காணாமல் போனவள்!    

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அவுஸ்திரேலியா


ன் சித்தப்பாவின் மகன், ஆனந்தனிடம் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்த தொலைபேசிச் செய்தியால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து சரவணனால் இன்னமும் மீள முடியவில்லை. இனிமேலும் முடியுமா என்று அவனுக்குத் தெரியவில்லை. தன் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக அவனுக்குத் தோன்றியது. செய்தியைக் கேட்டதும் அது பொய்யாக இருக்கக்கூடாதா என்று இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் எள்ளளவில் இருந்த நம்பிக்கையும், அடுத்த சில நிமிடங்களில் மின்னஞ்சலில் அவன் அனுப்பிவைத்த படத்தைப் பார்த்ததும் வெடிகுண்டாக நெஞ்சுக்குள் வெடித்துச் சிதறியது. தாங்கொணாத வேதனை உடல் முழுவதையும் வருத்தியது. தலை சுற்றியது. கண்கள் சொருகி, உணர்வு மயங்க அப்படியே செயலிழந்தவனாக இருக்கையில் இருந்து நிலத்தில் சரிந்து விழுந்தான். கடந்த இரண்டு நாட்களும் அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை.

தன் மனைவி, பாமினி காணாமல் போன நாள் முதல் கடந்த இரண்டு வருடங்களாக அவன் பட்ட வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவளைத் தேடாத இடம் இல்லை. ஒவ்வொரு இராணுவ முகாமிலும் காலை முதல் மாலை வரை பலநாட்கள் தவம் கிடந்தான். ஏச்சுக்கள், ஏழனப் பேச்சுக்கள், அடி உதைகள், துன்புறுத்தல்கள் என்று இராணுவ முகாம்களில் அவன் அனுவித்த கொடுமைகள் அவனது அன்றாடத் துயரவாழ்வாக நீண்டுகொண்டே சென்றன. ஆனால். தன் மனைவியைப் பற்றிய செய்தி மட்டும் கிடைக்கவேயில்லை.

-------    -----    ------

சரவணனும், பாமினியும் உயர்தர வகுப்பில் ஒன்றாகப் படித்தவர்கள். பாமினியின் ஊரில் இருந்த மத்திய மகாவித்தியாலயத்தில், பக்கத்து ஊரைச் சேர்ந்த சரவணன் ஏழாம் வகுப்பில் இருந்து படித்து வந்தான்அவ்வப்போது பாடசாலையில் நடைபெற்ற வைபவங்களிலும். விழாக்களிலும் இருவரும் சேர்ந்து செயற்படக் கிடைத்த வாய்ப்பு அவர்களுக்கிடையேயான பருவக்கவர்ச்சியைத் தூண்டி விட்டது. அது காதலாக மாறியதால், சரவணன் பல்கலைக்கழகம் சென்ற பின்னரும் தொடர்ந்தது. பாமினிக்கு பட்டப் படிப்பிற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

ஆயுதப் போராட்டத்தின் அரிச்சுவடிகூடத் தெரியாது வாழ்ந்த சிலருள் சரவணனின் ஒரேயொரு சகோதரனும் ஒருவன். இந்தியப் படையினர் ஒருநாள் குண்டு வைத்ததாக அவனைக் கொண்போனார்கள். அவ்வளவுதான். அவன் திரும்பிவரவேயில்லை. அந்த இழப்பினைத் தாங்கிக்கொள்ள முடியாத சரவணனின் தாய் நோய்வாய்பட்டு, படுத்த படுக்கையாக நீண்டநாட்கள் கிடந்து செத்துப்போனாள். தந்தையின் பராமரிப்பில் சரவணனும், அவனது இரண்டு அக்காமாரும் படித்து. வளர்ந்து பெரியவர்களானார்கள். அக்காமாருக்கு நல்ல மாப்பிள்ளைகளைப் பார்த்து திருமணம் செய்துகொடுத்த சரவணனின் தந்தை அவன் பல்கலைக் கழகத்தில் கடைசி வருடத்தில் படித்துக்கொண்டிருந்தபோது இனம்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். கடத்தலுக்கும், கொலைக்கும் இதுவரை யாருக்கும் காரணம் தெரியவில்லை. கடத்தியவர்களும் யாரென்று தெரியவில்லை. ஊர்மக்களின் வாய்கள் வௌ;வேறு ஊகங்களை வெறும் வாய்க்குக்கிடைத்த வெற்றிலையாக மென்றுகொண்டிருந்தாலும் வெளியே சொல்ல முடியாமல் விழுங்கிக்கொண்டார்கள்.

சின்ன வயதிலிருந்தே குடும்பத்தின் இழப்புக்களின் துயரங்களை அனுபவித்தவன் சரவணன். இலங்கையில், யாருக்குப் பயப்படுவது என்று தெரியாமல் எல்லோருக்கும் பயப்பட்டு ஓடுவதும், ஒளிவதுமாக வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் படிப்பையும் தொடர்ந்து, பட்டமும் பெற்றவர்களில் சரவணனும் ஒருவன்.

பல்கலைக் கழகப் படிப்பு முடிந்ததும், சரவணனுக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. படிப்பித்தல் அவனுக்கு விருப்பமானது என்பதால் ஆசிரியர் வேலைகிடைத்ததில் சரவணன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அடுத்த வருடமே தனது சொந்தங்களின் சம்மதத்தோடு பாமினியைத் திருமணம் செய்து கொண்டான்.

அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகளும் பின்னர் ஓர் ஆண்குழந்தையுமாக மூன்று குழந்தைகளோடு, சரவணன் - பாமினி குடும்ப வாழ்க்கையில் ஆரம்பத்தில் குழப்பமான நாட்டு நிலைமையால் குதூகலம் குறைந்திருந்தாலும், நாளாந்த நடப்புக்கள் தளப்பமில்லாமல் நகர்ந்தன.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள், காலையில் வழமைபோலச் சரவணன் பெண்பிள்ளைகள் இருவரையும் மோட்டார்ச்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அவர்களது பாடசாலையில் விட்டுவிட்டு, அடுத்த ஊரில் அவன் கடமையாற்றும் பாடசாலைக்குச் சென்றான். பிள்ளைகளின் பாடசாலை நடந்துபோகும் தூரத்திலேயே இருந்தாலும், காலையில் அவர்களைக் கொண்டு விடுவது வழக்கமாகிவிட்டது. பாடசாலை விட்டதும் அவர்கள் நடந்தே சரவணனுக்கு முன்னர் வீட்டுக்கு வந்துவிடுவார்கள்.

அன்று பிற்பகல் ஒருமணியளவில். பாடசாலை விடுவதற்கு முன்னர் அவனது மகன், கடைசிக்குழந்தை மிதுனன் படிக்கும் முன்பள்ளி ஆசிரியை கமலாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ' பள்ளி விட்டுக் கனநேரமாப் போயிற்றுது. இன்னும் மிதுனன எடுக்கிறத்துக்குப் பாமினி அக்கா வரல்ல. உங்கட வீட்டுக்கு போன் பண்ணினா ஒருத்தரும் எடுக்கிறாங்கல்ல. பாமினி அக்காட போனும் ஓஃப் ஆகிக்கிடக்குது...'

'அப்பிடியா....பாமினி எப்பவும் நேரத்தோட வந்திருவாளே..எதுக்கும் ஒரு நிமிசம் பொறுங்க.. நான் பாமினியோட கதைச்சிற்று உங்களுக்கு.. எடுக்கிறன்.'

சரவணன் பாமினியின் கைத்தொலைபேசிக்கு எடுத்தான். கமலா சொன்னது போலவே அது செயலற்றுக் கிடந்தது. வீட்டுத் தொலைபேசிக்கு அழைத்தான், நெடுநேரம் மணி அடித்தது. பதில் இல்லை. சிறிது பதற்றத்துடன் கமலாவைத் தொடர்புகொண்டான்,

'கமலா..என்னெண்டு தெரியல்ல. பாமினியைத் தொடர்பு கொள்ள முடியல்ல. நீங்க ஒரு உதவி செய்யுறீங்களா? மிதுனன ஒருக்கா எங்கட வீட்டுக்குக் கொண்டுபோய் விட ஏலுமா?'

'ஓமண்ண.. அது பிரச்சினையில்லை. நான் கொண்டுபோய் விடுறன். பாமினி அக்கா வரல்லயே எண்டுதான் கோள் எடுத்தனான். மிதுனன நான் கூட்டிற்றுப் போறன்'

'நன்றி, கமலா. சொறி. உங்களுக்குக் கஷ;டம் குடுக்குறதுக்கு.'

' ஒரு பிரச்சினையும் இல்லண்ண! நான் இப்பவே போறன்.'

சரவணனுக்குச் சற்றுக் குழப்பமாக இருந்தது. 'என்ன நடந்தது பாமினிக்கு? திடீரெண்டு உடம்புக்கு ஏதாவது சுகமில்லையோ? அப்பிடியெண்டாலும் எனக்குக் கோள் எடுத்திருப்பாளே...என்ன நடந்திருக்கும்?... சரி இன்னும் அரைமணித்தியாலத்தில பள்ளி விட்டிருந்தானே... போய்ப் பார்ப்பம்' என்று தன்னைச் சமாதானப் படுத்திக்கொண்டான்.

பாடசாலை விட்டதும் சரவணன் பறந்தோடி வீட்டுக்குச் சென்றான். அங்கே சரவணனின் மூத்த அக்கா கோமதி, சரவணனின் பிள்ளைகளுடன் நின்றுகொண்டிருந்தாள். கமலாவும் அங்கே இருந்தாள். எல்லோர் முகங்களிலும் கேள்விக்குறிகள். சரவணனின் மூத்தபிள்ளைகள் இருவரும் கலவரமடைந்த முகங்களுடன் கதிரைகளுக்குள் முடங்கிக் கிடந்தார்கள். முன்பள்ளியில் இருந்து வந்திருந்த மிதுனன் கையிலே ஒரு பிஸ்கட்டை வைத்துக் கடித்துக்கொண்டிருந்தான். எல்லோரும் சரவணனைக் கேட்டார்கள். 'பாமினி எங்க? எங்க போயிருப்பாள்?'

' அண்ண! நான் மிதுனனக் கொண்வந்து விடுவம் எண்டு இங்க வந்தன். கேற் திறந்து கிடந்தது. உள்ள வந்தா, முன் கதவும் திறந்து கிடக்குது. நான், 'பாமினி அக்கா.. பாமினி அக்கா' எண்டு கூப்பிட்டுக் கூப்பிட்டு வீட்டுக்குள்ள வந்தா ஒருத்தரும் இல்ல. அதுக்குப் பிறகுதான், கோமதி அக்காட வீட்ட மிதுனனைக்கொண்டு விடலாம் எண்டு அங்க போன நான்.' என்றாள் கமலா.

' 'வீடெல்லாம் திறந்து கிடக்குது. ஒருத்தருமே இல்ல. பாமினியும் பள்ளிக்கு வரல்ல' எண்டு கமலா சொன்ன உடனே எனக்கு என்ன செய்யுறதெண்டே தெரியல்ல சரவணா. அதுதான் ஓடி வந்தநான். என்ன பிரச்சினை? பாமினியிர அம்மாவுக்கும் போன் பண்ணிக் கேட்ட நான். சிலவேளை அங்க போயிருப்பாளோ எண்டு. அங்கயும் வரல்லயாம். வேறெங்க போயிருப்பாள்?'

' என்னிட்ட ஒண்டும் சொல்லல்ல அக்கா!' என்று சொன்ன சரவணன், வீடு முழுக்கத் தேடினான்.

அதற்கிடையில் அக்கம் பக்கத்து மனிதர்கள் ஒருவர், இருவராக வந்து கூடத் தொடங்கிவிட்டார்கள். சிலர் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தார்கள். பத்திக்கையைக் கிணற்றுக்குள் இறக்கி ஏதாவது தட்டுப்படுகிறதா என்று துளாவிப்பார்த்தார்கள். பக்கத்து வீட்டுக் கிணறுகளிலும் போய்த் தேடினார்கள்.

அப்போது, அங்கேவந்திருந்த அடுத்த வீட்டுத் தெய்வானைக் கிழவி சரவணனிடம் ஒரு குண்டைத்தூக்கிப் போட்டாள். ' கடவுளே! எனக்கு இப்பான் ஞாபகம் வருகுது தம்பி!. காலமே கார் ஒண்டு வந்து உங்கட கடப்படியில நிண்டிச்சி. அதுக்குள்ள கனக்கப் பேர் இருந்தாங்க. கொஞ்ச நேரத்தில அந்தக் கார் வேகமாகப் போயிற்று.'

' என்ன ஆச்சி. கார் வந்து நிண்டதா? அப்பிடியெண்டா நம்மட ஆக்கள்தாள் ஆரும் வந்து பாமினிய எங்கயும் என்னத்துக்கும் கூட்டிற்றுப் போயிருப்பாங்க எண்டு நினைக்கிறன்.' பதற்றம் சற்றுக் குறைந்தவனாக, இலேசான சிந்தனையோடு மிகச் சாதாரணமாகக் சொன்னான் சரவணன்.

அங்கே நின்றுகொண்டிருந்த, எதிர் வீட்டுக் கந்தையா உடனே கிழவியைப்பார்த்து,

'குஞ்சாத்த! அந்தக் கார் என்ன நிறம் எண்டு சொல்லுவியளா?'

'..அது தம்பி.. ஒரு வெள்ள நிறக்கார்..'

'..வெள்ள நிறமெண்டா.... அது காரா...வேனா குஞ்சாத்த?'

' கார்தாண்டா.'

'குஞ்சாத்த! நல்லா ஞாபகப்படுத்திச் சொல்லுங்க. வெள்ளக் காரா... வெள்ள வேனா?'

' நீ என்னடா, லோயர் கேக்குற மாதிரிக் கேட்கிறா.... அது கார்தான். எனக்குக் காரத் தெரியாதா?'

அதுவரை நிதானமாயிருந்த சரவணனுக்கு அவர்களின் உரையாடல் நெஞ்சைப் பிளந்து அமிலத்தை ஊற்றியது போன்றதோர் உணர்வில் வயிறு பகீரென எரிந்தது. பதற்றம் திடீரெனக் கூடியது. இரண்டு கைகளாலும் கிழவியின் தோளைப் பிடித்து உலுக்கிக் கேட்டான். 'ஆச்சி. சொல்லுங்க ஆச்சி. கார் இங்க நிண்டத நீங்க கண்டயளா? அதில பாமினி ஏறிப் போனதக் கண்டயளா? அது காரா....சின்னக் காரா...பெரிய காரா...இல்லாட்டி.. வேன்மாதிரி...??'

'தம்பி..நான் அங்க எங்கட வீட்ட இருந்துதான் பாத்தனான். அது கார் மாதிரித்தான் தெரிஞ்சிது. ரெண்டு மூண்டு பேர் இறங்குறதும் எறுறதுமா இருந்தானுகள். ஆனா..பாமினி ஏறினதை நான் காணல்ல.'

'...வந்தவனுகள் ஏதாவது ஆயுதம் கீயுதம் கொண்டு வந்திருந்தானுகளா?... ஆரும் கத்தின கித்தின மாதிரிச் சத்தம் கித்தம் கேட்டுதா?' எதிர் வீட்டுக் கந்தையா எதையோ மனதில் ஊகித்துக்கொண்டவராய் அதற்குத் தகுந்தவாறு கேள்விகளைக் கேட்டார்.

'அதையெல்லாம் நான் காணல்லடாப்பா. ஆனால் உரத்துச் சத்தம்போட்டுக் கதைச்சுக்கேட்டுது. ஆம்பிளையள்ற சத்தம்போலான் இருந்திச்சி.'

'சரவணன்! இது வேறொண்டுமில்ல. பாமினியை வெள்ள வேனில வந்து கடத்திற்றுப் போயிரிக்கிறானுகள்.' கந்தையா ஒரு முடிவுக்கே வந்துவிட்டவராய் கூறினார்.

'டேய்! அது வேன் இல்லடா, கார்டா!' தெய்வானைக் கிழவியும் விட்டபாடில்லை.

'சரி..காரோ..வேனோ...புள்ளையக் கடத்திற்றுப் போயிரிக்கிறானுகள்...அதுதான் நடந்திரிக்கி....' முடிவாகக் கூறிய கந்தையா. சரவணணின் தோளில் தன் கையைப் படரவிட்டு, 'தம்பி சரவணன், இஞ்ச கொஞ்சம் வாங்க.....' என்றுசொல்லிச் சற்று அப்பால் தனியே கூட்டிக்கொண்டு போனார்.

' தம்பி, சரவணன்! பாமினிய வெள்ள வேனிலதான் ஆரோ கடத்திற்றுப் போயிரிக்கிறானுகள். காருக்கும் வேனுக்கும் கிழவிக்கு வித்தியாசம் தெரியல்ல. பள்ளிக்கூடத்திலயோ இல்லாட்டி வெறெங்கையுமோ கிட்டடியில ஆரோடையும் நீங்க என்னவும் பிரச்சின கிரச்சினப் பட்டயளோ?'

'எனக்கு ஆரோட அண்ண, பிரச்சின. எங்களுக்கு ஆரண்ண எதிரியள்? அதுவும் பாமினியக் கடத்திற்றுப் போற அளவுக்கு...எனக்கெண்டா ஒண்டுமே விளங்கல்லயே அண்ண...' சரவணன் அழத்தொடங்கிவிட்டான்.

'தம்பி குளறாத. இனிமேல் ஆகவேண்டியதப் பாப்பம். முதல்ல எம்பியிற்றப் போய்ச் சொல்லுவம். அதுக்குப் பிறகு. போலிசில ஒரு முறப்பாட்டைக் குடுப்பம்...'

சரவணனின் வீட்டு முன் மண்டபத்தினுள் இவர்கள் இப்படிக் கதைத்துக் கொண்டிருக்கம்போதே, வெளியே நின்றவர்களின் ஆரவாரம் பெரிதாக எழும்பியது. சுரவணனின் அக்கா சத்தம்போட்டு அழத்தொடங்கிவிட்டாள். 'ஐயோ...பாமினியைக் கடத்திற்றுப் போயிற்றாங்களாமே...ஐயோ...பாமினி...உன்னை என்னத்துக்கிடி கடத்தினவனுகள்...கடவுளே...'

வீடே அல்லோலகல்லோலப் பட்டது. ஊரே திரண்டது. அதற்குப் பிறகு பாமினி காணாமல் போன சம்பவத்தில் இருந்து தெய்வானைக் கிழவி கண்டதாகச் சொன்ன கார் மறைந்துவிட்டது. பாமினியை வெள்ளை வெள்ளைவேன் கடத்தியது என்ற செய்திமட்டும் ஊருக்கு வெளியேயும் பரவியது.

சரவணன் பாமினியைத் தேடாத இடமில்லை. போகாத இராணுவ முகாமில்லை. பார்க்காத அதிகாரிகள் இல்லை. வாக்களித்த எத்தனையோ இடைத்தரகர்களுக்குப் பணத்தை வாரி இறைத்து ஏமாந்தான். தனது சின்னஞ்சிறிய மூன்று குழந்தைகளையும் தமக்கையிடம் விட்டுவிட்டு நாடு முழுவதும் அலைந்தான். பாமினியைப் பற்றிய எந்தத் தகவல்களையும் அவனால் அறிந்துகொள்ளவே முடியவில்லை. பாமினி உயிரோடு இல்லை, கடத்திச் சென்றவர்கள் கொலைசெய்து விட்டார்கள் என்ற முடிவுக்கு சரவணனும், குடும்பத்தினரும் வரும் அளவுக்குக் கடந்த இரண்டு வருடங்களில் செய்த இடைவிடாத முயற்சிகள் வீணாகிப் போயின.

இந்த நேரத்தில்தான், இரண்டு நாட்களுக்கு முன்னர், ஆனந்தனிடமிருந்து அந்த அதிர்ச்சியான செய்தி வந்து சரவணனின் தலையில் இடியாக விழுந்தது.

ஆனந்தன் கடந்த வருடம் படகில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றவன். சற்றும் எதிர்பாராதவிதமாக அவன் சரவணனைத் தொலைபேசியில் அழைத்தான்.

' அண்ண...நான் ஆனந்தன் கதைக்கிறன்...அவுஸ்திரேலியாவிலயிருந்து...'

'..ஆனந்தனாஎப்பிடி இருக்கிறாய்? சித்தப்பா நேற்றுச் சொன்னவர் உனக்கு பிறிச்சிங் விசாவோ என்னவோ குடுத்து வெளியில விட்டிருக்காம் எண்டு...'

'அண்ண..அதெல்லாம் நான் பிறகு சொல்றன். இப்ப நான் முக்கியமான ஒரு விசயமாகத்தான் கோள் எடுத்த நான்....என்னெண்டா அண்ண...நான் அண்ணியக் கண்டநான் அண்ண.. அண்ணி..அண்ணி..இங்கதான் இருக்கிறாவு'

'......ன்....? ஆனந்தன்...என்னடா சொல்றா...நீ...அண்ணிய....அண்ணி..உயிரோட இருக்கிறாளா.....அங்க இருக்கிறாளா...எப்பிடி..டா?' உரத்த சத்தத்தில் கிரீச்சிட்டான் சரவணன்.

'அண்ண...தயவு செய்து உங்கட மனதத் திடப்படுத்திக் கொண்ளுங்கண்ணநாம நினைச்ச மாதிரி அண்ணிய ஒருத்தரும் கடத்திற்றுப் போகல்ல அண்ண....(ஆனந்தன் அழுதுகொண்டே தொடர்ந்தான்) அண்ண....அண்ணி உங்களுக்குத் துரோகம் செய்து போட்டாவண்ண.....உங்கட....உங்கட.. ஃபிறண்ட்..  கேசவன் எண்ட அந்த துரோகியோட அண்ணி இங்க வந்திரிக்காவண்ண.'

சரவணனின் இதயம் சடாரென்று அறுந்து வயிற்றுக்குள் விழுந்து எரிவதுபோல இருந்தது.

'டேய்...நீ...என்னடா.. சொல்லுறா...நல்லாப் பாத்த நீயா...சிலவேளை...அண்ணி மாதிரி..வேற யாராவது...'

'இல்லண்ண....போன கிழமையே எனக்குத் தெரிய வந்திற்றுதண்ண.... பிறகு நானே கண்ணால கண்ணடபிறகுதான் அண்ண...என்னால தாங்க முடியல்ல....அவங்க ரெண்டுபோரும் இங்க கோயிலுக்கு வந்தநேரம் அவங்களுக்குத் தெரியாம என்ர ஃபிறெண்டிட்டச் சொல்லி நான் எடுத்த ஃபோட்டோக்கள இன்னும் கொஞ்ச நேரத்தில் மெயில்ல அனுப்புறன் அண்ண... நீங்க ஒண்டுக்கும் யோசிக்காதங்க அண்ண. உங்கட கலியாணப் பதிவையும், கலியாணப் போட்டோக்களையும் எனக்கு அனுப்புங்க அண்ண. பிள்ளைகளோட எடுத்த போட்டோ ஒண்டும் அனுப்புங்க அண்ண. குடுக்க வேண்டிய இடத்தில குடுத்து அவங்களுக்குச் செய்யவேண்டிய வேலையை நான் செய்யுறன்...நீங்க ஒண்டுக்கும்....'

தொலைபேசி துண்டிக்கப்பட்டுவிட்டது. தானாகத் தடைப்பட்டதா, தற்செயலாக நடந்ததா என்று தெரியவில்லை.

சரவணன் தனது அறைக்குள் சென்று, அலுமாரியில் இருந்த தங்கள் திருமணப்பதிவை எடுத்தான். தங்கள் திருமணப் படங்களில் இரண்டை எடுத்து வைத்தான். கடைசியாகத் தனது மகளின் பிறந்த நாளுக்கு எடுத்திருந்த குடும்பப் படங்களில் சிலவற்றையும் எடுத்து வைத்தான். தாங்கொணாச் சோகத்தின் சுமையின் இயலாமையிலும், மின்னஞ்சல் மூலம் 'இப்பவே ஆனந்தனுக்கு அனுப்பவேண்டும்' என்ற துடிப்பில், அசுரவேகத்தில் எல்லாவற்றையும் தேடி எடுத்தான் சரவணன்.

இடுப்பு ஒடிந்து, உடலின் இயக்கமே தளர்ந்து விட்டஉணர்வில், இயலுமானவரை அவசர அவசரமாகத் தனது மடிகணனியில் மின்னஞ்சலைத் திறந்தான். ஏற்கனவே, சற்று நேரத்திற்கு முன்னர்தான் எல்லா அஞ்சல்களையும் பார்த்திருந்தான். இப்போது புதிதாக எதுவும் வந்திருக்கவில்லை.

இருகைகளையும் தலைக்கு முட்டுக் கொடுத்து, முழங்கைகளை மேசையில் ஊன்றியவாறு, இமைகளைத் திறந்து பார்ப்பதும். மூடுவதுமாக, நெஞ்சுக்கு முன்னர் திறந்து கிடக்கும் மடிகணனிக்கு முன்னால், சோர்ந்தபடி கதிரையில் உட்கார்ந்திருந்தான். இமைகள் திறக்கும்போது கண்ணீர் பார்வையை மறைத்தது. மூடும்போது கன்னங்களை நனைத்தது. சில மணித்துளிகளில்.... ஓர் அஞ்சல்...கணனியில் எழுந்து மிதந்ததுஆனந்தனின் அஞ்சலை எதிர்பார்த்திருக்கும் அவனுக்கு அது ஆனந்தனுடைய அஞ்சலாக இல்லாமல் இருக்கக்கூடாதா  என்ற அச்சம்கலந்த எண்ணம்கூட, ஒரு சிறுபொறியாக எழுந்தது. அது ஆனந்தனின் அஞ்சல்தான். ஏற்கனவே அவனது உடல் வியர்த்து சட்டை ஈரமாகிவிட்டிருந்தது. உதடுகள் துடித்தன.....கைகள் நடுங்கின. மின்னஞ்சலைத் திறப்பதற்கு விரல்கள் தடுமாறின. ஒருவாறு அஞ்சலைத் திறந்தான். இணைப்பில் இருந்த படங்களைப் பார்த்ததும் விம்மி வெடித்தான். துக்கம் தொண்டையை நெருக்கியது. அழுகை வந்தது. ஆனால் அழுவதற்கு முடியவில்லை. இதயம் இறுக்கமானது. நாடி நரம்புகளில் ஓடிக்கொண்டிருந்த குருதி அப்படியே உறைந்துவிட்ட உணர்வு. இயக்கம் அற்றுப்போன உடலாக, இருக்கையில் இருந்து நிலத்தில் சரிந்து விழுந்தான்.

மறுநாள் காலை அவன் விழித்துப் பார்த்தபோது படுக்கையறையில் கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தான். அறைக்குள் மருந்துவாசனை வீசியது. அவன் மெல்ல எழுவதற்கு முயலும்போது, அவனின் மூத்த மகள் சுகிர்தா உள்ளே வந்தாள். 'அப்பா படுங்க அப்பா. இப்ப என்ன செய்யுது உங்களுக்கு? '

'எனக்கு..எனக்கு என்ன...ஒண்டுமில்ல..மகள்..எனக்கு ஒண்டுமில்ல...' சொல்லிக்கொண்டே எழுவதற்கு முயன்றான்.

'என்னப்பா...ஒண்டுமில்ல என்டு சொல்றீங்க...' என்று ஆரம்பித்தவள், தொடர முடியாமல் குரல் தழுதழுக்க நிறுத்தி மறுபக்கம் பார்த்துக் கலங்கிய தன்கண்களைத் துடைத்துவிட்டுத் தொடர்ந்தாள். '.....நேற்றுநீங்க கீழ விழுந்து மயங்கிக் கிடந்தீங்க. நாங்க எழுப்ப..எழுப்ப.. நீங்க எழும்பல்ல...நாங்க நல்லாப் பயந்து போயிற்றம் அப்பா. பிறகு..மாமிற்ற ஓடிப்போய்ச் சொல்ல... மாமா வந்து பாத்துற்று டொக்டரக் கூட்டிவந்து காட்டினவர்.. அவர் ஊசிபோட்டுற்றுப் போனவர்;'

'என்ன ஊசிபோட்டதா....' என்று கேட்டக்கொண்டே இடக்கைப் புயத்தைப் பார்த்து ஊசிபோட்ட இடத்தை வலக்கை விரல்களால் தடவினான் சரவணன்..

அதற்குள் அவனின் அக்கா, கோமதி அங்கே வந்தாள்.

'தம்பி இப்ப எப்பிடி இருக்குது? உனக்கு ஒண்டுமில்ல சரவணன். பாமினியிர கவலையாலயும், அலைச்சலாலயும் ஒழுங்கான சாப்பாடு, நித்திர இல்லாமல் திரியுறுறாய்... அதால உடம்பு நல்லாப் பெலயீனமாப் போச்சி...அப்பிடித்தான் டொக்டரும் சொன்னார். நாங்க எவ்வளவு சொன்னாலும் நீ கேக்குறாயில்ல....இனியும் பாமினியத் தேடுறத விட்டுற்று நடக்க வேண்டியதப் பார்....'

'இல்லக்கா...இனித் தேடத் தேவையில்ல...!'

' என்ன..என்ன..தம்பி...சொல்றாய்...?'

'இல்லக்கா இனித் தேடமாட்டன். தேடவேண்டியதில்ல....'

'அப்படிச் சொல்லு தம்பி. நாம என்ன செய்ய முடியும்....நேற்று  நீ உணர்வில்லாம விழுந்த கிடக்கயாம் எண்டு ஓடிவந்து........என்ன ஏதெண்டு தெரியாம எல்லாரும் துடிச்சிப்போயிற்றம். மறுகா.. அத்தான் டொக்டரக் கூட்டிவந்து..டொக்டர்....சோதிச்சிப் பாத்துப் பயப்புடத் தேவையில்ல எண்டு சொன்ன பிறகுதான்...எங்களுக்கு நிம்மதி வந்திச்சி. அப்பதான் பாத்தன், மேசையில் உங்கட குடும்பப் போட்டோ எல்லாம் கிடந்துச்சு. நேற்று நீ..உங்கட கலியாணப் படங்கள எடுத்துப் பாத்திரிக்கிறாய்போல....அதுதான் தாங்கேலாம கவலப்பட்டிரிக்கா. அதாலதான் அதிர்ச்சியாகி மயக்கம் வந்திருக்குது. அப்பிடித்தான் டொக்டரும் சொன்னார்.... கவலைப்படாத தம்பி. பட்டதெல்லாம் போதும். உன்ர பிள்ளைகள நினைச்சுப்பார்....'

'இல்லக்கா.....இனிக் கவலைப்பட மாட்டன்...' 

சரவணன் அப்படிச் சொன்னதன் அர்த்தம் தெரியாமல், 'ஓம் தம்பி...! அதுதான் நல்லது. நான் உனக்கு சூப் வைச்ச நான். போய் எடுத்துற்று வாறன்..' என்று சொல்லிக்கொண்டு கோமதி அறையில் இருந்த வெளியேறினாள்.

இரவு நெடுநேரமாகியும் சரவணனுக்கு நித்திரை வரவில்லை. முதல்நாள் மயங்கிவிழுந்தபின் மருத்துவர் உடலில் செலுத்தியிருந்த ஊசிமருந்து காலை பத்துமணிவரை அவனை ஆழமான நித்திரையில் கிடத்தியிருந்தது. ஆனால் அன்று அப்படியில்லை. பாமினியின் நினைவுகள் அவனது உள்ளத்தில் ஊசியாகக் குத்திக்கொண்டிருந்தன. தன்னுடன் உயிருக்குயிராக வாழ்ந்த மனைவி, உடன்பிறந்தவனைப்போலப் பழகிய நண்பன் இருவரும் இப்படிச் செயவார்கள் என்று சரவணனால் கற்பனைகூடச் செய்துபார்க்க முடியவில்லை.

மின்னஞ்சலில் இருந்த துரோகத்தின் சான்றுகளை மீண்டும் பார்வையிட்டான். 'கேசவன்...கேசவனா..இது? வறுமையால படிக்கிறதப் பாதியில விடப்போனவனுக்கு  படிக்கிறதுக்குப் பணம் குடுத்து, படிப்பு முடியும் வரையும் உதவி செய்தன். வாழ்க்கையில் முன்னேறுறத்துக்கு வழிகாட்டி எவ்வளவோ உதவிகளைச் செய்தன். கூடப்பிறந்த சகோதரன் மாதிரி நினைச்சன். எனக்காகத் தன் உயிரையும் குடுப்பன் என்று சொன்னானே! இப்ப..இப்ப...என்ர..உயிர..என்ர பாமினியையே....! அவன்தான் இப்பிடியெண்டா....ஐயோ...பாமினி...உனக்கு நான் என்ன குறை வச்சன்டி, இப்பிடியொரு துரோகத்த எனக்குச் செய்யுறதுக்குஎன்னையும்  பிள்ளைகளையும் விட்டுற்று..இப்பிடிப் போறதுக்கு உனக்கு எப்பிடிடி..மனம்....'

அதற்குமேல் எதையும் அவனால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. உலகமே அவனுக்கு வெறுத்துவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. அவன் எடுத்து மேசையில் வைத்திருந்த கலியாணப் பதிவுச் சான்றிதழும், கலியாணப் படங்களும், குடும்பப் படங்களும் அவனைப் பார்த்துச் சிரிப்பது போலத் தோன்றியது. கட்டிலில் விழுந்து குப்புறப்படுத்துக்கொண்டு, குமுறி அழுதான். அப்படியே நித்திரையானான். மறுநாள் காலை தொலைபேசி மணி அடிக்கும்போதுதான் அவனுக்கு விழிப்பு வந்தது. அவன் எழும்புவதற்கிடையில் சுகிர்தா எடுத்துக் கதைக்கும் சத்தம் கேட்டது.

'ஓம்...அங்கிள்..நாங்க சுகமா இருக்கிறம்...நீங்க எப்பிடி? இப்பாவா...இப்ப இங்க ஏழு மணி. நாங்க எழும்பிற்றம். அப்பா.. இமைகளைத் திறந்து பார்ப்பதும். மூடுவதுமாகச்.இன்னும் எழும்பல்ல...இண்டைக்குப்பள்ளி இல்லத்தானே.. கொஞ்சம்பொறுங்க.. பாக்கிறன்.....அப்பா..அப்பா...... எழும்பிற்றீங்களா....அப்பா! ஒஸ்ரேலியாவில இருந்த ஆனந்தனங்கிள்....'

சரவணன் உடனே பதற்றத்துடன், 'இங்ச...கொண்டுவா...இங்ச கொண்டுவா...' என்று தொலைபேசியை மகளிடம் இருந்து பிடுங்கிக்கொண்டு 'சரி..நீ..போ...' என்று அவளைப் போகச் சொன்னான். அவள் அறையை விட்டு அப்பால் செல்லும்வரை பார்த்திருந்து, பின்னரே தொலைபேசிக்குச் செவிகொடுத்தான்.

'ஹலோ..'

'ஹலோ...அண்ண நான் ஆனந்தன். படங்களப் பாத்தீங்களா அண்ண. என்னால நம்ப முடியல்ல அண்ண. அவங்க இங்கதான் ஒண்டா இரிக்காங்க அண்ண. உங்கட கலியாணப் பதிவையும். போட்டோக்களையும் ஈமெயில்ல  எனக்கு அனுப்பச் சொல்லியிருந்தனே அண்ண. நேற்று முழுக்க எதிர்பார்த்தன் வரல்ல. இண்டைக்கும் வரல்ல அதுதான் கோள் எடுத்தனான் அண்ண....நீங்க அனுப்புங்க அண்ண. மிச்சத்த நான் பாக்கிறன்..'

மேசையில் கிடக்கும் சான்றிதழிலும், படங்களிலும் பார்வையைப் படரவிட்டவாறே, ஆனந்தன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த சரவணன், இமைகளை மூடி, விழிமுட்டும் கண்ணீரை வடியவிட்டு உள்ளங் கையால் அழுத்தித் துடைத்தான்.

'இல்ல தம்பிநான் ஒண்டையும் அனுப்பல்ல. அனுப்பவும் மாட்டன். நீயும் அவங்களக் குழப்ப வேணாம். எங்க இருந்தாலும் அவங்க நல்லா இருக்கட்டும்,'

'இல்ல அண்ண. அவங்களுக்குச் சரியான பாடம் படிப்பிக்கோணுமண்ண..'

'அதொண்டும் வேணாம். அப்பிடி ஏதாவது செய்யப்போய்...அவங்கள இஞ்ச திருப்பிக் கிருப்பி அனுப்பிப் போட்டானுகளெண்டா....'

'அதுக்காகத்தான் அண்ண சொல்றன்...அவங்கள இங்க இருந்து திருப்பி அனுப்போணும்...அண்ண.'

' ஆனந்தன் நான் சொல்றத்தக் கேள். உனக்கு என்னில் இருக்கிற பாசம் எனக்கு விளங்குது. நீ செய்த உதவிக்கு நன்றி. நீ அங்க முன்னேறுற வழியப் பார். அவங்கட வழியில குறுக்கிடாத. இனிமேல் நீ அவங்களப்பற்றி எனக்கு எதுவும் சொல்லாத. எல்லாம் முடிஞ்சிபோச்சி. அவள் காணாமல் போனவள், போனவளாகவே இருக்கட்டும்...'

தொடர்பைச் சரவணன் துண்டித்தான்!

 

(யாவும் கற்பனைதான்)