தசை ரோபோ

எஸ். பாயிஸா அலி,கிண்ணியா

ஐயிரு பௌர்ணமிகள்
நான் விளைந்த பௌர்ணமி.
பைய நான் வளர
சோக சுயம் மறைத்த அமாவாசை.
செரிமானங்களை அமுதாய் மாற்றும்
அறிவியற்பொறி.
வையமிதில்
கற்கைகள் பலதொடர
கதிர் தெளித்த ஞாயிறு.
சேயென்னுயர்வின்
கூனிகளை மாய்க்கச் சீறிய
சுனாமி.
தன் நினைவகமதில்
தன்னலம் மட்டும்
பதிக்க மறந்த
தசைரோபோ.
காப்பும் பரிவும்
பாதமதில் சுவனமுஞ் சுமந்த
சுமைதாங்கி.
தன்னால் தொடமுடியாதுபோன
சிகரங்களுக்காய்
எனக்குள் ஏணிகள் வளர்த்த
விவசாயி.
தான் பறக்க நினைத்த
வானத்திற்காய்
எனக்குள் சிறகுகள் வரைந்த
தூரிகை.
இல்லம்-அலுவல்
இரண்டிலுமே யென்
சின்னச்சின்ன இடர்களையும்
இதமாய் களையும்
நேர்த்திமிக்க நிருவாகி.
சேவையே சுவாசமாய்
பரிவின் ஆசானாய்
பண்பின்உறைவிடமாய்
பாரினில் பவனி வரும்
அன்பின் அகராதி.



sfmali@kinniyans.net