கூத்தாடிப் பொழப்பு

நியாஸ் அஹமட்

'நா எம்பாட்டுக்கு கத்திக்கிட்டே இருக்கேன்.... எதுமேலயோ மழை பேஞ்சாமாதிரி கம்ன்னு இருக்கீயளே, உங்களால ஒரு கா காசு பிரயோஜனம் உண்டா....? வீட்ல வயசுக்கு வந்த பெண்ணிருக்காளே!!! அவளுக்கு காலா காலத்துல ஒரு கல்யாணம் காட்சிய செய்யணுமேன்னு... கொஞ்சமாவது கவலை, வெசனம் இருக்கா... சும்மா தாத்தா ராஜபாட் பெரிய கூத்து காரருன்னு, சொல்லி சொல்லியே பாதி காலத்த ஓட்டியாச்சி, இன்னும் கொற காலத்தையும் இப்படியே ஓட்டிடலாம்னு எண்ணம்போல.... நீ வாடி நாம வயலுக்குப் போய் இவருக்கு காஞ்சி ஊத்தணும்னு நம்ம தலைஎழுத்து' என்று மகளைக் கூட்டிக் கொண்டு விருட்டென்று வெளியேறினாள் ரஞ்சிதம்.

இது வாடிக்கைதான், அவளும் என்ன செய்வா பாவம். எனக்கு வாக்கப்பட்டு எந்த சுகத்தையும் அனுபவிக்கவில்லை. தாத்தா என்னை முதல் முதலில் கூத்தில் அறிமுகப் படுத்தியபோது, எனக்கு வயது ஆறு. குறுநில இளவரசனாய் நடித்தேன்.

கூத்தை எழுதி, இயக்கி, இசை, பாடல்கள், அரங்க அமைப்பு என்று சகலமும் தாத்தாதான். ஏன் கூத்து நடத்த ஆகும் எல்லா செலவும் தாத்தாதான் செய்வார். தன்னுடன் நடிக்கும் சக கலைஞகளின் சம்பளத்தை, கூத்து ஆரம்பிக்கும் முன்னமே கொடுத்திடுவார்.

என்றுமே அவர் தன்னை உயர்வாக நினைத்தது இல்லை, எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வார். அடவு கட்டி பெருங்குரலெடுத்துப் பாடினாறேன்றால்..... கடைசி இருக்கை ஆளுக்கும் கேட்க்கும். அந்த காலத்திலேயே தாத்தா, நாலைந்து வேடமெல்லாம் ஏற்று நடித்திருக்கிறார். நவரசமும் தவழும் பாவம் என்று அவர் கூத்தில் தனி ராஜாங்கமே நடத்தியிருக்கிறார். கூத்து அவருக்கு மூச்சு. பாட்டி அவரை ஒரு பிள்ளை போல் பார்த்துக் கொள்வார். பாட்டிக்கு தாத்தா கூத்துக்காரார் என்று சொல்லிக் கொள்வதில் மனங்கொள்ளா ஆனந்தமும், பெருமிதமும் பொங்கும்.

தாத்தா நடையே... ராஜகம்பீரமாக இருக்கும். அவர் பெரிய செருப்புப் போட்டு நடந்து செல்ல, தெருவில் போவோர் வருவோர் எல்லாம் மிகுந்த மரியாதையுடன் கும்பிடுவார்கள். இது நமக்கான மரியாதை இல்லை, நம் மேல் குடி கொண்டிருக்கும் கலையின் மேல் உள்ள மரியாதை என்று சொல்வார். தாத்தா அந்த காலத்தில், ஜெயிசன் துரை முன்னெல்லாம் கூத்துக் கட்டியிருக்கிறார். ஜெயிசன் துரை தாத்தாவின் கூத்தில் அகமகிழ்ந்து, பொன்னும் பொருளும் கொடுத்தாராம். ஆனால் தாத்தா அதையெல்லாம் கிராம மக்களுக்கே கொடுத்து மகிழ்ந்தார். கலை வியாபாரமாகக் கூடாதென்பது தாத்தாவின் கொள்கை.

இருந்த சொத்தெல்லாம் இப்படியே... இறைத்தத்தில், சிதறியதைக் கொண்டு அப்பா நன்றாக படித்ததினால் அரசாங்க உத்தியோகம் கிட்டியது. தன்னை தலைமேல் வைத்துக் கொண்டாடும் ஊர் மக்களிடம் கையேந்த மனமில்லாமல் கடைசிவரை கவுரதையாகவே போய் சேர்ந்தார் தாத்தா.

அந்த கஷ்டங்களை அனுபவித்ததினாலோ என்னவோ, அப்பாக்கு கூத்தென்றாலே வேப்பங்காயகப் போனது. தாத்தா தன் கலைவாரிசாக என்னை உருவாக்க எத்தனித்தபோது, அப்பா முகுந்த மனவருத்தங்கொண்டார். என் குரலும், உடலசைவும் அப்படியே தன்னைப் போல் உள்ளதென்று, தாத்தாவிற்கு தாங்கமாட்டாத பெருமை. 'என்னோட இத்தெல்லாம் அழிஞ்சிடுமோன்னு பயந்தேன்... நீ என்னையே மறுபதிப்பாகக் கொண்டிருக்கிறாய்', என்று தாத்தா அடிக்கடி சொல்வார்.

அதுமுதல் கூத்தே என் வாழ்க்கையாகிப் போனது. ஆனால் நாளடைவில் மக்களின் ரசனை, நவீன நாடகம், சினிமா என்று மாற, இன்று கூத்தை ரசிக்க ஆளில்லை. தெருமுனை கோயில் விஷேசமென்றாலும், இப்பொழுதெல்லாம் ஒரு நடிகரோ, அல்லது நடிகையோ வந்து சிறப்பிக்கிறார்கள். பின் எப்படி என்னை மாதிரி கூத்துக்காரனுக்கெல்லாம் வேளைவரும். வேறு வேலைக்குப் போகலாமென்றாலும் தன்மானம் தலைவணங்க விடுவதில்லை. மாமா மகள்தான் ரஞ்சிதம் என்றாலும், அவளும்தான் என்ன செய்வாள், இந்த வெத்து வேட்டை கட்டிக்கொண்டு. இன்று வீட்டிலும் வெளியிலும் எனக்கு ஒரே நிலைதான் மரியாதை என்பது மருந்துக்குக் கூட இல்லை.

இன்று கூத்துகாரன் என்று சொன்னால் வெட்டியாக ஊர்சுற்றுபவர்கள், என்று அர்த்தம். கலையின் மதிப்பு தரம் தாழ்ந்துப் போனதில்.... கூழுக்காகக் கூட யாரும் கூத்துக் கட்ட அழைப்பதில்லை. என்னுடன் இருந்தவரெல்லாம் தத்தமது குடும்பத்தைக் காப்பாற்ற சாயப் பட்டறை, சாக்கடை அள்ளுதல் என்று போய்விட, நான் மட்டுமே அரிதாரம் பூசிய கையை அழுக்காக்காமல் இருக்கிறேன்.

நாளடைவில், வீடே எனக்கு சிறையாகிப் போனது, எங்கும் போகாமல் இந்த சாய்நாற்காலியே கதியென்று ஆனது. வெளியில் ஏதோ சத்தம் கேட்க்க, சிந்தனையில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டு, மெதுவாக நடந்து வாசலுக்குச் சென்றேன். அதற்குள் வேலை விட்டு வீடு திரும்பியிருந்தார்கள் ரஞ்சிதமும் என் மகளும்.

'மத்தியானம் கொட்டிக்கக் கூட இல்லையா?' என்றால் வந்ததும், வராததுமாக.

வெளியில் ஆள் அரவம் கேட்க, எட்டிப் பார்த்தேன்.

'அப்பா!! உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள்' என்றாள் என் மகள்.

'"Excuseme, my name is David Jaison, Grand son of Brigadiar Jaison"  என்று சொல்லி ஒரு வெள்ளைக்காரன் வாசலில் நின்றான்.

"Yes, come in" என்று அவனை உள்ளே அழைத்தேன்.

'"My grandpaa Jaison told about your Grandpaa Raajpaat Raajadurai, What a man he is, a man who lived for the art.  He is the symbol of encyclopedia on this Kooththu."  

'ஆமா பேரு பெத்த பேரு, ஆனா தாகத்துக்கு 'நீலு லேது'' என்றாள் ரஞ்சிதம்.

'Actually, i'v come here to award this accreditation to him, as a life time achievement of performing arts.  I'm one of the Jury member of the Committee"   என்றார் அவர்.

'பணமா எவ்வளவு தருவாங்க?' என்றாள் ரஞ்சிதம்

'நீ கொஞ்சம் சும்மா இரு!!' என்று அதட்டினேன். அவள் அப்படியே வாயடைத்துப் போனாள்...

"As an Heir of his Caliber, you have to perform a play in London Broadway theatre, and receive the award along with the price money of 2 Million"  என்றார் அவர்.

மிகப் பெருமிதமாய்....... தலை நிமிர்ந்து ரஞ்சிதத்தைப் பார்த்தேன் முதல் முறையாக......





niyaz_fawaaz@yahoo.com