தாமரை

கவிஞர் நம்பிக்கை நாகராஜன், கோவை
 


 

விக்கின்ற நேரமொன்று யார்க்கும் வந்து
          தலைகீழாய் மாற்றிவிட எல்லாம் செய்யும்
குவிக்கின்ற சிந்தனையின் குறிப்பை என்றும்
          கூர்கூராய் பிரித்துவைத்து குழப்பம் சேர்க்கும்
புவிக்குள்ளே மனிதருக்குள் புலம்பல் என்றும்
          போகாது ஓயாது வளரும் துன்பம்
அவிழ்தலிலே ஓர்குறையும் இல்லை என்று
          அசைந்தாடும் 'தாமரையே நீரில் நின்று'

ன்னலென்று எண்ணுவதே இன்னல் ஆகும்
          இதுவெல்லாம் சுமையென்றால் உள்ளம் நோகும்
தன்னலமே துன்பமதை சேர்த்துக் காட்டும்
          தரமில்லா ஆசைகளே தணலில் வாட்டும்
உன்மனதை தடுமாற வைத்தால் என்றும்
          உருவாகும் வானளவு துயரம் துன்பம்
மண்நீரில் வளர்வதிலே குறைகள் இல்லை
          மலர்ந்திருக்கும் 'தாமரையே உயர்வின் எல்லை'

ளவென்று இருந்தாலே ஆசை ஆகும்
          அதுமீறும் போதெல்லாம் இம்சை ஆகும்
களவென்ற எண்ணத்தை ஒழித்து விட்டால்
          கனியென்றே வாழ்க்கையது சுவையாய் மாறும்
உளமாற உன்பிறப்பை உயர்வாய் ஆக்க
         உள்ளுவதே உல்லாசம் வசந்தம் சேர்க்கும்
தளர்வில்லை எனயெண்ணும் தன்மை கொண்டு
          தண்ணீரில் 'தாமரை' போல் வாழ்ந்து காட்டு



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்