(அவள் இறப்பாளென்று தெரியாமல் ஓட்டிய) மிதிவண்டி!

வித்யாசாகர

அரைபெடல் அடித்தே
உலகம் சுற்றிய காலமது!

விழுந்து முட்டி உடைந்த
பல தடவைக்குப் பிறகும் –
மிதிவண்டி ஆசை விட்டதேயில்லை!

அப்பாவின் –
பழைய ராலி சைக்கிள் தாண்டி
BSA SLR  கனவு மிதிவண்டியாகவே
கடந்துவிட்டது வாழ்க்கை!

நானும் அண்ணனும்
ஊர் ஊரை சுற்றியதும்;

என் ஒரே தங்கை
இறந்துப் போவாளென்று தெரியாமல்
அவளை மிதிவண்டியில் ஏற்றிச் செல்லாததும்;

அப்பா மிதிவண்டி ஒட்டி மூச்சிரைக்க
நான் வாங்கி ஒட்டியதும்;

பள்ளி விட்டு வரும் அவளை பார்ப்பதற்காக
எட்டுப் பத்து மைல் தூரத்தை
கால்-அரை மணிநேரத்தில் –
வியர்க்க வியர்க்க ஓட்டிக் கடந்ததும்;

எங்கள் வீட்டு ஜூலி
எகுறி எகுறி – என் மிதிவண்டியின் வேகத்திற்கு
தெருமுனை வரை நாலுகால் பாய்ச்சலில் வந்து
வழியனுப்பி விட்டுச் சென்றதும்;

எத்தனையோ முறை பஞ்சர் போட பணமில்லாமல்
பணமிருந்தால் கடையில்லாமலும் -
எங்கெங்கிருந்தோ மிதிவண்டி தள்ளிக் கொண்டு
வீடு வரை நடந்து வந்ததும்;

அடிக்காத பெல்லும்
கட்டை தேய்ந்து பிடிக்காத ப்ரேக்கும்
கழட்டி தூக்கி எறியத் தோணாத டைனமோவும்
செயின் கழன்று கழன்றும் வரும் மிதிவண்டியில்
அவசர அவசரமாய் வேலைக்குப் போனதும்;

ஓர் நாள் திடீரென
தங்கை இறந்துவிட்ட சேதி கேட்டு –
நானும் தம்பியும்
அழுகை மீறி; மிதிவண்டியோட்ட திராணி போதாது
மிதிவண்டியை தெருவிலேயே போட்டுவிட்டு
இறங்கி – கத்தி – கதறிக் கொண்டே
ஓடி வருகையில் –

என் தம்பி மட்டும் ஒரு நிமிடம் நின்று
தெருவில் –
அனாதையாய் சாய்ந்துக் கிடந்த மிதிவண்டியை
பார்த்த பார்வையின் நினைவுகள் –
இதயத்தில் –
கோடு கோடுகளாய் .. கோடு கோடுகளாய்
நீள்கின்றன!


vidhyasagar1976@gmail.com