பெண்ணரசு

துறையூர் காசி, பிரான்ஸ்

பொங்கு மாகடல்வலியும் புவி நடுங்கும் புயல் வலியும்
சேர்ந்த வலியானாலும் அவை

வென்ற மாவலிதான்
பெண்ணுக்குள் வாழுதடா அவள்
பூமிக்கு நிகரென்று
செப்புதலே ஒப்புமடா

பெண்ணரசே
உன்னால் உலகாகும் நீ சினந்தால் அதுவழியும்

பெண்ணாலாவதென்ன
என்றுரைப்போர் வெறும் புண்ணால் ஆனவரே
பெண் புத்தி பின் புத்தி
இன்னும் இழிவு பல சொல்வார்
பெண் பிள்ளை பிறந்துவிட்டால்
பாவமென்று
கருவினிலே கருக்குவிப்பார்
கல் தோன்றி மண்தோன்றாக்
காலத்து முன்தோன்றி விட்ட
மூத்த குடித்தமிழினமே

நூற்றொரு சபையினிலே
தன்துயிலுரிந்த துட்டவனின்
தொடைக்குருதி தான் தடவி
தன் சடை முடித்தாள் பாஞ்சாலி

குற்றமென கூண்டினிலே
கோவலனை நிற்க வைத்த
பாண்டியனை நீதி கேட்டு
கள்வனில்லை என் கணவன்
என்று வழக்காடி வென்றாள்
கண்ணகியும் பெண் மறவாய்
சாகாது வாழுமிந்த
இலக்கியங்கள் இங்கிருக்க
ஆகாது அவளாலே
எனறுரைக்க நியாயமென்ன?


isaak1948@numericable.fr