வேரினைக் கத்தரித்த வேதனை!

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

வேரினைப் பிடுங்கி விட்டால்
       வேதனை மரத்துக் குண்டு!
ஊரினைப் பிடுங்கி விட்டால்
       உறும்வதை உயிருக் குண்டு!
தேரிடும் அச்சா ணிக்குத்
       தெறித்திடில் ஆபத் துண்டு!
நாரிடும் பூக்கள் இன்றி
       நறுமண மாலை ஏதோ?

சொந்தமே இழந்தோம்! சிந்தும்
       துடிப்பினை மறந்தோம்! பாயும்
வெந்தழற் குருதி யாற்றின்
       வீச்சிலே சாத லுற்றோம்!
எந்தையும் இல்லைத் தாயின்
       ஏணையும் பறந்த பின்னால்
சிந்தையில் மிடிகொண் டோமே
       திரும்பிட வழிதான்; என்ன?

குண்டிலே சிதறிச் செத்துக்
       கொப்பிலே தொங்கக் கண்டோம்!
மண்டிய புதர்கள் உள்ளே
       மடிந்தநற் சிறுவர் கண்டோம்!
கொன்றிடக் கூட்டு வைத்த
       கொலைஞரால் இனத்தை விட்டோம்
தின்றிட வேரைப் பிய்த்த
       தீயரால் செத்தோம் நாமே!

வாளினை வீசுங் குள்ளர்
      வரிச்சினைப் போடும் வஞ்சர்
நூலிழை மாதர் வெட்டி
      நொருக்கிய நஞ்ச கத்தார்
வாலிபம் போதை மூட்டி
      வஞ்சத்தால் அழிக்கும் கேடர்
வேலியே பயிரை மேயும்
      மிகப்பெரும் இயலுண் டாச்சு!

வேதனைக் குளத்தில் நீந்தி
       விடியலைத் தேடும் கைகள்
தீதறும் கொடிகள் நாட்டித்
       தேவனைத் தரிசித் தோர்கள்
மாதனம் இழந்தோம் ஆயின்
       மரகதப் பூம்பைஞ் சோலை
ஆதன உலகம் பெற்றோம்!
       அறுந்தவேர் முளைக்க லானோம்!

கூரின வறுப்பர் வேரைக்
       கொய்திடு வோர்கள் தம்மை
நூறுநூ றாண்டு நின்ற
       நூதன அறங்கள் கொல்லச்
சேருரும் இனத்தி னுள்ளே
       செடிலினைக் குத்தி வந்த
வாருரு மாக்கட் கெல்லாம்
       மறுப்பிடு வாய்மை வெல்லும்!
 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்