ஞானம் எதற்கு?

கவிஞர் கே.பி பத்மநாபன்

ஆன வரையிங்கே ஆணவத்தால் தானழியும்

ஈன வாழ்வினையே ஏற்றதனால்-- சீனம்

முதலாக ஞாலத்தில் முற்றியதே தொற்று;

இதற்கினி ஞானம் எதற்கு?

 

இயற்கை தனைப்பகைத்தால் இங்கழியும் ஞாலம்;

செயற்கையோ சீர்வாழ்வைச் செய்யும்?-- பயத்தால்

வதைத்தழிக்கும் பார்நோயின் வக்கிரமே சான்றாம்;

இதற்கினி ஞானம் எதற்கு?

 

இறைப்பற்றும் இல்நெறியும் ஏற்றகுறள் வாழ்வும்

குறைந்திட்ட தாலுயிர்க் கொல்லி-- அறைந்த

விதந்தன்னை இன்றுணர்ந்தோம்; விண்டபெரும்  உண்மை:

இதற்கினி ஞானம் எதற்கு?

 

நெறிமுறைகள் நேரெதிராய் நீணிலத்தில் ஆகக்

குறித்தகலி காலத்தின் கூத்து:- அறிய ,

நிதமிங்கே தொற்றினது நீட்சியினை நோக்கு;

இதற்கினி ஞானம் எதற்கு?  

             

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்