சொல்லாத சொல்லொன்றைச் சொல்

அருள்மணி சபா.அருள்சுப்பிரமணியம்



சொல்லாத சொல்லைச் சுவைபடச் சொல்லிவிட்டால்
எல்லோரும் கேட்டதனை ஏற்றிடுவார் - இல்லாத
சொல்லொன்றை சொன்னாலும் சூழ்ந்தவர் ஏற்கவல்ல
சொல்லாத சொல்லொன்றைச் சொல்.

வில்லினை விட்டுவரும் வீறுகொண்ட கணையதுபோல்
சொல்லுகின்ற வார்த்தைகளும் சுட்டெரித்து – அல்லலுடன்
தொல்லையும் தந்துவிடும், துன்பத்தைத் விட்டொதுக்கச்
சொல்லாத சொல்லொன்றைச் சொல்.

சொல்லோடு வார்த்தையெலாம் தூக்கிவரும் சொற்பொருள்கள்
எல்லோர் மனதிற்கும் ஏற்றதாய் - நல்லபயன்
இல்லாதன வென்றால் எடுத்தெறிந்து விட்டுப்பின்
சொல்லாத சொல்லொன்றைச் சொல்.



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்