கெட்டிக்கார மருமகள்

வல்லிக்கண்ணன்

எழுபது எண்பது வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் சுவாரசியமான கதை சொல்லிகள் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கூட இருந்தார்கள்.

அம்மா பிள்ளைகளுக்கு கதைகள் சொல்லி மகிழ்ந்தாள். அவர்களையும் மகிழ்வித்தாள். பிள்ளைகள் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்பதற்காக ரசமான கதைகள் சொல்லி, சாதத்தை ஊட்டினாள். தூங்குவதற்காகவும் கதை சொன்னாள்.

அப்பா, தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என எல்லோருமே அலுக்காமல் கதைகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சும்மா பொழுது போகாமல் தெருச்சந்தியில் குந்தியிருந்தவர்கள் கூட தங்களுக்குள் கதைகள் சொல்லி இன்புற்றார்கள்.

அக்காலத்தில் கதைகள் எழுதுவோர் இருக்கவில்லை. பலரும் எழுதுகிற கதைகளைப் பரப்புவதற்கான பத்திரிகைகள் இருந்ததில்லை. ரேடியோ வரவில்லை, தொலைக்காட்சி என ஒன்று வரும், வீட்டுக்குள்ளேயே வந்து அது பேயாய் ஒட்டிக்கொள்ளும் என்று எவரும் கனவில்கூட நினைத்திராத காலம் அது.

ஆகவே அவரவர் அரவரவருக்குத் தோன்றியபடி எல்லாம் கதைகள் சொன்னார்கள். மக்களைப் பற்றிய கதைகள், மனிதர்களின் பலங்கள், பலவீனங்கள், பேராசை, பொறாமை, கொடூரங்கள் பற்றிய கதைகள், பெருமைகள், சிறுமைகள் பற்றி கதைகள் எதையும் அவர்கள் விரசம், ஆபாசம், பேசத் தகாதவை என்று எண்ணியதில்லை. வாழ்க்கையில் ஊரில் உலகத்தில் உள்ளவை, இல்லாதவை, கண்டவை காணாதவை அனைத்தையும் அவர்கள் கதைப் பொருளாக்கிப் பேசிச் சிரித்து மகிழ்ந்தார்கள்.

எனவே அவை மக்கள் கலையாக மலர்ச்சி பெற்றிருந்தது. மக்கள் பக்தி செய்து கும்பிட்டு வணங்கிய கடவுளரைக் கூட பரிகாசத்துக்கும் எள்ளலுக்கும், கேலிக்கும் கிண்டலுக்கும் உரிய கதாபாத்திரம் ஆக்கத் தயங்கியதில்லை.

அப்படி ஒரு கதை, புத்திசாலியான ஒரு மருமகள் பற்றியது.

ஒரு ஊரிலே ஒரு மருமகள் இருந்தா. அவளுடைய மாமியார்க்காரி பொல்லாதவ. மருகமளை கொடுமைப்படுத்த அஞ்சாதவ.

மாமியா வாய்க்கு ருசியா,வகை வகையாக் கறிவகைகள் எல்லாம் செய்து சாப்பிடுவா. மருமகளுக்கு வெறும் சோறும் பழைய கறியும், நீத்தண்ணியும்தான் கொடுப்பா.

புருசன்காரன் அம்மா சொல்றபடி கேட்கிற பையன். அதனாலே அவன் வீட்டிலே நடக்கிறதை கண்டுகிடறதே இல்லை. பொண்டாட்டிக்காரி அவன்கிட்டே எவ்வளவோ சொல்லிப்பாத்தா. எங்க அம்மா நல்லவ; நல்லது தான் அவ செய்வா என்று சொல்லிப்போட்டான் அவன்.

இவருகிட்டே இனி சொல்லிப் பிரயோசனமில்லே என்று மருமக கம்முனு இருந்துட்டா. காலம் வரும், பாத்துக்கிடலாமின்னு அவளுக்கு நெனப்பு.

மாமியாளுக்கு சுண்டல்னா ரொம்பப் பிரியம். கடலைச் சுண்டல், பாசிப்பயத்தம் சுண்டல், மொச்சைப் பயறுச் சுண்டல்னு நாளுக்கு ஒண்ணு செய்வா. நல்லா மசாலா அரைச்சுப்போட்டு, தாளிச்சு இறக்குனான்னா, வீடெல்லாம் கமகமன்னு வாசம் தூக்கிட்டுப் போகும். பாதகத்தி எல்லாத்தையும்தானே தான் திண்பா. மருமகளுக்கு ஒரு கைப்பிடி அளவுகூடக் கொடுக்கமாட்டா.

ஒரு நா அவ மொச்சைப் பயறை வேகவிச்சு மணக்க மணக்க தாளிச்சு இறக்கி வச்சா. மருமகளை பார்க்க வச்சு, தானே வாயிலே அள்ளி அள்ளிப் போட்டுக்கிட்டா. ஐயோ பாவம்னு சொல்லி ரெண்டு மொச்சைப் பருப்பு கொடுக்கப்படாது? ஊகும். சண்டாளி தானே மொக்கினா.

மருமக என்னத்தை சொல்லுவா? சரி வேளை வரும், பார்த்துக்கிடலாம்னு தன் மனசை தேர்த்திக்கிட்டா.

அந்த வேளையும் வந்து சேர்ந்தது. ஒருநா மாமியாக்காரி பக்கத்து ஊருக்குப் போயிட்டா. வர ரெண்டு நாள் ஆகும்னு சொல்லிட்டுப் போனா. அதுதான் சமயம்னு மருமக மொச்சைப் பயறை அவிச்சு சுண்டல் செய்தா. அருமையா மசால்பண்ணிக் கலந்தா. நெய்யிலே தாளிதம் பண்ணினா. அந்த வாசனை வீட்டை என்ன வீட்டிலே இருக்கக்கூடிய ஆளுகளையும் சேர்த்துத்துதூக்கிட்டுப் போயிரும்னு சொல்லும்படியாக இருந்தது.

இதுதான் சுண்டல் சாப்பிட சரியான இடம்னு நினைச்சு அவ கோயிலுக்குள்ளே போனா. மொச்சைப் பருப்பு சுண்டலை எடுத்து வாயிலே போட்டா. ஆ, அருமைன்னு சொல்லி, சப்புக்கொட்டி சாப்பிட்டா. சுண்டல் வாசமும், அவ ரசிச்சுச் சாப்பிட்ட தோரனையும் பிரமாதமா இருந்தது.

அது பிள்ளையாருக்கே வாயிலே எச்சி ஊறும்படி செய்தது. அவ சாப்பிடச் சாப்பிட அவருக்கு தாங்கமுடியலே. பிள்ளையாருக்குத்தான் சுண்டல்னா ரொம்பப் பிரியமாச்சே! அவரு வெட்கத்தை விட்டு, எனக்குக் கொஞ்சம் சுண்டல்தான்னு கேட்டு, கையை நீட்டினாரு.

மருமக பார்த்தா, உமக்கு சுண்டலா வேணுமின்னு கேட்டபடி, அவரு கையிலே படாருனு ஒரு குசு விட்டா. இதுதான் உமக்குன்னு கேலியாகச் சொல்லிப்போட்டு, கிண்ணத்தை வழிச்சிநக்கிட்டு, தன் வழியே போனா.

அவமானம் அடைந்த பிள்ளையார், கோபம் கொண்டு, சுவத்தைப் பார்க்க திரும்பி உட்கார்ந்திட்டாரு. செய்தி மெதுமெதுவா பரவிச்சுது. பிள்ளையாரு ஏனோ கோவிச்சுக்கிட்டே சுவரைப் பாக்கத் திரும்பி உட்காந்திருக்காரு. நம்ம ஊருக்கு ஏதோ கேடு வரப் போகுதுன்னு. சனங்க பேச ஆரம்பிச்சுட்டாங்க. பக்தர்கள் வந்து விழுந்து கும்பிட்டு வேண்டிக்கிட்டாங்க. பெரியபூசை பண்றோம் அதைச் செய்றோம் இதைச் செற்றோம் என்று எவ்வளவோ சொன்னாங்க. பிள்ளையாரு கேட்கவே இல்லை. திரும்பி உட்கார்ந்தவரு உட்காந்தவருதான்.

நேரம் போச்சு. ஊர்க்காரங்க பயந்தபடி, என்ன செய்ய ஏது செய்யன்னு விளங்காம பேந்தப் பேந்த முழிச்சுக்கிட்டு நின்னாங்க.

மருமக காதிலேயும் இது விழுந்தது. அவ கோயிலுக்கு வந்தா. நான் பிள்ளையாரை சரியா உட்கார வைக்கிறேன்னு சொன்னா. நீங்க எல்லாரும் தூரமா தள்ளிப் போய் நில்லுங்கனுன்னு கேட்டுக்கிட்டா.

சனங்க அப்படியே செய்தாங்க. மருமக கோயிலுக்குள்ளே பிள்ளையாருகிட்டப் போனா. வே பிள்ளையாரே, உமக்கு என்ன கேட்கு? ஏன்வே இப்டி அடம்புடிக்கீரு? ஒழுங்காமரியாதையா எப்பவும் போல திரும்பி உட்காரும். இல்லைன்னா, நான் அப்பதே உம்ம கையிலே குசுவினேன். இப்ப உம்ம மூஞ்சிலே, வாயிலேயே குசுவுவேன். ஆமா என்று மிரட்டினாள்.

பிள்ளையார் பயந்து போனார். இவ அப்படியும் செய்துபோடுவா செய்யக்கூடியவதான்னு மிரண்டு போயி, சட்டுப்புட்டுனு திரும்பி, ஒழுங்கா வழக்கம்போல உட்கார்ந்து காட்சி தந்தாரு.

‘வே பிள்ளையாரே, ஞாபகம் வச்சுக்கிடும். திரும்பவும் இது மாதிரி கோணங்கித்தனம் எதுவும் பண்ணாம இரியும். ஆமா என்று சொல்லிவிட்டு, வெளியே வந்தாள். எல்லாரையும் கூப்பிட்டு, பிள்ளையாரு சாமி எப்பவும் போல இருக்காரு; கும்பிடுங்கன்னு சொல்லி நகர்ந்தாள்.

நீ என்னம்மா செய்தே? பிள்ளையாரு எப்படி இவ்வளவு சீக்கிரமா திரும்பினாரு? என்று பலரும் கேட்டார்கள்.

அதைச் பத்தி என்ன! பிள்ளையாரு இனி இப்படியே இருப்பாருன்னு சொல்லிப்போட்டு மருமக தன் வீட்டுக்குப் போனா.

இதுக்குள்ளே மாமியாக்காரி திரும்பி வந்திருந்தா. ஊரே அல்லோலப்பட்டதை அறிஞ்சு என்ன விசயம்னு கேட்டா. மருமக புரவோலத்தை எல்லாரும் பெரிசாப் பேச ஆரம்பிச்சிட்டாங்க.

மாமியாருக்கு உள்ளுக்குள்ளே உதறல் எடுத்தது. ஆத்தாடி! பிள்ளையாரையே தன் இஷ்டத்துக்கு ஆட்டிவைக்கிற திறமை இவளுக்கு இருக்குதுன்னு சொன்னா, இவ நம்மை என்னதான் செய்யமாட்டா? நாமதான் புத்தியாப் பிழைக்கணும்னு அவ நெனச்சா.

அதிலேருந்து அந்த வீட்டிலே மருமகளுக்கு ராஜஉபசாரம்தான். இதினாலே மகனுக்கும் திருப்தி ஏற்பட்டது...