இழிவு சேரா தினிதே காப்போம்

கவிஞர் இனியன், கரூர்
 


தாய்மொழி வழியில் தருநற் கல்வி
       தாய்ப்பால் ஒத்தது தவறிச் சென்று
காய்களைத் தின்று கனிகளை ஒதுக்கும்
       பேய்நெறி மாந்தர் பிறமொழி வழியே
நோய்தரு கல்வியைத் தேடித் தந்து
       சேய்மனம் நோகச் சீரழிக் கின்றார்!
ஆய்தல் இன்றி ஆட்டு மந்தையாய்
       போய்வீழ் கின்றார் போக்கிடம் என்று.

மிழ்வழிக் கல்வியே தக்கதென் றுணர்ந்து
       அமிழ்தம் என்றே அதனை ஏற்போம்.
உமியெனப் பிறமொழிச் சொற்கள் நீக்கி
       உயர்தமிழ் மொழியில் உணர்வுடன் பேசி
தமிழ ரனைவரும் தனித்தமிழ்ப் பேசும்
       தகைமை உடையார் எனநிலை நாட்டி
இமியள வேனும் இன்பத் தமிழில்
       இழிவு சேரா தினிதே காப்போம்.


சர்வதேச தாய்மொழி தினம் (பிப்ரவரி 21)
 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்