பாவிகளை மீட்க வந்த பாலனே!

தர்மினி

யசிந்தா ஓடிக்கொண்டிருக்கிறாள் பல்வேறு வயசும் சைசுமான நாய்கள்; விதவிதமான தொனிகளிற் குரைத்தபடி கலைத்தோடி வருகின்றன. திரும்பித்திரும்பிப் பார்த்தபடியும் இடையிடையே அவளையறியாமல் அண்ணாந்து வானத்தைப் பார்த்தபடியும் ஓடுகிறாள் யசிந்தா. ஆறு மணிக்கு அலாரமடிக்கத் துரத்திய நாய்களும் நிறுத்தின.

அகதிமனு மீதான விசாரணைக்குப் போக வேண்டியநாள். யசிந்தாவும் இரண்டு நாடுகளிற் தன்னை அரசியல் அகதியாக ஏற்றுக்கொள்ளுமாறு கெஞ்சியழுது வழக்காடித் தோற்றுப்போனாள்.

மூன்றாந்தடவையாகவும் ஐரோப்பிய நாடொன்றில் யசிந்தாவின் அகதிவாழ்வு முடிவற்று நீண்டு செல்கின்றது.

யசிந்தா நாய்கள் துரத்த ஓடுவது போல் நாவற்குழிப்பாலத்தால் ஓடிக்கொண்டிருந்தாள். வட்டமிட்ட விமானங்கள் குண்டுகளை வீசின. ஒடுங்கிய பாலத்தில் நசிபட்டு அலமலக்க விழுந்தெழும்பி ஓடுகின்றாள். அண்ணார வாய்திறந்து குடித்த மழைத்தண்ணீரும் அவள் தாகந்தீர்க்கவில்லை. விழுந்ததால் நசிந்து இறந்து போன கிழவியைப் பாலத்தின் கீழே தூக்கிப் போட்டுவிட்டு ஓடிக்கொண்டிருந்த குடும்பத்தின் பின்னால் இவளும் விரைந்தோடுகிறாள். அவளின் தகப்பன் ‘கொல்லக்கொண்டு போறாங்களே கொல்லக்கொண்டு போறாங்களே” என்று கத்தியபடியே சைக்கிளை ஓடமுடியாமல் உருட்டிபடி பின்னே வந்து கொண்டிருந்தார். சனக்கூட்டமும் இருட்டுமாக குண்டு வீச்சுகளிலிருந்து சிதறியோடியவர்களைப் பெயர் சொல்லிக்கூக்குரலிட்டவாறு இலட்சக்கணக்கானவர்கள் ஒடிக்கொண்டிருந்தனர். பின்னாலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும் “கொல்லக் கொண்டு போறாங்களே”குரலொலி தகப்பன் பின்னுக்கு வருவதை உறுதிப்படுத்துகிறது.அந்தத் தென்பில் யசிந்தா இலக்கின்றி ஓடிக்கொண்டிருந்தாள். இது மண்டைதீவு மானிப்பாய் கிளிநொச்சி வரையாகத் தொடர்ந்தது.

1996ல்ஆமி கிளிநொச்சி பிடிக்கப் பெரும் படையெடுப்புகளுடன் முன்னேறியது.சுற்றிக்கட்டிய பாயும் சைக்கிளுமாக மீண்டும் தொடரப் பல நாய்கள் கலைக்க ஓடுவது போல யசிந்தா வானத்தை அண்ணார்ந்து பார்ப்பதும் விமானம் பதிந்து குண்டுகளை வீசும் நேரங்களில் பற்றைகளுள் குப்புற விழுவதுமாக ஓடிக்கொண்டிருந்தாள். எக்காரணங் கொண்டும் சட்டிபானைகளையும் பச்சைக்குடத்தையும் விட்டு வர முடியாதென்ற தகப்பன் உடுப்புகளுடன் வைத்துச் சைக்கிளைத் தள்ளியும் ஓடியும் வந்து கொண்டிருந்தார்.’அப்பா இப்ப எங்க போறது? ” முன்னே போய்க்கொண்டிருக்கும் யசிந்தா நின்று அடிக்கடி தகப்பனைப் பார்த்துக் கேட்பாள்.அவருக்கும் எந்த இடமென்று சொல்லத் தெரியவில்லை.’சனம்போற இடத்துக்குப் போவம்”திரும்பத்திரும்பச் சொன்னார். ஒரு கூட்டம் அகதிச்சனத்துடன் ஓடிக்கொண்டிருந்தனர். இவ்வாறு ஓடாதவர்கள் எவராவது கேட்கலாம்; “ஆமி வந்தால் ஏன் ஓட வேணும்?”பலவிதமான எடுபாடுகளுடன் தான் படைகள் முன்னேறி வருவார்கள். முதலிற் தாறுமாறாகச் எறிகணைகள் வந்து விழுந்திடும்.விமானங்கள் குண்டுகள் போட்டுப்பறந்திட தன் வழிகளைத்துப்பரவு செய்து துடைத்தபடி இராணுவம் நகர்ந்து கொண்டிருக்கும்.நாய்கலைக்க ஓடுவது போல் ஓடியேயாக வேண்டும்.

தட்சிணாமடுவிலிருந்த அகதிகள் முகாமில் தமிழ்நாடு; பற்றிக் கதை கதையாகச்சொன்னார்கள்.

உணவுப் பொருட்களின்விலைப்பட்டியலைச் சொல்லிச்சொல்லிப் புலம்பினார்கள். யசிந்தாவுக்கும் ஓடிக்களைத்து வெறுத்துப் போனது. போதாத குறைக்குத் தகப்பன் இவளையும் திட்டிக்கொள்வார். ‘உன்னையும் கொண்டு திரிய வேண்டியிருக்குதே” என்பார். நல்ல தண்ணீர் அள்ளிவந்து அவர் குடத்தை இறக்கும் நேரம் “மடுவுக்கு ஆமி வந்தால் இனியும் நான் ஓட மாட்டன். மடுமாதா தான் தஞ்சமெண்டு போயிருந்திடுவன்” என அவளை மிரட்டிக் கொண்டிருந்தார். மடு மாதா கோயில் பாதுகாப்பு வலயம் தானே என்பது அவரது எண்ணமாகவிருந்தது. ஆனால் அத்தேவாலயத்தைச் சுற்றியிருந்த அகதிகளின் குடிசைகள் எப்போதோ அகற்றப்பட்டிருந்தன. அச்சுற்றுவட்டாரம் அழுக்கடைந்து அழகிழந்து போனது காரணமாகச் சொல்லப்பட்டது.

யசிந்தா அன்று நிவாரணப் பொருட்களை வாங்கப்போயிருந்த தகப்பனை வழமை போல பயத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டிருந்த தகப்பன் வழமைக்கு மாறாகத் திடீரெனச் சொன்னார் “நாங்க இந்தியாவுக்கு வெளிக்கிடுவம்”. மேலுமதிக பயத்தோடு அவரைப் பார்த்தாள். வங்காளவிரிகுடாவில் கடற்பயணம் என்பது திகைப்பை ஏற்படுத்தியது. யசிந்தாவின் தகப்பன் இந்தியா போவதற்குத் திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தார். அவளோ வரவேமாட்டேனெனப் பிடிவாதமாக அழுதாள். கடைசியில் ‘நடுக்கடலில் தாண்டு போயிடுவம்” என்று விக்கியழுதபடி அவரிடம் கெஞ்சினாள். நாளும் பொழுதுமாக ஓடித்திரிவதை விட கண்ணை மூடிக்கொண்டு இந்தியா போகலாம் என்பது அவர் வாதம். அரை விலைக்குச் சைக்கிளையும் அம்மாவின் நகைகளையும் விற்று கட்டணத்தையும் சேகரித்தார்.

திருவிழாக்கூட்டமாகச் சனங்கள் அக்கடற்கரையோரத்தில் குவிந்திருந்தனர். உணவுத்தட்டுப்பாடும் உவர் நீருமாக வலைப்பாடு; அவர்களின் தேவைகளைப் ப+ர்த்தி செய்யமுடியாமலிருந்தது. நிழல் தரும் அனேக வேம்புகள் பனைவடலிகள் சடைத்துக் கிளைகளைப்பரப்பி நின்ற புங்குகளும் தென்னை பனைகளுமாக எங்கும் நிறைந்து நின்றன.

மக்கள் கூத்துப் பார்க்கக் காவலிருப்பவர்களாக அங்கெல்லாம் அமர்ந்து கதைபேசிக் கொண்டிருந்தனர்;. கல் வைத்து அடுப்பெரித்துச் சமைத்த படியும் பாய்களை விரித்துப் படுத்தவாறும் ஆவலுடன் தமது பயண நாளுக்குக் காவலிருந்தனர்.

யசிந்தாவுக்கு கடலைப்பார்த்து இன்னுமதிகமாகப் பயமேற்பட்டது. அவள் தகப்பன் தங்கியிருக்கத் தோதான பற்றைகளற்ற இடத்தைத் தேடிவரப் போயிருந்தார். வேம்பொன்றை அண்டியிருந்த குடும்பம் கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்தது. இரு குழந்தைகளும் பனங்கிழங்குகளைச் சப்பித்துப்பிக் கொண்டிருந்தனர். அவர்களின் தலைமுடிகள் உப்புக்காற்றிலும் உவர் நீராலும் பிசாணாகிச் சிக்குப்பிடித்திருந்தன. யசிந்தா உற்றுக்கவனிப்பதைப் பார்த்த அவர்களின் தாயார் ஒரு பனங்கிழங்கை எடுத்து நீட்டினாள். இவளும் முறித்துச் சாப்பிட்டவாறே  பேட்டி காண்பது போல இது தான் தருணமெனக் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினாள்.

உங்களுக்கு எப்ப போட்?
தெரியாது. இடமிருந்தால் அனுப்புவாங்கள்.
எவ்வளவு காசு?
ஆளுக்கு இரண்டாயிரம்.ஆனால் இன்னும் கூடக் கட்டினால் கெதியாகப் போகலாம்.
இங்க எவ்வளவு நாளாயிருக்கிறீங்கள்?
அஞ்சு கிழமைகளாயிருக்கிறம்;.

இந்த இடத்தில் பல நாட்கள் வாழமுடியுமாவென யசிந்தா திகைத்துப் போயிருந்தாள்;.

காலநிலை கடற்படையின் நடமாட்டம் பார்த்தே பயணம் நடைபெறும். படகேறிச் சிறு தூரம் சென்று கரை திரும்பிய பயணங்களும் உண்டு.

காற்றுக்கும் மழைக்கும் ஒதுக்கமான இடமில்லை. ‘இவ்வளவு சனங்களையும் நடுக்கடலுக்குள்ள கொல்லக் கொண்டு போறாங்கள்” திட்டிக் கொண்டு வந்தார்; அவளின் தகப்பன்.

கடலையொட்டியிருந்த அந்தோனியார் கோயில் வளவிலும் மரங்களின் கீழ் மக்கள் ஒதுங்கியிருந்தனர். தேவாலயம் பெரிதாகத்தான் இருந்தது. உள்ளே நுழைய முடியாதவாறு பெருங்கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. கடற்காற்றுக்கு ஒதுக்காக கோயிற் சுவரையொட்டியிருந்த ஒரு தென்னையின் கீழ் யசிந்தாவும் தகப்பனும் பொருட்களை வைத்துப் பனம்பாளையால் நிலத்தைத் துப்பரவு செய்து அங்கு நித்திரை செய்தனர்.

யசிந்தா ஞாயிறு காலைப்  பூசைக்கடித்த முதல் மணிச் சத்தம் கேட்டுத்தான் கண் முழித்தாள். அவளது கனவின் நாய்களின் குரைப்புகளை இடைநிறுத்தியிருந்தது அம்மணிச்சத்தம். அந்தப் பூசையிற் பங்குபற்றும் மனநிலை அங்கே சுருண்டு கிடந்த எவருக்குமில்லை. செபங்களும் பாட்டுகளுமாகச் சத்தங்கள் கேட்டன. ‘இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் தசை. இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் இரத்தம். இதை என் நினைவாகச் செய்யுங்கள்”. என்ற வசனங்களைப் பாதிரி உரத்த குரலிற் சொன்ன போது மட்டும் அவளையறியாது தென்னையின் கீழ் முழந்தாளிட்டுக் கைகளைக் குவித்துத் தலையைக் குனிந்தாள்.

பூசை முடிந்து பாதிரியும் சில இளைஞர்களுமாகப் பெருங்கதவுகளை இழுத்துப் பூட்டினர். பாதிரி தன் தோள்களைக் குலுக்கியபடி வெளியே சிதறிக் கிடந்த சனங்களைப்பார்த்து கையை நீட்டி எதுவோ சொல்லிக் கொண்டிருந்தான். விறுவிறுவென இவர்களை நோக்கி வந்த இளைஞர்கள் ‘எல்லாரும் கோயில் வளவை விட்டு வெளியில போங்க” என்றனர்;. தேவாலயப் புனிதம் பற்றி விளக்கிக் கொண்டிருந்தவர்களை இடைமறித்துக் யசிந்தா கத்தினாள் ‘டேய் உங்கட கோயிலுக்கு மேல செல் வந்து விழுமடா”. இடிவிழும் என்ற சொல் வழக்கொழிந்திருந்தது. அதைக் கேட்டுக் கேலியாகச் சிரித்துக் கொண்டு அனைவரும் மூட்டை முடிச்சுகளைத் தூக்கியபடி வெளியேறும் வரை காவல் அவர்கள் நின்றனர்.

அந்த அகதிகள் முகாமின் வாசலில் இலங்கைச் செய்திகளைத் தேடி வாசித்துக் கொண்டிருந்த ஒருவர் கத்தினார் “வலைப்பாடு அந்தோனியார் கோயிலுக்கு மேல செல் விழுந்து உடைஞ்சிட்டுதாம்” அவரும் அந்தக் கரையிலிருந்து படகேறின ஒருவராகத் தான் இருக்க வேண்டும்.

யசிந்தாவுக்குத் தான் திட்டியது ஞாபகம் வந்தது. தமிழர் பிரதேசங்களில் செல்லும் குண்டும் விழுவது அதிசயமல்ல. அவை எங்கும் விழுபவை தானென்று அறிவாள். ஆனாலும் ஆலயத்தினுள் இருந்து ஒலித்த “பாவிகளை மீட்க வந்த யேசு பாலனே” பாட்டும் அவளின் திட்டும் ஞாபகத்திற்கு வந்தன. யசிந்தா மீண்டும் ஓடிக்கொண்டுதானிருக்கிறாள். மீட்பை நோக்கி.

 

tharmini@hotmail.fr