யானைபலம் உனக்குவரும்

பாவலர் கருமலைத்தமிழாழன்


நேர்மையினைக் கவசமாக அணிந்து கொண்டால்
          நேர்நின்று எதிர்ப்போரும் தோற்றுப் போவர்
வேர்போல மறைந்துநின்று சூழ்ச்சி யாலே
         வெட்டுதற்கு முனைவோரும் தோல்வி காண்பர் !
சீர்போல பொன்னள்ளித் தந்த போதும்
         சிந்தையிலே தடுமாற்றம் சிறிது மின்றி
நேர்மைதனில் வழுவாமல் கடமை செய்தால்
       நெருக்கடியைக் கொடுப்பவரே நொறுங்கிப் போவர் !

அல்லவழி சூதாடிப் பெற்ற செல்வம்
       அடுத்தவர்க்குத் தெரியாமல் செல்லல் போன்று
வல்லமையால் கைநீட்டி ஊழல் செய்து
        வாரிவாரி சேர்த்தவையும் ஓடிப் போகும் !
நல்லவழி அடைத்துவிட்டு நேர்மை கெட்டு
        நச்சுவழி செல்வோர்க்கும் இதுவே நேரும்
எல்லோரின் முன்வந்து நிற்ப தற்கும்
        ஏறெடுத்துப் பார்ப்பதற்கும் முடிந்தி டாது !

கூர்த்தறிவு இருந்தபோதும் துணைநிற் காது
       கூறுகின்ற நேர்மைவிட்டு பிறழும் போது
ஊர்க்குவிலை கொடுத்தபோதும் புகழ்நிற் காது
       உண்மையினை நேர்மையினை விற்கும் போது !
போர்க்களத்தில் அனைத்தையுமே இழந்த போதும்
        புண்ணியங்கள் கர்ணனுயிர் காத்த போல
யார்எதிர்த்து வந்தபோதும் நேர்மை உண்டேல்
       யானைபலம் உனக்குவரும் வாலி போலே !










உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்