நூலகம் எரிந்ததினம்!

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

நூல்நிலை யம்என நின்றவோர் நாட்டினில்
நிலைத்திருப்ப தெல்லாங் கல்வி
       நித்திலத் துள்வளர் நேசமார் மாண்புகள்
       நின்றுதிப்ப(து) இனத்தின் சொல்லே
ஆல்மரம் போல்மிக அற்புதம் யாழ்குடா
அடங்கியதோர் நூல்கள் சோலை
       ஆசிய மண்ணிலே ஆனதாய் முற்றிலும்
       அளப்பெரிய(து) தென்னுங் கூடல்
சால்பினில் மாபெரும் சத்திய சோதனைச்
சந்ததியாய் நின்ற வேளை
        சாருநூற் களஞ்சியச் சாலையும் அழித்திடச்
        சக்கரமாய்க் வந்த மூடர்
மால்படக் கால்பட மட்டராய்த் தீயிட
வரித்தனரே இலட்ச நூற்கள்
        வல்லாதி மூடராய் வக்கிர மாந்தராய்
        வைத்தனரே நெருப்பு அம்மா!

தாவீது பாதிரி பார்த்தவர் மாண்டார்
பண்பாட்டுக் கல்வி தீயில்
        சாம்பராய் வீம்பரால் முற்றாடல் ஆகியே
        சருகாகி எரித்த போதே
நோவெதும் இன்றியே நூலகம் எரித்தவர்
நினைவாகுஞ் சரித்தி ரத்தை
       நின்றுநூற் றாண்டென நின்றிடும் வற்கரம்
       நிலைத்திருக்கு மென்ப தறியார்!
ஆவீன மழைசாய அட்டியோடு துன்பமாய்
அடுத்தடுத்து வந்த காலை
      ஆயிரம் மக்களாய் அள்ளியே தீயிட
       ஆனதுவே வரலா றாமே
சாவீடு அன்றிவே றிலையாகுஞ் சரித்திரம்
சாற்றிடுமார் விதியும் மண்ணில்
        சந்ததி சந்ததி யாற்புரம் கொண்டவை
        சரித்திரமாய் இருக்கும் கண்ணில்!
 

(1981 ஜூன் 1 – யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள்.)





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்