கு.மா.பாலசுப்பிரமணியன் என்ற கொஞ்சும் தமிழ்க் கவிஞன்

ஞானகவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்


வாழிய
தமிழே எங்கள்
வைகறை
உதயக் கீற்றே
மேழியின்
வயல்கள் கீறி
விளைந்திடும்
நெல்லின் நாற்றே
ஆழியாய்
அலைகள் துள்ளி
அசைந்திடும்
அமுதக் காற்றே
தோழியே
வாராய் வையத்
தோட்டமே
முரசின் ஆர்ப்பே !                                                                                                                              

சோலையின் பூக்கள் மாந்தும்
சுந்தரக்
கவிஞர் போலும்
காலையின்
ஒலிகள் ஈர்க்கும்
கற்பனைச்
சிறகு போலும்
மாலையின்
மதியே வானில்
வலம்வரும்
வைகைத் தேனே
வாலையே
தமிழே செஞ்சொல்
வஞ்சியே
மணியே வாராய் ! 

நாதமும் இசையும் சந்தம்
நர்த்தனம்
காட்டும் தோப்பும்
கீதமும்
ஒலிபெ ருக்கிக்
கொஞ்சிடும்
குமாப்பா பாட்டில்
வேதனை
துறந்தேன் நெஞ்சில்
விதந்திடும்
மறைகள் கண்டேன்
சாதனை
படைத்த வேந்தன்
சத்தியம்
தமிழ்பெற் றேனே!   

சித்திரம் பேசு தென்கச்
சேயிழை
வடிவம் கொள்வாள்
முத்தெனும்
முருகில் வெண்பா
வேண்டுவான்
கட்ட பொம்மன்
அத்தனைத்
தேடும் கண்கள்
அருந்தமிழ்
காணும் தெய்வம்
எத்தனை
பாடல் அம்மா
இவன்தமிழ்க்
கவிஞன் என்பேன் ! 

பாலனாய் இருந்த வேளை
பாட்டெனைத்
தந்த காலம்
மூலமாய்
விதைத்து நெஞ்சில்
மூட்டியே
கவிதை தந்தான்
ஞாலமும்
குறிஞ்சி சிந்தும்
நற்கவி
தமிழாள் பெற்ற
பாலசுப்பி
ரமண்ய னாரின்
பைந்தமிழ்
நிலத்தை வெல்லும்

 


 


உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்