எரியாதே என்னன்பே

செல்வி. ஸ்ரீ. பெருமாள், லுணுகலை - இலங்கை

1.  ஓசை ஒடுக்கியெம்ஊர் ஓய்ந்துக் கிடக்கையில்தாய்
   
பாசை தவிர்த்தெனைப் பார்த்திருநீ- ஆசையொடு
   
இன்பம் மெழுகி எதிர்ப்படுவேன் நாளை என்
   
அன்பன் உனைஅடைய வே.

2.  தோட்டா துணையொடு தேடல் தெருகௌவும்
   
வேட்டைப் பொழுதுகளால் வீதிகள் வாய்; - பூட்டிநிற்கும்
   
அங்கம் துளைத்திடும் அக்கினிப் பந்துகள்
   
பங்கம் செயஇருக்கும் பார்த்து.

3.  தூஷணப் பார்வைகள் துப்பாக்கி வார்த்தைகள்
   
கூசாமல் வந்தெனை கொய்யினும் என் - யாசகன்
   
நின்னை நெருங்குவேன் நேர்எதிரே பொன்றலே
   
வந்துநில்லும் போழ்திலு மே.

4.  கார்கூந்தல் கோதி கழுமவே பூமுடித்து
  
சீர்மல்க சிங்காரம் நூறுசெய்து - தேரேறி
  
நேர்வர நேரமில்லை நெஞ்சே அறிவாய்நீ
  
யாரோடு நோவது யாம்?

5.  இப்படியாய்த் துன்பங்கள் இன்ன பலவிருந்தும்
   
எப்படியும் உன்னையான் எய்துவேன்- தப்பாமல்
   
மெல்லியத் தென்றலாய் மேனி நனைத்திடவே
   
அல்லிவிழி யோடுஅன் பே.

6.  சேர்த்துவைத்த துன்பங்கள் இன்று செலவுசெய்வோம்
   
போர்த்துவைத்த காதலை பூக்கவிட்டு - கூர்த்திருப்போம் 
   
நில்லென்று சொல்லியே நேரம் நிறுத்தியே
   
சில்லென்றுப் போவோம் சினைந்து.

7.  அலைமோதும் பேர்அவஸ்த்தைக் கொல்லவே என் அன்பே
   
தலைக்கோதும் பார்வை தருவாய் - கலைத்தேநீ
   
ஆவித் தழுவுமுன் அன்பில் கலந்திட
   
தாவி வருவேன் தனித்து.

8.  முட்டி முகம்புதைத்து மார்பில் விழிமலர்ந்து
   
கட்டி அணைத்த கதகதப்பில் - தொட்டில்நாம்
   
ஆடலாம் அன்றில்கள் அன்வே ஆறிஇரு
   
கூட வருவேன் குழைந்து.

9.  நேற்றுநீஎன் நெஞ்சில் வரைந்த மொழிஅணைத்தே
   
ஆற்று  மடியோரம் ஆழ்ந்திருந்தேன் - காற்றுவாங்கி
   
கால்கடுத்த நெஞ்சொடு காத்து கிடந்தேன்நான்
   
சூல்கொண்ட காதல் சுமந்து.

10. கண்மணீ! உன்னில் கரைய கனவுபூத்து
   
நின்றற்கால்  பொய்கள் நிறைசூழ - உன்றனுக்கு
   
முன்னேயே வந்துமுத்தம் வைத்ததடி துப்பாக்கி
   
என்னன்பே நீஏகு வீடு.

                      

 lunugalasri@yahoo.com