மாகடலே வரம் வேண்டும்

துறையூர் காசி, பிரான்ஸ்

ந்து மகா சமுத்திரமே
இணையில்லாப் பெருங்கடலே
என்னரிய தேசத்தை
ஏந்தி நிற்கும் பேரழகே

உலகறிந்த உன் வலுவை
உவமை சொல்ல ஒன்றறியேன்
அன்னையே ஆழ் கடலே
ஆறிவிடு ஆறிவிடு
சினம் தணிந்து மாறிவிடு
மானிடம் செய்யும்
மகா பாவம் பொறுத்தவர்க்கு
ஊனளித்து காக்கின்ற உன்
உயர் மனதிற் கொப்பேது

ஆகாரம் தருபவளே - எமக்கு
ஆதாரமானவளே
என்னுள்ளே உள்ளதெல்லாம்
உங்களுக்கே ஆனதென்று பெரு
மடி விரித்து நிற்கின்றாய்
சமுத்திரமே உன்னாற்றல்
ஒப்பெதற்கு விசித்திரமே

அணு குண்டின் சோதனைகள்
உன் அடி வயிற்றில் காயங்கள்
பொல்லாத பாவமிதை
பொறுத்தருள வேண்டுமம்மா
மாகடலே மாவலியின்
இருப்பிடமே......
ஆண்டொரு நாள் உன் மடியில்
மலர் துவி வணங்கிடவும்
புனிதமென அந்நாளை
புவியெங்கும் வியம்பிடவும்;;
மெய்யிங்கு எழுதுகின்றேன்
கரையேறி என் தேசம்
கலங்கிடச் செய்யாதே

வன்முறை செய்த காய
வடுக்கள் இன்னும்
காயவில்லை
முன்னொரு நாள்
நீ சினந்த ஓர் பொளுதில்
உன்முறைக் கோர்
பேரழிவு செய்து விட்டாய்
போதுமினி சமுத்திரமே
ஆய்ந்தறிய முடியாத விசித்திரமே
தாங்காது என் தேசம்
தணிந்துவிடு உன்கோபம்

உன் மடி மீதிருக்கும்
ஒரு பிடி மண்பரப்பை
மறுபடி சினந் தெழுந்து
சிதைத்திட வேண்டாம் தாயே
உன் அலைகள் வந்தோயும்
என் தேசக் கரை நிலத்தில்
ஓயாத்தவமிருப்பேன் இனி
ஒரு போதும் சினப்பதில்லை
என்று வரம் தந்துவிடு

 

isaak1948@numericable.fr