பொங்குக   பொங்கல்   பொலிந்து

பாவலர்  கருமலைத்தமிழாழன்


 

மதங்கள்  அனைத்தும்   மனிதநேயம்   கூற

இதயம்   பிரிதல்   இனிதோ  - விதையெனப்

பொங்கிடும்   அன்பினைப்   போட்டொருமைப்   பாட்டினில்

பொங்குக   பொங்கல்   பொலிந்து !

 

பெண்ணை   விலைபேசும்   பேடித்   தனமழிந்து

கண்மணியாய்க்  காக்கக்   கரம்பிடிக்கும்  -  அன்பனால்

மங்கலநாண்   பூத்து   மணநாள்   மணக்குமெனப்

பொங்குக   பொங்கல்   பொலிந்து !

 

ஊழல்  பெருக்கால்   உதவிடும்   திட்டமெல்லாம்

ஆழப்   புதையும்   அவலம்போய்  -  வாழவைக்கச்

செங்கதிராய்   நேர்மைதனில்   செய்வர்ஆள்   வோரெனப்

பொங்குக   பொங்கல்   பொலிந்து !

 

பண்பழிக்கும்   கையூட்டால்   பாழாகும்   நாடுதனில்

கண்ணியம்   காணும்   கடமையெனக்  -  கண்திறந்து

செங்கரும்பின்   சாறாய்ச்   செயல்செய்யும்  மாற்றத்தில்

பொங்குக   பொங்கல்   பொலிந்து !

 

தொண்டுள்ளம்   ஓடிவந்தே   துன்பத்தைப்   போக்கும்நல்

எண்ணம்   அரவணைத்தே   ஏற்றுமன்பு  -  மண்டுவதால்

பொங்கும்   பொதுநலமே   போம்தன்  நலமென்று

பொங்குக   பொங்கல்   பொலிந்து !

 

செங்கதிர்   வான்மழையால்  செந்நெல்   மணிகுவிய

மங்கலம்   இல்லில்  மணம்பரப்பக்  -  கங்குலெனத்

தங்கிருந்த   நல்குரவு   தான்மாய   இன்பத்தில்

பொங்குக   பொங்கல்   பொலிந்து !


 





 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்