உலகக்கோப்பையை வென்ற 'சுனாமி'...!

கவிஞர் பொத்துவில் அஸ்மின்

ஆடும்மனிதன் ஆட்டம்காண அலைகளொன்றாய் கூடின!
ஆசைதீர பூமிப்பந்தை அடித்துவிளை யாடின!
ஆடுமாடு கோழிபூனை அழுதுகண்ணை மூடின!
ஆறுகுளங்கள் நதிகள்சேர்ந்து ஊழிப்பாடல் பாடின!

மேடுபள்ளம் பாய்ந்தவெள்ளம் மேலெழுந்து சென்றன!
மேகக்கூட்டம் வானைப்பார்த்து பாவம்பூமி என்றன!
பாடுபட்டு சேர்த்தவற்றை பகிர்ந்து அலைகள் தின்றன!
படையைகண்ட தமிழர்போல பயந்துயாவும் நின்றன!

வீடுகாணி 'கார்'கள்கூட கால்முளைத்து நடந்தன!
வியக்குமளவு கப்பல்கூட வீட்டின்மேலே கிடந்தன!
வாடும்மனிதன் வாட்டம்கண்டு வானம்பூமி அழுதன!
வாழவேண்டும் உயிர்களென்று வையம்யாவும் தொழுதன!

சூடுபட்டபாலை மீண்டும் சுனாமிப்பூனை நக்கின!
'சூச்சூ..'என்று விரட்டிப்பார்த்தும் கழிவையெங்கும் கக்கின!
கேடுகெட்ட மனிதவாழ்க்கை கிடந்ததற்குள் சிக்கின!
கேள்விகேட்ட அறிவும்கூட தோல்வியுற்று முக்கின!

உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு உயிர்கள்யாவும் கெஞ்சின!
'உலகக்கோப்பை வென்றார்போலே அலைகள்கூடிக் கொஞ்சின!
அகிலமின்றே அழியுமென்று இருக்கும்நிலங்கள் அஞ்சின!
அலைகள்தின்று போட்ட மிச்சம் இமயமலையை விஞ்சின.

காடுகழனி யெங்கும்வெள்ளம் கரைபுரண்டு ஓடின!
கடவுளில்லை என்றவாயும் கடவுள்நாமம் கூறின!
காடுகரை யெங்கும்பிணங்கள் அழுகிப்புழுத்து நாறின.
நாடுஎட்டாம் நரகம்போன்று இமைக்கும்பொழுதில் மாறின!

 

vtvasmin@gmail.com