அச்சுவேலியூர் கு.கணேசன் (நீத்தார் பெருமை நினைவூட்டல்)

புலவர் முருகேசு மயில்வாகனன்

 

 


மரபுக் கவிதைகளை மாசின்றி எழுதியே
சிறப்பாக வானலையில் சிந்தும் செம்மலவன்
உரமுடைக் கொள்கையாளன் உத்தம கவிஞன்
வரமாக கவிதந்து வாழ்வை முடித்திட்டான்.

அச்சுவேலி யூர்க்கணேசன் ஆருயிர் நண்பன்
நச்சரிப்பு ஏதுமிலா நல்லதோர் கவிஞன்
இச்சையாய்ப் பாட்டெழுதி இராகத்தோடு பாடிடுவான்
மெச்சுவார் நேயர்கள் மெட்டதனைக் கேட்டே.

எண்பதாம் ஆண்டதனை எழுச்சிகொளக் கொண்டாடி
பண்பாக நண்பர்களைப் பக்குவமாய் வரவேற்று
எண்ணரிய பாக்களுடன் ஏற்றதோர் வெளியீடு
வண்ண வடிவமைப்பு வாய்ப்பான நூலதுவே.

நல்லதோர் தந்தையாய் நற்பண் பாளனாய்
வல்ல கவிஞனாய் வாழ்வை முடித்தவனே
செல்வச் செழிப்புடனே செல்வங்கள் பற்பலராய்
எல்லோரும் சூழ்ந்திருக்க எமனோடு சென்றாயே.

தந்தையாய்த் தலைவனாய்த் தக்கதோர் மாமனாய்
சிந்தைச் சிதறலின்றிச் சேர்ந்து வாழ்ந்தவனே
வந்தாரை வரவேற்று வாய்ப்பாக உணவளித்து
அந்தரங்க மேதுமின்றி அன்பாகப் பேசிடுவான்.

கவிதைப் போட்டிகளில் கலந்திடுவான் தப்பாதே
தவிப்பேது மின்றியே தரமான கவிதைகளை
அவிபாகம் செய்தே ஆசானிடம் காட்டியே
அவரது ஆசியுடன் அனுப்பிடுவான் போட்டிக்கே.

கலகலப்பாய்ப் பேசியே கவிசெய்வோம் தொலைபேசியில்
கலந்துரை யாடுவோம் கவிமொழிச் சிற்றப்பினை
சிலநேரம் கருத்துமோதல் சிறப்பளிக்கும் எங்களுக்குள்
அலுப்பேது மில்லாத அறிவு முதிர்ச்சியது.


 

புலவர் முருகேசு மயில்வாகனன்

 

              

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்