ஓர் எலியின் கதை

கவிஞர் இனியன், கரூர்

பாட்டி மனையிலோர் பானை அதிலோர் துளையிருக்க
வீட்டினில் பூனை உறங்க எலிஅத் துளைவழியில்
சென்றது தின்றது தின்றது நெல்லை பசிமிகவே
தின்றது மேலும் அதனால் உடலும் பருத்ததுவே

உண்டு பெருத்த உடலுடன் சென்ற துளைவழியே
முண்டி யடித்து வெளியேறப் பாவம் முடியவில்லை.
உண்டி அதற்காம் உறுதுன்பம் ஓடி உழன்றதுவே
கண்டதும் உண்டது கார்நெல்லைத் தீதென எண்ணியதே

மறுநாள் பகலில் கிழவியும் மூடி திறந்ததுமே
சுருக்கென அவ்வெலி சட்டென ஓட முயன்றதுவே
இறுக்கிப் பிடித்தது பூனை கதையை முடித்ததுவே
அருகினில் பார்த்தவள் பாட்டி உரைத்தனள் இப்படியே

கதை சொல்லும் நீதி
நல்ல வழியினில் நாமெலாம் செல்வது நன்மையடா!
ஒல்லும் வகையில் உதவிகளைச் செய்வது தக்கதடா!
வல்ல இறைவன் வழிதனைக் காட்டி அருள்பவனே
அல்லும் பகலும் அவன்தான் துணையாய் வருபவனே!

பள்ளம் படுகுழி வீழாமல் பார்ப்பான் பரமனடா!
வெள்ளம் புயல்மழை வந்தாலும் காப்பான் உறுதியடா!
கள்ள மனத்துடன் கள்ள வழிதனை நீவிழைந்தால்
கள்ள வழியினில் காலன் பிடித்துனைச் செல்பவனே!


குறிப்பு: கதை தேசிக விநாயகம் பிள்ளையுடையது. கவிதை என்னுடையது.
 

 

 

 



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்