நாமேதும் செய்ததுண்டா?

.இராஜகோபாலன்

 

செந்தமிழின் சிறப்பைப் பற்றிச்

       சிந்தனைப் பட்டி மன்றம்.

சந்தமிகு கம்பன் பாட்டைச்

       சான்றாகக் காட்டிச் சென்றார்.

சிந்தையை அள்ளு கின்ற

       சிலம்பினைப் பற்றிச் சொன்னார்.

எந்தமிழின் குறளைப் போல

       எம்மொழியில் நூலுண் டென்றார்?

 

வந்தவர்கள் சாலை யோரம்

       வாய்பிளந்து கேட்டு நின்றார்.

எந்தவொரு மொழியும் என்றும்

       இனைதமிழ்க் காகா தென்ற

அந்தவுரை முடிந்த போது

       ஆறாண்டு நிறைந்தி டாத

எந்தமையன் மகன் கேட்டான்

       இவரென்ன செய்தா ரென்றே.

 

அன்றவர்தம் திறமை கொண்டு

       அரியபல நூல்கள் யாத்து

நின்றுலகில் தமிழை என்றும்

       நிலைத்திருக்கச் செய்தா ரன்றோ?

தின்றுவெறும் பொழுது போக்கித்

       தெருவோரம் மேடை போட்டு

நின்றுபழம் பெருமை பேசும்

       நாமேதும் செய்த துண்டா? 



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்