வெற்பிமயக் கவிஞன்தான் கண்ணதாசன்

பாவலர் கருமலைத்தமிழாழன்

புலவர்தம் கையிருந்த தமிழை வீட்டுள்
       புதைந்திருந்த பெண்களுமே படிக்க மாறு
நிலம்விதைத்தான் பாரதிதான் புதிய யாப்பில்
       நின்றதனை வளர்த்திட்டார் பாவின் வேந்தர்
குலம்தாழ்ந்தோன் நாவினிலும் ஒலிக்கு மாறும்
       குனிந்திருந்தோன் நிமிர்ந்துகுரல் கொடுக்கு மாறும்
வலம்வந்த பாட்டுதனைத் தந்த வர்தான்
       வண்ணத்தில் விஞ்சிநின்ற கண்ண தாசன் !

பல்லவரின் பெயர்சொல்லும் சிற்பம் போன்று
       பார்வியக்கும் தஞ்சாவூர் கோயில் போன்று
கல்லணையால் நிற்கின்ற சோழன் போன்று
       கவிதையிலே நிற்பவர்தான் கண்ண தாசன்
சொல்கின்ற சொல்லெல்லாம் கவிதை யாக
       சொல்லிட்ட கவிஞர்தான் கண்ண தாசன்
வெல்லும்சொல் இன்றிக்கவி பாடிச் சென்ற
       வெற்பிமயக் கவிஞர்தான் கண்ண தாசன் !

இறப்பில்லா கவிஞனென்றே இறுமாப் போடே
       இயம்பியப்போல் வாழுங்கவி ! சங்க நூல்கள்
சிறப்பைப்போல் மாங்கனியை ஆட்ட னத்தி
       சீர்ஏசு காவியத்தை வடித்த ளித்தோன்
அறமுரைக்கும் இந்துமதம் திரையின் பாடல்
       அனைத்திலுமே முத்திரையைப் பதித்த போல
தரமான தென்றலேட்டில் கவிஞர் தம்மை
        தமிழ்க்களித்த தனிக்கவிஞர் கண்ண தாசன் !
 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்