தெரியுமா தம்பி உனக்கு திசைமாறும் உன்வழக்கு (அறுசீர் வெள்ளடி விருத்தம்)

சி வீரபாண்டியத் தென்னவன்

அன்னைத் தமிழில் கலப்படம்
     அச்சை முறிக்கப் புறப்படும்
பன்மொழிப் பேச்சுத் திணிப்பு
     பொசுக்கிடும் மின்னல் நெருப்பு
என்ன தவறென உன்நினைப்பிங்
     கிற்றுச் சரிகிற துன்வழக்கு
தின்று வருகிறாய் கொன்றே
     தெரியுமா தம்பி உனக்கே! 1

அரிந்திடும் வேற்றுக் கலப்புன்
     அருந்தமிழ்ப் பேச்சில் எதற்கு?
திரியில்நீ வைக்கும் நெருப்பு
     தொடர்ந்திடப் போகும் இழப்பு
கரிபோல் களையின் பெருக்கே
    கருவை அழிக்கும் சுருக்கே
தெரியுமா? தம்பி உனக்குத்
    திசைமாறும் உன்சொல் வழக்கே! 2

இருக்கிற நற்சொல் மறந்தே
     எதற்கிங் கலைச்சல் இரந்தே
துருப்பிடித் துன்றன் தமிழே
     தொலையும் செயலில் அமிழ்ந்தே
இருமொழிக் கொச்சை கலந்தே
     இயம்பல் மொழிக்கொலை என்றே
தெரியுமா? தம்பி உனக்கே!
     திரிவதுன் பேச்சு வழக்கே! 3


c.veerapandiathennavan@gmail.com