தாய்மொழி தமிழே வாழ்க!

கவிஞர் கு.மா.பா.திருநாவுக்கரசு
 



சர்வதேச தாய்மொழி தினம் (பிப்ரவரி 21)


செறிவுமிகும் தாய்ப்பால்தான் சேய் வளர்க்கும்!
        சிறுகுழந்தை வாய்அமுதாய் நோய் தடுக்கும்!
பரிவுடனே தாய்ஊட்டும் வாய் மொழித்தேன்,
        பால்கலந்த தாய்மொழியால் நா மணக்கும்!
அறிவுதரும் சிந்தனையின் சிறகைக் கொண்டே
        ஆளாகும் உயர்திணைகள் உலகளக்கும்!
உரிமையுடன் தாய்மொழிமேல் பாசம் நம்மின்
         உயிராக உணர்வாகக் கலந்திருக்கும்!

'சர்வதேச தாய்மொழி நாள்' என்று பாரில்,
         சகலமொழி சார்ந்தவரும் போற்றும் நாளாய்,
கர்வமுடன் தாய்மொழியின் மாண்பைப் பேச
         கண்டெடுத்தார் பிப்ரவரி இருபத் தொன்றை!
மற்றமொழி ஆதிக்கம் செலுத்தா வண்ணம்
         மண்மொழியின் மகத்துவத்தை மக்கள் பேண,
உற்றதொரு நாளாக ஐ.நா. மன்றில்,
         உலகறியக் கொண்டாடும் திருநாள் வாழ்க!

ல்தோன்றி மண்தோன்றா காலம் பூத்த
        காசினியின் மூத்தமொழி ஏழுள் ஒன்றாய்,
தெள்ளுதமிழ் செம்மொழித்தாய் படைத்தவற்றுள்
       திருக்குறளும், தேவாரம் முதலாய் மாந்தர்
உள்ளமெலாம் போற்றுகின்ற இதிகாசங்கள்,
       ஒப்பில்லா ஐந்துபெரும காப்பியங்கள்,
சொல்லழகு இலக்கணத்தை வழுவா யாப்பின்
       சூட்சமம்தான் வழக்கொழியா மொழியைக் காக்கும்!

த்திசையும் பல்கலையில் தமிழின் மாண்பை
       இருக்கைவழி கற்றாயும் மேன்மை கண்டார்!
முத்தமிழாம் இயல், இசையால், நாடகத்தால்,
       முன்னேற்றப் பண்பாட்டின் ஞானம் தந்தார்!
புத்துணர்வைத் தருகின்ற புதுமை சேர்த்து,
       புகழுடைய தொன்மைமிகும் வளமை காத்து,
இத்தரணி மாற்றத்திற் கீடு செய்யும்
       இணையதமிழ் சொல்லாட்சி இளமை வாழ்க!
 





 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்