்னர். நான் முற்றத்தில் உலாவியபடி நின்றேன். என் மனமோ, எப்படி அவரிடம் விசயத்தை சொல்வதென்று  ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தது. பார்வையை அங்குமிங்கும் ஓடவிட்டேன் வயதான ஒரு தந்தையும், மூளை வளர்ச்சி குன்றிய மகனும் மட்டுமே வாழுகின்ற அந்த வீட்டில் தெரிந்த இனம்புரியாத அமைதி என் மனதை ஏதோ செய்தது. சனி, ஞாயிறு தினங்களில்  பொன்னம்பலத்தாரின் சகோதரி தன் பிள்ளைகளோடு வந்து இவர்களுக்குத் தேவையான சிலவற்றை செய்து கொடுத்துவி;ட்டுப் போவாள். மற்றும்படி வேறு எவரது நடமாட்டமும் அங்கு அதிகம் இருப்பதில்லை. பயித்தியம் வாழும் வீடு என்ற பயமும் அதற்கொரு காரணமாக இருக்கக் கூடும்.

 
தோள்மேல் ஒரு சால்வையைப் போர்த்தபடி பொன்னம்பலம் வெளியே வந்தார். இருவரும் தெருவில் இறங்கி நடந்தோம்.

'எங்க அவன் தம்பியைக் காணேல்லை...|| என்று அக்கறையோடு நான் விசாரித்தேன்.

 'வீட்டுக்குள்ளையே அடைந்து கிடந்தான்... வில்லங்கப்படுத்தி நான்தான் வயலுக்குள்ள விளையாடுற பொடியங்களோடை விட்டுட்டு வந்திருக்கிறன். விளையாடாட்டிலும் பரவாயில்லை, ஒருத்தரோடையும் பிரச்சனைப்படாமல பார்த்துக்கொண்டாவது இரு எண்டு சொல்லிப்போட்டு வந்தனான்...!'

'இப்ப எப்பிடி இருக்கிறான்...? முந்தினமாதிரி கட்டிப்போடுற நிலமை ஏதும் இருக்கோ...?' நான் தயங்கியபடி கேட்டேன்.

'இல்லை... இப்ப அந்த நிலைமை இல்லை, தானும் தன்பாடுமாக இருக்கிறான்...  ஏதும் சொன்னால் சொன்னபடி செய்யிறான்... மற்றும்படி எந்தப் பிரச்சனையும் பெரிசாக இல்லை...!'  பொன்னம்பலத்தாரின் குரலில் சோகம் இருந்தாலும், முன்புபோல் விரத்தி அதிகம் இருக்கவில்லை என்பதை கண்ணுற்றேன்.

 நாங்கள் கோயில் வாசலுக்குச் சென்றபோது, மாலைப்பூசை முடியும் தருவாயில் இருந்தது. சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு விபூதி சந்தணம் வாங்கிப் பூசியபடி, வெளிமண்டப மணலில் வந்து அமர்ந்துகொண்டோம்.

சிறிது நேரம் எதுவும் பேசாமலே இருவரும் அமர்ந்திருந்தோம். சூரியன் கிழக்கே மறைந்து கொண்டிருந்தான். மாலை நேரச் சுடுகாற்று, நிரம்பி நின்ற குளத்தை முத்தமிட்டு  குளிர்ச்சியை போர்த்தபடி, கோயில் மண்டபத்தை தாண்டிச் சென்றபோது, உடலெங்கும் ஒருகணம் சிலிர்த்தது. அந்த இயற்கை சுகத்தை அனுபவித்தபடி இருவரும் சிறிதுநேரம் அமர்ந்திருந்தோம். என் மனமோ பொன்னரிடம் பேச வேண்டிய விசயத்தைப் பற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. கோயிலுக்கு வந்த கூட்டமும் கலைந்துவிட்டது. 'பேச்சை ஆரம்பிக்கத்தான் வேண்டும்... ஆனால் எப்படி...?' என்று சிந்தித்தபடி அமர்ந்திருந்தேன். என் அமைதி பொன்னரின் மௌனத்தை கலைத்தது.

'என்ன திடீரெண்டு மௌனமாகிவிட்டாய்...? கோயில் வீதியில விளையாடுற பொடியளைப் பார்த்ததும் உனக்குப் பழைய ஞாபகங்கள் வந்திட்டுதுபோல...!' என்று என் முதுகில் தட்டினார் பொன்னர். செயற்கையாக ஒரு புன்னகையை வெளிக்காட்டிய என் மனதின் தவிப்பை அவர் எப்படி அறிவார்.!

'மௌனத்தைக் கலைக்கவேண்டிய நிலை...! சொல்லி விடுவதென்ற முடிவில் மாற்றம் இல்லை என்றாலும், தொண்டையை ஏதோ அடைத்துக் கொள்கின்றதே...!' தயக்கத்தோடு பொன்னரை ஏறெடுத்துப் பார்த்தேன். அவர் என்னையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. தாமதம் வேண்டாம் என்ற முடிவோடு மனiதைத் திடப்படுத்திக் கொண்டேன்.

'காதிலை வீழுந்த ஒரு விசயத்தைப் பற்றி கேட்கவேணுமெண்டுதான் உன்னைத் தேடி வந்தனான். அதை எப்படிக் கேட்கிறதெண்டு தயக்கமாக இருக்கு...!' என்று நான் சொல்லும்போதே அவர் முகத்தில் கலவரத்தின் அறிகுறி தெரிந்தது. பதட்டத்தோடு என்னைப் பார்த்தவர்,

'என்னடாப்பா... என்ன விசயம் சொல்லன்...!' என்று என்னை ஊன்றிப் பார்த்தபடி கேட்டார்.

முகத்துக்கு நேரே கேட்பதற்கு சங்கடப்பட்ட நான், அவர்மேலிருந்த என் பார்வையை விலக்கிக்கொண்டு கேட்க நினைத்ததை கேட்டுவிட்டேன்

'அருந்ததி விட்டிலை உன்னைக் கண்டதாக காத்துவாக்கில ஒரு பேச்சு அடிபட்டுது... அது உண்மையாக இருக்காதெண்டு தெரிஞ்சாலும், ஏன் அப்படி ஒரு பேச்சு வருவான் எண்டதுக்காகத்தான் கேக்கிறன்...!' என்று ஒருவிதமான நழுவல் போக்கில் என் சந்தேகத்தை கேட்டேன். என் வார்த்தைகளைக் கேட்டதும், அவர் உடல் ஒருகணம்; அதிர்ந்ததுபோல் நடுங்கி ஓய்ந்தது. விறைத்ததுபோல் அமர்ந்துவிட்ட அவரது தோற்றத்தைக் கண்டு எனக்கே பயம் வந்துவிட்டது. அவரையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அவமானப் பட்டுவிட்ட உணர்வில் அவர் கூனிக்குறுகிவிட்டதைக் கண்டு எனக்கே வேதனையாக இருந்தது. அவரிடமிருந்தே பதில் வரட்டும் என்ற முடிவோடு தொடர்ந்தும் நான் மௌனம் காத்தேன். சிறிது நேர அமைதியின் பின் அவரே மௌனத்தைக் கலைத்தார். ஆனால், பதில் சொல்வதற்கு மாறாக, பதில்கேள்வியாகவே என்னிடம் கேட்டார்.

'உனக்கு யார் சொன்னது...?' என்ற அவரது ஒற்றைக் கேள்வியில், அருந்ததியிடம் போய் வந்ததற்கான ஒப்புதலும் இருப்பதாக எனக்குப்பட்டது. அபாண்டமான ஒரு குற்றச்சாட்டாக என் கேள்வி இருந்திருந்தால் அவருக்கு ஆவேசம்தான் வந்திருக்க வேண்டும்...! பதிலுக்கு அவர் தலை குனிகிறாரென்றால், குற்றத்தை ஒப்புக்கொள்கிறார் என்றுதானே அர்த்தம்...?

'யார் சொல்லி நான் அறிந்திருந்தாலும், அவளிடம் நீ போய்வந்த விசயம் வெளிக்குத் தெரியவந்தது எவ்வளவு பாதிப்பான விசயமெண்டு உனக்குப் புரியுதா...?' என்று எனது மனத்தவிப்பை வெளிப்படுத்தினேன். பதிலைத் தேடுவதுபோல் பொன்னர் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவரது சங்கடத்தைப் போக்க நினைத்து, நானே பேச்சைத் தொடர்ந்தேன். 'உன்னுடைய நிலைமை எனக்குப் புரியும் பொன்னர்...! இருந்தாலும், இவ்வளவு காலமும்  சம்பாதிச்சு வைச்சிருந்த நல்ல பெயரை இவளட்டைப் போயா நீ கெடுத்துக் கொள்ள வேணும்..? மனைவியை இழந்த உன்னுடைய தனிமையுணர்வை என்னால புரிஞ்சுகொள்ள முடியும். நானும் நடுத்தர வயதைக் கடந்தவன்தான். என்னுடைய வயதை ஒத்தவனான உனக்குள்ள இருக்கக்கூடிய ஆசாபாசங்களை என்னால் உணர்ந்து கொள்ள முடியும். உடல் உணர்வுகள் ஆட்டிப் படைக்கும்போது மனைவியை இழந்த உனக்கு ஏற்படக்கூடிய தடுமாற்றம் இயற்கையானதுதான்! அதுக்காக அருந்ததியட்டைப் போய் விழுந்தாயே எண்டதைத்தான் என்னால நம்ப முடியாமல் இருக்கு! ஒரு உயர்ந்த மனிதனாக உன்னை மதிக்கின்ற இந்த ஊரிலை, சொந்த பந்தங்கள் உன்னை சுற்றி இருக்கிற நிலையிலை, உன்னுடைய நிதானம் எப்படித் தவறியது எண்டதுதான் எனக்குப் புரியேல்லை...!' என்று ஆதங்கத்தோடு சொன்னேன். நான் சொல்வது எதுவும் அவரை  குத்திக்காட்டுவதுபோல் இருக்கக்கூடாது என்ற எச்சரிக்கை என் வார்த்தைகளில் இருந்தது.

 பொன்னர் பதில் ஏதும் சொல்லாமல், தலையைக் குனிந்தபடி மணலைக் கிளறியவாறு அமர்ந்திருந்தார். பதட்டத்தையும், கைவிரல் நடுக்கத்தையும் மறைப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார் என்பது புரிந்தது. எதையும் என்னிடம்  மனம்விட்டுப் பேசத் தயங்காத ஒருவர், இந்த விசயத்தில் தயக்கம் காட்டுவது, குற்ற உணர்வினால்தான் என்பது எனக்குப் புரிந்தாலும், நட்புக்கு இருக்கும் வலிமையென்பது, ஒழிவு மறைவின்றிப் பழகுவதில்தான் தங்கியிருக்கிறது. ஆகவே, எதையும் எனக்கு மறைக்கமாட்டார் என்ற நம்பிக்கையோடு அவரையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

 வயல்வெளியில் திடீரென ஆரவாரம் கேட்டது. பையன் ஒருவன் அடித்த பந்து, கோபுரத்தை தாண்டி பறந்து சென்றதால் எழுந்த ஆரவாரமே அது. ஒருகணம் வயலின் பக்கம் திரும்பிய என் பார்வை, மீண்டும் பொன்னரிடம் திரும்பியபோது, அவர் விழிகளில் கண்ணீர் துளிகள் நிறைந்திருப்பதைக் கண்டு பதறிவிட்டேன்.

'பொன்னர் என்ன இது...? நடந்தது நடந்து போச்சு..! அதுக்கேன் கண் கலங்கிறாய்...? யாரும் பாக்கிறதுக்கிடையில கண்ணைத் துடை. உந்த விசயத்திலை யார்தான் பிழை விடேல்லை...? சபலம் எண்டது பொதுவாகவே  எல்லா ஆண்களிடமும் இருக்கிற ஒரு பலயீனம். சிலர் கௌரவக் குறைவாக நினைச்சு வெளிக்காட்டிக் கொள்ளுறதில்லை. சிலர் மனத்துணிவில்லாமல் கற்பனையோடயே வாழ்ந்திடுவினம். சிலருக்கு அந்; வாய்ப்பே இல்லாமல் போறதுமுண்டு. ஆனால், உன்னைப் பொறுத்தவரை வெளியிடத்து வாய்ப்புகள் அதிகம் இருந்திருக்கு. பிறஊர்களில் வாழ்ந்து பழக்கப்பட்ட நீ, பயமோ தயக்கமோ இல்லாமல், எங்கேயாவது பிறஇடத்தில முகம் தெரியாத ஒருத்தியோட இருந்திட்டு  வந்திருக்க முடியும். அப்படி நடந்திருந்தால் உன் கௌரவம் பாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது...!|| என்று நான் சொல்லும்போதே முகம் சிவந்து கோபத்தோடு பொன்னர் தன் கையை நிமிர விரித்து என் பேச்சை அவசரமாகத் தடுத்தார். நான் திகைப்போடு அவரை ஏறெடுத்துப் பார்த்தேன். அவர் பார்வை என்னைத் துளைப்பதுபோல் இருந்தது. அவரிடமிருந்து வெளிவந்த வார்த்தைகளும் என்னை வாயடைக்க வைத்தன.

'அவள் வீட்டுக்கு யாரும் போனால் அதுக்கு ஒரே ஒரு அர்த்தம்தானா...?' என்று அவர் கேட்ட கேள்வி, என்னை ஒருகணம் திகைக்கவைத்தது. அவர் தப்பிக்கொள்ள நினைக்கிறாரா? அல்லது விசயத்தையே மறைக்க நினைக்கிறாரா? என்று  என்னால் அனுமானிக்க முடியவில்லை. அவர் ஆரம்பத்தில் காட்டிய கண்ணீர் முகம் இப்போ எனக்கு அன்னியமாகப் பட்டது. நானும் என் கேள்வியிலிருந்து பின் வாங்கவில்லை.

'அது ஒன்றைத் தவிர... வேறு எதற்கும் அவளிடம் ஆண்கள்  போவதில்லையே...?' என்று  நேரடியாகவே சொன்னேன்.

'மேய்ச்சலுக்குப் போய் வீடு திரும்பாத ஆடு, மாடு கோழிகளை அயல் வீடுகளில் தேடுறதில்லையா...?' என்ற அவரது பதில் எனக்கு வேடிக்கையாகவும், மனதில் ஒருவித எரிச்சலையும் ஏற்படுத்தியது.

'மிருகங்களுமா அவளைத் தேடிப் போகுதுகள்...?' என்று பதிலுக்கு கேட்ட என் நகைச்சுவையை நானே ரசித்தபடி நக்கலாகப் புன்னகைத்தேன். என் புன்னகை அவர் மனதை கீறிவிட்டதன் பிரதிபலிப்பு அவர் பார்வையில் தெரிந்தது. வார்த்தைகளால் எல்லையை தாண்டி விட்டேனோ என்ற உணர்வோடு அந்த மணல் தரையில் நெழிந்தேன். 'நீயுமாடா...?' என்பதுபோல் அவர் பார்வை என்னைத் துளைத்தது. ஆனால், ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அவர் முகத்தில் அந்த விரத்தியான பார்வை இருந்தது. தோழிலிருந்து நழுவிய துண்டை எடுத்து முகத்தை அழுத்தித் துடைத்து விட்டு, மீண்டும் தோளைச் சுற்றிப் போர்த்தபடி நிமிர்ந்து அமர்ந்தார். சிறிது நேரம் அவர் கண்கள் என்னையே உற்று நோக்கியபடி இருந்தன. முகத்தில் இருந்த சலனங்கள் மறைந்து, அவரிடமிருந்து வார்த்தைகள் நிதானமாகவே வெளிவந்தன.

'ஆடு மாட்டைத் தேடியோ, அருந்ததியட்டை சுகம் தேடியோ நான் அங்க போகேல்லை..., அவளை தேடிப்போன என்னுடைய மகனைத் தேடி அங்க போனேன்...!' என்று அவர் சொன்ன வார்த்தைகள் என் சிந்தையில் உறைக்க நெடுநேரமாகியது.

'... ... என்ன சொல்லுறாய் பொன்னர், அந்த நேரத்திலை அவன் ஏன் அங்க போனான்...?'   நான் திகைப்பு மாறாமல் கேட்டேன்.

'இளம் வயதில் உனக்கும் எனக்கும் வந்த இளமை ஏக்கம் அவனுக்கும் வந்திருக்கு... அதைத் தேடி அவனும் போயிருக்கிறான்...!|| என்று அமைதியாகவே பதில் சொன்னார் பொன்னர்.

'ஒரு தகப்பன் பேசும் போச்சா இது பொன்னர்...!' என்ற என் குரல் அக்கம் பக்கத்தை உணராமலே ஓங்கி ஒலித்தது. ஆனால் பொன்னரின் முகத்தில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. என்னையே உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். அந்தப் பார்வையில் வேதனையின் சுவடுகள் பதிந்து கிடப்பதை என்னால் உணர முடிந்தது. அவர் கண்களிலிருந்து விழத்துடிக்கும் கண்ணீர் என் இதயத்தைச் சுட்டது. 'நீயுமா என்னை தவறாக நினைக்கிறாய்...?' என்பது போன்ற ஏக்கப்பார்வை அவர் கண்களில் தெரிந்தது. என்னால் எதுவுமே பேச முடியவில்லை. நா வறண்டு, உதடுகள் ஒட்டிக் கொண்டுவிட்ட உணர்வு எனக்கு. தவிப்போடு அவரை நிமிர்ந்து பார்த்தேன். நெஞ்சில் நிறைந்துவிட்ட சோகத்தை கொட்டிவிடும் தவிப்போடு என் கைகளைப் பற்றிக் கொண்டார்.

'ஒரு அப்பன் பேசும் பேச்சா என்று கேட்டாய்...! உண்மைதான், இதை யாருமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள்தான். ஆனால், தோளுக்குமேல் வளர்ந்துவிட்ட மூளை வளர்ச்சி குன்றிய ஒரு முரட்டுப் பிள்ளையை நீ வளர்த்திருந்தால், என் நிலைமை உனக்குப் புரிந்திருக்கும். என் மகனால் நான் அடைந்த துன்பங்கள் வேதனைகள் எல்லாமே அறிந்தவன் நீ...! அவனது மனநோயை குணப்படுத்த எங்களால் இயன்றவரை முயற்சித்தோம். மற்றப் பிள்ளைகளைப்போல்  அவன் சாதாரணமானவனாக மாறமாட்டானா என்ற ஏக்கதத்தோடையே என் மனைவி போய்ச் சேர்ந்துவிட்டாள். எப்போது சாதாரணமாக இருப்பான், எப்போது சன்னதம் கொள்வான் என்று சொல்ல முடியாத மனநிலைப் பாதிப்பு அவனுக்கு இருந்தது. மற்றப்பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடுவான், திடீரென எல்லோரையும் போட்டு அடித்துவிட்டு வந்துவிடுவான். சிலநேரம் பார்த்தால் இவனுக்கா பயித்தியம் என்று சொல்லும்படியாக நடந்து கொள்வான். என் மனைவி போனபின் இவனோடு நான் பட்டதுன்பங்கள் எத்தனையோ...! இருந்தாலும், ஒரு பருவம்வரை என்னால் அவனை சமாளிக்க முடிந்தது. அவன் வாலிபவயதை எட்டிவிட்டபின், புதிதாக சிக்கல்கள் உருவாக ஆரம்பித்தன. பருவ வயதுக்குரிய ஆசைகளும், தேவைகளும் அவனிடத்தில் புகுந்து கொண்டதை என்னால் உணர முடிந்தது. அவனது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் எனக்கு கலக்கத்தை ஊட்டின. எதற்கோ வெறிபிடித்து அலைவதுபோன்ற தவிப்பை அவனிடம் கண்டேன். உனக்குச் சொன்னாலென்ன..., இளம் பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு வெறித்தனம் அவன் கண்களில் தெரிவதைக் கண்டேன். கோயிலடி ஆலமரத்தில் ஏறியிருந்து, குளத்தில் குளிக்கும் பெண்களை திறந்தவாய் மூடாமல் அவன் பார்த்துக் கொண்டிருப்தை என் கண்களால் கண்டேன். பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் கிணற்றில் குளிக்கும்போதும் வேலி ஓட்டையால் அவன் நோக்குவதையும் நான் காண நேர்ந்தது. அதைவிட மோசம் என்னவென்றால்..., என் சகோதரிக்கு ஒரு மகள் இருக்கிறாள். எங்களை பார்க்கவென வாராவாரம் தாயோடு அவளும் கூட வருவாள். அவளுக்கு  என் மகனைச் சீண்டி விளையாடுவது ஒரு பொழுது போக்கு. எதையாவது அவன்மேல் வீசி எறிந்துவிட்டு ஓடி ஒழிந்துகொள்வாள். அவன் தேடிப்பிடித்து  அவளை இழுத்து வருவான். அவள் திமிறிவிட்டு ஓடுவாள். இவன் மீண்டும் கலைத்துப் பிடிப்பான். முன்பெல்லாம் அவன் பிடியில் ஒரு விளையாட்டுத்தனம் இருந்தது. ஆனால் இப்போது அவனது பிடியில் ஒரு வெறித்தனம் இருப்பதை நான் கண்டேன். இளமைப் பருவத்தை கடந்துவந்த ஒரு அப்பனான என்னால் அவனது ஆத்துமீறல்களை புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு பெண் பிள்ளையின் பாவாடையை எடுத்து தலைக்கு அடியில் வைத்துப் படுக்கும் அளவுக்கு அவனது பருவத்து உணர்வுகள் அலையத் தொடங்கிவிட்டன என்பது எனக்கு நெருப்பைக்  கொட்டியதுபோல் ஆகிவிட்டது. என்ன செய்வது என்று புரியாமல் தவித்தேன். எந்தப் பெண் பிள்ளைக்காவது இவனால் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று பயந்தபடியே நாட்களை கழிக்கவேண்டி இருந்தது. கலியாணம் ஒன்றை செய்யக்கூடிய நிலையிலா அவன் இருக்கிறான்..? அவனது வெறித்தனத்துக்கு யாரும் பலியாகிவிடக் கூடாது என்ற பதட்டத்தில், மனநோயாளர் விடுதியில் அவனை விட்டுவிட எண்ணினேன். அங்குள்ள கட்டுப்பாட்டுக்குப் பயந்து அவன் விடுதியில் தங்க ஒருபோதும் விரும்புவதில்லை. அவனை  விட்டுப் பிரிந்திருப்பது எனக்குக்கூட வேதனைதான். அவனை விட்டால் எனக்கென்று யார் இருக்கிறார்கள். திடீரென்று எனக்கு ஏதும் நடந்தாலும், அவன் தனித்துப் போவானே என்ற ஏக்கம் என்னை அரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நான் இல்லாத நிலையில் அவன் வாழ்க்கை ஒரு மனநோயாளர் விடுதியில்தான் கழியும் என்ற தவிப்பு என்னை வாட்டி வதைத்தபடிதான் இருக்கிறது. அதுவும், அவனது பருவ வயதுச் சேட்டைகளால் பெண்கள் யாரும் பலியாகிவிடக்கூடாதே என்ற கவலையோடுதான் நான் காலத்தை கடத்திக் கொண்டிருந்தேன்.

இந்த நிலையில்தான் திடீரென சில மாற்றங்கள் அவனிடத்தில்; ஏற்பட்டிருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. அமைதியான போக்கும், ஒருவகை தெளிவும் அவனிடம் காணப்பட்டது. எது சொன்னாலும் மறுபேச்சின்றி மௌனமாகவே செய்து முடித்தான். பெண்களைக் காணும்போது ஏற்படும் வெறித்த பார்வை மறைந்து போனது. இந்த மாற்றங்களால் அவனது மனநோய் மாறிவிட்டதென்று அர்த்தமல்ல. ஒரு வகை அமைதியும் பொறுமையும் அவனிடத்தில் ஏற்பட்டது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. இப்படி ஒரு மாற்றம் எப்படி அவனிடம் ஏற்பட்டதென்பது, ஆரம்பத்தில் எனக்குப் புரியாத புதிராகவே இருந்தது. அதேவேளை, எனக்குத் தெரியாமல் சில விசயங்கள் என் வீட்டில் நடப்பதையும் என்னால் உணரமுடிந்தது.

ஊரோடு வந்துவிட்ட காலத்திலிருந்து நான் தோட்ட வேலைகளில் ஈடுபட்டிருப்பது உனக்குத் தெரியும்! செத்தல்மிளகாய், வெங்காயம் போன்றவை எப்போதும்  என்னிடம் இருப்பில்; இருக்கும். அவற்றையெல்லாம் ஒரு சிறிய அறையில் போட்டு வைத்திருந்தேன். திடீரென அவற்றின் அளவுகள் குறைந்து வருவதை நான் அவதானித்தேன். வேறு சில சாமான்களும் இருந்தாற்போல்  காணாமல் போயின. அதுமட்டுமல்ல, என் சட்டைப் பையிலிருந்து பணம்கூட இடையிடையே குறைவதை உணர்ந்தேன். முதலில் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. சாமான்கள் குறைந்தபோது, என் சகோதரி எடுத்துக்கொண்டு போயிருப்பாள் என்று எண்ணிக் கொண்டேன். ஆனால் பணம் குறைந்த போது விழித்துக் கொண்டேன். மகனில் சந்தேகம் வந்தது. தொடர்ந்து கவனிக்கலானேன்.

ஒரு நாள் காலை, தோட்டத்தில் ஆய்ந்த காய்கறிகளை ஒரு கூடையில் போட்டு மகனிடம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பினேன். தோட்டத்திலிருந்து நான் சிறிது தாமதித்தே புறப்பட்டேன். மண்வெட்டியை தோளில் சாய்த்தபடி தோட்டத்துச் சந்தியில்  நான் திரும்பியபோது, ஒருகணம் திகைத்து நின்றேன். அருந்ததி வீட்டு பின்புற வேலியோரம் என்மகன் நிற்பதைக் கண்டேன். மறைந்திருந்து அவர்களை நோட்டம் விட்டேன். வேலிக்கு உட்புறம் நின்றிருந்த அருந்ததியிடம் எதையோ எடுத்து அவன் கொடுப்பது தெரிந்தது. ஒரு புன்சிரிபபோடு அதை வாங்கியபடி, என் மகனின் கன்னத்தில் அவள் முத்தமிட்டதையும், அவன் நெளிந்தபடி ஆவலோடு அவளது கன்னத்தை கிள்ளியதையும் நான் கண்டேன். அதைப் பார்த்ததும் நான் திகைப்போடு நின்றிருந்தேன்.

அந்தக் காட்சி ஒன்றே எல்லாவற்றையும் எனக்குப் புரிய வைத்தது அவர்களை அந்த நிலையில் பார்த்த வினாடியில் எனக்கு அதிர்ச்சியும் ஆத்திரமும் ஏற்பட்டதென்றாலும், நின்று நிதானித்து சிறிது நேரம் யோசித்தேன். சில நாட்களாகவே என் பிள்ளையில் தெரிந்த அமைதியும் மாறுதலும் என் நினைவில் வந்து போயின. அவனது அமைதிக்கான வடிகால் எங்கிருந்து கிடைத்திருக்கிறது என்று எனக்குப் புரிந்தது. வாழத்துடிக்கின்ற வயதினை கடந்து கொண்டிருக்கிறான் என்மகன்..! இனிமேல் தானும் அவனுக்கென்றொரு வாழ்க்கை அமையப்போவதில்லை. ஏதோ ஒரு சங்கமத்தில் அவனது உடலின் தேடல் அமைதி கண்டிருக்கிறது. யாரோ ஒரு பெண்ணுக்கு ஏற்பட இருந்த ஆபத்து அருந்ததியால் தவிர்க்கப் பட்டிருக்கிறது...! எந்தப் பெண்ணுக்கும் என் மகனால் இனி ஆபத்தில்லை என்கின்ற மாற்றம் அவனில் தெரிகிறது...! அது ஒன்றே என் பதட்டத்தை படிப்படியாக குறைப்பதுபோல் இருந்தது. மெதுவாக அவர்களது கண்ணில் படாமல் தோட்டப் பக்கம் திரும்பி நடந்தேன்.

உடலை விற்கும் ஒருத்தியின் பார்வை மனநிலை குன்றிய ஒருவனையே துணிந்து குறி வைக்கிறதென்றால் அதற்கு, பணப் பற்றாக்குறைதான் காரணமாக இருக்க முடியும். அருந்ததி ஒரு தாகம் தீர்ப்பவளென்று தெரிந்து கொண்டோ அல்லது, ஒரு பெண்ணுடனான உடல்சுகம் இப்படித்தானென்று பூரணமாக உணர்ந்துகொண்டோ, அருந்ததியிடம் போகும் அளவுக்கு என் மகன் தெளிவானவனல்ல. இவனது தவிப்பான பார்வையை நன்கு புரிந்துகொண்டு, வருமான நோக்கோடு இவனை தன்வசம் ஆக்கியிருக்கிறாள் அருந்ததி. இப்போதெல்லாம் அவளால்  சுதந்திரமாக தொழில் செய்ய முடிவதில்லை. ஆமிக் கெடுபிடியால் இரவில் வெளியே எங்கும் போய்க் கொள்ள முடிவதில்லை. ஊரவரின் இடைவிடாத கண்காணிப்பால், வெளியாரின் நடமாட்டமும் வெகுவாகக் குறைந்துவிட்டது. இவற்றால் அவளது அன்றாட வருமானம் வற்றிப் போகும் நிலை எற்பட்டிருக்கிறது. தனது சீரழிந்த வாழ்க்கையால், ஊரவரிடத்திலும் உதவி பெற முடியாத நிலை அவளுக்கு. அப்படிப்படட்ட ஒரு வங்குறோத்தான நிலையில்தான் தவிப்போடு திரிந்த என் மகனின் ஏக்கப்பார்வை அவள் கண்களுக்குள் சிக்கியிருக்கிறது. சுவையை காட்டிவிட்டால், மூளை குழம்பியவனை ஏமாற்றிப் பிளைக்கலாம் என்று தன் தொழில் வித்தையை அவனிடம் காட்டியிருக்கக்கூடும். அவளோடு ஏற்பட்ட தொடர்புதான் இவனது வெறியைத் தணித்து அமைதியைக் கொடுத்திருக்கிறது என்று நான் பூரணமாக நம்புகிறேன். அப்படி ஒரு சம்பவம் நிகழாவிட்டால், அவனது வெறித்தனத்துக்கு யாராவது ஒருத்தி நிட்சயம் பலியாகி இருப்பாள். அது ஓய்ந்ததால்தான் இப்போதெல்லாம் பெண்களை பார்த்தால் பல் இழிப்பதோ, வெறித்த பார்வையோ இல்லாமல், வெட்கப்படும் படியான பக்குவம் அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. என் சகோதரியின் மகள் அவனை தேடி வந்து சீண்டினால்கூட, அவன் நெளிந்து வளைந்து நழுவிவிடுகிறான் என்றால் பார்த்துக் கொள். அவனிடத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த கூச்ச உணர்வு ஒன்றே எனக்குப் பெரிய நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. அருந்ததி என்ன நோக்கத்தோடு அவனை மடக்கிப் போட்டிருந்தாலும், அதைப்பற்றி நான் அதிகம் அக்கறைப் படவில்லை. அவள் கேட்டோ கேட்காமலோ இவன் எதை எடுத்துக் கொண்டுபோய் அவளுக்குக் கொடுத்தாலும், நான் கவலைப்படப் போவதில்லை. அதேவேளை, ஒரு கள்ளமான காரியத்தை செய்வதான மனப்பயம் என்னிடத்தில் அவனுக்கு இருப்பதையும் நான் மாற்ற விரும்பவில்லை. நான் எதையெல்லாம் இழந்தாலும், என்னோடு இருக்கும்வரையிலாவது அவன் சந்தோசமாக இருக்க வேண்டும்

பென்சன் அலுவலாக ரவுணுக்குப் போகவேண்டி வந்த ஒரு நாளில்தான் உனக்குச் சொன்னவர்கள் என்னை அருந்ததி வீட்டடியில் கண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். விளையாடிவிட்டு வந்து பக்கத்து வீட்டில் இருப்பதாக என் மகன் சொல்லியதை நம்பி அவனை தனியாக விட்டு விட்டுச் சென்றேன். ஆனால் நான் திரும்பி வந்தபோது அவன் பக்கத்து வீட்டில் இருக்கவில்லை. அக்கம்பக்கத்திலும் இருக்கவில்லை. எனக்கு மனதில் மணி அடித்தது! அருந்ததி வீட்டுக்கே சென்றேன். அவள் வீட்டில் காலடி எடுத்து வைக்கவே மனம் சங்கடப்பட்டது. தயக்கத்தோடு படலையை திறந்துகொண்டு சென்றேன். வீட்டின் முன்புறம் பூட்டியிருந்தது. சந்தடி இல்லாமல் யன்னல் இடுக்கால் உட்புறம் எட்டிப்பார்த்தேன். சுவரில் சாய்ந்தபடி அருந்ததி சாப்பிட்டுக் கொண்டிருப்பது மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது. அவளின் எதிர்ப்புறமாக என் மகன் அமர்ந்திருந்தான். அப்பன் பெயர் தெரியாமல் பிறந்த, அருந்ததியின் குழந்தைக்கு விளையாட்டுக் காட்டியபடி அவன் சாப்பாடு ஊட்டிவிடும் காட்சியை நான் யன்னலினூடே கண்டேன். அவர்கள் விளையாட்டை அருந்ததி புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். நான் சிறிது நேரம் அசைவற்று நின்றிருந்தேன். குழந்தையோடு குழந்தையாக மாறிவிட்ட என் மகனின் குதூகலம் என்னை ஒரு கணம் கலங்கவைத்தது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றேன். என்னை அறியாமலே யன்னலைவிட்டு விலகிய என் கால்கள், வந்த வழியே திரும்பி நடந்தன.

என் மகனைத் தேடிப் போகவேண்டி வந்த காரணத்தினால்தான் நான் அருந்ததி வீட்டுக்குப் போகவேண்டி ஏற்பட்டது. ஒளிந்து போகவேண்டிய நிலை என்பதால் யாரும் பார்த்திருக்கமாட்டார்கள் என நம்பியிருந்தேன். எப்படியோ என்னை கண்டு உன்னிடம் சொல்லிவிட்டார்கள். ஆனாலும், என் மகனுக்காக எந்தப் பழியையும் நான் சுமக்கத் தயாராக இருக்கிறேன்.

  அருந்ததி நடத்தை கெட்டவள்தான் என்றாலும், என் மகனை அவளுடன் சேராதே என்று தடுப்பதற்கு எனக்கு மனம் வரவில்லை. எங்கள் எல்லோருக்கும் இருந்திருக்கக்கூடிய அதே இளமைதான் என் பிள்ளைக்கும்...! அது நேர் வழியில் கிடைக்க வழியில்லையென்றால், அவன் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். எனக்கு ஒரு முடிவு ஏற்படுமுன் என் பிள்ளைக்கு ஒரு விடிவு ஏற்படவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு கடைசிக் காலம்வரை என் மகனைப் பார்த்துக் கொள்ளக்கூடிய ஒரு நல்ல உள்ளம் வேண்டும். அது மனம் திருந்திய அருந்ததியாக இருந்தாலும் பரவாயில்லை. என்னிடம் இருக்கும் சொத்தே போதும், உடலை விற்றுப் பிழைக்கவேண்டிய அவசியமே அவளுக்கு இல்லை! இதெல்லாம் ஒரு அப்பன் பேசும் பேச்சா என்று நீ நினைக்கக்கூடும்...! என்னுடைய நிலையில் இருந்தால்தான் இது உனக்குப் புரியும். என்னுடைய நினைப்புகள் எதுவும் நடைமுறைச் சாத்தியமற்றவை என்பதும் எனக்குப் புரியும். ஆனாலும் ஒரு நப்பாசை..! நான் கண்மூடமுன்  என் பிள்ளையை எங்காவது கரை சேர்க்க மாட்டேனா என்று...!  நான் சொல்லிய அத்தனையும் உனக்கு மட்டுமே சொல்லக்கூடிய உண்மைகளும், என் தனிப்பட்ட எண்ணங்களும் என்பதை மனதில் வைத்துக்கொள்...! || என்று பொன்னர் சொல்லி முடித்தபோது, நான் வாயடைத்துப்போய் அமர்ந்திருந்தேன். அவரது நிலைமை எனக்குப் புரிந்தது. அதேசமயம், அவரை தவறாக நினைத்த உறுத்தலும் என்னை வாட்டியது. அதனால்தானோ என்னவோ, என் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளும் எதிர்பார்ப்பே இல்லாதவர்போல், அவர் பார்வை என் கண்களை விட்டு விலகி, சிவந்த அடிவானத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது.

 

kana-ravi@hotmail.com