செல்லமே...

அனுராதா ரமணன்

சீனுவாசமூர்த்திக்கு, அப்படியொன்றும் மனைவி மீது வெறுப்பில்லை; ஆனாலும், தினமும் காலையில் ஆபீசுக்குப் போன மனிதன், மாலையில் அலுத்துச் சலித்து வீடு திரும்பும் போது தேடுவது காபியோடு,'டிவி' விளம்பரங்களில் வருவது போன்ற, 'ஜில்'லென்ற முகத்தைத் தானே! வழக்கம் போல நரைத்தத் தலையுடன், தலைவலி தைல நெடியுடன், சீனுவின் அம்மா தான் கதவைத் திறந்தாள்.

''மொச்சுவுக்கு உடம்பு சரியில்லை. டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போயிருக்கா. நீ கையக் காலை அலம்பிட்டு வா. காபி, டிபன் தர்றேன்...''

அம்மா என்ன டிபன் தருவாள் என்று சீனுவுக்குத் தெரியும். ஒன்று, மென்னியைப் பிடிக்கிற மாதிரி அரிசி உப்புமா; இல்லாவிட்டால், வாயில் போட்டவுடன் நேராக ஆசன வாய் வழியாக வெளியே வந்து விழுகிற மோர் களி...
திருமணமானப் புதிதில் அவன் மனைவி அம்முலு என்ற அலமேலுவும் விதவிதமாய் டிபன் பண்ணித் தருவாள். கார சோமாஸ், வெஜிடபிள் வடை, வெங்காய அடை... அது மட்டுமில்லை... அம்முலு கொஞ்சம் வஞ்சனையற்ற உடல் வாகானாலும் லட்சணமான முகம். சிரித்தால், இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பான் சீனு.

மிகவும் அந்தரங்கமான சமயங்களில் சீனு எதிர்பாராத விதமாய் அவனதுக் காது மடலைச் செல்லமாய் கடிப்பாள் அம்முலு. அதில், உடல் புல்லரித்து, மந்திரித்து விட்ட ஆடு மாதிரி, மனைவி பின்னாலேயே போவான் அவன்.

மொச்சு வந்த பிறகு இந்த உல்லாசம், சல்லாபம் எல்லாமே போய்விட்டது.

அது சரி,மொச்சு என்ன, பெற்ற குழந்தையா, இல்லையே... அந்தக் கஷ்டத்தை எப்படி சொல்வது?

அம்முலுவுக்கு செல்லப் பிராணிகள் என்றால் உயிர். என்னவோ, எத்தனையோ ஆசையால், உயிருக்குயிராய் இருந்தும், இவர்களுக்கென்று ஒரு புழு பூச்சி உதிக்கவில்லை. இரண்டு வருடத்தில் அம்முலு, குழந்தைக்காக ஏங்கி, பூசின உடம்பு ஒரு சுற்று பெருத்துவிட்டாள். அப்போது டாக்டரிடம் இவள் சொன்னாள்...

'குழந்தை தான் இல்லே... ஏதாவது, 'பெட் அனிமல்' வளர்க்கலாமோன்னு தோணுது டாக்டர்...'

'கண்டிப்பா... அப்படி செல்லப் பிராணி வளர்க்கறதாலே நம்ம டென்ஷன் குறையும்; பிளட் பிரஷர் நார்மலாகும். ஏதாவது ஒண்ணை வளர்க்கலாம், தப்பில்லை...'

அப்போது கூட சீனு, அசட்டுத்தனமாய், ஜோக் அடித்தான்.

'நானே அவளோட, 'பெட் அனிமல்' தானே டாக்டர்?'

'நோ, நோ... புருஷன் வேற, செல்லப் பிராணி வேற...'

டாக்டர், மிக நீளமாய் விளக்கம் கொடுத்தார். அம்முலு, அதே வேகத்தில் அவளுடைய அண்ணனுக்கு - அவன் இந்தோனேஷியாவில் இருக்கிறான்- போன் செய்து, ஒரு பூனைக்குட்டியை வரவழைத்தாள்.

வெள்ளையாய், ஆரம்பத்தில் ஒரு பெரிய உள்ளிபூண்டு கணக்காய் இருந்த அந்த சயாமி பூனை, இரண்டே வருடத்தில் தலையணை மாதிரி ஆகிவிட்டது.

'மொச்...சூ...' இப்படிக் கூப்பிட்டால், நிதானமாய் தலையைத் திருப்பிப் பார்த்து, மனசிருந்தால், 'மெத்து மெத்தெ'ன நடந்து வந்து, அம்முலுவின் மடியில் உட்காரும். மொச்சுவுக்கு சீனு ஒரு ஜீவராசியே இல்லை. இரவு படுக்கையில் கூட அம்முலுவின் பக்கத்தில் அதுதான் படுக்கும். பிரமாதமான வெல்வெட் மெத்தை, ஏர்கண்டிஷன் சுவிட்சைத் தட்டி, அறையில் ஜில்லென்ற குளுமை பரவினால் தான் படுக்கவே வரும். தப்பித் தவறி, சீனுவின் கை, அம்முலுவின் இடுப்பில் விழுந்து விட்டதென்று பெரிதாக ஒரு சீறல் போட்டது. பயந்து, ஒடுங்கிப் போய் விட்டான் சீனு. ஆனால், அம்முலு, தன் சிநேகிதிகளிடம் எல்லாம் இந்தக் கண்றாவியைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாள்.

'ஹீ இஸ் சோ பொசசிவ் யா... என்னை சீனு தொட்டாக் கூடப் பிடிக்காது... சமர்த்துக்குட்டி, என் செல்லம்...'

'ஏண்டீ... இப்படி ஒண்ணைக் கூடவே வச்சிக்கிட்டு,குழந்தை இல்லே, இல்லேயின்னு புலம்பினா எப்படி?'

சீனுவின் தாயார் தெரியாத்தனமாய் கேட்டு விட்டாளென்று, அவளை நீதிமன்றக் கூண்டில் ஏற்றாதது தான் குறை.
'அது எப்படி சொல்லலாம்? அவன் குழந்தை மாதிரி. அவனாலத்தான் எனக்கு குழந்தை இல்லேயின்னு சொல்றது எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு! மொச்சுவுக்கு டேட்டிங்குக்கு கேட்டு, ஜட்ஜ் மாமி ஆள் மேல ஆள் அனுப்பறாங்க. அவங்க வீட்டு லூலூ, நம்ம மொச்சுவை விட ரெண்டு வருஷம் பெரிசு. மேலும், அதுக்கு ஜாதகப் படி கணத்த ஸ்தானம் சரியில்லே. அதனாலே வேண்டாம்னு சொல்லிட்டேன்.

'இன்னமும் என் மொச்சு குழந்தைபா. என்னைத் தவிர அதுக்கு உலகமே தெரியாது. நான் ஒரு நாள் இல்லை என்றாலும் ஏங்கிப் போயிடும்...'

அம்முலு மிகவும் உச்சபட்சமாய் ரீல் விடுகிறாளோ என்று கூடத் தோன்றும்; காரணம், மொச்சுவுக்கு என்று அவள் ஆயிரக்கணக்கில் தீனிக்குச் செலவழித்து, 'அவனுக்கு சாதாரணப் பால் சோறு ஒத்துக்கவே ஒத்துக்காது!' என அலம்பல் பண்ண, ஒரு நாள் எங்கேயிருந்தோ ஒரு கருவாட்டைக் கொண்டு வந்து, பத்திரமாய் பீரோவுக்கு அடியில் பதுக்கி வைத்து, திருட்டுத்தனமாய் ருசித்து, சுவைத்துத் தின்று கொண்டிருந்தது மொச்சு.
சீனுவின் தாய் தான் இதைப் பார்த்து விட்டுக் கத்தினாள்.

'சனியன், அது புத்தி எங்கே போகும்? பீரோவுக்கு அடியிலப் பாரு. எங்கேயிருந்தோ கவுச்சியக் கொண்டு வந்துப் போட்டிருக்கு...'

'கிடையவே கிடையாது... என் மொச்சு அதையெல்லாம் சீந்தவே மாட்டான். பக்கத்து சேரியில ஒரு கறுப்புப்பூனை அலையுது... அதுதான் கொண்டு வந்து போட்டிருக்கும். அவன், அதையெல்லாம் டேஸ்ட் பண்ணினதே இல்லை. மொச்சூ, மொச்ச்ச்சூ... இங்கேவா...'

அம்முலு கூப்பிட்டதும், நாக்கால் மீசையை நீவிக் கொண்டே, புசுபுசுவென இவள் மடியில் ஏறிப் படுத்துக் கொண்டு, அரைக் கண்ணைத் திறந்து, 'இந்தப் பூனையும் கருவாட்டைத் தின்னுமா' என்பது போலப் பார்த்தது.
அன்றைக்கே சொன்னான் சீனு...

'மொச்சு வளர்ந்துட்டான்... அவனுக்குன்னு விருப்பு, வெறுப்பு எல்லாம் வந்தாச்சு... பக்கத்து சேரி கறுப்புப் பூனைய அவன் லவ் பண்றான்... என் கண்ணாலப் பார்த்தேன்...'

அவன் இப்படிச் சொன்னதும், 'ஓ'வென முகத்தை மூடி அழுதாள் அம்முலு.

'எல்லாருமாச் சேர்ந்து, என் மொச்சுவுக்கு எதிராச் சதி பண்றீங்க... பிடிக்கலையின்னா, சொல்லிடுங்க... நானும் மொச்சுவும் தனியாப் போறோம்...'

இந்த அளவுக்கு விஷயம் போன பின், மொச்சு பற்றி பேசுவதே இல்லை சீனு...

அம்முலுவே அதற்காக சகலமும் செய்வாள். பக்கத்து சேரிக்காரர்களுடன் பழி சண்டை போட்டு, கறுப்புப் பூனையை ஆள் வைத்து, மைலாப்பூரிலிருந்து, பறங்கி மலைக்குக் கடத்தி விட்டு, தாதா 'ரேஞ்ச்'சில் புன்னகைத்தாள்.
ஆனால் -
அது யார் செய்த புண்ணியமோ...
சேரிப்பூனை காணாமல் போன இரண்டே நாட்களில் மொச்சுவையும் காணோம். சீனு, அலுவலகத்தில் ஆடிட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில், தொலைபேசியில் விம்மி, விம்மி அழுதாள் அம்முலு.

ஒரு வாரம், பத்து நாட்கள் போல, செய்தித்தாள்களில் விளம்பரம் அளிப்பதும், 'டிவி'யில் மொச்சுவின் முகத்தை டைட் க்ளோசப்பில் போட்டு, 'காணவில்லை... கண்டுபிடித்துக் கொடுப்போருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும்' என அறிவித்தும்... ஊம் ஹும்... எந்தப் பலனுமில்லை.

அம்முலுவின் சிநேகிதிகள் அனைவரும் நேரிலும், தொலைபேசிலும் துக்கம் விசாரித்தனர். ஜட்ஜ் மாமி மட்டும் எகத்தாளமாய், 'என்ன தான் ஒசந்த ஜாதியா இருந்தாலும், நாம சரியா கவனிச்சு, அப்பப்போ குட்ஹாபிட்சைக் கத்துக் கொடுத்தாத்தான் ஒழுங்கா இருக்கும். எங்க 'லூலூ'வையே எடுத்துக்கோ, எத்தனை சேரிப்பூனைங்க சுத்திச் சுத்தி வந்தாலும் ஒரே சீறல் தான்! அப்படி நான் வளர்த்திருக்கேன்.

'அது பூனையே இல்லே... ஏதோ போன பிறவியில நமக்குப் பொண்ணாப் பொறந்திருக்கும். அத்தனை அறிவுன்னு ஜட்ஜே சொல்வார்...' இப்படிச் சொல்லி ஏகமாய் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டாள்.

மொச்சு இல்லாத இரண்டு மாதங்கள்... சீனுவின் படுக்கையறை,'மிட்நைட் மசாலா' மாதிரி ஒரே அன்பு மழை தான். அம்முலு, மொச்சுவை நினைத்து அழுவதும், சீனு, அவளை தன் மார்பிள் தாங்கி, 'குல மங்கை கூந்தல் கலைந்தாடலாமோ...' என்று உருகி, உருகித் தாங்குவதும்-

சீனுவின் தாயார், எங்கேயிருந்தும் மொச்சு திரும்பி வரவே கூடாது என்று ரகசியமாய் யாகங்கள் கூட நடத்தினாள்.

'இனிமே உன்னைப் பிடிச்ச சனி விட்டதுடா சீனு...'

இப்படிக் கூறி, மகனின் நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டிருக்கும் போதே, கையிலிருந்த மல்லிகைப்பூவை அம்மா பார்க்காதபடி மறைத்துக் கொண்டே அசடு வழியக் கேட்டான் சீனு.

''எங்கேம்மா அவ?''

''அவ சிநேகிதியோட, புதுப்படம் ரிலீஸ்ன்னு போயிருக்கா, வீட்டுலேயே இருந்தா, அந்த மொச்சு புராணமாவே இருக்குமே... போயிட்டு வரட்டுமேயின்னு அனுப்பினேன். இதோ, வாசல்லே கார் சப்தம்... வந்துட்டா...''

உண்மை தான், அம்முலு, உற்சாகத் துள்ளலுடன் வந்தாள். அவள் இடுப்பில், ஒரு வயசுக் குழந்தை அளவுக்கு அது என்னது கறுப்பாய், 'மொச மொச' வென்று உடம்பு முழுக்க முடியுடன், தலையில் தொப்பி, கவுன் வேறு போட்டியிருந்தது.

''என் வருத்தத்தைத் தாங்க முடியாம என் பிரண்ட் இதை எனக்குப் பரிசா கொடுத்தா... இவபேரு பிச்சு! பாருங்க... பொறந்து ரெண்டே மாசம் தான் ஆறத... 'கொழுக் கொழுக்'குனு எப்படியிருக்கா பாருங்க...''

அம்முலு, தன் இடுப்பிலிருந்து மெள்ள அதை இறக்கிவிட்டாள்.

''ஐ, இங்கே பாரு. பிச்சு, பிச்சூ... அப்பா பாரு. பாட்டி பாரு. குட்மார்னிங் சொல்லு, அறிவுன்னா அறிவு... கண்ணூ செல்லம். அம்மாகிட்ட யாராவது வந்தாங்கன்னா என்னடீ செய்வே?''

''உர்ர்ர்ர்ர்...!''

அந்த சிம்பன்சி குரங்கு, சோழிப் பற்களைக் காட்டியபடி, உக்கிரமாய் உறுமியது!



நன்றி: தினமலர்