மாறுதல்

தேவமுகுந்தன்
 

நூலகத்தின் வீதியோரப் பக்க யன்னலின் அருகே அமர்ந்திருந்தான் வாகீசன்;. மேசையில்  பல  புத்தகங்கள் குவிந்திருந்தன. அப்புத்தகங்களை மாறிமாறி  எடுத்துப் புரட்டியபடியிருந்தான்.   வாகீசனைத்; தவிர மேற்றளத்தில் யாருமே இல்லை. அனைத்து மின்குமிழ்களும் மழை இருளை விரட்டப் போராடின. முதல்நாள் மதியம் பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து காலைவேளையிலும்; கொட்டியது. சூரியன் கருமுகில்களுள் மறைந்திருக்க மெல்லிருள் பரவியிருந்தது..

கீழ்த்தளத்தில் 'கவுண்டரி'ல் இருக்கும் நூலகரைத் தவிர வேறுஓரிருவர் இருக்கலாம்.   தடித்த மூக்குக் கண்ணாடி அணிந்த மெலிந்த உயர்ந்த பெண் வழக்கம் போன்று சட்டப் புத்தகங்கள் இருக்கும் இறாக்கைக்கு அருகில் இருந்து பெரிய பெரிய புத்தகங்களைப் புரட்டிக் குறிப்பெடுப்பது மேலேயிருந்து பார்க்கும்போது தெரிகின்றது. இவள் எதிர்காலத்தில் உயர்நீதிமன்ற நீதியரசராகவோ, சட்டமா அதிபராகவோ ஆகக்கூடும். காணும் நேரமெல்லாம் தனிமையில் இருந்து படித்தபடியே இருக்கிறாள்.

கிழமை நாட்களில்  வரிசையில் தவங்கிடந்து மாணவர்களால் பயன்படுத்தப்படும் கணினிகள் இப்போது தேடுவாரற்றுக் கீழ்த்தளத்தில் கிடக்கின்றன. ஞாயிறு பத்திரிகைகள் விரிக்கப்படாமலே வாசலோர மேசையில் கிடக்கின்றன.

நாளைக்கு 'நியூட்டனின் இயக்கவியல்' ஒப்படையைச் சமர்ப்பித்தே ஆகவேண்டும். ஒப்படையைச்  சமர்ப்பித்து அதில் ஐம்பது புள்ளிகளுக்கு மேலே எடுத்தால்தான்  இறுதிப்பரீட்சைக்குத் தோற்ற அனுமதிப்பார்கள். இல்லாவிட்டால் மேலதிகமாக ஒருவருஷம் பல்கலைக்கழகத்திற்குள் இருக்க வேண்டியிருக்கும்.

ஒப்படையின் ஆறு வினாக்களிலும் ஓரிரு பகுதிகளைத் தவிர மற்றைய பகுதிகள் விடையளிக்கப்படாமலே இழுபட்டுக்கிடக்கின்றன. முன்னரே விடையளிப்பதற்கு பகீரதப் பிரயத்தனமெடுத்தாலும் அனைத்து ஒப்படைகளும் அவை சமர்ப்பிக்க வேண்டிய தினத்திற்கு முதல்நாள் இரவிற்தான்; பூர்த்தியாக்கப்படுகின்றன. ஒவ்வொருமுறையும் இடையில் பலசோலிகள் வந்து சேர்ந்து விடுகின்றன.

               சத்தியன், ஜெகன், குகா, சேகர்... என நண்பர்கள் யாராவது வந்தார்கள் என்றால் பகிர்ந்து செய்யலாம். இரண்டு வருடங்களாக சேர்ந்து படிக்க வராதவர்கள் இனி வருவார்களா?; அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. ஞாயிற்றுக்கிழமையும் மழை நாளுமாய் அவர்கள் இப்போது தங்கள் தங்கள் அறைகளில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நித்திரை செய்யலாம், அல்லது தனிப்பட்ட வகுப்புக்கள் எடுக்க வீடுகளுக்குச் சென்றிருக்கலாம். மதியம் சாப்பிட்டுவிட்டு தியேட்டர்களில்  படங்கள் பார்க்கச் செல்லலாம். மழை பொழியும் அருமையான ஞாயிற்றுக் கிழமையை இழக்கத் தயாரில்லாத அவர்கள்...  சோம்பலும் சுயநலனும் மிக்கவர்களாய் நண்பர்கள். வாகீசனுக்கும்; இன்று முழுதும் வீடுகளுக்குச் சென்று வகுப்புக்கள் எடுக்க வேண்டியிருந்தது. முக்கிய அலுவல் இருப்பதால் வகுப்பை பிறிதொரு நாளில் எடுப்பதாய் பிள்ளைகளுக்கு  அறிவித்திருந்தான்.

வாகீசன்; பல்கலைக்கழகத்தில் படிப்பது ஆங்கில மொழி மூலமாகத்தான்;. வகுப்பில் சிங்கள, தமிழ், முஸ்லீம் என அனைத்து இன மாணவர்களும் பயினறாலும் தமிழர்களே நண்பர்களாகவுள்ளனர். பதினெட்டு வயதுவரை சிங்களப் பொதுசனங்களைக் காணாமலே யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்தவனுக்கு இப்போதுதான் சில சிங்களச் சொற்கள் பரிச்சயமாகிவருகின்றன. கன்ரீனில், பஸ்சில் ஓரிரு வார்த்ததைகள் கதைக்கும் அளவுக்கு சிங்களத்தில் முன்னேறியுள்ளான்.

வகுப்பில் கூடப்படிக்கும் சிங்கள மாணவர்கள் வாகீசனைக் கண்டால் 'குட் மோனிங்' அல்லது 'குட் ஈவினிங்' சொல்வார்கள். வாகீசனும் திருப்பிச் சொல்வதோடு சரி. ஊரில் இருந்தபோது இந்த வார்த்தைகளை வழமையாக வகுப்பறைக்கு ஆசிரியர்கள் வரும்போது மட்டுமே பயன்படுத்தியிருந்தான்.  அதனை ஏனையவர்களுக்கும் சொல்லிப்பழக்கமிருக்கவில்லை.

 'குட் மோனிங்' 'குட் ஈவினிங்' என்பவற்றைத் தவிர  சிங்கள மாணவர்களுடன் கதைத்துப் பழக்கமில்லை. ஒருமுறை பல்கலைக்கழகத்திலிருந்து அறைக்குத் திரும்ப பஸ்சில் ஏறிய போது நிஸாந்தவும் ஏறினான். அவனே இவன் தடுத்தும் இவனுக்கும் சேர்த்து 'ரிக்கெட்' எடுத்தான். நிஸாந்தவின் வீடு கல்கிஸையில் இவனது அறையிருக்கும் தெருவின் அந்தத்தில் தண்டவாளத்தை அண்மித்து கடற்கரையோரமாய் அமைந்துள்ளதாய் சொன்னான். இருவருக்கும் உரையாட மொழிதான் இடைஞ்சலாய் இருந்தது. இவ்வளவுதான் அவர்களுடனான வாகீசனது பழக்கமாயிருக்கின்றது.

மற்றப்படி பல்கலைக்கழகம், தமிழ் நண்பர்கள், வெள்ளவத்தைச் சைவச்சாப்பாட்டுக்கடை, பிரத்தியேக வகுப்புக்கள் வெள்ளி பின்னேரங்களில் பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் கோவில் என்பனவே கடந்த இருவருடங்களாக வாகீசனது உலகமாயுள்ளது.

இன்றும் வழமை போலவே தனியே இருந்து இந்த ஒப்படை வினாக்களுடன் மாயவேண்டியது தானோ? எப்படித்தான் இந்தத் தடித்த ஆங்கில புத்தகங்களைப் புரட்டிப் புரட்டிப் படித்தாலும் அனைத்து வினாக்களுக்கும் விடை கண்டுபிடிக்கலாமென்ற நம்பிக்கை வாகீசனுக்கில்லை. விரிவுரையாளர்கள் ஒப்படை வினாக்கள் தயாரிப்பதற்காகப் பயன்படுத்திய புத்தகங்களை நூலகத்தில் இரவல் எடுத்து விடுவார்கள். அப்புத்தகங்களை ஒப்படை சமர்ப்பிக்கப்பட வேண்டிய இறுதித் தினம்வரை அவற்றை மீள ஒப்படைக்கமாட்டார்கள். அந்தப் புத்தகங்களைப் படித்தால் இலகுவாக விடையளிக்கலாம்.

தொடர்ந்து புத்தகங்களைப் புரட்டிப் புரட்டித் தேடியும் விடை கண்டுபிடிக்க முடியாமலிருப்பது களைப்பாகவும் எரிச்சலாகவுமிருந்தது.

நாளை காலையில் ஐந்தாறு தூய வெண்ணிற 'பொட்டோக் கொப்பி' தாள்களுடனும் பெரிய அடிமட்டம், பென்சில், நீல-சிவப்பு-கறுப்பு-பச்சை பேனாக்கள் சகிதம்வரும் வாகீசனது நண்பர்கள்,

'மச்சான் உன்ரை அசைன்மென்டை ஒருக்காத் தாடா' என்று கேட்டு 'போட்டோக் கொப்பி'யெடுத்துக் கொண்டு 'ஸ்ரோண் பெஞ்'சுக்குப் போயிருந்து ஆறுதலாக பேப்பரைச் சுற்றிவரகோடடித்து அழகாகப் பார்த்தெழுதிக் கொண்டு போய்ச் சமர்ப்பிப்பார்கள். வாகீசன்; ஏதாவது கவலையீனப் பிழைகள் விட்டிருந்தால் அதனை சுட்டிக்காட்ட மாட்டார்கள். ஆனால் தங்கள்  தங்கள்  ஒப்படைகளில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டிருப்பார்கள்.

வெட்டிக்கொத்தி பலரது கரங்களில் கிடந்து கசங்கிப்போன பளுப்புநிற மெல்லியதாள்களில நீலநிறப் பேனாவால் அவசர அவசரமாக எழுதப்பட்டிருக்கும் வாகீசனது ஒப்படையையும் காகித மணம் நீங்காத பால்வெண்ணிற தடித்த 'போட்டோக் கொப்பி' தாள்களில் தெளிவாக பல நிறப் பேனா-பென்சில்களைப் பயன்படுத்தி அழகாக எழுதப்பட்டிருக்கும் அவர்களின் ஒப்படைகளையும் திருத்தும் விரிவுரையாளர்கள்-போதனாசிரியர்கள் வாகீசனுக்கு குறைவான புள்ளிகளை இட்டால் பரவாயில்லை. ஆனால் அவர்கள் தடித்த சிவப்புப் பேனாவால் ஒப்படையின் முகப்பில் 'பார்த்து எழுதப்பட்டது.' எனக்குறிப்புமெழுதி புள்ளிகளையும் கழித்து விடுவார்கள் ஒப்படைகள் திருத்தப்பட்டு வகுப்பில் தரப்பட்டதும்;  வாங்கிப் பார்த்தெழுதிய நண்பர்களே,                                                                              

'மச்சான் உனக்கு 'சீ' யே கிடைச்சது. எனக்கு '' மச்சான். நான் உண்மையிலை உன்ரையைப் பார்த்து எழுததேலை.. எழுதியிருந்தால் எனக்கும் உன்னை மாதிரி 'சீ' யெல்லே கிடைத்திருக்கும். ஒரு 'மொடலு'க்காகத்தான் வாங்கிப் பார்த்தனான். உன்னை மாதிரி எந்த நேரமும் 'லைபரி'க்கை இருந்து படித்தால் எனக்கு எல்லாப் பாடத்திற்கும் நூறுதான் மச்சான்' என்பார்கள். அடுத்த ஒப்படைக்கு விடை கேட்டு வரும்போது இவர்களுக்கு கொடுக்கக் கூடாது என ஒவ்வொரு முறையும் மனதில் சபதம் எடுப்பான் ஆனால் அடுத்த ஒப்படை சமர்ப்பிக்கும் தினத்தன்று காலையில் தேடி வரும் நண்பர்களைக் காணும்போது பாவமாயிருக்கும். முன்னர் எடுத்த சபதம் மீறப்படும்.  ஒப்படையைச் தூக்கிக் கொடுப்பான். ஒப்படை 'போட்டோக் கொப்பி'களாகி  சுற்றுநிருபம் போல பலரது கைகளுக்குப் போகும். யாராவது ஒருவர் விடை கண்டால் மற்றவர்கள் பார்த்து எழுதலாம்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் வாகீசனே கஸ்ரப்பட்டு விடை காண அவர்கள் பார்த்து எழுதகிறார்களே.

மழை இப்போது இன்னும் பலமாகக் கொட்டியது. நூலகத்திற்கு அருகில் ஓடும் தியவன்ன ஓயா பெருக்கெடுத்துப் பாய்கின்றது. அதன் நீர்கரைகளைத் தாண்டியும் வழிகின்றது. மழையில் நனைந்தபடி வெற்று எண்ணெய்ப் பரல்களையும் மரக்கட்டைகளையும் பிணைத்து உருவாக்கப்பட்ட சிறிய மிதவையொன்றில் தொழிலாளர் சிலர் நீண்ட  தடிகளில் பிணைக்கப்ப்ட்டிருக்கும் கத்திகளால் வாவியினுள் பரவியிருக்கும் சல்பீனியாக்களை  அகற்றிக் நீர் பாயவழி சமைப்பது யன்னலால் பார்க்கும்போது தெரிகின்றது.     கருமமே கண்ணாயிரப்பவர்களுக்கு மழையென்ன வெய்யிலென்ன? கிழமை நாட்கள் என்றால் என்ன? விடுமுறை நாட்கள் என்றால் என்ன?

பெரும்பாலான சிங்கள மாணவர்கள் ஒப்படை வினாக்களை தங்களுக்குள் பகிர்ந்து விடையளித்து பின்னர்  சேர்ந்திருந்து கலந்துரையாடி எழுதுவதை அவதானித்திருக்கிறான்.       

...

மதிய உணவை 'கன்ரீனி'ல் முடித்துக் கொண்டு  தனது யன்னலோர மேசையை நோக்கிப் போனான். மழை நாளாகையால் சப்பாத்து அணிவதைத் தவிர்த்து ரப்பர் செருப்புக்களையே அணிந்திருந்தான். நீரில் நனைந்த செருப்பு வாகீசன் நடக்க நடக்க 'சளக் சளக்' என ஒலியெழுப்பி நூலகத்தின் அமைதியைக் குலைத்தது. நூலகத்தினுள் இருப்பவர்கள்  அனைவரும் இவனையே பார்க்கிறார்களோ. வாகீசனது மேசையில் புத்தகங்களைத் தூக்கி ஒதுக்கி வைத்துவிட்டு சோடியொன்று சல்லாபித்தபடி அமர்ந்திருந்தது. அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் புத்தகங்களைக் காவியபடி வேறிடம் தேடிப்போனான்.

நான்கு வினாக்களுக்கு பூரணமாக விடை கண்டாயிற்று ஆறாம் வினாக்களுக்குக் கூட சரியாக வகையீடு, தொகையீடுகளைச் செய்தால் விடை கிடைக்கும் போலிருந்தது. முயற்சித்தபடியிருந்தான். ஆனால் ஐந்தாம் வினாவுக்கு விடையளிபப்பது மிகவும் சிரமமாயிருந்தது.

வேகங்கொண்டு பாயும் தியவன்ன ஓயாவில் இழுபட்டுப்போகும் பெரிய கபரக்கொய்யாவொன்று கரையேற முயல்வது தெரிகின்றது. நீரின் உதைப்பு அதன் முயற்சியை தாமதப்படுத்திக் கொண்டிருக்கின்றது. கபரக்கொய்யா  எப்படியும் கரையேறிவிடுமென்றே எண்ணினான்.

பல வெற்றுத்தாள்களில் எழுதியெழுதி விடை காணமுயற்சித்தபடியிருந்தான் பிழைத்தவற்றை வெட்டிவிட்டு தன்முயற்சி சற்றும் தளராத விக்கிரமாதித்தனாய் மீண்டும் மீண்டும் தாள்களில் எழுதிக் கொண்டிருந்தான். கீழ்த்தளத்தில்  கணிதநூல்கள் அடுக்கியிருக்கும் இறாக்கைக்குப்போய் நான்கைந்து நுண்கணித நூல்களை கொண்டு வந்தான். அவற்றினைப் புரட்டிப் புரட்டிப் படித்த பின்னர்; ஆறாம் வினாவுக்கும் விடை வந்திறங்கியது.

வெளியே மழை சற்றுத் தணிந்திருந்தது.

மீண்டும் ஐந்தாம் வினாவை வாசித்து வரிப்படத்தை வரைந்து அதில் தரவுகளைக் குறித்தான். தொடர்ந்து முயற்சிக்க களைப்பாகவிருந்தது. புத்தகங்களை மூடி வைத்துவிட்டு கதிரையில் இருந்தபடி கண்களை மூடி மேசையில் தலையைச் சாய்த்தான்.

...

'மச்சாங் நிதித...' என்றபடி நிஸாந்த வாகீசனை எழுப்பினான். அவனுடன் பிரசன்ன, சரத், நவ்சாத்...என ஐந்தாறு பேர் நின்றனர்.

அவர்களுக்கு ஒப்படையின் ஆறாம் வினாவுக்கு மட்டும் விடை தெரிந்திருக்கவில்லை. விடையெழுதப்பட்ட வாகீசனது தாளினை நீட்டினான். அவர்கள் அதனை வாங்காமல் விளங்கப்படுத்துமாறு கேட்டு இவனைச்; சூழ கதிரைகளில் அமர்ந்தார்கள். வாகீசன் தாளொன்றினை எடுத்து வரிப்படத்தினை வரைந்து, சமன்பாடுகளைப் பெற்று விளக்கிக்கொண்டு போனான். அவர்கள் முகங்களில் சந்தோசம் தெரிந்தது. அதற்கு அப்பால் அவர்களால் சமன்பாடுகளைத் தீர்த்து  விடைகாணமுடியும் எனச் சொன்னார்கள். திரும்பத்திரும்பத் நன்றி சொன்னார்கள்.

அந்த விடையை அவர்களுக்கு விளக்க அவனுக்குத் தெரிந்திருந்த ஆங்கில அறிவு போதுமானதாகவிருந்தது. கணிதத்தை விளக்குவதற்கு மொழி தேவையில்லையே! கணிதமே விஞ்ஞானத்தின் மொழிதானாமே!

வாகீசன்; செய்யாதிருந்த ஐந்தாம் வினாவை பிரசன்னா விளங்கப்படுத்தினான். அது இலகுவாகப் புரிந்தது. வரிப்படத்தில் வட்டத்தினை மிகச் சிறிதாக வரைந்திருந்தது தவறாக இருந்து. வட்டத்தின் ஆரையின் நீளத்தினை அதிகரித்து பெரிய வட்டம் வரைந்திருந்தால், விசைக்கோடுகளை தெளிவாக வரைந்து இவனாலும் இலகுவாக விடைபெற்றிருக்கலாமென்பது புரிந்தது.

புதிய தாள்களில் விடைகளை ஒழுங்காக பார்த்து எழுதிக் கொண்டு கீழ்த் தளத்திற்குப் போனான். நிஸாந்த ஆட்கள் விடைகள் எழுதிய தாள்களைச் சேர்த்து இணைத்து உறைகளில் இட்டு ஒட்டிக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கே கணிதத்திணைக்களத்தின் முன்பாக இருக்கும் ஒப்படைப் பெட்டியில் இடப்போகிறார்கள் போல. அவர்களிடம் உறையொன்றை வாங்கி தனது ஒப்படை வைத்து ஒட்டினான். சோம்பேறிகளாயிருக்கும் நண்பர்கள்  நாளை இவனைப் பற்றி  'அவன் இப்ப சுயநலவாதியாய் மாறிவிட்டான். முந்தின மாதிரியில்லை அசைன்மென்டை காட்டிறானில்லை' எனத் தங்களுக்குள் கதைக்கக் கூடும்;.

நாளைக்கு கையடக்கத் தொலைபேசியை அணைத்துவிட்டு பல்கலைக்கழகப் பக்கம் வராமல் அறைக்குள் இருக்க வேண்டுமென எண்ணிக் கொண்டான். வெளியே மழை பன்னீர் தெளித்துக் கொண்டிருந்தது. அந்த இதமான மழையில் நனைந்தபடி ஒப்படைப் பெட்டியை நோக்கி நடந்தான். மழை இனி ஓய்ந்துவிடும் போல...


முற்றும்.

 

mukunthan72@gmail.com