வரலாற்றோடு வாழ்வார் கோவைஞானி

ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்





கோவையூர் ஞானி என்போம்
குவிதமிழ் அறிஞர் என்போம்
காவென நூற்கள் தேட்டம்
கட்டியே வைத்த தோட்டம்
பூவெனச் சொரியப் பூங்காப்
புத்தகம் படைத்தார் என்போம்
சோவெனக் கலங்க வைத்துச்
சிந்தனை மறந்தார் அம்மா!

தீவிர இலக்கி யத்துட்
சிற்;பியாய்த் திகழ்ந்த செம்மல்
நாவிலே பொதுவு டைமை
நன்மைகள் விதைத்த ஏந்தல்
ஆவியே பிரிந்தார் இன்று
அடுக்கிய அலைக ளுக்குள்
காவிய படைகள் விட்டார்
கனித்தமி ழென்செய் வாளோ?

மக்களின் நெறிவாழ் வுக்குள்
மார்க்சியம் படைத்த வாதி
தொக்;கிடும் மரபைச் சார்ந்து
திறனாய்;வு உரைகள் கோதிச்
செக்கெனச் சமுதா யத்துள்
சீருறக் கரைத்த வண்ணம்
புக்ககம் படைத்த மாந்தன்
போயினன் என்செய் வோமோ!

அண்ணாம லைப்பேர் சாலை
ஆக்கிய தமிழைக் கற்றார்
எண்ணிட விருதுக் கான
இயற்றமிழ் பலதும் பெற்றார்
கண்ணிலே பார்வை நின்றும்
கனித்தமிழ் மறந்தார் இல்லை
விண்எனத் தொடுத்த நூற்கள்
விளங்கிடும் நிலமே எல்லை!

அரசியற் தலைவர் போற்றும்
அறிஞர்கள் ஆவ ணத்தும்
உரைகளாற் கோவை ஞானி
உயிரென வாழ்கின் றாரே
கரைதொடும் அகலக் குன்றில்
காலமும் படந்து நின்றார்
வரைதொடும் எழுத்தும் வாழ்வும்
வரலாறு படைக்கும் அம்மா!



            


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்