பூ

வித்யாசாகர

விதவையின் வெள்ளை நெற்றியில்
முள்ளாய் குத்திய பூ;
பெண்ணின் தாவணி கனவுகளில்
மங்களமாய் மணக்கும் பூ!

மரண சாலையில் –
சுனாமி குவித்த பிணங்களாய்
கசங்கி மிதிபடும் பூ;
திருப்பதியோ திருத்தனியோ தொட்டுவிட்டால்
திருப் பிரசாதம் பூ!

தெருக்களில் கூவி கூவி விற்றவளின்
வயிற்றுப் பசிக்கு – உணவு தரும் பூ;
பூ பூவென கத்தியவளின் –
நிறைய நாள் பசியில் – முட்கள் பதித்த பூ!

முழம் வாங்கி முடிந்துக் கொண்டதில்
ஏழையின் வீட்டிலும் மணக்கும் பூ;
அழகும் மணமும் மிஞ்சிய செருக்கால்
முட்களை தாண்டியும் பறிக்கப் படும் பூ!

பூத்த இடத்தின் அடையாளம் தொலைத்து
வைத்த இடத்தில் அதிகாரம் செய்யும் பூ;
காய் கனி மரமென தழைத்த – விதையின்
முதல் நிர்வாணம் - பூ!


vidhyasagar1976@gmail.com