மேன்மக்கள்! மேன்மக்களே!!!

நியாஸ் அஹமட்
 

"soory, i didn't see it" என்றேன்
"
பரவாயில்லை சார்"
"
என்னப்பா, தமிழா?"
"
ஆமா சார்"
"
சாரிப்பா தெரியாமல் அழுக்காக்கிட்டேன்"
"
பரவாயில்லை சார் இதை சுத்தமாக வைத்திருக்கவே என்ன வச்சிருக்காங்க"
"
இருந்தாலும் நீ இப்பத்தான் கழுவி....."
"
பரவாயில்லை சார்"
"
எந்த ஊர்?"
"
தஞ்சாவூர் பக்கத்தில் ஒரு கிராமம்"
"
இங்கே வந்து எத்தனை நாள் ஆகிறது ?"
"
ஆச்சு சார்!, மூன்று வருடம் ஓடிப்போச்சு...., இந்த கம்பனிக்கு வந்து ஒரு வாரம் ஆகிறது..."

அதற்குள் எனக்கு தொலைப்பேசி அழைப்பு வர, கவனம் அதில் சிதற..., நானும் வேளையில் மூழ்கிப்போனேன். இந்த பையனை நான் பர்ததுமுதல்.... ரொம்ப நல்ல பையன், யாரிடமும் அனாவசியமாக பேசமாட்டான் ரொம்ப சிரத்தையாக, எந்த வேலையும் செய்வான். அவன் பணி, சுகாதாரப் பணி என்றாலும் வேறு எந்த வேலையென்றாலும்...., மாட்டேன் என்று சொல்லாமல் செய்வான். ரொம்ப அடக்கமான பையன்.

அதற்க்கு மேல் நான் அவனிடம் போசமுடியவில்லை, வேலைப்பளு காரணமாக நானும் ஒரு வாரம் அவனிடம் போசவில்லை. இதற்கிடையில், எங்கள் அலுவலகத்தில் ஒரு பார்ட்டி ஒன்று ஐந்து நச்சத்திர ஹோட்டலில் நடந்தது. அதற்கான எல்லா முன்னேற்பாடுகளும் செய்ய என்னை அமர்த்தியதால்...., நான் மேலும் மூன்று சுகாதாரப் பணியாளர்களை உதவிக்கு சேர்த்துக்கொண்டேன்.

அந்த பார்ட்டி, மிகவும் சிறப்பாக நடந்தேறியது. எல்லா பொருட்களும் மறுபடியும் அதன் இருந்த நிலைக்கே...., கொண்டுவர வேண்டும். ஹோட்டலில் இருந்து, சிவப்பு கம்பளம் முதல் 'ஸ்பீக்கர்' வரை, எல்லாவற்றையும் வண்டியில் ஏற்றி, மறுபடியும் என் அலுவலகத்தில்..., அது அதை அதன் இடத்தில் பொருத்தி வைத்தார்கள்.

நான் எவ்வளவோ வற்புறுத்தியும் மீந்துப்போன உணவுகளைக் கூட அவர்கள் யாரும் கைவைக்கவில்லை. கேட்டதற்கு,

"
இது எங்கள் கம்பனி உத்தரவு" என்றார்கள். இரவு வெகு நேரம் ஆனதால்...., வெளியில் எங்கும் அவர்களுக்கு உணவு கிடைக்காது.

"
என்ன செய்வீர்கள்?" என்று கேட்டதற்கு,

"
பரவாயில்லை சார்!, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்றார்கள்.

நான் அவர்களிடம் சாப்பாட்டுக்கான பணத்தைக் கொடுத்து, "நாளை நான் வர மாட்டேன்..., என்று சொல்லிவிட்டு" போகும்போது மணி இரவு இரண்டு.

மூன்றாம் நாள் நான் மறுபடியும் அந்த பையனைப் பார்த்தேன்... "அன்று என்ன செய்தீர்கள்?" என்று கேட்டேன். "ஒன்றும் இல்லை சார்!, எங்கள் கம்பனிக்கு போன் செய்தோம், வண்டி வராது, என்றார்கள் இங்கேயே தூங்கி விட்டோம். பின்னர், காலை எங்கள் தினசரி வேலைக்கு, இங்கிருந்தே போய்விட்டோம் ". நான் என்ன சொல்வது என்று தெரியாமல்..., "சாரிப்பா, என்னால்தான் உங்களுக்கு சிரமம்" என்றேன் "அதனாலென்ன, ஒன்றுமில்லை சார்!" என்றான்
.

"தினமும் காலை ஐந்து மணிக்கு எழுந்து ....., நீண்ட..... வரிசையில் நின்று, காலைக்கடன் முடித்து, குளித்து, உடைமாற்றி, மறுபடியும் மிகநீண்ட வரிசையில் நின்று...., காலை மற்றும் மத்திய உணவுகளை, மெஸ்ஸில் கட்டிக் கொண்டு, எங்களுக்கான வண்டியில் ஏறி, இங்கே வந்துவிடுவோம்...., எங்கள் வேலை காலை 6.30 மணிக்குத் துவங்குகிறது " என்றான். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை...

மஹாபாரதத்தில், துரியோதனன் போர் வியுகம் அமைக்கும் பொது, படைத்தளபதியாக கர்ணனை நியமிக்கலாம் எனும்போது, பெரும் எதிர்ப்பு கிளம்புகிர்றது. பின்னர், மூத்தவர், பிதாமகர் பீஷ்மரே!!, படைத்தளபதி என்று அறிவிக்கிறான் துரியோதனன். பின், பிதாமகர் ஏனைய தளபதிகளை அமர்த்துகிறார்..... கடைசியாக காலாட்படைத் தளபதியாக.... கர்ணனை நியமிக்கிறார். கர்ணன் கோபம் கொண்டு "பீஷ்மர் உள்ளவரை களம் புகேன்!!!" என்று சூளுரைத்து, அவையை விட்டு வெளியேறுகிறான். பின் களம் சென்று மாண்டது இதிகாசம்.

இதில் "சத்ரியனுக்கு உண்டான தகுதியிருந்தும், என்னை கடைநிலை தளபதியாக நியமித்தாரே!!!" என்று அடங்கமாட்டாமல், சொல்லி அழுகிறான் மனைவியிடம் கர்ணன். நம்மில் எல்லோரும் மேன்மையான, வேலையே செய்ய விரும்புகிறோம். ஆனால் நமக்கும்....., சில வேலை செய்ய ஆட்கள் தேவைப் படுகிறார்கள்.

அப்பொழுதுதான்....., அவனைப்பற்றி விசாரிக்க வேண்டும் என்று தோன்றியது, "ஏம்பா!!!, இப்படி வந்து கஷ்டப்படுகிறாய்?" என்றேன் "என்ன சார் பண்ணுவது?, வானம் பொய்த்துப் போனதில்... எங்கள் வயுறு காய்ந்து...., ரொம்ப நாள் பசியை எதிர்த்து போராட முடியவில்லை!!!" என்றான். "நல்லா... படித்திருந்தால்!, இப்படி கஷ்டப்பட வேண்டியதில்லையே?" என்றேன்

"
படித்த வேலைக்குப் பொருந்தித்தான்..... எல்லோரும் வேலை தேடுகிறார்கள்...., ஆனால்....!" என்றான் விரக்த்தி தொனிக்கும் குரலில்.

"
என்னப்பா இப்படி சொல்லிட்ட!!!" என்றேன் "பின்ன, என்ன சார், பசி, பட்டினி விரட்டும் போது...., பால், பழம்தான் தேடுவோம்!!!, பதவிசான வேலையை இல்லை "எல்லாரும் உங்களமாதிரி அஃபிஸர் வேலைக்கே ........ போனால்.... இந்த மாதிரி வேலையைச் செய்யவும் ஆள் வேண்டுமே?"

"
ஊரில் நிலம், நீர் என்று, நாங்களும் சொகுசாக வாழ்ந்த காலம் - கடந்தகாலம், நிகழ்காலம்.... ரொம்ப கொடியது, இப்பவும், நிலமெல்லாம் உண்டென்றாலும் பூமிதான் எங்கள் வயிரைபோல் காய்ந்து கிடக்கு.."

"
அப்போ, நீ.........." "ஆமா, சார்! நானும் டிகிரி முடித்தவன்தான். தேடுன வேலை கிடைக்கவில்லை, கிடைத்ததை செய்கிறேன்" என்று சொல்லி... மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தான்.

ஏனோ...... "எனக்கும் நானும் ஒரு டிகிரிதான் முடித்திருக்கிறேன் என்று சொல்ல பிடிக்கவில்லை".

 

niyaz_fawaaz@yahoo.com