கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம் அவர்கள் 1920இல் பிறந்து 75 அகவை பாரில் வாழ்ந்து 1994இல் மறைந்த - கலைமணி, கவிக்குயில் அவர்களது நூற்றாண்டு விழா

                                வாழ்த்துகின்றோம்!



                        

உழுதுவாழ் வோட்டிடும் கிராமத் தானாய்
         ஓர்காலம் நீவாழ்ந்த போதும் பின்னால்
எழுதுமுன் ஆர்வத்தை வளர்த்தெ டுத்து
         எண்ணிலாப் படைப்புகள் ஆக்கித் தந்தாய்!
பழுதிலா முயற்சியால் சினிமா வானில்
         பற்பல பட்டங்கள் பெற்று யர்ந்தாய்!
முழுத்தமிழ் நாடுமே போற்ற வாழ்ந்தாய்!
        முடியுமோ உன்புகழ் பாட இங்கே!!


வேண்டிய காட்சிக்கு ஏற்ற வாறு
         விதவித மானநற் கருத்தைச் சேர்த்துத்
தூண்டினாய் ரசிகரைப் பாட வைத்தாய்
         துணிவோடு நாடெல்லாம் போற்ற வாழ்ந்தாய்!
நீண்டநாள் வாழ்கின்ற ஆர்வத் தோடு
         நீதந்த ஒப்பற்ற ஆக்கம் யாவும்
ஆண்டாண்டு காலமாய் தொடர்வ தோடு
        அகிலத்தில் நிலைபெற்று வாழும் ஐயா!


திரைப்பட உலகிலே திறமை காட்டி
         தித்திக்கும் பாடலில் மனத்தை மாட்டிக்
கரையிலாப் புகழ்பெற்ற கு.மா. பா.வே
         கவிக்குயில், கலைமா மணியே என்று
நிரைப்பட நீபெற்ற விருது எல்லாம்
         நீங்காத நினைவாக நிலைத்து நிற்கும்!
வரையற்ற புகழோடு உனது நாமம்
         வாழ்ந்திட நாங்களும் வாழ்த்து கின்றோம்!!





                  - அருள்மணி சபா. அருள்சுப்பிரமணியம் M.A


உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்